Featured Posts
Home » பொதுவானவை » அந்நியனும் – வழிப்போக்கனும்

அந்நியனும் – வழிப்போக்கனும்

அந்நியனும் – வழிப்போக்கனும்

அந்நியன், வழிப்போக்கன், நாடோடி இவர்களெல்லாம் யார் என்று இன்றய (youth) இளைஞர்களிடம் கேட்டால் சற்றும் தாமதிக்காமல் உடனே சொல்லுவார்கள் இது அனைத்தும் சினிமாவின் தலைப்பு என்று. சிலர் அந்நியன், வழிப்போக்கன், நாடோடி என்றெல்லாம் சொல்லக்கேட்டிருப்பர். ஆனால் அவர்களின் வாழ்வின் நிலைகள் என்ன என்பதை அறியாமலிருக்கலாம்.

தன் சொந்த நாட்டைவிட்டு வேறு நாட்டுக்கு குடியேறியவனைத்தான் ”அந்நியன்” என்று சொல்லப்படும். அறிமுகமில்லாத அந்நிய பூமியில் வசிப்பவன், அந்த பூமிக்குச் சொந்தக்காரனோடு அதிகம் பழகாமல் கூச்சத்தோடும், அச்சத்தோடும்தான் வாழ்வான். ஆபத்தான நேரங்களில் அந்நியனுக்கு அபயமளிப்பதுகூட சொந்த மண்ணில் வசிப்பவனுக்கு சிலசமயம் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.

அந்நியன் எந்த நேரத்திலும் அங்கிருந்து வெளியேறிவிடும் கட்டாயம் ஏற்படும் என்பதால் அங்கு வீடுவாசலோ, சொத்துசுகமோ வாங்கி சேர்ப்பதில் அவன் கவனம் செலுத்தமாட்டான். இன்னும் அவன் அந்நிய பூமியில் வசிப்பதால் அவனுக்கு பொறாமை, வஞ்சகம், பகைமை ஏற்பட அங்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே.

இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கவேண்டும்! தாய்நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு குடியேறியவர்களுக்கு அந்த நாட்டில் குடியுரிமை வழங்கப்படுகின்றது, அங்கு திருமணம் செய்யும் உரிமை, சொத்துசுகம் சேர்க்கும் உரிமையும் வழங்கப்பட்டு இன்னும்பிற சலுகைகளெல்லாம் வழங்கப்பட்டாலும் அவன் அந்நியன் என்றுதான் அடையாளமிடப்படுவான். அவன் அங்கேயே வாழ்ந்து, மரித்து மண்ணாகிப்போனாலும் வரலாறு அவனை அந்நியன் என்றுதான் பதிந்து வைத்திருக்கும்.

வழிப்போக்கன் – நாடோடி

வழிப்போக்கன் அல்லது நாடோடிகள். கால்நடையாகப் பயணம் செய்பவர்களை ”வழிப்போக்கன்” நாடோடி என்று சொல்லப்படும். அந்நியனின் நிலையைவிட இந்த வழிப்போக்கனின் நிலை மிகவும் பரிதாமமானது! முதலாவதாக வழிப்போக்கர்கள் தன் இலக்கை அடைவதற்காக கால்நடையாகப் பயணத்தை மேற்கொண்டிருப்பதால் இவர்களிடம் சுமைகள் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். அந்நியனுக்காவது உண்ண உணவும், உடுத்த உடுப்பும், உறங்க இடமும் கிடைத்துவிடும். ஆனால் இந்த அடிப்படை தேவைகளும் வழிப்போக்கர்களுக்கு கிடைப்பது மிகவும் அரிது.

அரபு மக்களின் நற்பண்புகளில் முக்கியமான ஒன்று வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்குவதும், நீர் புகட்டுவதும். சில சமயம் தனக்கு இல்லாவிட்டாலும் வழிப்போக்கர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை தன் குலப் பெருமையாக எண்ணி இதை விடாது அரபுகள் செய்துவந்தனர். இன்றும் பல ஊர்களில் வழிப்போக்கர்களுக்கென்று மடங்கள் கட்டிவைத்திருப்பதை பார்க்கலாம். இதுபோன்ற மடங்களில் சென்று வழிப்போக்கர்கள் இளைப்பாறிவிட்டு மீண்டும் கால்நடையாகத் தங்கள் பயணத்தை தொடர்வார்கள். எதுவரை என்றால் தங்களின் இலக்கை அடையும் வரை அவர்களின் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

இந்த விளக்கத்தின் பின்னணியோடு இந்த ஹதீஸை பாருங்கள்:

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு’ என்றார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’ என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி: 6416).

عن عبد الله بن عمر رضي الله عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وكان ابن عمر يقول إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك (صحيح البخاري)

அந்நியன் அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு என்பதால் ஒருவன் பொருளாதாரம் ஈட்டக்கூடாது என்பது பொருள் அல்ல! ஒரு இறைநம்பிக்கையாளன் இம்மை வாழ்வையே சதம் என்று நம்பி, மறுமையை மறந்து உலக இன்பங்களில் மூழ்கிவிடக்கூடாது, நிலையான மறுமை வாழ்விற்காக இன்பங்களை தியாகம் செய்து அயலூரில் வாழ்வதைப் போன்று ஒரு முஃமின் இந்த உலகத்தில் வாழவேண்டும் என்பதை உணர்த்துகின்றது இந்த ஹதீஸ். இதையே இப்னு உமர் (ரலி) அவர்களும் இந்த ஹதீஸுக்கு விளக்கமாக கூறியுள்ளனர்.

அந்நியனுக்கு எல்லாவிதமான சலுகையும் வசதியும் செய்துகொடுத்து அந்நியன் என்ற அடையாளத்தை அவனிடமிருந்து நீக்கிவிட்டலாம் என்பதால் வழிப்போக்கன் என்ற மற்றொரு நிலையை அல்லாஹ் தன் தூதரை சொல்லவைத்துள்ளான் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த செய்தியை ரசூல் (ஸல்) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களின் தோளைப்பிடித்துக்கொண்டு சொன்ன விதம், இது மிகவும் முக்கியத்துவம் (Importance) வாய்ந்த செய்தி என்பதை உணர்த்துகின்றது.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது பாரசீக மன்னர் கய்சர் உளவு பார்ப்பதற்காகத் தமது தூதரை மதீனா நகருக்கு அனுப்பிவைத்தார். அந்த தூதர் உமர் (ரலி) அவர்களை எங்குதேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக ஒரு மரத்தடியில் மாபெரும் சக்கரவர்த்தி உமர் (ரலி) அவர்கள் ஒரு வழிப்போக்கரைப் போன்று படுத்திருந்தார்கள் என்ற சம்பவம் இங்கு நினைவுகூறத்தக்கது.

——————-
S.A.Sulthan
04/05/2019
#jeddah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *