Featured Posts
Home » பொதுவானவை » அகால மரணமடைந்த அமெரிக்க ஒப்பந்தங்கள்

அகால மரணமடைந்த அமெரிக்க ஒப்பந்தங்கள்

அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் இந்திய வருகை ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்தியா வளர்ந்து வரும் வல்லரசு நாடு என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளதால் தெற்காசிப் பிராந்தியத்தில் இந்தியாவுடனான நல்லுறவு அமெரிக்க நலனுக்கு உகந்தது என்ற நோக்கில் அமெரிக்க அதிபரின் இந்திய வருகை இருக்கலாம்.

அமெரிக்க அதிபர் இந்தியா வந்ததன் நோக்கம் இந்தியாவுடன் பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் நல்லுறவுக்கும் உறுதுணையாயிருக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கும் “சிலருக்கு” கடந்த காலங்களில் அமெரிக்கா ஒப்புக் கொண்டுவிட்டு, அதன் சுயநலக் காரணங்களுக்காக அதாவது “AGAINST AMERICAN INTREST” (அமெரிக்க நலனுக்கு எதிராக) என்ற காரணம் சொல்லி ரத்து செய்துள்ள வரலாற்றை அறிந்து கொள்வது இங்கு அவசியம்.

இந்தியா ~ அமெரிக்கா இடையே அணுவிசை ஒத்துழைப்பு உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது என்று பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆகியோர் வியாழக்கிழமை அறிவித்தனர். இவையன்றி ஒப்புக்கு இன்னும் சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகலாம்.

இரு நாட்டு அல்லது பன்னாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்பு, எந்த ஒரு நாடும் தன்னிச்சையாக, திடீரென்று ஒப்பந்தத்தை விட்டு வெளியே வர இயலாது. ஆனால், அமெரிக்க காங்கிரஸ் மட்டும் எப்பொழுது வேண்டுமானாலும் தன் தேச நலன் என்று கூறி, எவ்வகையான ஒப்பந்தத்தையும் முறிக்கலாம். இது உலகின் விந்தை! உதாரணமாக,

1) அதிபர் வில்ஸனால், முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டு, கையெழுத்திடப்பட்ட சர்வதேச சங்கம்,

2) நிக்ஸன் மற்றும் கார்ட்டரால் சோவியத் யூனியனுடன் கையெழுத்திடப்பட்ட பல்வேறு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தங்கள்,

3) இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட பொக்காரோ இரும்பாலை ஒப்பந்தம்,

4) தாராப்பூர் அணு மின் நிலைய ஒப்பந்தம் (அணுமின் நிலையத்துக்கான எரிபொருளை அமெரிக்கா வழங்குவதில் பிரச்சினை)

5) பில் கிளின்டனால் மிகப்பெரிய விளம்பரத்தோடு கையெழுத்திடப்பட்ட பரவலாக்கப்பட்ட அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தம் (CTBT) ஆகியவை அமெரிக்க காங்கிரசின் முடிவால் அமைதியாக நல்லடக்கம் பண்ணப்பட்டவை!

ஆக, அமெரிக்கா செய்து கொண்ட பெரும்பாலான சர்வதேச உடன்படிக்கைகளின் ஆயுட்காலம் அமெரிக்காவின் கையிலேயே உள்ளதால், ஜார்புஷ்ஷின் வருகையால் கையெழுத்தாகியுள்ள இந்திய-அமெரிக்க ஒப்பந்தங்கள் பூரண நலம் பெற்று (அமெரிக்காவால்!) மீறப்படாமல் இருக்க இறைவனைப் பிரார்த்திப்போமாக!

2 comments

  1. சந்திப்பு

    எதிரொலி நன்றாக உள்ளது. ஆம்! உலகையே கபளிகரம் செய்யத் துடித்த இட்லருக்கு எதிராக புதிய போர்முனையை உடனே துவக்கிடுவதாக சோவியத் யூனியனோடு செய்துக் கொண்ட ஒப்பந்தத்தைக்கூட அமெரிக்க இறுதி வரை அமலாக்கவில்லை. அதன் நோக்கமெல்லாம் சோவியத்தும் – ஜெர்மனியும் மோதி, சோவியத் அழிய வேண்டும் என்பதே! இறுதியில் சோவியத் மக்களின் – 2 கோடி மக்களின் பெரும் தியாகத்தால் இட்லர் தோற்கடிக்கப்படுவது நிச்சயமானபோதுதான் அமெரிக்கா இன்னொரு முனையில் போரைத் துவக்கியது. இதுதான் ஏகாதிபத்திய நியதி.

  2. It all depends on the constitution of that country and the decisions on policy issues.If the house of peoples’ representatives has the power to negate or refuse sanction to a particular agreement , that
    possibility is always there.So there is nothing strange about it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *