Featured Posts
Home » மீடியா » வீடியோ ஆடியோ » நான் திருந்திட வேண்டும்.. ஆனால்..

நான் திருந்திட வேண்டும்.. ஆனால்..

(இந்த நூல் அஷ்ஷைக். ஸாலிஹ் அல்முனஜ்ஜித் அவர்களது أريد أن أتىب ولكه – “நான் திருந்திட வேண்டும்.. ஆனால்..” என்ற நூலை மையமாக வைத்து எழுதப்பட்டது.)

முன்னுரை.

புகழனைத்தும் ஏக வல்ல இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும். அவன் நேர்வழிகாட்ட வேண்டுமென நாடியோரை யாராலும் வழிகெடுக்க முடியாது அவன் வழிகெடுக்க விரும்பியோருக்கு யாராலும் நல் வழிகாட்டவும் முடியாது. ஸலவாத்தும் ஸலாமும் முழு மனித சமூதாயத்துக்கும் நேர்வழிகாட்டும் விளக்காக வந்த உத்தம நபி முஹம்மது (ஸல்)அவர்களுக்கும் அவர்கள் காட்டித்தந்த நேர்வழியைப் பின்பற்றி நடந்து வெற்றி பெற்ற அனைவருக்கும் உரித்தாகட்டுமாக..

அல்லாஹூத்தஆலா மனிதனை இருபிரிவுகளாக வகுத்துக் கூறுகின்றான். ஓன்று வெற்றிபெற்றவர்கள் இரண்டாம் பிரிவினர் அநியாயக்காரர்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்..
விசுவாசிகளே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். நீங்கள் வெற்றியடைவீர்கள்(ஸூரா நூர்:31)
என்றும் மற்றொரு இடத்தில்..

யார் பாவமன்னிப்புக் தேடவில்லையோ அவர்களே அநியாயக்காரர்கள்(ஹூஜூராத்) என்றும் கூறுகின்றான்.

நாம் வாழக்கூடிய இக்காலத்தில் முழுமையான தீனை விட்டு அனேகம் பேர் தூரமாகி விட்டனர். பாவ காரியங்கள் மலிந்துவிட்டன. எங்கு பார்த்தாலும் பிரச்சினைகளும் குழப்பங்களுமாக, நாம் ஒதுங்கிப்போனாலும் பஸாது எம்மைத் துரத்தி வரக்கூடிய மோசமான ஒரு காலத்தில் நாம் வாழ்கின்றோம். அல்லாஹ் நாடிய ஒரு சிலர் மாத்திரமே பாவத்தின் பக்கம் செல்லாதவர்கள் என்று சொல்லுமளவுக்கு காலம் கெட்டுப்போய் விட்டது.

இருப்பினும் அல்லாஹ் தன் நேர்வழியையும் மக்கள் அறிந்து திருந்துவதற்குரிய ஏற்பாடுகளையும் ஒவ்வொரு காலத்திலும் செய்துகொண்டே இருக்கின்றான். புனித குர்ஆன் மூலமும், நபியவர்களின் போதனைகளாலும், அவ்விரு ஒளிகளையும் அறிவித்துத்தரும் அறிஞர்கள் உலமாக்கள் மூலமாகவும், மேலும் ஒவ்வொரு கெட்ட மனிதனின் வாழ்வில் ஏற்படுத்தும் சில துயரம்மிக்க நிகழ்வுகளாலும் – மரணம், நோய்நொடி, விபத்து, இழப்பு இப்படி பலவற்றையும் நடத்தி ஒருவன் திருந்துவதற்கான பல வாய்ப்புக்களை அல்லாஹ் ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றான்.

இப்படி அல்லாஹ் ஏற்படுத்திய நிகழ்வுகளால் சுய நினைவு பெற்று தான் கடந்து வந்த இருண்ட பாதையை திரும்பிப் பார்த்து – தனக்கோ, தன்னவருக்கோ, பிறருக்கோ நடந்த கதியை நினைத்து படிப்பினை பெற்று தான் போன பாதையை மாற்றி திருந்தி வாழ முடிவு செய்தோர் பலகோடி.. அல்லாஹ்விடம் மன்றாடி தமது பாவத்துக்காக தவ்பாச் செய்து, நேற்று வரைக்கும் கூத்தும் கும்மாளமும் என அல்லாஹ்வின் விரோதிகளாய் இருந்து இன்றிலிருந்து இறைநேசச் செம்மல்களாய் இருப்போரும் கோடிகோடி. நல்லதொரு தாயின் வயிற்றில் பிறந்தும் கால-நேர சோதனையால் கெட்டவர்களாகி பாவச் சுமைகளில் புரண்டுவிட்டு நரகத்தின் விளிம்புவரை சென்று விட்டு இறை கருனையால் திருந்தி நல்லவனாகி பார்போற்றும் உத்தமராக வாழ்ந்து மரணித்தோரும் பலபலகோடி..

எனவே என் அன்பு நண்பா! ஏன் நீயும் அவர்களில் ஒருவனாக ஆகக்கூடாது. உன்னைவிட படுமோசமானவர்களுக்கெல்லாம் இறைவனின் கருணை இருக்கும்போது
உனக்கு மட்டும் இல்லாமலா போய்விடும்?

அல்லாஹ் உன்னை மன்னிக்கத் தயாராக இருக்கின்றான். ஆனால் நீ தயாரா? இந்தக் கேள்விக்கு பதில்.. நீதான் முடிவுசெய்ய வேண்டும்.

எனவே உனக்கும் உன்னைப் போன்ற நண்பர்களுக்கும்.. தொழுகையில்லாமல் இபாதத்கள் இல்லாமல், றமழானில் நோன்பு வைக்காமல், வசதி வாய்ப்புகள் இருந்தும் ஹஜ் செய்யாமல் இருக்கின்றவர்களுக்காக..
எந்நேரமும் டிவியும் இசையும் பாட்டும் சினிமாவும் என ஹராத்தையே பார்த்து ஹராத்தையே கேட்டு ரசிக்கும் உன் போன்றவர்களுக்காக..
சிகரட்,பீடி, பான்பராக்கு, கஞ்சா குடியென காலத்தையும் காசையும் உடம்பையும் கெடுத்து மண்ணாக்கிக் கொண்டிருக்கும் உன்னைப் போன்றோருக்காக..
உழைப்பில் தூய்மையில்லாமல் காசு கைக்கு வந்தால் போதும் என்ற எண்ணத்தில் ஹராம் ஹலால் பாராமல் உழைத்து..
வட்டியை துரத்தாமல், பொய்யை விரட்டாமல், நம்பிக்கை மோசடி ஏமாற்று, பொய் புரட்டு என்று வாழ்வோருக்காக..
நெஞ்சில் ஈமானிய உறுதி இல்லாததால் பிறரைப்பற்றி பொய், புறம், கோள், பொறாமை, அவதூறு, போன்ற துர்க்குணங்களை அல்வா சாப்பிடுவது போல் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உன் போன்ற என் உடன்பிறவா சகோதரர்களுக்காக – சகோதரிகளுக்காக அனைவருக்குமாக இந்த நூலை எழுதுகின்றேன்.

இதைப்படித்ததால் உன் உள்ளம் கசிந்து இறைவழி நோக்கி நீ நடக்க ஆரம்பித்தால்.. அல்ஹம்துலில்லாஹ் என் ஆசை – நோக்கம் நிறைவேறி விட்டது.
இதைப்பாதியில் வீசிவிட்டு உன் பாதையை மாற்றா விட்டால்.. என்கடமை முடிந்துவிட்டது. ஆனால் உன் முடிவு உன் கையில்..

எனவே இதை பாதியில் தூக்கி வீசிவிடாமல் இறுதி வரை நீ வாசிக்கவேண்டும், நீ திருந்தி வாழ வேண்டு மென்பது எனது ஓரே ஆசை..அந்த ஆசையை நீ நிறை வேற்றுவாயா???

எதிர்பார்ப்புடன்..
மௌலவி ஏ.ஜி.எம் ஜெலீல் மதனி

இந்நூலில் அடங்கியுள்ள தலைப்புகள்

  1. பாவங்களை அலட்சியமாகக் கருதுவதன் விபரீதம்
  2. பெரும்பாவம் என்றால் என்ன?
  3. நம்பிக்கை சம்பந்தப்பட்ட பாவங்கள்.
  4. துர்நடத்தைக் குற்றங்கள்..
  5. சமூக,வாழ்வியல், உரிமை மீறல்கள்.
  6. தவ்பாவின் நிபந்தனைகள்
  7. பாவச்செயலால் ஏற்படும் விபரீதங்கள்
  8. உண்மையான தவ்பா
  9. அனைத்துப் பாவங்களையும் அழித்துவிடும்.
  10. அல்லாஹ் என்னை மன்னிப்பானா??
  11. 100 கொலை செய்தவனுக்கும் மன்னிப்பு உண்டா?
  12. கெட்ட நண்பர்களின் சகவாசம் வேண்டாம்.
  13. எங்கே நிம்மதி ?
  14. திருந்தி வாழ நினைப்போர் கேட்ட சில ஐயங்களும் அவற்றிற்கான பதில்களும்
  15. மார்க்கக் கல்வியின் அவசியம் பற்றி சில நபிமொழிகள்..

முழுமையான மின்னனு நூலுக்கு இங்கே சொடுக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *