Featured Posts
Home » பொதுவானவை » நாட்டு நடப்பு » சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் (தொடர் 2)

சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் (தொடர் 2)

எம்.ஏ.ஹபீழ் ஸலபி

மூஸா நபி –  ஹாரூன் நபி

அடக்கு முறையாளன் பிர்அவ்னின் கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிறந்து, அவனது வீட்டிலேயே வளர்ந்து, சத்தியத்தை போதித்த நபி மூஸா(அலை) அவர்களின் வரலாறு பலவகையில் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்திற்கு முன்மாதிரியாகிறது. எனவேதான் அல்லாஹுத்தஆலா அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்களை, அல்குர்ஆனில் பல அத்தியாயங்களில் பல்வேறு அமைப்புகளில் அதிகளவு கூறியுள்ளான்.

மூஸா நபியின் வாழ்க்கை வரலாறு, அல்குர்ஆனின் அதிக பகுதிகளை நிரப்பியுள்ளதற்கு நியாயமான காரணங்களுமுண்டு. அவர்கள் தூதராகும் முன்னரே சிறந்த ஒழுக்க மாண்புள்ளவராகவும், அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழுபவராகவும், உதவி புரியக் கூடிய கருணை மனம் படைத்தவராகவும் இருந்ததோடு, தூதரான பின்னர், பனூ இஸ்ராயீல் சமூகத்தையும் அச்சமூகத்தின் அறியாமையைப் பயன்படுத்தி, அவர்கள் மீது அடிமை விலங்கைப் போட்டு, இறைமைவாதம் புரிந்த முரட்டு சுபாவமும், கர்வமும் நிறைந்த பிர்அவ்னையும் தற்துணிவோடு எதிர் கொண்டு வெற்றியும் பெற்றார்கள்.

சிறுபான்மை என்ற கோழைத் தனத்தை அவர்களிடம் காணவே முடியாது என்ற அளவு அவர்களிடம் அல்லாஹ்வின் மீதான உறுதியும் மனவலிமையும் தூதராகு முன்னரும் காணப்பட்டது என்பதற்கு அவர்களின் வரலாற்றில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வை இங்கு நினைவு படுத்தலாம்.

அக்கிரமத்திற்கு எதிரான உதவி

ஒரு நாள் மூஸா (அலை) அவர்கள் நகரத்திற்குச் சென்ற போது, அவரது உறவினர் ஒருவரும், அவரது எதிரியும் பிர்.அவ்னிய இனத்தவனுமான ஒருவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கக் கண்டு, தனது உறவினருக்கு உதவி செய்வதற்காக எதிரியை நோக்கித் தாக்கினார்கள். பிர்அவ்ன் என்ற சர்வாதிகாரியின் கட்சியைச் சேர்ந்த ஒருவனோடு மோதுவது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. எனினும், அதற்குத் துணிந்தார்.

மூஸா (அலை) அவர்களின் பலமான ஒரு குத்தோடு எதிரி மாண்டுவிட்டான். தனது உறவினருக்கு உதவ வேண்டும். அக்கிரமத்தை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் இவ்வாறு செய்தார் என்பதை அறிய முடிகிறது.இதனால் மூஸா நபியவர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள்.

(பார்க்க அல்குர்ஆன் 28:18-19)

தூதராக  நியமனம் பெற்ற பின்னர் அவர் சிறுபான்மை சூழலில் தனது ஏகத்துவப் பிரசாரத்தை ஆரம்பித்தார்.

اِذۡهَبۡ اِلٰى فِرۡعَوۡنَ اِنَّهٗ طَغٰى  ‏ ﴿۲۴﴾

20:24. நீர் ஃபிர்அவ்னிடம் செல்வீராக! அவன் வரம்பு மீறி விட்டான் (என்று இறைவன் கூறினான்). 

قَالَ رَبِّ اشۡرَحۡ لِىۡ صَدۡرِىْ ۙ‏ ﴿۲۵﴾

20:25. “என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!” என்றார். 

وَيَسِّرۡ لِىۡۤ اَمۡرِىْ ۙ‏ ﴿۲۶﴾ 

20:26. எனது பணியை எனக்கு எளிதாக்கு! 

وَاحۡلُلۡ عُقۡدَةً مِّنۡ لِّسَانِیْ ۙ‏ ﴿۲۷﴾

20:27. எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! 

يَفۡقَهُوۡا قَوۡلِیْ   ‏ ﴿۲۸﴾

20:28. (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள். 

وَاجۡعَلْ لِّىۡ وَزِيۡرًا مِّنۡ اَهۡلِىْ ‏ ﴿۲۹﴾ هٰرُوۡنَ اَخِى ۙ‏ ﴿۳۰﴾

20:29 , 20:30. எனது குடும்பத்திலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக ஏற்படுத்து! 

اشۡدُدۡ بِهٖۤ اَزۡرِىْ ‏ ﴿۳۱﴾

20:31. அவர் மூலம் என்னைப் பலப்படுத்து! 

وَاَشۡرِكۡهُ فِىۡۤ اَمۡرِىْ ‏ ﴿۳۲﴾

20:32. எனது பணியில் அவரையும் கூட்டாக்கு! 

மூஸா நபியின் அணுகுமுறை

اِذۡهَبۡ اَنۡتَ وَاَخُوۡكَ بِاٰيٰتِىۡ وَلَا تَنِيَا فِىۡ ذِکۡرِیۡ‌ۚ‏ ﴿۴۲﴾

20:42. நீரும், உமது சகோதரரும் எனது சான்றுகளுடன் செல்லுங்கள்! என்னை நினைப்பதில் சோர்வடையாதீர்கள்! 

اِذۡهَبَاۤ اِلٰى فِرۡعَوۡنَ اِنَّهٗ طَغٰى‌  ‏ ﴿۴۳﴾

20:43. இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்! அவன் வரம்பு மீறி விட்டான். 

فَقُوۡلَا لَهٗ قَوۡلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوۡ يَخۡشٰى‏   ﴿۴۴﴾

20:44. “அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள்! அவன் படிப்பினை பெறலாம். அல்லது அஞ்சலாம்” (என்றும் கூறினான்). 

قَالَا رَبَّنَاۤ اِنَّـنَا نَخَافُ اَنۡ يَّفۡرُطَ عَلَيۡنَاۤ اَوۡ اَنۡ يَّطۡغٰى‏   ﴿۴۵﴾

20:45. “எங்கள் இறைவா! அவன் எங்களுக்குத் தீங்கிழைப்பான்; அல்லது அவன் எங்கள் மீது வரம்பு மீறுவான்; என அஞ்சுகிறோம்” என்று இருவரும் கூறினர். 

சிறுபான்மைச் சூழலில் வாழ்பவர்கள் , கொடியவர்களிடம்  பிரசாரம் செய்யும் பண்பாட்டையும் அணுகுமுறையையும் மூஸா நபியின் வரலாறு ஊடாக அல்லாஹ் கற்றுத்தருகின்றான்.

சர்வாதிகார ஆட்டம் போடுபவனிடம் ஷரீஅத் சட்டம் பற்றி பேசும் போது, சாந்தமாகப் பேச வேண்டும்.  “அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள்! அவன் படிப்பினை பெறலாம். அல்லது அஞ்சலாம்” என்று அல்லாஹ் அழகிய வழிமுறையைக் கைக் கொள்ளப் பணிக்கின்றான்.

பேசத் தெரியும் என்பதற்காக குத்திக் கிழிப்பதால்  இஸ்லாத்தின் எதிரிகள் உண்மையை உணரப் போவதில்லை. நாம் சொல்கின்ற விடயம் ஆணித்தரமாக இருக்க வேண்டும். அதை ஆணவத்துடன்  சொல்லிட முனையக் கூடாது.

நாம் என்ன சொல்கின்றோம் என்பதை அடுத்த தரப்பு நன்கு புரியவும் வேண்டும். அந்த விடயம் ஆணித்தரமானதாக அமைய வேண்டும். அதேவேளை, அதில் மென்மைத் தன்மை மின்னிட வேண்டும். அப்போதுதான் எதிரியின் மனதில் படிப்பனையும் அல்லாஹ் பற்றிய அச்சமும் வரலாம். இந்த வழிமுறையைத்தான் அல்லாஹ் மூஸா நபி , ஹாரூன் நபி ஆகிய இருவருக்கும் கற்றுக் கொடுக்கின்றான். 

தன்னைக் கடவுள் என்று அதிகாரத்தின் ஆசனத்தில் அமரந்திருந்து, பிரகடனப்படுத்திய  ஒருவனிடம்,  சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இறைத் தூதர்கள் இருவர் சென்று, நீ கடவுள் இல்லை. உன்னையும் எங்களையும் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்று ஏகத்துவக் கோட்பாட்டில்  எந்த விட்டுக் கொடுப்புமின்றி, வளையாது, நெழியாது சொன்னார்கள். அதேவேளையில், அவனை விழித்துச்   சொல்லும் வார்த்தைகள்  அவனது ஆட்சி, பெரும்பான்மை போன்ற கண்ணியத்தைக் குலைக்காத வண்ணமிருக்கவேண்டும் என்ற போதனையை அல்குர்ஆன் வழங்குகின்றது.

பலமான எதிரியை எதிர்கொள்ளும் பிரசாரகர்களின்  உள்ளம் விரிந்த பாங்கில் முதிர்ச்சியுற்றிருக்க வேண்டும் என்பதை ”எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!” என்ற மூஸா நபியின்  பிரார்த்தனை பிரதிபலிக்கிறது. குறுகிய சிந்தனையில் சிறைப்பட்ட சிறுமைத்தனமான ஏச்சுப் பேச்சுக்களால் இறுகிய உள்ளங்களை இலகுவில் சத்திய சுகந்தங்களை சுவாசிக்க வைத்துவிடமுடியாது. தஃவாவின் உசூலை அல்லாஹ் இந்த இரண்டு நபியின் வாழிமுறையிலிருந்து மனித குலத்திற்குக் கற்றுக் கொடுக்கின்றான்.

 ”எனது பணியை எனக்கு எளிதாக்கு! எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்” என்று ரப்பிடம் அவர் வேண்டுவது, சர்வாதிகாரிக்கு சத்திய கொள்கையைப் புரியவபை்பதில்  நாவு எவ்வளவு முக்கியமான பங்கை வகிக்கப் போகிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. கள நிலவரத்தை நன்கு உணர்ந்த மூஸா நபி தனது முதிர்ந்த அனுபவத்தை தனது பிராத்தனையால் உதிர்கிறார்கள்.

தொண்டைகிழியக் கத்திப் பேசுவதாலோ, மற்றவர்களை அவதூறுகளால் தரம் தாழ்த்திப் பேசுவதாலோ, கள்ள வெப்சைடுகளால் இயக்கம் வளர்க்க முனைவதாலோ நாம் சொல்லும் விடயம் மற்றவர்களிடம் தாக்கம் செலுத்தப் போவதில்லை. அது எதிர்மறையான விளைவுகளைத்  தோற்றுவிக்கும். இத்தகைய இயக்க நலன் சார்ந்த அணுகுமுறை இன்று சிறுபான்மைச் சூழலில் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மாவிற்கும் எத்தகைய தாக்கத்தை விளைவித்தள்ளது என்பதை நாம் கண்டுகொண்டோம்.

 சிறுபான்மை சூழலில் குடும்ப பலம் என்பது தஃவா வரலாற்றில் மிக முக்கிய பங்கை வகிக்க வேண்டும். உதவிக்கும் ஆலோசனைக்கும் பக்கத்தில் இருப்பவர் அரைவேக்காடுகளாக இருக்கக் கூடாது. ”எனது குடும்பத்திலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக ஏற்படுத்து!  அவர் மூலம் என்னைப் பலப்படுத்து!”  என்ற துஆ துள்ளியமாக விளக்க வருவது என்ன?

பெரும் அசத்திய சக்தியை ஏகத்துவக் கொள்கையால் எதிர்கொள்ளும் போது, பக்க துணையாக இருப்பவர்  தஃவாவிற்கு தகுதியானவனாக இருக்கவேண்டும். கழுத்தறுக்கும் கபோதிகளுடனோ,  நாணயம் பேசம் நயவஞ்சர்களுடனோ சேர்ந்து  செல்லக் கூடாது என்ற பாடத்தையும் அவரது பிராத்தனை தெளிவுபடுத்துகிறது.

இன்னும் வளரும் –இன்ஷா அல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *