Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்புகள்.

ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1579. ”நான் உன்னைக் கனவில் இரண்டு முறை கண்டேன். உன்னைப் பட்டுத் (துணியின்) துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, ‘இது உங்கள் மனைவி தான்; (முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்’ என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், ‘இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்’ என்று சொல்லிக் கொண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

புஹாரி : 3895 ஆயிஷா (ரலி).

1580. என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்” என்று கூறினார்கள். அதற்கு நான், ‘எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், ‘என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), ‘முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், ‘இப்ராஹீம் (அலை) அவர்களின் அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்” என்று கூறினார்கள். நான், ‘அல்லாஹ்வீன் மீதாணையாக! ஆம் (உண்மைதான்,) இறைத்தூதர் அவர்களே! நான் தங்களின் பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்களின் மீதன்று)” என்று கூறினேன்.

புஹாரி : 5228 ஆயிஷா (ரலி).
1581. நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.
புஹாரி : 6130 ஆயிஷா (ரலி).

1582. அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்க மக்கள் நபிகளார் என்னிடம் தங்கும் நாள் எது என எதிர்பார்த்து வழங்கினர்.

புஹாரி :2574 ஆயிஷா (ரலி).

1583. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, ‘நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?’ என்று என்னுடைய (முறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே, அவர்களின் (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். எனவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் என் வீட்டில் வைத்து அவர்கள் இறந்தார்கள். என் நெஞ்சுக்கும் நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் இடையே அவர்களின் தலையிருந்தபோது, அவர்களின் எச்சில் என் எச்சிலுடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக் கொண்டான்.

புஹாரி : 4450 ஆயிஷா (ரலி).

1584. நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, ‘(இறைவா!) உயர்ந்த தோழர்க(ளான இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாதிகள் மற்றும் நல்லடியார்க)ளுடன் (என்னைச் சேர்த்தருள்)”(4:69) என்று சொல்லத் தொடங்கினார்கள்.

புஹாரி : 4436 ஆயிஷா (ரலி).

1585. ”உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை” என்று நான் (நபி (ஸல்) அவர்களிடமிருந்தே) செவியுற்றிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களின் தொண்டை கட்ட (கம்மிய, கரகரப்பான குரலில்), ‘அல்லாஹ் அருள் புரிந்துள்ள இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவர்கள் மற்றும் நல்லடியார்களுடன்” எனும் (திருக்குர்ஆன் 04:69) இறைவாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள். எனவே, ‘இவ்வுலகம் மறுமை ஆகிய இரண்டிலொன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது’ என்று நான் எண்ணிக்கொண்டேன்.

புஹாரி : 4435 ஆயிஷா (ரலி).

1586. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தபோது, ‘சொர்க்கத்தில் தம் இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம்) உயிர் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்படாத வரையில்’ அல்லது ‘(உலக வாழ்வு, மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத்) தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாத வரையில்’ எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை” என்று சொல்லி வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களின் தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் மூர்ச்சையடைந்து விட்டார்கள். மூர்ச்சை தெளிந்தபோது அவர்களின் பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது. பிறகு அவர்கள், ‘இறைவா (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான், ‘இனி (நபி (ஸல்) அவர்கள்) நம்முடன் இருக்க மாட்டார்கள்” என்று சொன்னேன். ஏனெனில், அவர்கள் ஆரோக்கியத்துடன் இருந்தபோது சொன்ன (இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்) செய்தி இதுதான் என்று (அவர்களின் மரண வேளையான இப்போது) அறிந்து கொண்டேன்.

புஹாரி : 4437 ஆயிஷா (ரலி).

1587. நபி (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால் தம் துணைவியரிடையே சீட்டுக் குலுக்குவார்கள். (யாருடைய பெயர் வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள்.) (ஒரு முறை) என்னுடைய பெயரும் ஹஃப்ஸாவின் பெயரும் (குலுக்கலில்) வந்தது. இரவு நேரப் பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னுடன் பேசிக்கொண்டே வருவார்கள். (ஒரு நாள்) ஹஃப்ஸா (என்னிடம்), ‘இந்த இரவு நீங்கள் என்னுடைய ஒட்டகத்தில் பயணம் செய்து பாருங்கள்; நான் உங்களின் ஒட்டகத்தில் பயணம் செய்து பார்க்கிறேன்” என்று கூறினார்கள். நான், ‘சரி” என்று (சம்மதம்) கூறினேன். எனவே, (நாங்களிருவரும்) ஒருவர் மற்றவரின் ஒட்டகத்தில்) ஏறிப் பயணிக்கலானோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் (நான் முதலில் ஏறி வந்த) என்னுடைய ஒட்டகத்தை நோக்கி வந்தார்கள். (அதில் நானிருப்பதாக நினைத்தார்கள். ஆனால்,) அதில் ஹஃப்ஸா இருந்தார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ‘சலாம்’ (முகமன்) கூறினார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்தார்கள். (பயணத்தினிடையே) அவர்கள் ஓர் இடத்தில் இறங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களை(க் காணாததால் அவர்களை (நான் தேடினேன். அவர்கள் இறங்கிய அந்த நேரம் நான் என்னுடைய இரண்டு கால்களையும் ‘இத்கிர்’ புற்களுக்கிடையே (புகுத்தி) வைத்துக்கொண்டு, ‘இறைவா! ஒரு தேளையோ அல்லது பாம்பையோ என் மீது ஏவிவிடு! அது என்னைத் தீண்டட்டும்” என்று சொன்னேன். (இப்படி என்னை நானே கடிந்துகொள்ளத்தான் முடிந்ததே தவிர,) நபி (ஸல்) அவர்களை (ஹஃப்ஸாவுடன் தங்கியதற்காக) என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

புஹாரி : 5211 ஆயிஷா (ரலி).

1588. (உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) உணவுகளைக் காட்டிலும் ‘ஸரீத்’ என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3770 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

1589. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கிறார்” என்று கூறினார்கள். நான், ‘வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்முத்துல்லாஹி வ பரக்காத்துஹு – அவரின் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும். (இறைத்தூதர் அவர்களே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று கூறினேன்.

புஹாரி :3217 அபூ ஸலாமா (ரலி).

1590. (முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி) அமர்ந்து கொண்டு ஒவ்வொரு வரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடி மறைக்காமல் (உள்ளதை உள்ளபடி) எடுத்துரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக் கொண்டனர். முதலாவது பெண் கூறினார்: என் கணவர், (உயரமான) மலைச் சிகரத்தில் வைக்கப்பட்டுள்ள மிகவும் இளைத்துப்போன ஒட்டகத்தின் இறைச்சிக்கு நிகரானவர். (இளைத்த ஒட்டகத்தின் இறைச்சியாயினும், அதை எடுக்க) மேலே செல்லலாம் என்றால் (அதை மலைப்பாதை) சுலபமானதாக இல்லை. (சிரமத்தைத் தாங்கி) மேலே ஏற (அது ஒன்றும்) கொழுத்த (ஒட்டகத்தின்) இறைச்சியுமில்லை. இரண்டாவது பெண் கூறினார்: நான் என் கணவர் பற்றிய செய்திகளை அம்பலப்படுத்தப் போவதில்லை. (அப்படி அம்பலப்படுத்த முயன்றாலும்) அவரைப் பற்றிய செய்திகளை ஒன்று கூட விடாமல் சொல்ல முடியுமா என்ற அச்சமும் எனக்கு உண்டு. அவ்வாறு கூறுவதானாலும் அவரின் வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான குற்றங் குறைகளைத் தான் கூறவேண்டியதிருக்கும். மூன்றாவது பெண் கூறினார்: என் கணவர் மிகவும் உயரமான மனிதர் அவரைப் பற்றி நான் (ஏதேனும்) பேசி (அது அவரின் காதுக்கு எட்டி)னால். நான் விவாகரத்துச் செய்யப்பட்டு விடுவேன்; (அதே நேரத்தில் அவரிடம் எதுவும் பேசாமல்) நான் மௌனமாயிருந்தால் அந்தரத்தில் விடப்படுவேன். (என்னுடன் நல்லபடி வாழவுமாட்டார்; என்னை விவாகரத்தும் செய்யமாட்டார்.) நான்காவது பெண் கூறினார். என் கணவர் (மக்கா உள்ளிட்ட) ‘திஹாமா’ பகுதியின் இரவு நேரத்தைப் போன்ற (இதமான)வர். (அவரிடம்) கடும் வெப்பமும் இல்லை. கடுங்குளிருமில்லை. (அவரைப் பற்றி எனக்கு) அச்சமும் இல்லை (என்னைப் பற்றி அவரும்) துச்சமாகக் கருதியதுமில்லை.

ஐந்தாவது பெண் கூறினார்: என் கணவர் (வீட்டுக்குள்) நுழையும்போது சிறுத்தை போல் நுழைவார். வெளியே போனால் சிங்கம் போலிருப்பார். (வீட்டினுள்) தாம் கண்டுபிடித்த (குறைபாடுகள் முதலிய)வை பற்றி எதுவும் கேட்கமாட்டார். ஆறாவது பெண் கூறினார்: என் கணவர் உண்டாலும் வாரி வழித்து உண்டு விடுகிறார். குடித்தாலும் மிச்சம் மீதி வைக்காமலும் குடித்துவிடுகிறார். படுத்தாலும் (விலகி) சுருண்டு போய்ப் படுத்துக்கொள்கிறார். என் சஞ்சலத்தை அறிய தம் கையைக் கூட அவர் (என் ஆடைக்குள்) நுழைப்பதில்லை.

ஏழாவது பெண் கூறினார்: என் கணவர் ‘விவரமில்லாதவர்’ அல்லது ‘ஆண்மையில்லாதவர்’, சற்றும் விவேகமில்லாதவர். எல்லா நோய்களும் (குறைகளும்) அவரிடம் உண்டு. (அவரிடம் பேசினால் என்னை ஏசுவார். கேலி செய்தால்) என் தலையைக் காயப்படுத்துவார். (கோபம் வந்துவிட்டால்) என் உடலைக் காயப்படுத்துவார். அல்லது இரண்டையும் செய்வார். எட்டாவது பெண் கூறினார்:என் கணவர் தொடுவதற்கு முயலைப் போன்ற (மிருதுவான மேனி உடைய)வர்; முகர்வதற்கு மரிக்கொழுந்து போல் மணக்கக் கூடியவர்.

ஒன்பதாவது பெண் கூறினார்: என் கணவர் (அவரை நாடி வருவோரைக் கவரும் வகையில்) உயரமான தூண்(கள் கொண்ட மாளிகை) உடையவர். நீண்ட வாளுறை கொண்ட (உயரமான)வர். (விருந்தினருக்குச் சமைத்துப் போட்டு வீட்டு முற்றத்தில்) சாம்பலை நிரைத்து வைத்திருப்பவர். (மக்கள் அவரைச் சந்திப்பதற்கு வசதியாக) சமுதாயக் கூடத்திற்கு அருகிலேயே வீட்டை அமைத்துக் கொண்டவர். பத்தாவது பெண் கூறினார்: என் கணவர் செல்வந்தர் எத்துணை பெரும் செவ்வந்தர் தெரியுமா? எல்லா செல்வந்தர்களையும் விட மேலான செல்வந்தர். அவரிடம் ஏராளமான ஒட்டகங்கள் உள்ளன. (அவற்றை அறுத்து விருந்தினருக்குப் பரிமாறுவதற்கு வசதியாகப்) பெரும்பாலும் அவை தொழுவங்களிலேயே (தயார் நிலையில்) இருக்கும். (விருந்தினர் வராத சில நாள்களில் மட்டும்) குறைவாகவே மேய்ச்சலுக்கு விடப்படும். (விருந்தினர் வருகையை முனனிட்டு மகிழ்ச்சியில் ஒலிக்கப்படும்) குழலோசையை அந்த ஒட்டகங்கள் கேட்டுவிட்டால் தாம் அழிந்தோம் என அவை உறுதிசெய்து கொள்ளும். பதினொன்றாவது பெண் கூறினார்: என் கணவர் (பெயர்) அபூ ஸர்உ. அபூ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். (ஆசையாசையாக உணவளித்து) என் கொடுங்கைகளை கொழுக்கச் செய்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது. ஒரு மலைக் குகையில் (அல்லது) ‘ஞக்’ எனுமிடத்தில்) சிறிது ஆடுகளுடன் (திரிந்துகொண்டு) இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர், என்னை (மனைவியாக ஏற்று) குதிரைகளும் ஒட்டகங்களும் உள்ள, தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த (அவரின் பண்ணை) வீட்டில் என்னை வாழச் செய்தார். நான் அவரிடம் எதையும் பேசுவேன்; நான் அலட்சியப்படுத்தப் பட்டதில்லை. நான் தூங்கினாலும் (நிம்மதியாக) முற்பகல் வரைத் தூங்குகிறேன். (என் தூக்கத்தை யாரும் கலைப்பதில்லை.) நான் (உண்டாலும்) பருகினாலும் பெருமிதப்படும் அளவிற்கு (உண்ணுகிறேன்) பருகுகிறேன்.(என் கணவரின் தாயார்) உம்மு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரின் வீட்டுக்கு களஞ்சியம் (எப்போதும்) கனமாகவே இருக்கும் அவரின் வீடு விசாலமானதாகவே இருக்கும்.(என் கணவரின் புதல்வர்) இப்னு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரின் படுக்கை, உருவப்பட்ட கோரை போன்று (அல்லது உறையிலிருந்து எடுக்கப்பட்ட வாளைப் போன்று (சிறியதாக) இருக்கும். (அந்த அளவிற்குக் கச்சிதமான உடலமைப்பு உள்ளவர்.) ஓர் ஆட்டுக் குட்டியின் ஒரு சப்பை(இறைச்சி) அவரின் பசியைத் தணித்து விடும். (அந்த அளவிற்குக் குறைவாக உண்ணுபவர்.)(என் கணவரின் புதல்வி) பின்த் அபீ ஸர்உ எத்தயைவர் தெரியுமா? தம் தாய் தந்தைக்கு அடங்கி நடப்பவர். (கட்டான உடல் கொண்ட) அவரின் ஆடை நிறைவானதாக இருக்கும். அண்டை வீட்டுக்காரி அவரைக் கண்டு பொறாமை கொள்வாள்.(என் கணவர்) அபூ ஸர்உ உடைய பணிப்பெண் எத்தகையவள் தெரியுமா? அவள் எங்கள் (இரகசிய) செய்திகளை அறவே வெளியிடுவதில்லை. வீட்டிலுள்ள உணவுப் பொருள்களைச் சேதப்படுத்துவதுமில்லை. வீட்டில் குப்பை கூளங்கள் சேர விடுவதுமில்லை. (அவ்வளவு நம்பிக்கையானவள்; பொறுப்புமிக்கவள்; தூய்மை விரும்பி.)

(ஒருநாள்) பால் பாத்திரங்களில் (மோர் கடைந்து) வெண்ணெய் எடுக்கப்படும் (வசந்த கால அதிகாலை) நேரம் (என் கணவர்) அபூ ஸர்உ வெளியே சென்றார். (வழியில்) ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவளுடன் சிறுத்தைகள் போன்ற அவளுடைய இரண்டு குழந்தைகள் இருந்தனர். அந்தக் குழந்தைகள் அவளுடைய இடைக்குக் கீழே இரண்டு மாதுளங்கனிகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். எனவே, (அவளுடைய கட்டழகில் மனதைப் பறி கொடுத்து) என்னை விவாக விலக்குக் செய்துவிட்டு, அவளை மணந்தார். அவருக்குப் பின் இன்னொரு நல்ல மனிதருக்கு நான் வாக்கப்பட்டேன். அவர் வேகமாகச் செல்லும் குதிரையில் ஏறி, (பஹ்ரைன் நாட்டிலுள்ள) ‘கத்’ எனும் இடத்தைச் சேர்ந்த ஈட்டி ஒன்றை எடுத்தார். மாலையில் வீடு திரும்பியபோது ஏராளமான கால்நடைகளை என்னிடம் கொண்டு வந்தார். மேலும், எனக்கு ஒவ்வொரு பொருட்களிலும் ஒரு ஜோடியை வழங்கி, ‘உம்மு ஸாஉவே! (நன்றாக) நீயும் சாப்பிடு! உன்(தாய்) வீட்டாருக்கும் சாப்பிடக் கொடு” என்றார்.(ஆனாலும்,) அவர் எனக்கு (அன்புடன்) வழங்கிய எல்லாப் பொருள்களையும் நான் ஒன்றாய்க் குவித்தாலும் (என் முதல் கணவரான) அபூ ஸர்உவின் சின்னஞ்சிறு பாத்திரத்தைக் கூட அவை நிரப்பமுடியாது (என்று கூறி முடித்தார்.) ஆயிஷா (ரலி) கூறினார்:

(என்னருமைக் கணவரான) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘(ஆயிஷாவே!) உம்மு ஸர்விற்கு அபூ ஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (அன்பாளனாக) இருப்பேன்’ என்றார்கள்.

புஹாரி :5189 ஆயிஷா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *