Featured Posts
Home » பொதுவானவை » Coronavirus disease (COVID-19) » கொரோனாவும் மறுமைக்கான தயார்படுத்தலும்

கொரோனாவும் மறுமைக்கான தயார்படுத்தலும்

ஹதீஸ் தெளிவுரை

எம்.ஏ. ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A. )

صحيح مسلم  7028 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِىُّ وَأَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِىُّ – وَاللَّفْظُ لِيَحْيَى – قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِى صَالِحٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِى الدُّنْيَا وَالآخِرَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِى الدُّنْيَا وَالآخِرَةِ وَاللَّهُ فِى عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِى عَوْنِ أَخِيهِ …

யார் ஒரு முஃமினுடைய இவ்வுலகத் துயரங்களில் ஒரு துயரத்தை நீக்கிவிடுகிறாரோ, அவருக்கு மறுமை நாளின் துயரங்களில் ஒரு துயரத்தை அல்லாஹ் நீக்கிவிடுகின்றான். இன்னும், யார் கஷ்டப்படுபவருக்கு இலகுபடுத்திக் கொடுக்கிறாரோ, அல்லாஹ் அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் அவரது விஷயங்களை இலகுபடுத்துகின்றான். மேலும், யார் ஒரு முஸ்லிமின் (குறையை) மறைக்கிறோரோ அல்லாஹ் அவரின் (குறையை) இம்மையிலும் மறுமையிலும் மறைத்து விடுகின்றான்.  ஓர் அடியான் தனது சகோதரனுக்கு உதவி புரியும் காலமெல்லாம், அல்லாஹ் அவ்வடியானுக்கு உதவி செய்கின்றான். யார் அறிவுப் பாதையில் பயணிக்கின்றாரோ அவருக்கு அதன் மூலம் சுவர்க்கத்துக்கான ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்…”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்.

உலக வாழ்வையும், அதனை மறுமைக்காக ஆக்கிக் கொள்ளும் சிறந்த வழிமுறைகளையும் மேலுள்ள ஹதீஸ் மிகத் தெளிவாக விவரிக்கிறது. எனவே, இந்த ஹதீஸ் விவரிக்கும் இகபர நன்மையை அடையும் வழிகளை ஒவ்வொன்றாக நோக்குவோம்.

சகோதரனின் துன்பத்தை நீக்குதல்

இஸ்லாம் சகோதரத்துவத்தை மிகவும் வலியுறுத்திப் பேசுகிறது. அதன் சிறப்புத் தன்மைகளுள் முக்கியமாக மனித நேயம் உள்ளது. மனித சமூகம் ஒற்றுமையாக வாழ்வதையும் அதனால், ஏற்படும் நல்ல விளைவுகளையும் விளங்கிச் சொல்கிறது.

கொரோனா தாக்கமானது உலகத்தைப் பெரும் சவாலுக்கு உட்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக பன்னாட்டு மக்களின்  இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிப்படையாகவே காணக் கூடியதாக உள்ளது. இந்த வைரஸ் தொடர்பில்  மிகவும் விழிப்பாக இருக்க வேண்டியது  அவசியமாகும். நாம் சுத்தமாகவும் எந்நேரமும் விழிப்பாக இருப்பதனால் இதன் பரவலைக் கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவ உலகம் பிரஸ்தாபிக்கிறது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல உலக நாடுகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிலை இழந்து, அன்றாட உணவுக்காக ஏங்கித் தவிக்கும் பல குடும்பங்கள் உள்ளன. எனவே, அவர்களின் உணவுத் தேவையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புள்ளது.

அல்லாஹுத்தஆலா இவ்வுலக வாழ்வை நோய்களும் சோதனைகளும் கஷ்டங்களும் நிறைந்ததாகவே  ஆக்கியுள்ளான். நாம் இங்கு சந்திக்கின்ற அனைத்து வித இழப்புக்களுக்கும் இன்னல்களுக்கும் மகத்தான கூலியையும் நற்பேற்றையும் இன்னொரு மகத்தான  நிரந்தர, அழிவற்ற வாழ்விற்காக ஏற்படுத்தி வைத்துள்ளான்.

ஏழைகளுக்காகவும், ஆதரவற்ற பெண்களுக்காகவும் உழைக்கக் கூடியவர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர் போன்றவர், தொடர்ந்து நின்று வணங்கியவர் போன்றவர். தொடர்ந்து (நோன்பு) நோற்றவர் போன்றவர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்

மனித வாழ்க்கையில் பல்வேறு துன்ப துயரங்கள், இடர்கள், நோய்கள் ஏற்படுவதுண்டு. இக்கட்டான காலகட்டத்தில் சகோதர முஸ்லிம்களுக்கு உதவி புரிவதோடு, அவனுக்கு ஏற்படும் இன்னல்களையும், துயரங்களையும் நீக்க வேண்டும். அவனது கஷ்டங்களில் பங்கு கொண்டு, அவனது வாழ்வில் துன்ப இருள் சூழ்ந்து கொள்ளாது தடுக்க முனைய வேண்டுமே தவிர, அவனது துன்பத்தில் இன்பம் காணக் கூடாது என்ற உன்னத பாடத்தையும் இன்னொரு ஹதீஸ் பின்வருமாறு போதிக்கிறது.

உன் சகோதரனின் துன்பத்தில் மகிழ்ச்சியடையாதே. அவ்வாறு அடைந்தால், அல்லாஹ் அவனுக்கு அருள் புரிந்து, உன்னைச் சோதிப்பேன். அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரழி) நூல்: திர்மிதி.

இலகுபடுத்தல்

இன்றைய இயல்பு வாழ்வைப் பாதித்துள்ள கொரோனாவினால், பெருங் கஷ்டத்திற்கு உள்ளாகித் தவிக்கும் சகோதர முஸ்லிமுக்கு, மனமிறங்கி உதவி புரியவேண்டும். அவனது கஷ்டத்தை நமது கஷ்டமாக நினைத்து அதை நீக்கப் பாடுபட வேண்டும். நமது அயலவர்கள் பலர் வெட்கத்தை வெளியே சொல்ல முடியாமல் உணவின்றிக் கஷ்டப்படலாம். எம்மிடமிருப்பதில் ஓரளவாவது கொடுத்து உதவ வேண்டும். நமது அயலவர்கள் யாராக இருந்தாலும் நான் உதவ வேண்டும். அவர்கள் எந்த மதம் சார்ந்தவர்கள் என்று பாரக்கவே கூடாது.

உலக வாழ்வில் எல்லோருக்கும் கஷ்டம் வருவது இயல்பே. அல்லாஹ் காலசக்கரத்தை மாற்றிச் சுழற்றுவான். ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவி புரிதல் கடமையாகிறது. கஷ்டங்களின் பின்னர்தான் இன்பம் இருக்கிறது என அல்குர்ஆனும் சுபசோபனம் கூறுகிறது.

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. (அல்குர்ஆன் 94:5-6)

சன்மார்க்கக் கடமைகளைக் கூட நபியவர்கள் நமக்குக் கஷ்டமாக்கிட முனையவில்லை. அதே போதனையை உலக மக்களுக்கும் விடுத்துச் சென்றுள்ளார்கள்.

சுபசெய்தி சொல்லுங்கள், கெட்ட செய்தி கூறாதீர்கள். மார்க்கத்தை இலகு படுத்துங்கள், கஷ்டப்படுத்தாதீர்கள். (அபூதாவூத்)

ஒரு சகோதர முஸ்லிமின் பளுவை இலகு படுத்துவதனால், உலகில் சகோதரத்துவம் மலர்ந்து, அமைதியும் பரஸ்பர ஒத்துழைப்பும் ஏற்படுகிறது. அதோடு, மகத்தான மறுமைப் பேறும் கிடைக்கிறது.

மற்றவர் குறையை மறைத்தல்

மனிதர்கள் அனைவரிடமும் குறைகள் காணப்படுவது இயல்பே. ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோ வித்தியாசமான குணப்பண்புகளும் குறைகளும் காணப்படுகின்றன. இக்குறைகளை சமூகமயப்படுத்தி, மற்ற சகோதர முஸ்லிமைக் கொச்சைப்படுத்துவதை இஸ்லாம் பெரும் பாவமாகக் கருதுகிறது. மற்றவரின் குறையைத் மறைக்காத மனிதர்களை இழிந்தவர்களாகவும் பிணத்தைத் தின்னும் செயலுக்குச் சமமானதாகவும் இஸ்லாம் கருதுகிறது. குறைகளை அம்பலப்படுத்தும் செயலை அல்குர்ஆன் வன்மையாகக் கண்டிக்கிறது.

விசுவாசிகளே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில், நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கின்றன, (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். அன்றியும் உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசாதீர்கள். உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன், மிக்க கிருபை செய்பவன். (அல்குர்ஆன் 49:12)

மற்ற சகோதரர்களின் பலவீனத்தை அல்லது குறையைத் தோண்டி எடுத்துப் பேசுவது பாவமான செயலாகும். இதனால் கூட்டு வாழ்வில் முறுகல் நிலை தோன்றும். எனவேதான், நபி (ஸல்) அவர்கள் மறுமையை முன்னிறுத்தி போதனையை வழங்கியுள்ளார்கள். இதன் அடிப்படையில் உலகத்தில் ஒரு சகோதரனின் பாரிய தவறுகளை அல்லாஹ்வுக்கு அஞ்சி மறைக்கும் போது, மறுமையில் அல்லாஹ் மறைத்தவரின் குறையை மறைத்து விடுகின்றான். மறுமையில் தனது குறைகள் மறைக்கப்பட வேண்டுமானால், உலகில் தனது சகோதர முஸ்லிம்களின் குறையை அம்பலப்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்வது அவசியமாகும்.

உதவி புரிதல்

நன்மையான சகல விஷயங்களுக்கும் உதவி புரிவதும் தீமையான சகல விஷயங்களுக்கும் உதவி புரியாமல் இருப்பதும் ஈமானின் வெளிப்பாடாக இஸ்லாம் சுட்டிக் காட்டுகிறது. இதனை பின்வரும் திருமறை வசனமும் உறுதிப்படுத்துகிறது.

”… நன்மையிலும், இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள், பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம், அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:02)

நன்மையான விசயங்களில் உதவி புரியும் போது, சமூகத்தில் ஒற்றுமை மலர்கிறது, தீமைக்கு உதவி புரியும் போது சீர் குலைவு ஏற்படுகிறது.  இந்த இரு வேறுபட்ட நிலைகளையும் நாம் எமது சமூக நிலையில் அவதானிக்கின்றோம். சிலர் மார்க்கத்திற்கு உதவி செய்கின்றோம் என்ற போர்வையில் தீமைக்கு உதவி புரிகின்றனர். இன்னும், சிலர் தவறானவற்றை மார்க்கம் என்று எண்ணிக் கொண்டு அதற்கு உதவிகள் செய்துவருகின்றனர். பொதுவுடமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை ஆழ்மனம் சகிப்பதில்லை.

மரணம் அனைவரையும் சூழ்ந்து நிற்கும் வேளையிலும் சிலர் பொறாமை, வியாபாரப் போட்டி, இயக்க வெறி, நாட்டு வெறி, இன வெறி என்று அலைகின்றனர். இந்த இழி நிலை மாறி, நன்மைக்கு மட்டும் உதவி செய்யும் மனப்பான்மை மலர்ந்து மறுமை மீதான ஆசை அதிகரிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்கவைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்யவேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் – முஸ்லிம் 6706

எப்போதும் நாம் நற்பண்புகளுடன் நடந்து கொள்ள வேண்டும். மற்றவர் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பாக இந்த இக்கட்டான நேரத்தில் இன, மத, ஜாதி, இயக்க, பிரதேச வேறுபாடுகளை மறந்து, வியாபாரப் போட்டிகளைவிட்டு மனிதத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும்.

பிறர்  துன்பத்தை நீக்கி, அவர்கள் விடயங்களை இலகுபடுத்தி, குறைகளை மறைத்து,தேவையான உதவிகள் புரிந்து நாம் வாழ வேண்டும்.

கொரோனா தாக்கத்தால் அன்றாடம் உழைத்து உண்போர் நிலைமையோ பரிதாபமாக உள்ளது. இவர்களது உடனடி அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நாம் கரிசனையுடன் நடந்து கொள்வதோடு, அவர்களுக்கு தேவையான வகையில் உதவ முன்வர வேண்டும். அப்போது, அல்லாஹ்வின் உதவி நம்மை அரவணைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *