Featured Posts
Home » இஸ்லாம் » குடும்பம் » அழகிய விடுதலை

அழகிய விடுதலை

உறவினர்கள் கூடி அளவளாவிக்கொண்டிருந்த பொழுதொன்றில், எங்கேயோ நடந்து முடிந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவம் பேச்சின் இடையில் புகுந்துகொண்டது. ஒரு வீட்டுத் தலைவி பாதையால் கூவிச்சென்ற மீன்காரரிடம் தேவையானளவு மீனைக் கொள்வனவு செய்து அதைச் சமைக்கும் வேலைகளில் மூழ்கியிருக்கிறார். வீட்டுத் தலைவன் தூங்கிக் கொண்டிருந்ததால் தூக்கத்தை கலைக்க விரும்பாமல் அறையில் மாட்டிவிடப்பட்ட கணவரின் சட்டைப் பையில் கையைவிட்டதும் கிடைத்த தொகையில்தான் அந்தத் தேவையை முடித்திருக்கிறார்.

ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்த நண்பரின் அழைப்பில் விழித்துக்கொண்ட கணவர் தானும் ஆயத்தமாகிக்கொண்டு இருவரும் பஸ்வண்டிப் பிரயாணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார்கள். பஸ் நடத்துனர் கட்டணச் சிட்டையை வழங்கியதும்தான் சட்டைப் பையில் பணம் இல்லாதிருப்பது கணவருக்குத் தெரியவந்தது. நிலைமையை ஒருவாறு சுதாகரித்துக் கொண்டாலும் வீடுதிரும்பியதும் தனது கோபத்தை மனைவியிடம் தாராளமாகக் கொட்டித் தீர்த்திருக்கிறார்.

இச்சம்பவத்தை உறவினர் ஒருவர் சொல்லி முடித்ததும் அங்கிருந்தோர் அனைவரும் கொல்லெனச் சிரித்து விட்டார்கள். ஆனால், வெறுமனே ஒரு நகைப்புடன் விட்டுவிடக்கூடிய சம்பவமாக இதைக் கருத முடியாது.

கணவன் மனைவி உறவுக்குள் பணப்பரிமாற்றம் பிரதான பங்கினை வகிப்பதொன்றாகும். பொதுவாக நிதி விடயங்களை இருவரும் கையாள்வதைவிட, அதை ஒருவரின் பொறுப்பில் விட்டு மற்றவர் அதற்கு ஒத்தாசையாக இருக்கும்போது அதில் ஒரு ஒழுங்கமைப்பு இருப்பதை அனுபவ ரீதியாக உணரலாம்.

மனைவி வேலைக்குப் போகக்கூடியவராக இருந்தால், நிச்சயம் அவளுக்கென்று சில பிரத்தியேகச் செலவுகளும் இருக்கும். எவ்வகைச் செலவாயினும் அதைக் கணவரிடமிருந்து பெற்றுச் செலவு செய்யும் அனுபவத்தை அனைவரும் பெற்றிருப்பார்களா? என்பது கேள்விக்குறியே.

மேலும், சிலர் தனது சம்பள பணத்தினை கணவன் எதிர்பார்ப்பதில்லை எனவும், தான் அதனை என்ன செய்தாலும் ஒரு பொருட்டாய்க் கருதுவதில்லை எனவும் பெருமையாகக் கூறிக் கொள்கின்றார்கள். இது கணவனின் பெருந்தன்மையைக் காட்டுகின்றதாயினும், அது பெண்ணுக்கு எப்போதும் சாதகமான பெறுபேற்றினைப் பெற்றுத் தரும் எனக் கருதமுடியாது. தனது பணத்தில் தனக்கு முழுச் சுதந்திரம் இருப்பதாக எண்ணி அவள் எடுக்கும் தீர்மானங்கள் சிலவேளை, தவறாகப் போய்விடலாம். அல்லது அவளது நல்ல தீர்மானங்கள் பலனின்றிப் போகலாம். அதனை ஒழுங்கமைத்துக் கொள்ளவேனும் கணவரின் உதவி அவளுக்குத் தேவை.

எனவே, அவளது செலவு விபரங்களை கணவன் கேட்காவிட்டாலும் அவரது கவனத்தில் போட்டு வைத்திருப்பது இருவருக்கிடையிலும் பரஸ்பரத்தை அதிகரிப்பதோடு, சைத்தானின் ஊசலாட்டங்களால் ஏற்படும் சங்கடங்களையும் தவிர்ந்து கொள்ளலாம். மனைவியின் இந்த வெளிப்படைத் தன்மையானது, அதற்கு மாற்றமாக நடக்கும் கணவரையும்கூட காலப்போக்கில் ஈர்த்துவிடும்.

ஆண் தலைமைத்துவம் கொண்ட சில வீடுகளில் நிதிப் பொறுப்பு ஆணிடம் இருப்பதை மரியாதைக் குறைவாகக் கருதும் பெண்களும் இருக்கிறார்கள். அந்த விடுதலையும் ஒருவகைச் சுதந்திரமே என்பதை பெண் உணரத் தவறுகிறாள். நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பொறுப்புகளைச் சுமப்பதில் ஆண்கள் ஒருபடி மேலானவர்களே. பெண்ணின் கண்காணிப்பாளன் ஒரு ஆணாகவே இருக்க முடியும்.

அன்னை கதீஜா (றழி) அவர்கள் பெரும் செல்வந்தராக இருந்தாலும் அவர்களது பொருளாதாரத்தினை மேற்பார்வை செய்யும் பொறுப்பினை நபியவர்களே மேற்கொண்டார்கள்.

மேலும், சில வீடுகளில் கணவர் வீண்செலவு செய்பவர் எனக் குறைகாணப்பட்டு, நிதியாளர் பதவிக்கு அவர் பொருத்தமற்றவராகி, இயல்பாகவே அப்பதவி மனைவியின் கைக்கு போயிருக்கும்.

இவ்வாறான வீடுகளை நோக்கும்போது அந்தச் சந்தர்ப்பத்திற்கு அது சரியெனத் தோன்றினாலும், நீண்டகால விளைவுகளை எடுத்து நோக்குமிடத்து அதில் பெரியளவு வெற்றி இருப்பதில்லை. மாறாக, அந்த வீட்டுத் தலைவர் குறைந்தபட்சம் ஒரு சோம்பேறியாகவாவது மாறியிருப்பார். அல்லது குடும்பப் பொறுப்பிலிருந்தும் சற்று விலகியவராக இருப்பார். இவ்வாறான சூழலில் நீண்டகாலமாக வாழும் ஓர் இல்லத்தரிசி தனது நிம்மதியற்ற நிலைமையையும், அந்த நிலைமை அவர்களது பிள்ளைகளின் எதிர்காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தமையையும் கவலையுடன் பகிர்ந்துகொண்டார்.

கணவர் தானாக விரும்பியோ, அல்லது சூழ்நிலை காரணமாக நிதிப்பொறுப்பினை மனைவிக்கு வழங்கியிருந்தால், அதில் சந்தோசப்பட்டுக்கொள்ள பெரியளவில் ஒன்றுமில்லை. நாமாக ஒரு பொறுப்பினை தலையில் சுமத்தியுள்ளோம் என்றே கருதவேண்டியுள்ளது.

எனவே, நிதிப் பொறுப்பினை கணவரிடம் கொடுத்துப் பாருங்கள்.
மனைவியின் பணப்பையில் குறைவேற்படும்போது அதனை அவ்வப்போது மீள்நிரப்புச் செய்யும் கணவராக நிச்சயம் மாறுவார். இல்லறமும் இனிக்கும்.

– பர்சானா றியாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *