Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » அத்வைதிகளால் தவறாக புரியப்பட்ட திருமறை வசனம் – 04

அத்வைதிகளால் தவறாக புரியப்பட்ட திருமறை வசனம் – 04

“ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون”

“நாமோ உங்களை விட அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கின்றோம். எனினும் நீங்கள் பார்ப்பதில்லை ” – 56:85

எல்லாம் அவனே தான் என்ற வழிகெட்ட கொள்கையை பரப்படக்கூடிய சாரார் தம்முடைய வாதத்தை நிறுவுவதற்காக இந்த வசனத்தையும் ஆதாரமாக வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த வழிகெட்ட வாதத்திற்கும் இந்த திருமறை வசனத்திற்கும் அணுவளவும் கூட சம்பந்தமே கிடையாது. இவர்கள் காட்டக்கூடிய இந்த ஆதாரமே இவர்கள் அல்குர்ஆனைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள் என்பதை நிறுவுவதற்கான போதுமான ஆதாரமாகும்.

சாதாரணமாக அல்குர்ஆனை சரியான முறையில் வாசித்தவர்கள் இந்த வசனத்தின் விளக்கத்தை தெளிவான முறையில் புரிந்து கொள்வார்கள்.

இந்த வசனம் உண்மையில் எல்லாமே அல்லாஹ்தான் என்ற வழிகெட்ட சிந்தனையை சொல்லவில்லை. மாற்றமாக இந்த வசனம் உயிரைக் கைப்பற்ற வருகின்ற மலக்குகளைப் பற்றி பேசுகின்றது.

இதற்கு என்ன ஆதாரம் என்றால் இதற்கு முந்தைய வசனங்களில் வருகின்ற வாசகங்களாகும்.

அல்லாஹ் கூறுகிறான்;
“உங்களில் ஒருவரது உயிர் அவரது தொண்டைக்குழியை அடையும் வேளை, அப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்! (அதை உங்களால் தடுக்க முடியுமா?). நாமே உங்களை விட அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கின்றோம் . எனினும் நீங்கள் பார்க்கமாட்டீர்கள். ஆகவே நீங்கள் (யாருடைய) அதிகாரத்திற்கும் கட்டுப்படாதவர்களாக இருந்தால்… நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவருடைய உயிரானதை நீங்கள் அவரின் பால் மீளவைத்திருக்கலாமே.?” (56:83-87)

இந்த ஐந்து வசனங்களிலும் அல்லாஹ் ஒரு மனிதனது மரணத் தருவாயில் நடக்கக்கூடிய விடயங்களை சொல்லிக் காட்டுகிறான். உயிரைக் கைப்பற்றுவதற்கு அல்லாஹ் மலக்குல் மவ்த் என்று சொல்லக்கூடிய மலக்கை நியமித்து வைத்திருக்கிறான்.

அல்லாஹ் கூறுகிறான்;
“உங்களுக்கென நியமிக்கப்பட்டிருக்கும் (உயிரைக் கைப்பற்றும்) மலகுல் மவ்த் உங்கள் உயிர்களைக் கைப்பற்றுவார். பின்னர் நீங்கள் உங்கள் இரட்சகனிடமே மீட்டப்படுவீர்கள்”
(32:11)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;
“ஒரு முஸ்லிமான அடியான் இந்த உலகை விட்டும் மறுமைக்கு போகும் போது (அவனது மரணத் தருவாயில்) சூரியனைப் போன்று பிரகாசமுடைய வெண்மையான முகத்தையுடைய மலக்குகள் வானத்திலிருந்து இறங்குவார்கள். அவர்களிடம் சுவர்க்கத்துத் துணியிலான கபன் துணியும் சுவர்க்கத்து கஸ்தூரியும் இருக்கும். அவ்வடியானின் பார்வைக்கு எட்டும் தூரத்தில் அம்மலக்குகள் இருப்பார்கள். உயிரைக் கைப்பற்றும் மலக்கான மலக்குல் மவ்த் அவ்வடியானின் தலைப்பக்கமாக உட்கார்ந்து நல்ல ஆத்மாவே அல்லாஹ்வின் மன்னிப்பின் பாலும் பொருத்தத்தின் பாலும் வெளியேறுவாயாக என்று கூறுவார்……..”
அறிவிப்பவர்: பராஃ இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு.
நூல்: புஹாரி.

இந்த நபிமொழியானது மிக நீண்ட நபிமொழியாகும். இந்த செய்தியில் நல்லவர்களது உயிர் எப்படி இலகுவாக கைப்பற்றப்படும், அவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்ற சுபசோபனங்கள் சொல்லப்படுவதுடன் கெட்ட மோசமான மனிதர்களது உயிர் எப்படி பயங்கரமான நிலையில் கைப்பற்றப்படும், அவர்களுக்கு காத்திருக்கக்கூடிய பயங்கரங்களை சொல்லித் தருக்கூடியதாக இருந்தாலும் எம்முடைய விளக்கத்துக்காக அந்த ஹதீஸின் ஆரம்ப பகுதியை மாத்திரம் நாம் தெரிவு செய்திருக்கிறோம்.

இந்த ஹதீஸானது ஒரு மனிதனது உயிர் கைப்பற்றப்படுகின்ற போது அவரின் தலைப் பக்கமாக மலக்குல் மவ்த் என்று சொல்லப்படும் மலக்கு இருப்பதாக சொல்லித் தருகிறது. எனவே தான் அல்லாஹ் “நாமோ உங்களை விட அவருக்கு மிக சமீபமாகவே இருக்கிறோம்” என்று சொல்லி விட்டு அந்த வசனத்தை முடிக்கும் போது “எனினும் நீங்கள் அதனைப் பார்ப்பதில்லை” என்று கூறி முடித்திருக்கிறான்.

எம்முடைய உறவுகளது உயிர் எங்களுடைய கண் முன்னாலும் சில தடவைகள் பிரிகின்றன. ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் மலகுல் மவ்த் துதான் அந்த உயிரைக் கைப்பற்றுகிறார். ஆனால் மனிதர்களான எவரும் அதனைப் பார்ப்பது கிடையாது. எவருடைய உயிர் கைப்பற்றப்படுமோ அவர் மாத்திரம் தான் அம்மலக்குகளைப் பார்க்கிறார்.

எனவே இந்த திருமறை வசனமானது எல்லாம் அவனே என்ற வழிகெட்ட சிந்தனையை சொல்லவே இல்லை. மாற்றமாக உயிரைக் கைப்பற்றுகின்ற மலக்கைப் பற்றிதான் கூறியிருக்கின்றது. ஆகவே எம் ஒவ்வொருவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அவனுடைய மார்க்கத்தில் பூரண தெளிவைத் தருவானாக!

தொகுப்பு…
பர்ஹான் அஹமட் ஸலபி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *