Featured Posts
Home » பொதுவானவை » நாட்டு நடப்பு » இஸ்லாமும் கருத்தியல் ஜனநாயகமும்

இஸ்லாமும் கருத்தியல் ஜனநாயகமும்

எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A.)

நவீன உலகில் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் என்பன பற்றி விரிந்தளவு பரவலாகப் பேசப்படுகிறது. மாற்றுக் கருத்துகளைப் பரிசீலிக்கவும் மதிக்கவும் மதிப்பீடு செய்யவும் இன்று பெருமளவு ஜனநாயக தளத்தில் வலியுறுத்தப்படுகிறது. அதனால், கருத்தியல் சுதந்திரம், ஜனநாயகம் மிகுந்த ஒரு சூழல் உலக நாடுகளில் இன்று கற்கைப் பொருளாகியுள்ளது. நவீன ஜனநாயக உலகில் இது இன்று பேசுபொருளாகியுள்ள அதே வேளை மாற்றுக் கருத்தை மதிப்பதற்கும் மீள் பரிசீலனை செய்வதற்கும் ஏன் விமர்சனம் செய்வதற்கும் உலக ஜனநாயகத்தைவிட இஸ்லாம் மிகுந்த வழிகாட்டலையும் மதிப்பீட்டையும் வழங்கியுள்ளது. மாற்றுச் சிந்தனைகள், கருத்துக்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தும் பக்குவம் அண்மைய காலங்களில் தான் ஜனநாயக எழுச்சியில் பேசுபொருளானது. ஆனால், இஸ்லாம் இதற்கு மிகப் பெரும் வரலாற்றுப் பாரம்பரியத்தையும் கருத்தியல் பரிசீலிப்பு, ஏற்பு முறையையும் தொன்மையான காலம் முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஆனால், இந்தப் பாரம்பரியத்தை தற்போது மேற்கு ஜனநாயகம் தமக்குள் நன்கு வளர்த்துக் கொண்டுள்ளது. இஸ்லாமிய உம்மத் கருத்தியல் சகிப்புத் தன்மையில், மாற்றுக் கருத்துப் பரிசீலிப்பில் மிகப் பெரும் பின்னடைவையும் புறக்கணிப்புப் போக்கையும் கொண்டுள்ளது. விமர்சனப் பகுப்பாய்வில் சகிப்புத் தன்மையற்ற போக்கை வன்மையாகக் கைக்கொள்கிறது. அதனால், இஸ்லாமிய உம்மத் பரிசீலனையற்ற கருத்தடிமைத் தளத்திற்கு வேகமாக நகர்த்திச் செல்லப்பட்டு, சுய நலச் சகதியில் புதைக்கப்படுகிறது.

இது தொடர்பாக முஸ்லிம் உம்மத்தின் தற்போதைய சமூகக் குறை நிலைக் கட்டமைப்பு நியதியையும் மேற்கின் ஜனநாயக கருத்துச் சுதந்திரத் தன்மையையும் மதிப்பீடு செய்யும் அவதானத்தை ஒரு சுருக்க ஆக்கத்தில் முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன்.

கருத்துச் சொல்பனை கருவறுப்பதும் விமர்சிப்பவனை வீழ்த்த சதி செய்வதும் ஜனநாயக விரோத சர்வாதிகாரத்தின் பாசிச, நாசிச வடிவங்கள். மாற்றுக் கருத்தைப் பரிசீலிக்கும் பக்குவமற்ற பாசிசப் போக்குகள் இன்று இஸ்லாமிய அரச இயந்திரங்கள் முதல் இஸ்லாமிய நிறுவனங்கள், இயக்கங்கள் வரை பரந்து, விரிந்த ஆதிகத்தைச் செலுத்திவருகிறது.

இஸ்லாமிய விழுமியங்களை விட்டொதுக்கிய சில இஸ்லாமிய நிறுவனங்கள், இயக்கங்கள் இன்று ஷரீஅத் சட்டத்தை நிலை நிறுத்த வலியுறுத்தும் போது, சகிப்புத் தன்மையற்ற சர்வாதிகார ஆட்டம் போடுவதைப் பல சந்தர்ப்பங்களில் அவதானிக்க முடிகிறது.

ஒரு கருத்திற்கு மாற்றுக் கருத்து ஆதாரத்தின் துணையோடு முன்வைக்கப்பட்டால், அதை ஒருவரின் கருத்தாக, புரிதலாகச் சகிக்கும் பக்குவமும் பரிசீலித்து ஏற்கும் அல்லது அதைவிட வலுவான மாற்று ஆதாரங்களால் மறுக்கும் தன்மையும் இன்னும் இஸ்லாமிய சமூக நிறுவனங்கள், இயக்கங்கள், அமைப்புகள் மத்தியில் போதுமான முதிர்ச்சித்தன்மையைப் பெறவில்லை.

அத்தோடு, கருத்துக் கருவறுப்புச் சர்வாதிகார ஆட்டத்தினால் ஊர் விலக்கல் என்ற மக்கா கால குப்ரிய வழி முறையைக் கடைப்பிடித்து, இயக்க நீக்கம், அவதூறு பழி, அநாமதேய அராஜகம், போட்டுக் கொடுப்பு என்று விழுமியங்கள் புதைக்கப்பட்டு, இஸ்லாமிய உம்மத் பின்னடைவை நோக்கி இன்று மேலோங்கியுள்ள இயக்க வெறித்தனப் போக்குகளால் வேகமாக இழுத்துச் செல்லப்படுகிறது.

மாற்றுக் கருத்துச் சொன்னவரை மதிக்கும் மாண்பை மாநபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஓர் இஸ்லாமிய மரபாக்கினார்கள். அந்த மரபை இஸ்லாம் பேசும் பலர் இன்று தமது குறுகிய எல்லைக்குள் புதைத்துவிட்டனர்.

எனினும், இன்றைய அமெரிக்க ஜனநாயகம் அப்பண்பியலை தமக்குள் ஆகர்ஷித்துக் கொண்டது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை அவரின் முதல் ஜனாதிபதித் தேர்தலில் வன்மையாக எதிர்த்து நின்ற ஹிலாரியை, ஒபாமா வெற்றி பெற்ற பின்னர் பழி வாங்காமல், இராஜாங்கச் செயலராக பதவி வழங்கினார். இதே பண்பை அடுத்த தேர்தலிலும் ஜோன் கெரியிடம் வெளிக்காட்டினார்.

ஒபாமாவை வன்மையாக எதிர்த்து விவாதங்கள் செய்தார். பாரிய குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினார், ஜோன் கெரி. ஆனால், ஒபாமா அதே பண்பை வெளிப்படுத்தி, தன்னை எதிர்த்து நின்றவருக்கு முக்கிய பொறுப்பை வழங்கினார். இவ்வாறான கருத்தியல் ஜனநாயகப் பண்பை இன்று எந்த இயக்கத்தில் காண முடியும்?

இன்றைய இஸ்லாமிய இயக்கங்கள், அமெரிக்க ஜனநாயகம் போன்று பதவி வழங்காவிட்டாலும் பரவா இல்லை. ஓர் இயக்கத்தின் தவறை, குறையை சுட்டிக்காட்டியதற்காக கருத்துச் சொன்னவரை அழிக்க முனையும் பாசிச வெறியர்களாக இன்றைய சில இஸ்லாமிய இயக்கவாதிகள் செயற்படுகிறார்கள்.
பரஸ்பரப் புரிந்துணர்வைப் பேணவேண்டிய இயக்கத் தொண்டர்கள், குண்டர்களாக, பிற்போக்குவாதிகளாக மாறி, அல்லது மாற்றப்பட்டு மாற்றுக் கருத்தை வன்முறை வழிகளில் அணுக பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

இந்த கற்கால பிற்போக்கு நிலையை மாற்றி, முற்போக்கு தளத்தில் கருத்தியல் ஜனநாயகத்தை பேணும் முறைமையை இஸ்லாம் கற்றுத் தருகிறது. இந்த நற்பண்பை மேற்கு இன்று பெருமளவு உள்வாங்கியுள்ளது. ஆனால், குருட்டு தக்லீதில் தவிக்கும் இஸ்லாம் பேசும் சில பாசிசவாதிகள் இன்னும் இந்த அடிமைத் தளையிலிருந்து வெளிவர கிஞ்சிற்றும் முயற்சிக்கவில்லை.

தனது தொண்டர்கள் மத்தியில் ஜனநாயகத்தைப் பிரதிபலிப்பதாகப் பெருமை பேசும் ஓர் இயக்கம் தனது கருத்திற்கு மாற்றமானவரின் உரிமையை உதறித் தள்ளுகிறது. அதே இயக்கம் தனது கருத்திற்கு மாற்றமான அரசாங்கத்திடம் உரிமை கேட்கிறது. அவ்வரசாங்கம் உரிமை கோரும் இயக்கவாதிகளின் பிரஜா உரிமையை பறிக்காமல், உரிமைக் குரலைப் பரிசீலிக்கிறது. இது, மற்றவனிடம் எதிர்பார்ப்பதை தன்னிடம் கைக் கொள்ள மறுக்கும் இன்றைய இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்திச் செயற்படும் இயக்கங்களின் சர்வாதிகார ஆட்டத்தையும் அரசு கடைப்பிடிக்கும் ஜனநாயத்தையும் அப்பட்டமாக புலப்படுத்துகிறது.

ஜனநாயகப் பண்பைப் பின்பற்றுமாறு, அல்லாஹ் இவ்வாறு தனது தூதருக்குக் கற்பிக்கின்றான்.

فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால், அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். (3:109)

அண்ணலார் தனது வாழ்வில் மிகச் சிறந்த ஒரு கருத்தியல் சகிப்புத் தன்மையை உலகிற்கு முன்மாதிரியாக விட்டுச் சென்றுள்ளார்கள். ஹூனைனில் அன்னாரின் சகிப்புத் தன்மையை யாரும் இலகில் மறந்துவிடமுடியாது. தன்மீது தொடுக்கப்பட்ட விமர்சனக் கனைகளை அவர் தனது ஜனநாயகக் கேடயத்தால் அணுகி, முனை மழுங்க வைத்ததில் அவரை விஞ்ச சிறந்த அரசியல் ஆசான் அவருக்கு முன்னரும் அவருக்குப் பின்னரும் யாருமில்லை.

நபியவர்கள் தன்னை நாடி வருபவர்களிடம் பெரிய அரசியல்வாதிகளைப் போன்று, மன்னர்களைப் போன்று, தலைவர்களைப் போன்று கர்வத்தோடு பேசியதில்லை. சாதாரண மனிதரைப் போன்றே அனைவரிடமும் பேசினார்கள்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பேசினார். அப்போது அவரது தோள் புஜங்கள் நடுங்கின. இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “சாதரணமாக இரு! நான் மன்னன் அல்லன். உப்புக் கண்டத்தை சாப்பிடும் பெண்ணின் பிள்ளை தான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரழி) நூல்: இப்னுமாஜா (3303)

ஹூதைபிய்யாவில் நபி (ஸல்) அவர்கள் எடுத்த சமயோசித முடிவை, உமர் (ரழி) அவர்கள் சம்மதிக்க மறுத்தார். ஆட்சேபித்தார். அந்த உமரின் ஆக்ரோஷத்தை அண்ணலார் அணுகிய முறை, வரலாறு என்றும் மறக்க முடியாத ஒரு சிறந்த கலீபாவை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.

அன்று உமரை நபி (ஸல்) பேசவிட்டார்கள். அவரின் ஆக்ரோஷத்திற்கு அமைதியாக பதில் அளித்தார்கள். அது ஒரு பழுத்த ஜனநாயகவாதியின் முன்மாதிரியை உமருக்கு மட்டுமல்ல உலகிற்கே கற்பித்து, சிறந்த முன்மாதிரியை உணர்த்திக் காட்டியது. அதே ஜனநாயக வழியை உமர் (ரழி) தனது ஆட்சிப்பீடத்தில் கடைப்பிடித்து, ஓர் சிறந்த கவர்னரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள். அந்த வரலாற்றின் வைர வரிகளை இதோ பாருங்கள்.

سعيد دخل على عمر بن الخطاب في أول خلافته فقال : يا عمر ، أوصيك أن تخشى الله في الناس ، ولا تخشى الناس في الله ، وألا يخالف قولك فعلك ، فإن خير القول ما صدقه الفعل … يا عمر : أقم وجهك لمن ولاك الله أمره من بعيد المسلمين وقريبهم ، واحب لهم ما تحب لنفسك وأهل بيتك ، واكره لهم ما تكره لنفسك وأهل بيتك ، وخض الغمرات إلى الحق ولا تخف في الله لومة لائم .
فقال عمر : ومن يستطيع ذلك يا سعيد ؟
فقال : يستطيعه رجل مثلك ممن ولاهم الله أمر أمة محمد ، وليس بينه وبين الله أحد .
عند ذلك دعا عمر بن الخطاب سعيدا إلى مؤازرته وقال : يا سعيد إنا مولّوك على أهل ” حمص “
فقال : يا عمر نشدتك الله ألاتفتنني
فغضب عمر وقال : ويحكم وضعتم هذا الأمر في عنقي ثم تخليتم عني !! والله لا أدعك ، ثم ولاه على “حمص “وقال : ألانفرض لك رزقا ؟
وما أفعل به يا أمير المؤمنين ؟ فإن عطائي من بيت المال يزيد عن حاجتي ، ثم مضي إلى ” حمص “

உமரின் அவையில் புகுந்து, கம்பீரமாக, “(உமரே!) மனிதர்கள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்! அல்லாஹ்வின் விடயத்தில் மக்களுக்குப் பயப்படாதே! சொல்லும் செயலும் முரண்படாத முறையில் நடந்து கொள்ளவும்! உனது நடவடிக்கைகளால் நீர் சொல்வதை உண்மைப்படுத்துவதே சிறந்தது…! அல்லாஹ் உம்மை இந்த மக்களிடம் அதிகாரமுள்ளவராக ஆக்கியிருக்கின்றான். அவர்கள் அனைவருடனும் சமத்துவமாக நடந்து கொள்ளவும்! உமக்கும் உமது குடும்பத்திற்கும் விரும்புவதை மக்களுக்கும் செய்யவும்! உமக்கும் உமது குடும்பத்திற்கும் வெறுப்பவற்றை மக்கள் விடயத்திலும் கடைப்பிடிக்கவும்! சத்தியத்தை நிலை நாட்டுவதில் அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சவும்! வேறு எவருக்கும் அஞ்சாது செயல்படவும்!… ” என்று நாட்டின் ஜனாதிபதியிடம் துணிவாகச் சொன்ன மனிதரை உலகில் யாராவது விட்டு வைத்த வரலாறு உண்டா?

தன் அவையில் நுழைந்து ஆக்ரோஷமாகப் பேசிய சயீத் இப்னு ஆமிர் (ரழி) அவர்களை பிற்காலத்தில் உமர் (ரழி) அவர்கள், சிரியாவின் ஹிம்சுக்கு ஆளுநராக நியமித்தார்கள். இந்த மாதிரி அறிவுரை, விமர்சனம் வைத்த யாரையும் இன்றைய நமது சமூக சட்ட விதிமுறை பண்பாய், விழுமியமாய் அணுகிய வரலாறு உண்டோ?

ஒரு கருத்தை பலமான ஆதாரத்துடன் அவ்வியக்கத்தின் கருத்திற்கு மாற்றமாக முன்வைத்தால் பள்ளியில் மிம்பர்கள் புறக்கணிப்பு, ஊர்விலக்கு, இயக்க அங்கத்துவ நீங்கம், மானத்தோடு விளையாடும் குறுந்தகடு வெளியிடும் குறும் புத்தி, தொழில் ரீதியாகப் புறக்கணிக்கும் கொடுமை என்று இன்று சில சில்லறை இயக்கங்களில் கருத்துக் கறுவறுப்பு, வழக்குத் தொடுப்பு என்று எத்தனை அநாகரிக நடைமுறைகள் அரங்கேற்றப்பட்டுவருகின்றமை வேதனைக்குரியது. தவ்ஹீதின் பேரால் பீஜே பலரது மானத்தை சீடிக்குள் சுருட்டி அதை விற்று தனது இயக்கத்திற்கு மூலதனமாக்கினார். இது இன்று அவருக்கே வினையாகிவிட்டது. மானத்தோடு விளையாடும் இதே தரங்கெட்ட வேலையை இன்னும் சில இயக்கங்களும் செய்துள்ளன.

மார்க்கத்தில் எந்த மதிப்புமற்ற தொப்பி, ஜிப்பா இல்லாமல் குத்பா செய்ததற்காகவும் தொப்பி சுன்னத் இல்லை என்பதற்காகவும், தாடி முக்கியம் என்று போதனை செய்ததற்காகவும் தாடியற்ற பள்ளித் தலைவரின், அவர் தக்லீத் பண்ணுபவரின் தவறான கருத்துப் போக்கையும் விமர்சித்து, தொண்டர்களின் தக்லீதை தவறு என்றதற்காக தொழுவிக்க அனுமதிக்காத இன்றைய இயக்க நலத் தக்லீதிஸத் தவ்ஹீத்” எங்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது? பாதி இஸ்லாத்திலும் மீதி தக்லீதிலும் தட்டுத் தடுமாறும் இன்றைய ”தக்லீதிஸத் தவ்ஹீத்” இயக்க வெறியற்ற முழுமையான ஜனநாயக இஸ்லாமியத்திற்குள் மீண்டு வருமா?

சுன்னாவை நிலை நாட்டி, தக்லீதை விட்டு வெளிவந்து, இஸ்லாமிய கருத்தியல் நாகரிக ஜனநாயகத்தை நோக்கி நகர வேண்டிய காலம் கனிந்துவிட்டது. அதற்கான அழைப்பை நாம் துவக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

“ஓர் அடக்கஸ்தலம் அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, “அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு!” என்றார்கள். அதற்கு அப்பெண், “என்னை விட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்படவில்லை” என்று – நபி (ஸல்) அவர்கள் யாரென அறியாமல் – கூறினாள். அவர்கள் நபிகளார் எனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி (ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். – அங்கே நபியவர்களுக்குக் காவலாளிகள் எவரும் இருக்கவில்லை – “நான் உங்களை (யாரென) அறியவில்லை” என நபி (ஸல்) அவர்களிடம் கூறினாள். “பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வது தான்)” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்: புகாரி (1283)

தன்னிடம் ஆக்ரோஷப்பட்ட ஓர் பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள் பணிவுடன் நடந்து கொண்டார்கள். அவளுக்கு தன் மவ்னத்தாலே அவளைச் சிந்திக்கச் செய்தார்கள். இந்த முன்மாதிரிகளை இன்றைய இயக்கவாதிகள் கைக் கொள்வார்களா?

மனிதர்களது புரிந்து கொள்ளும் தன்மை வேறுபட்டது. சிலபோது தவறாகவும் புரிந்து கொள்ளலாம். அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற பாடத்தை உலகில் சிறந்த ஆசான் அவர்கள் பின்வருமாறு கற்பிக்கின்றார்கள்.

முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது (தொழுதுகொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் ‘யர்ஹமுக் கல்லாஹ்’ (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன். உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் ‘என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை. (மாறாக) அவர்கள் ‘இந்தத் தொழுகையானது மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்’ என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள். (முஸ்லிம் 935)

இன்றைய பல இயக்கங்கள் இஸ்லாம் முக்கியத்துவம் வழங்காத வழக்காறு, சமூக மரபு, தான் தக்லீத் பண்ணும் ஸ்தாபகரின் சர்வாதிகார சட்டங்கள், தக்லீத் மாயை, சிந்தனை அடகுவைப்பு ஹதீஸ் மறுப்பு என்ற மடமையைவிட்டும், தனி மனித இயக்கத்தின் தக்லீத் நலச் சட்டங்கள் இஸ்லாமியம் அல்ல என்று அலட்சியப்படுத்துவோரைப் பாசிச வெறித்தனப் போக்குகளைக் கைக்கொண்டு, அழிக்க முனையும் நாசிச வழியை விட்டும் விரைவாக வெளிவரவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *