Featured Posts
Home » சட்டங்கள் » உம்ரா, ஹஜ், துல்ஹஜ் மாதம் » ஹஜ் தொடர்பான பலவீனமான ஹதீஸ்கள்

ஹஜ் தொடர்பான பலவீனமான ஹதீஸ்கள்

தமிழ்பேசும் முஸ்லிம் உலகில் ஹஜ் பற்றிய ஆதாரமில்லா பல செய்திகள் உலவிவருவதை காணலாம். அப்படியான சில செய்திகளை தொகுத்து, அந்த செய்தி எந்தவகையில் பலகீனமானது என்ற குறிப்புடன் தொகுத்து வழங்கியுள்ளார் இலங்கை அத்தார் அஸ்ஸலபிய்யா-வின் அஷ்ஷைக்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன். அதனை இஸ்லாம் கல்வி இணையதள வாசகர்கள் பயன்பெறும்பொறுட்டு இங்கு பதிவிடப்படுகின்றது. (இஸ்லாம் கல்வி ஊடக குழு)

ஹஜ் தொடர்பான பலவீனமான ஹதீஸ்கள் [அஷ்ஷைக்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்]

பலகீனமான செய்தி-01

“அல்லாஹ் ஒரு ஹஜ்ஜின் மூலம் மூன்று நபர்களை சுவனத்தில் நுழைவிக்கிறான். அவர்கள்: மரணித்தவரும் தனக்காக ஹஜ் செய்தவரும் அதனைக் கொண்டு வஸிய்யத் செய்தவருமாவார்கள்.”

பலகீனத்திற்கான காரணம்:

இமாம் பைஹகீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தியை அறிவித்திருக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறக்கூடிய அபூமஃஷர் என்பவர் பலவீனமானவர் என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அல்ஹாபிழ் அல்இராகீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தஹ்ரீஜு அஹாதீஸில் இஹ்யாஃ என்ற நூலில் இந்த ஹதீஸை பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

பலகீனமான செய்தி-02

“ஹஜ் பிரயாணிகளை வானவர்கள் முஸாபஹா செய்கிறார்கள். நடந்து செல்பவர்களை கட்டித் தழுவுகிறார்கள்.”

பலகீனத்திற்கான காரணம்:

இமாம் பைஹகீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷுஅபுல் ஈமான் என்ற நூலில் இதனை அறிவித்துவிட்டு, இதன் அறிவிப்பாளர் வரிசையில் பலவீனம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். இமாம் முனாவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பைளுல் கதீர் என்ற நூலில் இதனை பலவீனம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்று கூறியுள்ளார்கள்.

பலகீனமான செய்தி-03

“அதிகமாக உம்ராச் செய்வதும் ஹஜ் செய்வதும் வறுமையைத் தடுக்கும்.”

பலகீனத்திற்கான காரணம்:

தைலமீ என்ற அறிஞர் அல்பிர்தவ்ஸ் என்ற நூலில் இச்செய்தியைக் குறிப்பிட்டுள்ளார். ளஈபுல் ஜாமிஃ என்ற நூலில் அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்று கூறியுள்ளார்கள்.

பலகீனமான செய்தி-04

“ஹஜ் செய்யக்கூடியவர்களும் உம்ராச் செய்யக்கூடியவர்களும் அல்லாஹ்வின் தூதுக்குழுவினர்களாவா். அவர்கள் கேட்பதை அவன் வழங்குவான். அவர்கள் எதை துஆச் செய்கின்றார்களோ அதற்கு அவன் விடையளிப்பான். அவர்கள் செலவளித்தால் அதைவிடப் பன்மடங்கு அவர்களுக்கு வழங்குவான். ஒரு திர்ஹத்திற்கு ஆயிரம் ஆயிரம் திர்ஹம்களை வழங்குவான்.”

பலகீனத்திற்கான காரணம்:

இச்செய்தியை இமாம் பைஹகீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷுஅபுல் ஈமான் என்ற நூலில் இடம்பெறச் செய்துள்ளார்கள். அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ளஈபுத் தர்கீப் வத்தர்ஹீப் என்ற நூலில் இச்செய்தி குறித்து பலவீனம் என்று கூறியிருக்கிறார்கள்.

பலகீனமான செய்தி-05

“ஹஜ் என்பது ஜிஹாதாகும். உம்ராச் செய்வது நபிலாகும்.”

பலகீனத்திற்கான காரணம்:

இச்செய்தி இப்னுமாஜாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அத்தல்ஹீஸ் என்ற நூலிலும் ஐனீ ரஹிமஹுல்லாஹ் ஷர்ஹுல் புஹாரீ என்ற நூலிலும் ஷவ்கானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நைலுல் அவ்தார் என்ற நூலிலும் பலவீனமானது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் உமர் இப்னு கைஸ் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று இமாம்களான அஹ்மத், இப்னுமஈன், அபூஸுர்ஆ, புஹாரீ, நஸாஈ, அபூதாவூத், அபூஹாதிம் ஆகியோர் கூறியுள்ளனர். இவருடைய ஹதீஸ்கள் யாவுமே பொய்யானது என்று இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இன்னும், அல்ஹஸன் என்ற அறிவிப்பாளரும் இதில் இடம்பெறுகிறார். இமாம் நஸாஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவர் நம்பகமற்றவர் என்றும் இமாம் தாரகுத்னீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவர் விடப்பட்டவர் என்றும் இப்னு ஹிப்பான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவருடைய ஹதீஸ் கடுமையாக மறுக்கப்பட்டது என்றும் இவர் நம்பகமானவர்களைத் தொட்டும் அடிப்படை இல்லாத செய்திகளை அறிவிக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்கள்.

பலகீனமான செய்தி-06

“ஹஜ்ஜும் உம்ராவும் கடமையானதாகும். அவ்விரண்டிலும் நீ எதைக்கொண்டு ஆரம்பித்தாலும் அது உனக்கு தீங்களிக்காது.”

பலகீனத்திற்கான காரணம்:

இச்செய்தியை தாரகுத்னீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இச்செய்தி பலவீனமானது என்று இப்னுல் ஜவ்ஸீ, இப்னு தைமியா, இப்னு ஹஜர் ரஹிமஹுமுல்லாஹ் ஆகிய அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

பலகீனமான செய்தி-07

“இரண்டு உம்ராக்களை (ஒன்றன் பின் ஒன்றாகச்) செய்வது அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சுவனத்தைத் தவிர வேறு கூலி இல்லை. ஹஜ் செய்யக் கூடியவர் ஒரு தஸ்பீஹ் செய்தால், ஒரு முறை லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறினால், ஒரு முறை தக்பீர் கூறினால் அவற்றின் மூலம் அவருக்கு ஒரு நன்மாராயம் கூறப்படும்.”

பலகீனத்திற்கான காரணம்:

இச்செய்தியை பைஹகீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷுஅபுல் ஈமான் என்ற நூலில் அறிவித்திருக்கிறார்கள். அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ளஈபுல் ஜாமிஃ என்ற நூலில் இச்செய்தியை பலவீனமானது என்று கூறியுள்ளார்கள்.

பலகீனமான செய்தி-08

“யார் ஹஜ்ஜதுல் இஸ்லாம் என்ற அந்த ஹஜ்ஜை செய்கிறாரோ, என்னுடைய கப்ரை தரிசிக்கிறாரோ, ஒரு யுத்தம் செய்கிறாரோ, மேலும், பைதுல் மக்திஸ்ஸில் என் மீது ஸலவாத்துச் சொல்கிறாரோ அல்லாஹ் அவருக்குக் கடமையாக்கிய விடயங்களில் அவரை விசாரணை செய்யமாட்டான்.”

பலகீனத்திற்கான காரணம்:

இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். இப்னுல் ஹாதீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ‘இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டது என்பதில் சந்தேகமில்லை” என்று கூறியுள்ளார்கள். இது ஒரு பொய்யான செய்தியாகும் என்று இமாம் தஹபீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்மீஸான் என்ற அவருடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பலகீனமான செய்தி-09

“யார் ஹஜ் செய்ய முன் திருமணம் செய்கிறாரோ அவர் பாவத்தைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்.”

பலகீனத்திற்கான காரணம்:

இச்செய்தியை இப்னு அதீ என்ற அறிஞா் அல்காமில் என்ற நூலில் அறிவித்திருக்கிறார். இதன் அறிவிப்பாளர் வரிசையில் முஹம்மத் இப்னு அய்யூப் என்பவர் இடம்பெறுகிறார். இவர் குறித்து இப்னு ஹிப்பான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்: ‘முஹம்மத் இப்னு அய்யூப் என்பவர் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிக்கக்கூடியவர். இவரை ஆதாரமாக எடுப்பது ஆகுமாகாது” என்று கூறியுள்ளார்கள். சுயூதி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இவர் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிக்கக்கூடியவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறக்கூடிய அஹ்மத் இப்னு ஜும்ஹூர் என்பவரும் பொய்யைக்கொண்டு சந்தேகிக்கப்பட்டவர் என்று ஷவ்கானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

பலகீனமான செய்தி-10

“யார் ஹஜ் செய்ய நாடினாரோ, அவர் அவசரப்படுத்தட்டும். ஏனெனில், தொலைந்துவிடக் கூடியவைகள் தொலைந்து விடும், நோயாளிகள் நோய் வாய்ப்படுவார்கள், தேவைகள் ஏற்படும்.”

பலகீனத்திற்கான காரணம்:

முஸ்னத் அஹ்மத், இப்னுமாஜா, தபரானீ ஆகிய நூற்களில் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் அபூ இஸ்ராஈல் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் பலவீனமானவர், இவருடைய ஹதீஸை ஹதீஸ் கலை அறிஞர்கள் எழுதமாட்டார்கள் என்று இப்னு மஈன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். இவர் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஏசக்கூடியவராக இருந்தார் என்று இமாம் புஹாரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். இப்னு மஹ்தீ என்பவர் இவருடைய ஹதீஸை விட்டிருக்கின்றார். இவருடைய ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்றும் மனனம் செய்யும் விடயத்தில் மோசமானவர் என்றும் அபூஹாதிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இமாம் நஸாஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும் நம்பகமற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் பலமற்றவர் என்ற கருத்தை இமாம் திர்மிதீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

பலகீனமான செய்தி-11

“நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பகலிம் இரவிலும் நூற்றி இருபது ரஹ்மத்களை இறக்குகின்றான். அவற்றில் அறுபது தவாப் செய்பவர்களுக்காக வேண்டி கஃபாவின் மீது இறங்குகின்றது. நாற்பது தொழுகையாளிகளுக்காக இறங்குகின்றது. மீதி இருபதும் அதனைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் மீது இறங்குகின்றன.”

பலகீனத்திற்கான காரணம்:

அல்பாகிஹீ என்ற அறிஞர் அஹ்பாரு மக்கா என்ற நூலிலும் இப்னு அதீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்காமில் என்ற நூலிலும் இதனை இடம்பெறச் செய்துள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் யூஸுப் இப்னு பைள் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் ஹதீஸ் விடயத்தில் பலவீனமானவர் என்று அபூஹாதிம் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் விடப்பட்டவர் என்று அபூஸுர்ஆ, நஸாஈ, தாரகுத்னீ ரஹிமஹுமுல்லாஹ் போன்றோர்கள் கூறியுள்ளார்கள். இவருடைய ஹதீஸ் மறுக்கப்பட்டது என்று அபூஹாதிம் அர்ராஸீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *