Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » தண்டனைகளில் பாராபட்சம் காட்டாதீர்கள்

தண்டனைகளில் பாராபட்சம் காட்டாதீர்கள்

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கா வெற்றிப்போரின்போது (மக்ஸூமி குலத்துப்) பெண்ணொருத்தி திருடிவிட்டாள்.

எனவே, அவளுடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவளுக்காகப் பரிந்துரைக்கும்படி கோரி, உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம் வந்தார்கள். உஸாமா(ரலி), ‘எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள்.

மாலை நேரம் வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்றபடி போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிறகு, ‘நிற்க,

உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள், தம்மிடையேயுள்ள உயர்ந்த(குலத்த)வன் திருடிவிடும்போது அவனை (தண்டிக்காமல்)விட்டுவந்ததும், பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விடும்போது அவனுக்கு தண்டனை கொடுத்து வந்ததும் தான்.

முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே திருடி விட்டிருந்தாலும் அவளுடைய கையையும் நான் வெட்டியிருப்பேன்’ என்று கூறினார்கள்.

பிறகு இறைத்தூதர்(ஸல்)அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவளுடைய கை வெட்டப்பட்டது.

அதன் பிறகு அவள் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி (திருந்தி)விட்டாள்; மேலும் மணந்தாள்.

ஆயிஷா(ரலி) கூறினார்:
அதன் பிறகு அவள் என்னிடம் வந்து கொண்டிருந்தாள். நான் அவளுடைய தேவையை(ப் பூர்த்தி செய்யும்படி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் முறையிடுவேன்.
ஸஹீஹ் புகாரி : 4304.
அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்

குற்றவியல் தண்டனைகளின் போது ஏழைகளுக்கு கடுமையான தண்டனைகளையும். செல்வந்தர்களுக்கு தண்டனையில் சலுகைகளும் வழங்கப்படுவதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்றது. இன்று இந்த நடைமுறை பாடசாலைகள் முதல், அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றது. அதிகாரத்தில் உள்ளவர்கள் நாட்டு சட்டங்களை மீறினால் அவர்களை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள், சாதாரண தரத்தில் வாழக்கூடிய ஒரு பொதுமகன் சட்டத்தை மீறிவிட்டால் கடுமையாக தண்டிக்கப்பட்டு மீடியாக்களினூடாக சீரழிக்கப்படுகிறான். நிச்சியமாக இப்பண்புடையோரை அல்லாஹ் கடுமையாக தண்டிப்பான்.

இன்திகாப் உமரீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *