Featured Posts
Home » பொதுவானவை » தமிழக முஸ்லிம்களை ஆண்டவன்தான் காப்பாற்றனும்!

தமிழக முஸ்லிம்களை ஆண்டவன்தான் காப்பாற்றனும்!

சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பெரும்பாலான தொகுதிகளில் நிர்ணயிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் இருக்கின்றனர். தேர்தல் திருவிழாவில் ஓட்டுக்காக முஸ்லிம்களை தாஜா செய்வது எல்லா அரசியல் கட்சிகளும் மதசார்பின்றி கடைபிடிக்கும் யுக்தி.

சுதந்திரப் போராட்டங்களில் இணைந்து செயல்பட்ட தொப்புல் கொடி உறவால் காங்கிரஸுடன் பெரும்பாலான தேர்தல்களில் கூட்டனி வைத்து சில தொகுதிகளில் வெல்வதோடு இந்திய முஸ்லிம்களின் பங்களிப்பு இருந்து வருகிறது.

தமிழகத்திலும் இந்த நிலை கடந்த ஐம்பது வருடங்களாக ஏதாவது ஒரு திராவிடக் கட்சிகளின் தயவுடன் தொடர்ந்து வந்தாலும் கேரளாவைப் போல் மாநிலத்தின் அரசியல் முடிவை மாற்றியமைக்கும் அளவுக்கு முக்கியத்துவமுள்ள சக்தியாக தமிழக முஸ்லிம்கள் கருதப்படவில்லை.

தமிழக முஸ்லிம்களைப் பொருத்தவரை திமுகவின் அனுதாபியாகவே இருந்து வருகின்றனர். கடந்த தேர்தல்களில் திமுக, இஸ்லாமிய எதிர்ப்புவாத அரசியல் கட்சியான பாஜகவுடன் கூட்டு சேர்ந்த போதும் திமுகவிற்கான முஸ்லிம்களின் ஓட்டில் பெருத்த மாற்றமில்லை.

இதற்குப் பிரதியுபகாரமாக கலைஞர் கருணாநிதி, முஸ்லிம் லீகர்களும் முஸ்லிம் தொழிலதிபர்களும் நடத்தும் இஃப்தார் விருந்தில் தவறாது கலந்து கொண்டு நோன்புக் கஞ்சியை புகழ்ந்து பேசிவிட்டும் மீலாது விழாக்களில் திமுகவுக்கும் காயிதே மில்லத்திற்கும் இருந்த நெருக்கத்தையும் முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்திச் செல்வார்.

ஜெயலலிதாவைப் பொருத்தவரை தமிழக முஸ்லிம்களை கிள்ளுக் கீரையாகத் தான் நினைத்து வந்துள்ளார். முஸ்லிம்களுக்கென்று தனியாக இடஒதுக்கீடு இல்லாத போதிலும் இருந்த முஸ்லிம் வேட்பாளர்களையும், பெயரளவில் அமைச்சர்களாக இருந்தவர்களையும் அவ்வப்போது ஓரங்கட்டி தமிழக சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை வெகுவாகக் குறைத்த பெருமை ஜெயலலிதா அம்மையாரையேச் சாரும்!

தமிழக அளவில் பெரிய அரசியல் சக்தியாக இல்லாவிட்டாலும் பாஜகவும் தேர்தல் காலங்களில் முஸ்லிம்களை பகைத்துக் கொள்வதை விரும்பாது. விஞ்ஞானி A.P.J. அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக ஆனதை இந்திய முஸ்லிம்களுக்காற்றிய சேயையாக சொல்லும் இவர்களின் ஆட்சியில்தான்.

இந்திய அரசியலில் முஸ்லிம்களை அனுசரித்துப் போவது எல்லாக் கட்சிகளுக்குமே நல்லது என்பதை முஸ்லிம்களை விட அனைத்து கட்சிகளும் உணர்ந்துள்ளன. இந்துக்களை ஒருங்கிணைத்தாலும் ஜாதி ரீதியாக பிளவு பட வாய்ப்புண்டு. ஆனால் முஸ்லிம்களை கவர்ந்து விட்டால் சிந்தாமல் சிதறாமல் வாக்கு வங்கியை அப்படியே அமுக்கி விடலாம்! என்பதுதான் பிரதானக் காரணம்.

தமிழக முஸ்லிம்கள், முஸ்லிம் லீக்கின் அப்துஸ் ஸமது, அப்துல் லத்தீப் என்ற இரு பெரும் தலைவர்களின் மறைவுக்குப் பின் அரசியல் அநாதைகள் ஆயினர். கோவை குண்டு வெடிப்பைக் காரணம் சொல்லி முஸ்லிம்களை தீவிரவாத முத்திரைக் குத்தி பொடா,தடா சட்டங்களின் உதவியுடன் அடக்கி வைத்ததில் கலைஞர் கருணாநிதிக்கு, ஜெயலலிதா கொஞ்சமும் சளைத்தவரில்லை.

முஸ்லிம்களின் அரசியல் வெற்றிடத்தை தமுமுக ஓரளவு தமிழக ஒருங்கிணைத்தது. இடஒதுக்கீடு கோரிக்கை, வாழ்வுரிமை மாநாடு, பாபர் மசூதி நினைவு தினப் பேரணிகள் என்று இந்திய அளவில் அனைத்து அரசியல்வாதிகளையும
் கவர்ந்த இயக்கமாக உருவெடுத்த தமுமுகவிற்கு அதன் முன்னாள் அமைப்பாளர் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் கொள்கை வேறுபாட்டால் பிரிந்ததற்குப் பின் மீண்டும் முஸ்லிம்கள் அமைப்பு ரீதியாக பிரிந்து விட்டனர்.

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வும் பி.ஜேயும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக தமிழக முஸ்லிம்களை உற்சாகப் படுத்தி மார்க்கப் பேணுதலுடன் வித்தியாசமான அனுகுமுறைகளுடன் செயல்பட்டு வந்தனர்.

எல்லா கட்சிகளையும் போலவே அமைப்பு ரீதியில் இருப்பவர்களுக்குள் எழும் புகழ் போதையும் உட்கட்சி அரசியலும் தமுமுகவையும் விட்டு வைக்கவில்லை. பல விசயங்களில் தமுமுக சமரசம் செய்து கொள்வதால் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துச் செல்லும் பிரச்சார பணி தடை பெறுகிறது என்ற காரணம் சொல்லி பி.ஜே அவர்கள் மார்க்கப் பிரச்சாரத்தை முன்னிருத்தி த.த.ஜ (தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்) என்ற அமைப்பைத் தொடங்கி ஒன்று பட்டிருந்த முஸ்லிம்களை மீண்டும் அமைப்பு ரீதியில் பிரித்தார்.

கடந்த பத்து வருடங்களாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக எழுச்சி பெற்ற முஸ்லிம்கள் மீண்டும் திராவிடக் கட்சிகளின் கொடியை ஒரு கையிலும் தங்கள் அமைப்பின் கொடியை இன்னொரு கையிலும் பிடித்து கோஷம் போட்டு ஓட்டு கேட்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தங்கள் அமைப்பு ஆதரவு ஊடகங்களிலும் இணைய தளங்களிலும் எதிரெதிர் நிலை கொண்ட அறிக்கைப் போர்களால் தமிழக முஸ்லிம்களின் அரசியல் முன்னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது.

தமுமுகவை பொருத்தவரை ஆரம்பம் முதல் திமுக பாஜகவுடன் கூட்டனி அமைத்திருந்த வருடங்கள் தவிர்த்து கலைஞருக்கு ஆதரவாக இருந்து வருகிறது. வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்ட ஜெயலலிதாவின் பசப்பு வாக்குறுதிகளை நம்பி தமிழக ஆட்சி மாற்றத்தில் முக்கிய பங்காற்றியது.

தமுமுகவிலிருந்து பிரிந்த பிஜே அணியினர் தமுமுகவின் நேரெதிர் நிலை எடுக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் தற்போது ஜெயலலிதா ஆதரவு நிலைப்பாடு கொண்டுள்ளது. இதனால் ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல், திமுகவும் தமுமுகவும் தமிழக முஸ்லிம்களை பங்கு போட்டுக் கொண்டுள்ளனர்.

ஒற்றுமை எனும் கையிற்றைப் பற்றிப்பிடித்துக் கொண்டால் நிச்சயம் நீங்கள் வெற்றியடைவீர்கள் என்ற இஸ்லாமியக் கோட்பாட்டை மதியாமல் தங்களில் யார் பெரியவர்? என்ற ஆதிக்கச் சூழ்ச்சியில் பழியாகி தமிழக முஸ்லிம்கள் மீண்டும் பிரித்தாளப் பட்டுள்ளனர்.

தமுமுகவை முஸ்லிம்களின் அரசியல் அமைப்பாகவும், தவ்ஹீத் ஜமாஅத்தை மார்க்கப் பிரச்சார அமைப்பாகவும் செயல்படுத்தி இருந்தால் தமிழக அரசியலில் முஸ்லிம்களின் பங்கு மிளிர இருந்த வாய்ப்பு தற்போது கேள்விக்குறியாகி விட்டது.

தமிழக முஸ்லிம்களை ஆண்டவன்தான் காப்பாற்றனும்!

6 comments

  1. தமுமுக ஒன்றாக இருந்த போது
    மிக மும்முரமாக களப் பனியாற்றிய (அதன் பிறகு இவ்விரு இயக்கத்தை விட்டும் வெளியேறிய) என்னைப் போன்ற முஸ்லிம்களின் மனக் குமுறலை மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள். என்ன செய்வது?
    இவ்விருவர்களின் தானென்ற – தன் இயக்கம் என்ற போதை எப்பொழுது அழிகின்றதோ அன்று தான் தமிழக முஸ்லிம்களுக்கு விடிவு காலம். இறைவனிடம் பிரார்த்திப்பதைத்
    தவிர தற்போது வேறு வழி தெரியவில்லை.

  2. //ஒற்றுமை எனும் கையிற்றைப் பற்றிப்பிடித்துக் கொண்டால் நிச்சயம் நீங்கள் வெற்றியடைவீர்கள் என்ற இஸ்லாமியக் கோட்பாட்டை மதியாமல் தங்களில் யார் பெரியவர்? என்ற ஆதிக்கச் சூழ்ச்சியில் பழியாகி தமிழக முஸ்லிம்கள் மீண்டும் பிரித்தாளப் பட்டுள்ளனர்.//

    மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள்.

  3. அழகப்பன்

    ம். வேறென்ன சொல்ல?

  4. மஹ்மூத் அல் ஹஸன்

    // ஒற்றுமை எனும் கையிற்றைப் பற்றிப்பிடித்துக் கொண்டால் நிச்சயம் நீங்கள் வெற்றியடைவீர்கள் //

    இந்தக் கயிறு எந்தக் கடையில் கிடைக்கும்?

    காயிதே மில்லத் சொல்ல அதை அப்படியே தமிழக முஸ்லிம்கள் பின்பறியது இது ஒன்றில்தான். “அல்லாஹ்வின் (வேதமாகிய)கயிற்றை ஒற்றுமையாகப் பற்றிப் பிடியுங்கள்” என்றே அல்லாஹ் சொல்கிறான். இதுபோன்று மாறி வழங்குகின்ற சிலவற்றைப் பட்டியலிட முடியும்.

    மஹ்மூத் அல் ஹஸன்

  5. naladiyar avargale

    ore kallil mundru maangai…
    athai than tamilaha muslimgal adithu ullargal.dmk allathu admk achiku varuvathu yarraha irrunthalum ida othikedu neechayam(insha allah). raatha veri piditha BJP katchiku inthathadavai oru seatum illai (insha allah)..karanam naam irupakamum irrupadal…. IVVARGAL NAAMAI MAANGAVAHA AKKAMAL IRRUKA YELLAVAM VALLA ANTHA ORE IRRAIVAN NAMMAI KAPTRUVANAHA………….

  6. அபுசுஹைல்

    //இந்தக் கயிறு எந்தக் கடையில் கிடைக்கும்?//
    குதர்க்கம் பேசுவதை விட பதிவாளரின் உண்மையான கவலையை புரிந்து கொள்ள முயலலாமே.
    //காயிதே மில்லத் சொல்ல அதை அப்படியே தமிழக முஸ்லிம்கள் பின்பற்றியது இது ஒன்றில்தான்.// அந்த “உண்மை”யயைத் தான் இந்த பதிவு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *