Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » பெருநாள் தொழுகை | [பிக்ஹுல் இஸ்லாம்-045]

பெருநாள் தொழுகை | [பிக்ஹுல் இஸ்லாம்-045]

“ஈத்” என்றால் பெருநாள் எனப் பொருள்படும். முஸ்லிம்களுக்கு ‘ஈதுல் பித்ர்” – ஈகைத் திருநாள் எனும் நோன்புப் பெருநாள், “ஈதுல் அழ்ஹா” – தியாகத் திருநாள் எனும் ஹஜ்ஜூப் பெருநாள் என இரண்டு பெருநாட்கள் உள்ளன. இந்தப் பெருநாள் தினங்களில் விசேடமாகத் தொழப்படும் தொழுகைக்கே ‘ஸலாதுல் ஈத்” – பெருநாள் தொழுகை என்று கூறப்படும். ‘ஸலாதுல் ஈதைன்” என்றால் இரு பெருநாள் தொழுகை என்று அர்த்தப்படும்.

பெருநாள்:
மனிதனின் மன மகிழ்வுக்கும் மன மாற்றங்களுக்கும் பெருநாள் துணை நிற்கின்றது. ஏனைய சமூகங்கள் தமது சமயத் தலைவர்களின் பிறந்த, இறந்த தினங்களைத் திருவிழா நாளாக மாற்றியுள்ளன. இஸ்லாம் நோன்பு, ஹஜ் என்ற இரு வணக்கங்களின் அடிப்படையில் பெருநாட்களை அமைத்துத் தந்துள்ளது.

குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் நோன்பிருந்து அந்த மாதம் முடிந்து அடுத்த மாதத்தின் ஆரம்ப நாளை நோன்புப் பெருநாளாக ஆக்கியுள்ளது. இப்றாஹீம் நபியின் குடும்பம் செய்த தியாகங்களை நினைவு+ட்டும் ஹஜ் கிரியைகளின் போது ஹஜ்ஜூப், பெருநாள் தினத்தையும் முஸ்லிம்களுக்கு அமைத்துக் கொடுத்துள்ளது.

இந்த வகையில் ஏனைய சமூகங்களின் பெருநாட்களை விட இஸ்லாமிய பெருநாட்கள் தனித்துவமானதாகவும் தனிச் சிறப்பம்சம்மிக்கதாகவும் அமைந்துள்ளதை உணரலாம்.

இஸ்லாமிய பெருநாட்கள் ஏனைய சமூகப் பெருநாட்களை விட ஏற்றமானதும் பல்வேறுபட்ட சிறப்பம்சங்களைக் கொண்டதுமாகும்.

அறியாமைக் கால மக்கள் வருடத்தில் இரண்டு நாட்களில் விளையாட்டுக்களில் ஈடுபடுவார்கள். நபி(ச) அவர்கள் மதீனா வந்த போது, ‘உங்களுக்கு இரண்டு நாட்கள் இருந்தன. அவற்றில் நீங்கள் விளையாடி வந்தீர்கள். உங்களுக்கு அவ்விரு நாட்களை விட நல்ல நாட்களை அல்லாஹ் பெருநாட்களாக ஆக்கியுள்ளான். அவைதான் நோன்புப் பெருநாளும் தியாகப் பெருநாளுமாகும்” என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(வ)
நூல்: நஸாஈ – 1556

(இந்த அறிவிப்பு ஸஹீஹானது என இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.)

பெருநாள் தொழுகை
ஏனைய சமூகங்களின் பெருநாட்கள் இணை வைப்பாகவும் ஹராமான கூத்துக் கும்மாளமுமாக அமைந்திருக்க இஸ்லாமிய பெருநாட்கள் தொழுகை மூலம் சிறப்பிக்கப்படுகின்றது. இது இஸ்லாமிய பெருநாளின் தனிச் சிறப்பம்சமாகும்.

பெருநாள் தொழுகையின் சட்டம்:
பெருநாள் தினத்தில் தொழப்படும் இத்தொழுகை கட்டாயமானதா? இல்லையா என்பதை விளக்குவதில் அறிஞர்கள் தமக்கு மத்தியில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.

1. அனைவர் மீதும் கட்டாயக் கடமை:
சில அறிஞர்கள் பெருநாள் தொழுகையை ‘பர்ளு ஐன்” பருவ வயதை அடைந்த உரிய சங்கடங்கள் இல்லாத அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமை எனக் கூறுகின்றனர். இந்தக் கருத்தில் அறிஞர்களான அபு+ஹனீபா மற்றும் சில மாலிகி மத்ஹபுடைய அறிஞர்களும் உள்ளனர். இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) இந்தக் கருத்தையே தேர்ந்தெடுக் கின்றார்கள். இந்தக் கருத்தையுடைய அறிஞர்கள் பின்வரும் சான்றுகளைத் தமது கருத்துக்கு வலுவான ஆதாரமாகக் காண்கின்றனர்.

‘எனவே, உமது இரட்சகனுக்காகத் தொழுது, (அவனுக்காகவே) அறுத்துப் பலியிடுவீராக!” (108:2)

இங்கே தொழுகை என்பது பெருநாள் தொழுகையையும் அறுத்துப் பலியிடுதல் என்பது உழ்ஹிய்யாவையும் குறிக்கும். இங்கே பெருநாள் தொழுகை ஏவப்படுவதால் அது வாஜிப் என்பதை அறியலாம்.

‘(நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகவும், அல்லாஹ் உங்களை நேர்வழியில் செலுத்தியதற்காக அவனைப் பெருமைப்படுத்துவதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவ்வாறு செய்தான்.)” (2:185)

இந்த வசனத்தில் பெருநாள் தினத்தில் தக்பீர் கூறுவது பற்றி ஏவப்படுகின்றது. பெருநாள் தொழுகையில் ஏனைய தொழுகைகளை விட 12 தக்பீர்கள் அதிகமாகக் கூறப்படுகின்றது. இந்த ஏவலுக்கு ஏற்பவே பெருநாள் தொழுகை அமைந்துள்ளதால் பெருநாள் தொழுகையும் ஏவப்பட்டதாக அமைகின்றது. குர்ஆனில் ஏவப்பட்டது கட்டாயக் கடமையாகும் என்ற அடிப்படையில் பெருநாள் தொழுகை கட்டாயக் கடமையாகும்.

நபியவர்கள் தனது வாழ்நாளில் பெருநாள் தொழுகைகளை விட்டதே இல்லை. அவ்வாறே கலீபாக்களும் தொடராக செய்து வந்துள்ளனர். அவர்கள் தொடராகச் செய்து வந்ததது இது கட்டாயக் கடமை என்பதை உணர்த்துகின்றது.

ஆண்கள், பெண்கள் அனைவரையும் பெருநாள் தொழுகைக்கு வருமாறு நபி(ச) அவர்கள் ஏவியுள்ளார்கள். தொழ முடியாத ஹைழ், நிபாஸ§டைய பெண்களைக் கூட தொழுமிடத்துக்கு வருமாறும், தொழும் திடலை விட்டும் ஒதுங்கி இருந்து மற்ற விடயங்களில் பங்கெடுக்குமாறும் கூறியுள்ளார்கள். தன்னை முழுமையாக மறைத்துக் கொள்ள போதிய ஆடையற்ற பெண்களைக் கூட இரவலுக்கு ஆடை பெற்று அணிந்து வரப் பணித்துள்ளதில் இருந்து இது அனைவர் மீதும் கட்டாயக் கடமையான தொழுகை என்பதை அறியலாம்.

இது இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும். இந்த வகையில் ஜூம்ஆ தொழுகை போன்று கட்டாயமானதாகும்.

பெருநாள் தொழுகையும் ஜூம்ஆ தொழுகையும் ஒரே தினத்தில் வந்தால் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்தவர் ஜூம்ஆவில் பங்கெடுக்காமல் விடலாம் என சலுகையுள்ளது. ஜூம்ஆ தொழுகையின் கடமையை இது இல்லாமலாக்குகின்றது என்றால் இதுவும் கடமை என்று உணரலாம். இவ்வாறு ‘பர்ளு ஐன்” ஒவ்வொருவரும் கட்டாயம் தொழுதேயாக வேண்டும் என்று கூறும் அறிஞர்கள் தமது ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.

02. பர்ளு கிபாயா:
மற்றும் சில அறிஞர்கள் ‘பர்ளு கிபாயா” அதாவது சிலர் செய்தால் அடுத்தவர் மீதுள்ள கடமை நீங்கிவிடும் என்று கூறுகின்றனர். அதாவது, பெருநாள் தொழுகை கட்டாயமானதுதான். ஆனால், அனைவர் மீதும் கட்டாயமானது அல்ல. ஜனாஸா தொழுகை போன்று யாரோ சிலர் செய்துவிட்டாலும் மற்றவர்கள் மீதுள்ள கடமை நீங்கிவிடும் என்று கூறுகின்றனர்.

இவர்கள் தமது கூற்றுக்கு முதல் சாராரின் ஆதாரங்களைத்தான் முன்வைக்கின்றனர். இருப்பினும் இந்த ஆதாரங்கள் பெருநாள் தொழுகை வாஜிப் என்பதைத்தான் காட்டுகின்றது. ஒவ்வொருவர் மீதும் இது கடமை என்பதைக் காட்டவில்லை என்பது அவர்கள் வாதமாகும்.

03. வலியுறுத்தப்பட்ட சுன்னத்:
பெருநாள் தொழுகை சுன்னா முஅக்கதா – வலியுறுத்தப்பட்ட சுன்னா என்பது மூன்றாம் தரப்பினரின் வாதமாகும். ஷாபி மத்ஹபுடைய அநேக அறிஞர்கள் இந்தக் கருத்தில் உள்ளனர். இவர்கள் தமது கருத்துக்கு பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.

நபி(ச) அவர்கள் ஒரு நாட்டுப்புற அரபி வந்து ஐவேளைத் தொழுகை தவிர வேறு தொழுகை என்மீது கடமையா? எனக் கேட்ட போது, நபி(ச) அவர்கள் இல்லையென்று கூறிய ஹதீஸை இதற்கு ஆதாரமாக எடுக்கின்றனர்.

அத்துடன் பெருநாள் தொழுகைக்கு அதான், இகாமத் இல்லை. எனவே, இது ஜனாஸா தொழுகை போன்றது என்று கருதுகின்றனர்.

முடிவாக,
பெருநாள் தொழுகை பர்ழ் ஐன் என்ற முதல் சாராரின் கூற்றுத்தான் வலு கூடியதாகும். அதற்காக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் வலுவானதாகும். பெருநாள் தொழுகை சுன்னா என்ற கருத்து பலவீனமானதாகும். நாட்டுப்புற அரபியின் கேள்விக்கு நபி(ச) அவர்கள் அளித்த பதில் இரவு-பகலில் திரும்பத் திரும்ப கடமையாகும் தொழுகை பற்றியே கூறப்படுகின்றது. அதில் கூறப்படவில்லை என்பதற்காக வருடத்திற்கு இரு முறை வரும் பெருநாள் தொழுகையை அந்த சட்டத்திற்குள் கொண்டு வர முடியாது எனக் கூற முடியாது.

அடுத்து, இதை பர்ளு கிபாயாவாக சிலர் செய்தால் அடுத்தவர்கள் செய்யாவிட்டாலும் பரவாயில்லை என்று கூறவும் முடியாது. ஏனெனில், ஜனாஸா தொழுகை போன்றதல்ல பெருநாள் தொழுகை. இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நபி(ச) அவர்கள் கட்டளையாக இட்டுள்ளார்கள். ஜூம்ஆ தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ளுமாறு பெண்களும் ஏவப்பட்டுள்ளனர். எனவே, பெருநாள் தொழுகை பருவ வயதை அடைந்த, புத்தி சுவாதீனமுள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும் என்பதே மிகச் சரியானதாகும்.

பெருநாள் தொழுகையின் நேரம்:
பெருநாள் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்வது அவசியமாகும்.

சூரியன் உதித்து தொழுவது வெறுக்கப்பட்ட நேரம் கழிந்ததில் இருந்து அதாவது, சுமார் 20 நிமிடங்கள் கழிந்ததில் இருந்து சூரியன் உச்சிக்கு வரும் வரை இத்தொழுகைக்குரிய நேரமாகும் என்பது ஹனபி, மாலிகி, ஹன்பலி மத்ஹபுடைய அறிஞர்களின் கருத்தாகும். ஆரம்ப நேரத்திலேயே தொழுவதுதான் ஏற்றமானதாகும்.

ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுத பின்னர்தான் உழ்ஹிய்யா பிராணிகளை அறுக்க வேண்டும். நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் பித்ராவைக் கொடுத்து விட வேண்டும். எனவே, நோன்புப் பெருநாளை விட ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையை முற்படுத்துவது நல்லதாகும். இதனால் உழ்ஹிய்யா பணிகளைச் செய்ய நேரம் கிடைப்பதுடன் நோன்புப் பெருநாள் தொழுகையைச் சற்று தாமதிப்பதால் பித்ரா கொடுக்காதவர்களுக்கு அதைக் கொடுக்க ஒரு வாய்ப்புக் கிடைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *