Featured Posts
Home » பொதுவானவை » எச்சரிக்கை » பரிந்துரைக்காக அன்பளிப்புப் பெறுதல்

பரிந்துரைக்காக அன்பளிப்புப் பெறுதல்

மக்களிடையே பெரும் செல்வாக்கும் அந்தஸ்தும் ஒரு மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடையாக எப்பொழுது ஆகுமெனில் அதற்காக அவன் நன்றி செலுத்தும் போதுதான். முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக இந்த செல்வாக்கைப் பயன்படுத்துவது இவ்வருட்கொடைக்கு நன்றி செலுத்துவதாக அமையும். ஏனெனில் ‘உங்களில் யாரேனும் தன் சகோதரனுக்கு நன்மை செய்ய முடிந்தால் செய்யட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் பொதுவாகக் கூறியிருப்பதில் இது அடங்குகிறது. இந்த நபிமொழி ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்க முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருவர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடன் தன் சகோதர முஸ்லிமுக்கு ஒரு நன்மை செய்தால் அல்லது ஒரு அநீதியைத் தடுத்தால் – அதே நேரத்தில் விலக்கப்பட்ட எதையும் செய்யாமல் அல்லது யாருடைய உரிமையிலும் கை வைக்காமல் இருந்தால் அத்துடன் அவனுடைய எண்ணம் தூய்மையானதாக இருந்தால் அவன் அல்லாஹ்விடத்தில் நற்கூலியைப் பெறுவான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பரிந்துரை செய்யுங்கள். நற்கூலி வழங்கப்படுவீர்கள்’ அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: முஸ்லிம். ஆனால் பரிந்துரை செய்ததற்காக கூலியோ பிரதி உபகாரமோ பெற்றுக் கொள்ளக் கூடாது. ஆதாரம்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘ஒருவர் இன்னொருவருக்குப் பரிந்துரை செய்து, அதற்காக அவருக்கு வழங்கப்படுகின்ற அன்பளிப்பை பெற்றுக் கொண்டால் அவர் வட்டியின் பல வாசல்களில் மிகப் பெரிய வாசலில் நுழைந்தவராவார்’ அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி), நூல்: அஹ்மத்.

மக்களில் சிலர் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி அல்லது பரிந்துரை செய்து ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதற்கு அல்லது இடமாற்றம் வாங்கித் தருவதற்கு அல்லது ஒரு நோயாளிக்கு மருத்துவம் செய்து கொடுக்க இன்னும் இதுபோன்ற உதவிகளைச் செய்து கொடுப்பதற்காக ஒரு தொகையை கேட்கின்றனர். அறிஞர்களின் சரியான கூற்றின் பிரகாரம் இது ஹராமாகும். முன்னர் கூறப்பட்ட அபூஉமாமா (ரலி) அறிவிக்கும் நபிமொழியே இதர்கு ஆதாரமாகும். மட்டுமின்றி ஹதீஸின் வெளிப்படையான அர்த்தத்தைப் பார்க்கும்போது கேட்காமல் கொடுக்கப்படும் பொருள்களைப் பெறுவதும் ஹராம் தான். நன்மையைச் செய்யக்கூடியவனுக்கு மறுமையில் அல்லாஹ்விடம் கிடைக்கும் கூலி மட்டுமே போதுமானதாகும்.

ஒரு காரியத்தில் பரிந்துரை செய்யக் கோரி ஹஸன் பின் ஸஹ்ல் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்தார். அதை அவர் நிறைவேற்றிக் கொடுத்தார். அதற்காக அம்மனிதர் அவர்களுக்கு நன்றி செலுத்த வந்தார். அப்போது அந்த மனிதரிடம் ஹஸன் பின் ஸஹ்ல் (ரஹ்) அவர்கள் எதற்காக எங்களுக்கு நன்றி செலுத்துகிறீர், பொருளுக்கு ஜகாத் இருப்பது போலவே பதவியின் பேரில் ஜகாத் கொடுக்க வேண்டியுள்ளது என்றே நாங்கள் கருகிதுகிறோம் எனக் கூறினார்கள். (அல் – ஆதாப் அஷ்ஷரஇய்யா)

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாகும். அதாவது ஒருவர் தன்னுடைய வேலையை முடித்துத் தருவதற்காக சம்பளத்திற்கு ஒருவரை நியமிப்பதற்கும் ஒருவர் தன்னுடைய பதவியை, செல்வாக்கைப் பயன்படுத்தி பரிந்துரை செய்து கூலி பெறுவதற்கும் இடையில் பெருத்த வித்தியாசம் உள்ளது. முந்தியது மார்க்கத்தின் நிபந்தனைகளுடன் கூலி பெறுதல் எனும் அடிப்படையில் ஆகுமானதாகும். பிந்தியது ஹராமானதாகும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *