Featured Posts

சுவனப்பூங்காவில் ஒரு பகுதி

நபி (ஸல்) அவர்கள் ‘என்னுடைய வீட்டுக்கும், மிம்பருக்குமிடையில் இருக்குமிடம் சுவனப்பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்’ என்று கூறியிருக்கிறார்கள். நபிகளைப் பற்றி இப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஹதீஸைச் சிலர் திரித்து நபியவர்களின் ‘வீடு’ என்று கூறியதை ‘கப்று’ என்று அறிவித்திருக்கிறார்கள். நபியவர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கும் போது உயிரோடு தானே இருந்தார்கள். கப்றில் அவர்கள் அடக்கப்படிருக்க வில்லையே அப்படியிருக்க எனது கப்று என்று எப்படி நபியவர்கள் கூறியிருக்க முடியும்? எனவேதான் ஸஹாபாக்களில் எவரும் கப்று என்று வந்த ஹதீஸை ஆதாரமாக கொள்ளவில்லை. இதனால் நபியவர்கள் மரணமடைந்த பிறகு எங்கே அவர்களின் புனித மேனியை அடக்கம் செய்ய வேண்டுமென்பதில் அபிப்பிராய வித்தியாசங்களையும் கூறியிருக்கிறார்கள்.

நபிகள் தம் கப்றைப் பற்றி என்னுடைய கப்று என்று அன்று கூறியிருந்தால் ஸஹாபிகளுக்கிடையில் நபிகளின் புனித மேனியை அடக்கப்படும் இடத்தைக் குறித்து தர்க்கமும், அபிப்பிராய பேதமும் எழுந்திருக்காது. ஆகவே இதுவும் மேற்கூறப்பட்ட ஹதீஸில் என்னுடைய கப்று என்று நபியவர்கள் கூறவில்லை என்பதற்குச் சான்றாகும். நபியவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் மரணமடைந்தார்கள். ஸஹாபிகள் சுமூகமாக ஒரு முடிவிற்கு வந்ததும் ஆயிஷா (ரலி) அவர்களின் அறையில் நபியவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பின்னர் கலீபா வலீத் பின் அப்துல் மலிக் அவர்களின் ஆட்சியின் போது நபியவர்களின் பள்ளி விசாலமாக்கப் பட்டது. கலீபா வலீத் நபியவர்களின் பள்ளியோடு ‘உம்மஹாத்துல் மூமினீன்’ (நபியின் பிராட்டியார்களின்) அறைகள் அனைத்தும் விலை கொடுத்து வாங்கி பள்ளிவாசலோடு சேர்த்து விடும்படி தம் ஆளுனருக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. அன்றிலிருந்து இவ்வறைகள் கிழக்குப் பக்கமாகவும், கிப்லாவின் பக்கமாகவும் ஆகிவிட்டது. பிறகு நபியவர்களின் பள்ளிவாசல் விசாலமாக்கப்பட்டதிலிருந்து ஆயிஷா (ரலி) அவர்களின் அறை பள்ளிக்குள் நுழைந்து விட்டது. பின்னர் அந்த அறைக்கு மதில்கட்டி மறைத்து அம்மதில் கூர்மையாக்கப்பட்டது. ஏனெனில் நபியவர்கள் ‘கப்றின் மீது உட்காராதீர்கள். அதை நோக்கி தொழாதீர்கள்’ (ஸஹீஹ் முஸ்லிம்). கப்றை நோக்கி அல்லாஹ்வை வணங்கினால் கூட கப்றுக்கே ஸுஜுது செய்வது போல ஆகிவிடுவதனால் இது விலக்கப்பட்டது.மேலும் சமாதிகளில் அல்லாஹ்வைத் தொழுகின்ற பள்ளிவாசல்கள் கட்ட வேண்டாமென்றும் விலக்கியிருக்கிறார்கள். கப்றில் ஸலாம் சொல்வதற்கும், கப்றாளிக்காகப் பிரார்த்தனை நடத்துவதற்கும் அனுமதி இருக்கிறது. எனவே அன்பியாக்களுடையவும், ஸாலிஹீன்களுடையவும் கப்றருகில் தொழுவதற்காவும், துஆ இறைஞ்சுவதற்காவும் போகிறவன் அல்லாஹ், ரஸூல் விலக்கிய ஒரு ஹராமைச் செய்யப் போகிறான் என விளங்குதல் வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *