Featured Posts
Home » நூல்கள் » வழிகெட்ட பிரிவுகள் » கவாரிஜிய சிந்தனை – ஓர் அறிமுகம்

கவாரிஜிய சிந்தனை – ஓர் அறிமுகம்

-எம்.ஐ அன்வர் (ஸலபி)-

இஸ்லாமிய வரலாற்றில் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு உமர் (ரழி) அவர்களின் கொலையோடு அரசியல் மற்றும சமூகரீதியான கெடுபிடிகளுக்கான பித்னாவின் வாசல் திறக்கப்பட்டது. வரலாற்றில் “பித்னா” நிகழ்வு என்று குறிப்பிட்டு அழைக்கப்படும் உஸ்மான் (ரழி) அவர்களின் படுகொலை சம்பவத்தின் பின்னர் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்ட அரசியல் கருத்து முரண்பாடு இஸ்லாமிய உம்மத்தின் ஐக்கியத்தில் பிளவுகள் ஏற்படக் காரணமானது.

அலி (ரழி) அவர்களின் ஆட்சியில் முஸ்லிம்கள் இரு அணிகளாகப் பிரிந்தாலும் அகீதாவைப் பாதிக்கின்ற சிந்தனாரீதியான நகர்வாக அது ஆரம்பத்தில் இருக்கவில்லை. அவரது ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய சமூகத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்ப சூழ்நிலை காரணமாக முஸ்லிம்களுக்கு மத்தியிலே ஜமல், ஸிப்பீன் போன்ற போர்கள் நடந்தேறின. அலி (ரழி) அவர்களின் ஆட்சியின் மத்திய காலப் பகுதியில் கவாரிஜ்கள் என்னும் ஆட்சியாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபடும் ஒரு சமூக அமைப்பினர் தோற்றம் பெற்றனர்.

கவாரிஜ் என்னும் அரபுப் பதம் காரிஜ் என்ற ஒருமையின் பன்மை வடிவமாகும். இது கரஜ என்னும் வினையடியிலிருந்து தோன்றியதாகும். இதன் நேரடி மொழிக்கருத்து வெளியேறினான் என்பதாகும். எனினும் இது ஆட்சியாளருக்கெதிராக கிளர்ச்சி செய்யும் சமூக வகுப்பாரை குறிப்பிடுவதற்காக இஸ்லாமிய மரபில் பயன்படுத்தப்படுகின்றது.

ஹதீஸ்கள் அல்குர்ஆனிய வசனங்களுக்கு முரண்படுகின்றன, தவறுகள் செய்கின்ற முஸ்லிம் ஆட்சியாளர் இறை நிராகரிப்பை செய்த காபிர், அல்லாஹ் அனுமதிக்கின்ற சமரசம் தொடர்பான மனித சட்டங்கள் குப்ர், தஹ்கீம் சமாதான நிகழ்வில் கலந்து கொண்ட அபூமூஸா, அம்ர் பின் ஆஸ் (ரழி) ஆகியோர், மற்றும் மூத்த ஸஹாபாக்கள் அனைவரும் காபிர்கள், உமர் , அலி உள்ளிட்ட ஸஹாபாக்களை காபிர்கள் என்று தீர்ப்பு கூறாதவர்களும் காபிர்களாவர், ஆட்சியாளர் அநீதி இழைத்தால் அல்லது தவறிழைத்தால் அவருக்கெதிராக கிளர்ச்சி செய்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது உடனடிக் கடமை, பெரும்பாவம் செய்த முஸ்லிம் காபிர் அவர் நரகத்திலேயே நிரந்தரமாக தங்கியிருப்பார்கள் போன்ற தீவிரப்போக்கான சிந்தனைகள் இவர்களது பிரதான கொள்கைகளாக இருந்தன.

இதனைத் தொடர்ந்து ராபிழாக்கள் எனப்படும் அலி (ரழி) அவர்களை எல்லை மீறி நேசிப்போர் மற்றும் நவாஸிப்கள் எனப்படும் அலி (ரழி) அவர்களை எல்லை மீறி தூசிப்போர் ஆகிய இரு பெரும் பிரிவுகள் தோன்றின. இவ்வாறான வழிகெட்ட சிந்தனைப் பிரிவுகளில் இருந்து தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முஸ்லிம்கள் ‘அஹ்லுஸ்ஸுன்னா’ என்று தம்மை அழைத்தனர்.

ஆட்சியாளர் தவறு செய்தால் அதனை பகிரங்கப்படுத்தி, ஆட்சியாளருக்கெதிராக மக்களின் வெறுப்புணர்ச்சியை தூண்ட செய்து ஆட்சிக்கெதிராக கிளர்ச்சி செய்து அதன ஆயித போராட்டமாக மாற்றுவதில் கவாரிஜிகள் என்னும் கிளரச்சியாளர்கள் இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் செயற்பட்டு வந்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம்.

இஸ்லாமிய வரலாற்றில் இத்தகைய வழிகெட்ட சிந்தனை பின்புலம் கொண்ட கருத்தியல் கலீபா உத்மான்(ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தோற்றம் பெற்றது. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்னர் இந்த வகுப்பார் முஸ்லிம் சமுகத்தில் நிலை கொண்ட காலமாக கலீபா அலி (ரழி) அவர்களின் ஆட்சிக் காலம் வரலாற்றசிரியர்களால் அடையாளப்படுத்தப்படுகிறது.

ஆட்சியாளர்களின் தவறுகளை வைத்து அவர்களுக்கு இறை நிராகரிப்பு தீர்ப்பு கூறுவது அல்லது மதம் மாறியதாக தீர்ப்பு வழங்குவது உள்ளிட்ட சிந்தனைகள் இஸ்லாமிய சமூகத்தினுள் உருவாகியிருக்கும் பயங்கரமான கவாரிஜிய சித்தாந்தத்தின் வெளிப்பாடாகும். கவாரிஜிகள் என்னும் கிளர்ச்சியாளர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் காபிர்களோடு போர் புரிவதை விட முஸ்லிம்களோடு போர் செய்வதையே பெரிதும் விரும்புவர்கள். முஸ்லிம்களை இறை நிராகரிப்பாளராகவும் , மதம் மாறியவர்களாகவும் பிரகடனப்படுத்துவதும் அவர்களது இரத்தத்தை ஓட்டுவதும், சொத்துக்களை சூரையாடுவதுமே அவர்களது பிரதான குறிக்கோள்களாக இருக்கும். அல்லலாஹூத்தாலா இத்தகைய மிக மோசமான கருத்துருவாக்கம் கொண்டவர்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வேண்டும்.

இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூறும்போது
வழி கெட்ட பிரிவினர்களால் அல்லாஹூத்தாலா முஸ்லிம் சமூகத்திற்கு எந்தவொரு நன்மையையும் ஏற்படுத்தவில்லை; அவர்களின் மூலமாக முஸ்லிமல்லாத தேசங்களில் ஒரு கிராமத்தையேனும் வெற்றி பெற வைக்கவில்லை; இஸ்லாத்திற்காக எந்தவொரு வெற்றிக் கொடியையும் அவர்கள் சுமக்கவுமில்லை; மாறாக, இஸ்லாமிய அரசுகளின் ஆட்சிக்கெதிரான விரோதப் போக்கை கொண்ட அவர்கள் முஃமின்களின் ஒற்றுமையை சீர்குழைத்து, முஸ்லிம்களுக்கெதிராகவே ஆயுதம் ஏந்தி தேசம் நெடுகிலும் கலகம் விளைவித்துக் கொண்டே இருக்கின்றனர். இதுவிடயத்தில் ஷீயாக்களும், மற்றும் கவாரிஜிகள் எனப்படும் கிளர்ச்சியாளர்களின் நிலை அறிமுகம் தேவையில்லை என்ற அளவுக்கு தெளிவானது.”
(அல் பிஸ்ல் பில் மிலல் வல் அஹ்வாயி வந்நிஹல் 4/181)

இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறும் போது
கவாரிஜிகள் எனப்படும் கிளர்ச்சியாளர்களை பொருத்தமட்டில் இறை நிராகரிப்பாளர்கள் குறித்து இறங்கிய வசனங்களை முஸ்லிம்கள் மீது பிரயோகிக்கும் சமூக பாதிப்பை ஏற்படுத்தும் சாரார் ஆவர் ”
இமாம் இப்னு தைமிய்யா
(மின்ஹாஜுஸ் சுன்னாஹ் 6/116)

ஆட்சியாளரின் தவறுகளை பொது வெளியில் விமர்சித்தல், கிளர்ச்சியில் ஈடுபடுதல்

இஸ்லாமிய ஆட்சியாளர் அநீதிமிக்கவராக இருந்தால் அந்த ஆட்சிக்கெதிராக பிரசாரம் செய்வதோ அல்லது மக்களை அவ்வாட்சிக்கெதிராக கிளரச்செய்து அதனை ஆயுதப் போராட்டமாக உருவமைத்து முஸ்லிம்களின் இரத்த்ததை சிந்த வைப்பதும் , உயிர் உடமைகளை இழக்கச்செய்யும் போக்கானது இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணானது. தவிர, இஸ்லாத்தை தம் வாழ்வில் கடை பிடித்த ஸலபுகளினதும், இமாம்களினதும் அணுகுமுறைக்கும் மாறுபட்டதாகும். மாறாக ஆட்சியாளரிடம் குறித்த தவறை அதற்குறிய முறையில் எத்திவைப்பதும், அது குறித்து உபதேசிப்பதும், அவருக்காக பிரார்த்திப்பதும் , அவருக்காக பாவமண்ணிப்பு தேடுவதுமே ஸலபுகளின் வழிகாட்டல்களாகும்.

நபி(ஸல்) அவர்கள் ” மிகச் சிறந்த ஜிஹாத் யாதெனில் அநியாயக்கார் ஆட்சியாளனிடம் சத்தியத்தை எடுத்துச் செல்வதே ஆகும்” (திர்மிதி) என்றார்கள்.

நபி (ஸல்) கூறினார்கள். யாரேனும் ஆட்சியாளருக்கு உபதேசம் கூறவேண்டு விரும்பினால் அவரது கரத்தை பிடித்து தனிமையில் சென்று அதனை செய்யட்டும். ஆட்சியாளர் அதனை ஏற்றுக்கொண்டால் அது சிறந்தது. இல்லையென்றால் அவர் தனது பொறுப்பை நிறைவேற்றியவராவார். (அஹ்மத்)

ஒரு முறை மக்கள் ஒன்று கூடி உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்களிடம் நீங்கள் கலீபாவிடம் இது குறித்து பேச வேண்டாமா என்று கேள்வி எழுப்பிய போது அதற்கு உஸாமா(ரழி) அவர்கள் நான் அவரிடம் இது குறித்து யாதொன்றும் பேசவில்லை என்று கருதுகிறீர்களா. நான் அவரோடு இது குறித்து தனிப்பட்ட முறையில் எடுத்து கூறுகிறேன். மாறாக அதனை பகிரங்கப்படுத்தி விரும்பத்தகாத ஒரு சமூக குழப்பத்திற்கு வழி ஏற்படுத்த விரும்பவில்லை என்றார்கள். (முஸ்லிம்)

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் முஸ்லிம் கிரந்தத்திற்கான தனது விளக்கவுரையில் “முதன் முதலாக (பித்னாவுக்கான ) வாசலை நான் திறந்தவன் என்ற நிலை உருவாகுவதை விரும்பவில்லை” என்ற உஸாமா (ரழி) அவர்களின் கூற்றை விளக்கும் போது இங்கு உஸாமா (ரழி) அவர்கள் மக்களுக்கு முன்னால் ஆட்சியாளர்களின் குறைகளை பகிரங்கப்படுத்தைவதையே நாடுகிறார்கள் என்று கூறுவதோடு இவ்வாறான நிலையே இறுதியில் உத்மான் (ரழி) அவர்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்ததாகவும் விளக்குகிறார்கள். (18/160)

இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) கூறும் போது இங்கு உஸாமா (ரழி) அவர்கள் நான் ஒரு வாயிலை திறக்காமல் இரகசியமாக அவரோடு பேசினேன் என்று கூறுவதானது மக்களுக்கு முன்னால் பகிரங்கமாக ஆட்சியாளரின் தவறை சுட்டிக்காட்டும் கலாசாரத்தை அவர் முதல் நபராக உருவாக்க விரும்பவில்லை என்பதையும் அவர் சமூக ஒற்றுமை சீர் குளைந்து விடும் என்பதையும் கருதியே இவ்வாறு நடந்து கொண்டார் என்று கூறுகிறார்கள். தொடர்ந்து இமாம் அவர்கள் கூறுகையில் இயாழ் (ரஹ்) கூறுவதை போல உஸாமா(ரழி) அவர்கள் மக்களுக்கு முன்னால் ஆட்சியாளரின் தவறுகளை சுட்டிக்காட்டாமல் அதனை இரகசியமாக இங்கிதமாக அவருக்கு எடுத்து கூறியுள்ளார். இது ஆட்சியாளர் தனது தவறை உணர்ந்து கொள்ள பொருத்தமாக இருக்கும் என்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
(பத்ஹூல் பாரி 13/51)

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் அவர் வாழ்ந்த காலப்பகுதியில் அப்பாசிய ஆட்சியாளர் மஃமூனிடமிருந்து சொல்லொன்னா நெருக்குவாதங்களையும், துன்பங்களையும் அனுபவித்தார்கள், கலீபா மஃமூனால் இமாம் அவர்கள் சிறை பிடிக்கப்பட்டார்கள். அல்குர்ஆன் படைக்கப்பட்டதாக அன்று கோலோச்சியிருந்த முஃதஸிலாக்களின் கொள்கையை எதிர்த்தமையே அதற்கு காரணம். இத்தனை கொடுமைகளையும் சந்தித்த இமாம் அவர்கள் ஆட்சியாளரை காபிர் என்று பிரகடனம் செய்யவில்லை, அவருக்கெதிராக மக்களை அழைத்துக் கொண்டு கிளர்ச்சி செய்ய வெளிக் கிளம்பவுமுல்லை. மக்கள் அதற்காக இமாம் அவர்களுக்கு அழைப்பு விடுத்தும் அதனை செய்ய அவர் முன்வரவில்லை. காரணம் அதனால் ஏற்படும் உயிர் , உடமை சமூக பாதிப்புக்கள் குறித்து இமாம் அவர்கள் நன்கு அறிந்திருந்திருந்தார்கள். மாறாக அவர் கூறியதாவது “எனக்கென்று ஏற்றுக்கொள்ளப்படத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்குமாக இருந்தால் அதனை ஆட்சியாளரின் சீர் திருத்தம் வேண்டி அமைத்துக்கொள்வேன் காரணம் அவர் சீர் பெறுவதிலேயே நாட்டினதும் , நாட்டு மக்களினதும் நீட்சி தங்கியுள்ளது” என்றார்கள். இதனை இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) தனது மின்ஹாஜ் நூலிலே பதிவு செய்து வைத்துள்ளார்கள்.

ஒரு முறை இமாம் ஹசனுல் பஸரி(ரஹ்) அவர்களிடம் அவர் சிறை கைதியாக இருந்த போது காவலாளி நீங்கள் விரும்பினால் இரவு நேரத்தில் வீடு சென்று வரலாம் என்று கூறிய போது ஒரு போதும் ஆட்சியாளருக்கெதிராக துரோகம் செய்வதற்கு உனக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டேன்” என்றார்கள்.
(கிதாபு ஸியர் 4/616 )

இமாம் இப்னு கைய்யும் (ரஹ்) கூறுவதை போல சமூகரீதியான எல்லா வகை குழப்பத்திற்கும் அடிப்படைக் காரணம் மார்க்கத்தை விட சுய கருத்தை முற்படுத்துவதும் , புத்தியை விட மனோ இச்சையை பின்பற்ற முயல்வதே” என்ற கூற்று எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும், புரட்சிகளும் நபிமார்களினதும் நபித்தோழர்களினதும் இமாம்களினதும் வழிமுறைகளுக்கு மாற்றமானவையே!

மூஸா (அலை) அவர்கள் கொடுங்கோலன் பிர்அவ்னின் ஆட்சிக்காலத்தில் தனது சமூகத்தை நோக்கி “அல்லாஹ்வைக்கொண்டு உதவி தேடுங்கள், மேலும் பொறுமையாக இருங்கள்” என்றார்கள். அவர்கள் ஆயுத போராட்டத்திற்கோ , ஆட்சியாளருக்கெதிரான கிளர்ச்சிக்கோ அழைப்பு விடுக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் ” நிச்சயம் எனக்கு பின் அநியாயக்கார ஆட்சியை காண்பீர்கள். பொறுமையாக இருங்கள்” என்றார்கள்.

ஹஜ்ஜாஜ் பின் யூசுபின் கொடுமை பற்றி முறைப்பாடு செய்யப்பட்ட போது அனஸ் (ரழி) அவர்கள் மக்களைப் பார்த்து நீங்கள் “பொறுமை காருங்கள்” என்றார்கள்.

இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் அநியாயக்கார ஆட்சியாளருக்கெதிராக கிளர்ச்சி செய்து வெளியேறுவது ஆகுமானதல்ல என்பதில் ஸலபுகளின் ஏகோபித்த முடிவை பதிவு செய்கிறார்கள். இப்னு பத்தால் கூறுகிறார் “ நபிமொழியில் ஆட்சியாளர் அநீதியாளராக இருப்பினும் அவருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவது ஆகுமானதல்ல என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. தவிர (எதிரிகளால் ) பலமிழந்த ஆட்சியாளரோடு இணைந்து போர் புரியவேண்டும் என்பதில் இஸ்லாமிய சட்டக் கலை வல்லுனர்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர். ஆட்சியாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு அப்பாவி மக்களின் இரத்தம் சிந்தப்படுவதையும் , குழப்பங்கள் விளைவிக்கப்படுவதையும் பார்க்கிலும் ஆட்சியாளருக்கு கட்டுப்படுவது மேலானதாகும். (பத்ஹூல் பாரி-7:13)

இமாம் நவவி(ரஹ்) அவர்கள் “ஆட்சியாளர் பாவம் செய்பவராக இருப்பினும் அவர்களுக்கெதிராக கிளர்ச்சி செய்து வெளியேறுவது கூடாது என்பதில் முஸ்லிம்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர். இது குறித்து ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் வந்துள்ளதோடு பாவம் செய்கிறார் என்பதற்காக ஆட்சியாளரை நீக்கமுடியாது” எனவும் குறிப்பிடுகிறார்கள். ஸரஹு அந்நவவி ஸஹீஹ் முஸ்லிம் (12:229)

இன்று ஆட்சியாளர்களுக்கெதிராக மக்கள் கிளர்ச்சிகளை தூண்டிவிட்டு அப்பாவி மக்களின் உயிர்களை காவு கொள்ளச்செய்யும் கவாரிஜிய போக்குள்ளவர்களுக்கு இக்கூற்றுக்கள் சமர்ப்பணம்! நபித்தோழர்களும் ஸலபுகளும் ஆட்சியாளருடன் நடந்துகொள்ளும் இஸ்லாமிய ஒழுங்குவிதிகள் குறித்து ஸுன்னாவின் வெளிச்சத்தில் தெளிவாக கூறியிருக்க அவை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் போது அவர்களை மெளதூதிச , பன்னாயிஷ, குத்பிஷ இக்வானிகள் ஜாமியாக்கள், மதாகிலாக்கள் என்று வெறுப்பு அடைமொழி கொண்டு அழைத்து தமது இயக்க வெறித்தனத்தை தீர்த்துக்கொள்வதன் மூலம் தமது மார்க்க அறிவீனத்தை வெளிக்காட்டுவதை அவதானிக்கலாம். துரதிஷ்டம் யாதெனில் தக்பீர் அதாவது அடுத்த முஸ்லிம் சகோதரரை பார்த்து காபிர் என்று முத்திரை குத்துவதானது இஸ்லாத்தை ஆழமாக கற்று அறிந்த அறிஞர் பெரும் தகைகள் கூட நுழையாத ஒரு பகுதியாக இருக்கும் போது அறிஞர்களின் வழிகாட்டல்கள் இல்லாமல் செவிவழியாக மார்க்கத்தை அறிந்து அல்லது கூகுளில் தேடி அதனை மொழி பெயர்ப்பு செய்து அடுத்தவருக்கு தக்பீர் முத்திரை குத்தும் பாரதூரமான சமூக கருத்துருவாக்கம் குறித்து எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் கருமமாற்றுவது அனைவரினதும் தார்மீக பொறுப்பாகும்.

அல்லாஹூத்தாலா இறக்கியதைக்கொண்டு ஆட்சி செய்யாதவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய காபிரா?

ஓர் கவாரிஜி கலீபா மஃமூனிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது கலீபா அவர்கள் எம்மோடு நீர் முரண்படுவதற்குரிய காரணம் என்ன” ? என்று கேட்டார் அதற்கு குறித்த கவாரிஜி ஓர் அல்குர்ஆன் வசனம் எனக்கூறி “யார் அல்லாஹூத்தாலா இறக்கியதை கொண்டு தீர்ப்பு சொல்லவில்லையோ அவர்கள் இறை நிராகரிப்பாளர்கள்” என்று வரும் ஸூரா மாயிதாவின் 44 ஆவது வசனத்தை குறிப்பிட்டார். கலீபா குறித்த வசனம் இறை வசனம் என்பது குறித்து நீர் எப்படி அறிவீர் என்றார்கள். அதற்கு கவாரிஜி முஸ்லிம் உம்மத்தின் ஏகோபித்த தீர்மானம் அடிப்படையில் அதனை அறிவேன் என்று பதில் அளித்தார். உடனே கலீபா அவர்கள் குறித்த வசனம் இறக்கப்ட்டதில் உம்மத்தின் ஏகோபித்த முடிவை ஏற்றுக் கொள்ளும் நீர் அந்த வசனத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொள்வதிலும் உம்மத்தின் ஏகோபித்த முடிவை ஏற்றுக்கொள் என்று கூறவே குறித்த கவாரிஜி இமாம் அவர்களுக்கு கட்டுப்பட்டு ஸலாம் கூறி அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.

இந்த சம்பவத்தை இமாம் கதீபுல் பக்தாதி அவர்கள் தனது தாரீகுல் பக்தாத் நூலில் பாகம் 10 பக்கம் 186 இல் பதிவு செய்துள்ளார்கள்.

இமாமுல் ஹரமைன் ஜூவைனி (ரஹ்) அவர்கள் தனது ‘மதனுல் வரகாத்’ என்னும் நூலில் குறிப்பிடுவதை போல இங்கு யார் என்று குறிப்பிட உபயோகிக்கப்பட்டிருக்கும் من என்ற அரபு சொல் சட்டம் செலுத்துபவரையும் , சட்டம் செலுத்தப்படுபவரையும் குறிக்கும். அதே போல் அல்லாஹ் இறக்கிய ஒன்றைக் கொண்டு என்ற சொல்லைக் குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கும ما என்ற சொற் பிரயோகம் பொதுவாக இறைவன் இறக்கியருளியுள்ள அனைத்து ஷரீஅத் விடயங்களையும் குறிக்கும். அது முஃமின்கள் தமது பார்வையை தாழ்த்துவதாக கூறப்பட்டிருக்கும் இறை வசனமாக இருந்தாலும் சரியே குறித்த விடயத்தில் எவர் இஸ்லாமிய நெறிமுறையை பின்பற்றவில்லையோ அவரும் காபிfராகவே கருதப்படுவார். ஆனால் அஹ்லுஸ் ஸூன்னா இமாம்களை பொருத்தமட்டில் குறித்த அல்குர்ஆன் வசனத்தை அதன் வெளிப்படையான கருத்தை வைத்து அப்படியே விளங்காமல் மிகவும் தெளிவாக இதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.

அதே போன்று இமாம் இப்னு அப்துல் பிர் மாலிகி (ரஹ்) அவர்கள் தனது அத்-தம்ஹீத் என்னும் நூலில் பாகம் 05 பக்கம் 74 ல் குறிப்பிடுவதை போல் “ஒருவர் இறை சட்டத்திற்கு மாற்றமாக தீர்ப்பு சொன்னால் அது இறை சட்டம் என்பதை அறிந்தும் வேண்டுமென்று அவ்வாறு செய்வாரானால் அது பெரும்பாவமாக கருதப்படும். இது குறித்து அல்குர்ஆனில் வந்துள்ள ஸூரதுல் மாயிதாவின் 44 ஆவது மற்றும் 45 ஆவது மற்றும் 47 ஆவது ஆகிய வசனங்களில் அவர்கள் இறை நிராகரிப்பாளர்கள், பாவிகள் மற்றும் அநியாயக்காரர்கள் என்பதாக வந்துள்ள வசனங்களை குறிப்பிட்டு குறித்த குர்ஆன் வசனம் யூதர்கள் விடயத்தில் இறக்கப்பட்டிருந்தாலும் அது எம் அனைவருக்கும் பொதுவான சட்டம் என்பதாகவும் அவ்வாறு ஒருவர் செய்யும் போது அவர் அல்லாஹூத்தாலாவையோ, மலக்குமார்களையோ, வேதங்களையோ, நபிமார்களையோ, மறுமை நாளையோ, மறுத்த இறை நிராகரிப்பாளராக கருதப்படமாட்டார். மார்க்கத்தை விட்டும் வெளியேற்றாத சிறிய குப்fர் என்னும் இறை நிராகரிப்பை செய்தவராகவே கருதப்படுவார். குறித்த குர்ஆன் வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரழி) மற்றும் தாவூஸ்(ரஹ்) முஜாஹித் (ரஹ்) போன்ற தப்ஸீர் கலை மேதைகள் இவ்வாறே விளக்கம் அளித்துள்ளார்கள் என்பதாகவும் குறிப்பிடுகிறார்.

அதே நேரம் தான் இயற்றிய சட்டம் ஒன்றை இறை சட்டமாக அறிவிப்பு செய்து, அல்லது இறை சட்டம் அல்லாத ஒரு சட்டத்தை இறை சட்டம் என்பதாக நினைத்து ஒருவர் தீர்ப்பு கூறினால் அது குப்fர் எனப்படும் இறை நிராகரிப்புக்கு இட்டுச்செல்லும். யூதர்கள் அல்லாஹ் அருளிய சட்டங்களை மாற்றினார்கள். சட்டங்களை தாமாக உருவாக்கி அவை அல்லாஹ் அருளிய சட்டங்கள் என அல்லாஹ்வின் மீது அபாண்டம் கூறினார்கள்.

இமாம் இப்னுல் அரபி அவர்கள் தனது அஹ்காமுல் குர்ஆன் என்ற நூலில் பக்கம் 2 பாகம் 624 இல் கூறும்போது “யார் ஒருவர் தான் இயற்றிய சட்டத்தை இறை சட்டமாக கூறுகிறாரோ அவர் குப்fர் என்னும் இறை நிராகரிப்பை செய்தவராவார். மேலும் எவர் ஒருவர் தான் இயற்றிய சட்டத்தை மனோ இச்சையின் பிரகாரமும் , பாவமாகவும் தீர்ப்பு சொல்கிறாரோ அவர் பாவமண்ணிப்பு கேட்டால் அல்லாஹூத்தாலா மண்ணிக்ககூடிய ஓரு குற்றத்தை செய்தவராக கருதப்படுவார். இதுவே அஹ்லுஸ் ஸூன்னா இமாம்களின் நிலைப்பாடாகும்” என குறிப்பிடுகிறார்.

இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் முஸ்லிம்களின் இருப்பு, எதிர்காலம் பற்றிய எந்த வித சமூக பிரக்ஞையும் இல்லாமல் இஸ்லாமிய கிலாபத் மற்றும் ஜிஹாத் போன்ற கவர்ச்சிகரமான விவகாரங்கள் குறித்து பிரசாரம் செய்து பாமர மக்களிடத்திலும் சில படித்தவர்களிடத்திலும் சிந்தனைச் சிக்கல்களை ஏற்படுத்தி அவர்களது உணர்வுகளை தூண்டி அதில் தனது கொள்கைக்கு வடிகால் தேடும் பயங்கராமன ஆபத்தான சமூக பின்னணி கொண்ட ஒரு குழுவினர் உருவாகியிருப்பது குறித்து நாம் ஸீரியசாக வாசிப்பு செய்ய வேண்டியுள்ளது.

தவிர, மார்க்கத்தில் ஆட்சி , அதிகாரம் பற்றிய ஒரு சில விவகாரங்களை தாம் இது விடயத்தில் குருநாதர்களாக கொண்டாடும் நபர்களின் மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக வைத்து முகநூல் போன்ற சமூக வலையத்தளங்களில் பதிவிட்டு அரபுலக ஆட்சியாளர்களுக்கு குப்ர் பட்டம் வழங்கி , அவர்களை மதம் மாறிய முர்தத்களாக பிரகடனம் செய்யும் எல்லை மீறிய போக்கு உருவாகியிருப்பதும் அவதானிக்கத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *