Featured Posts
Home » சட்டங்கள் » தலாக் » பொது? சிவில் சட்டம்

பொது? சிவில் சட்டம்

தேசத்தந்தை மஹாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவின் வாரிசுகள், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைப்பெற்ற இம்ரானாவின் சம்பவத்தை மையமாக வைத்து மீண்டும் ஒரு பழைய பல்லவியைப் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கீறல் விழுந்த ரெக்கார்டை மறுபடி Play பண்ண ஆரம்பித்திருக்கிறது தேச விரோத சங்பரிவார் அமைப்பு. எத்தனையோ முறை பதில் கொடுக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்தாலும் கூட, மக்களின் மறதியைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் போக்கு மிகுந்து காணப்படும் இக்காலத்தில் அவ்வப்போது நாமும் அதுபற்றிய விளக்கத்தை சிந்திக்கும் பொது ஜனத்துக்கு சமர்ப்பிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இவர்கள், அவ்வப்போது வரிந்து கட்டிக்கொண்டு முஸ்லிம்களை மையமாக வைத்து பொது சிவில் சட்டம் வேண்டும், பொது சிவில் சட்டம் வேண்டும் என்று வீர!முழக்கம் இடுவதைக் கேட்கும்போது உண்மையிலேயே இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தனது அனைத்து விவகாரங்களுக்கும் தனக்கென தனி சட்டம் வைத்துக்கொண்டு தனியாக அரசாங்கம் நடத்துவதைப் போல் ஒரு மாயையை ஏற்படுத்தும். ஆனால், உண்மை நிலையோ வேறு.

இந்த நாட்டில் மதச்சார்பற்ற ஓர் அரசின் கீழ் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு திருமணம், தலாக், பாகப்பிரிவினை போன்ற சில விவகாரங்களுக்கு மட்டும் இந்திய நீதிமன்றங்கள் முஸ்லிம் தனியார் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்து வருகிறது. இதேபோல் இந்து, கிறிஸ்தவ, சீக்கிய, ஜைன, புத்த சமயத்தினருக்கும் அவர்களுக்கென்று தனியார் சட்டங்கள் அமலில் இருந்து வருகிறது. ஆனால்,குற்றவியல் நடைமுறைக்கு மட்டும் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான I.P.C. ( INDIAN PENAL CODE ) எனும் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தனியார் சட்டம் என்பது இந்தியாவுக்குப் புதிதல்ல. மொகலாய மன்னர்கள் என்று இந்தியாவில் தன் கால்களை ஊன்றினார்களோ, அன்றிலிருந்தே அவரவர்கள் சார்ந்திருந்த மதங்களுக்குரிய சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டு வந்தார்கள்.

அதன்பின், கி.பி. 1862-ல்தான் I.P.C. ( INDIAN PENAL CODE ) என்ற புதிய சட்ட முறையைக் கொண்டு வந்தார்கள். இதுவும் கூட இங்கிலாந்தின் சட்ட முறையினை அடிப்படையாகக் கொண்டே வரையறுக்கப்பட்டது. பின்னர், 1937-ல் முஸ்லிம் தனியார் சட்டம் ( MUSLIM PERSONAL LAW – Shariath Application Act – 1937 ) அமலுக்கு வந்தது. பின்னர், அதனைத் தொடர்ந்து 1939-ல் முஸ்லிம் திருமணச் சட்டம் ( MUSLIM MARRIAGES ACT – 1939 ) ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலை இன்று வரை நீடித்து வருகிறது என்றாலும்கூட, இன்றைய இந்தியாவில் இந்த முஸ்லிம் தனியார் சட்டம் மிகப்பெரும் துவேஷத்துக்கு ஆளாகி வருகிறது. பெரும்பான்மையினரின் மதத்தின் மீது வெறியூட்டி இஸ்லாத்திற்கெதிராக மாபெரும் சூழ்ச்சிகளையும் சதித்திட்டங்களையும் தீட்டிவரும் சங்பரிவார்களின் அரசியல் ரூபமான பி.ஜே.பி- யின் தலை?வர்கள், முஸ்லிம்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் அதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கூப்பாடு போட்டு வருகிறார்கள்.

சங்பரிவார்கள் கூறுகிறார்கள்: “இந்திய முஸ்லிம்கள் குற்றவியல் நடைமுறைகளில் எவ்வாறு I.P.C. ( INDIAN PENAL CODE ) என்ற பொதுவான சட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களோ, அவ்வாறே அனைத்து விஷயங்களிலும் ஷரீஅத்தைக் கைவிட்டு விட்டு பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ளலாமே” என்று. இவர்களின் இந்தப் புலம்பலுக்கு ஒரு இஸ்லாமிய அறிஞரின் கூற்றையே பதிலாக வைக்கிறேன். “ஓர் அறையில் காற்றோட்டத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் இரு ஜன்னல்களில் ஒன்று மூடியிருப்பதைக் கண்டு அதுபோல் மற்றொன்றையும் மூடிவிடலாம் என்று எண்ணுவது பேதமை அல்லவா?.

சிவில் சட்டங்களுக்கும், கிரிமினல் சட்டங்களுக்குமிடையில் மிகப்பெரும் வேறுபாடு உண்டு. கிரிமினல் விஷயங்கள் நேரடியாக நீதிமன்றங்களால் தீர்க்கப்படக்கூடிய ஒன்று. ஆனால், சிவில் விஷயங்கள் அப்படியல்ல. சிவில் விஷயங்களை நீதிமன்றத்துக்கு வெளியில் மக்கள் மன்றத்திலும் தீர்த்துக்கொள்ள முடியும். உதாரணமாக, ஒருவன் மற்றொருவனைக் கொலை செய்து விடுகிறானென்றால் அவனுடைய பிரச்சினையை எவ்விதத்திலும் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக்கொள்ள முடியாது. அதை அரசாங்கம் அனுமதிக்கவும் செய்யாது.

ஆனால், திருமணம், தலாக், பாகப்பிரிவினை போன்ற சிவில் விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் அதை நீதிமன்றத்துக்கு வெளியிலும் தீர்த்துக்கொள்ள முடியும். இதை அரசாங்கம் கட்டுப்படுத்த முடியாது. மேலும், இது போன்ற சிவில் விவகாரங்கள் முழுக்க முழுக்க முஸ்லிம்களின் உள் விவகாரங்கள். முஸ்லிம்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்படும் எந்த விஷயமும் மற்றவர்களை, மாற்றுமதத்தினரை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை.

இந்நிலையில், திருமணம், தலாக், பாகப்பிரிவினை போன்ற விவகாரங்களில் பொது சிவில் சட்டம் கோருவோரின் நோக்கம் அப்பழுக்கற்ற இஸ்லாமிய விரோத மனப்பான்மையே என்பதில் ஊசிமுனையளவும் சந்தேகமில்லை. முதலில் ஒரு விஷயத்தை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்று முடிவு செய்வதாகயிருந்தால், அதற்கான சரியான காரணம் ஒன்று இருக்க வேண்டும். இவர்கள் பொது சிவில் சட்ட விஷயத்தில் எந்த ஒரு வலுவான காரணத்தையும் இதுவரை வைக்க முடியவில்லை. இவர்களால் சுட்டிக்காட்ட முடிந்ததெல்லாம் ஒரு ஷாபானு வழக்கு மட்டுமே. அதுவும்கூட அரசியல் காரணங்களால் சந்திக்கு வந்த ஒரு விஷயம் என்பதை ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் நன்றாக அறிவார்கள். அதுமட்டுமல்லாமல், முஸ்லிம்களுக்குள்ளே நடக்கும் எந்த விவகாரத்திலும் அந்த சமுதாயம் மற்றவர்களைத் துணைக்கு அழைப்பதில்லை. அதற்குத் தேவையும் இருக்கவில்லை. ஆனால், அழையா விருந்தாளிகளாக முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குள் நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டு நுழையும் சங்பரிவார்கள் உடனே கையில் எடுக்கும் விஷயம் பொது சிவில் சட்டம் வேண்டும் என்பதுதான்.

இவர்களின் இந்த மனப்பான்மையைச் சற்று சிந்தித்துப்பார்த்தால், அடுத்த வீட்டுக்காரன் மீது ஆளுமை செலுத்தத் துடிக்கும் அதிகாரப் போக்குதான் இங்கு வெளிப்படுகிறது. எனது அடுத்த வீட்டுக்காரர் ஐயங்கார் என்று தெரிந்தும் அவரை, நான் சாப்பிடுவதைப் போல் மீனையும் இறைச்சியையும் சாப்பிடு என்றோ அல்லது நாமிருவரும் பொதுவாக இன்றிலிருந்து முட்டை சாப்பிடுவோம் என்றோ கூறுவது அடுத்த வீட்டுக்காரரை நமக்கு எதிராகத் தூண்டுமே தவிர இணக்கமாக வாழ்வதற்குரிய வழி அதுவாக இருக்க முடியாது. எப்படி ஒரு வீட்டில் மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட சகோதர, சகோதரிகளோடு அவர்களது மனப்பான்மையை அறிந்து நடந்து கொண்டு குடும்ப ஒற்றுமையைக் காக்கிறோமோ, அதுபோல் பன்முகக் கலாச்சாரம் கொண்ட ஒரு நாட்டில் வாழும் நாம், ஒருவர் மற்றவரது கலாச்சாரத்தை மதித்து நடந்து கொள்ளும்போதுதான் இந்நாட்டில் சமூக ஒற்றுமையைக் காக்க முடியும். சமூக ஒற்றுமை ஒரு நாட்டில் மேலோங்கும்போதுதான் அந்நாடு ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியும்.

மேலும், பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல் போன்ற சமூக விரோத நடவடிக்கைகளுக்கு அரசியல் சாசனத்தில் அவற்றைத் தடுத்து சட்டமியற்றப்பட்டும் கூட மறைமுகமாக வக்காலத்து வாங்கும் சங்பரிவார்கள் பொது சிவில் சட்ட விஷயத்தில் மட்டும் தங்களை அரசியல் சாசன பாதுகாவலர்களாக காட்டிக் கொள்ள முனைந்து நிற்கிறார்கள். அதிலும் அவர்கள் தோல்வியையே சந்திப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

பொது சிவில் சட்ட விஷயத்தில் தங்களை அரசியல் சாசன பாதுகாவலர்களாக அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு அரசியல் சாசன வரிகளையே ஆதாரம் காட்டுகிறார்கள். அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சாசன பிரிவு 44-ல் உள்ள வழிகாட்டிக் கொள்கையில் கூறப்படும் “நாட்டிலுள்ள எல்லாக் குடிமக்களுக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டம் உருவாக்கிட முயல வேண்டும்” என்ற வரிகளையே சுட்டிக் காட்டுகின்றார்கள். இது ஒரு வழிகாட்டிக் கொள்கைதானே தவிர அரசியல் சாசன சட்டம் அல்ல.

இம்மாதிரியான வழிகாட்டிக் கொள்கைகளையெல்லாம் சட்டமாக்கிட ஆவல் கொண்டிருந்தால் முதலில் மதுவிலக்கு சம்மந்தமான அரசியல் சாசன வழிகாட்டிக் கொள்கையை சட்டமாக்கிட முனைந்திருக்க வேண்டும். மது என்பது அனைத்து சாராரும், அனைத்து மதத்தவரும் எதிர்க்கக்கூடிய, சமூக நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் அழித்தொழிக்க விரும்பும் ஒரு விஷயம். ஆனால் நடப்பதென்ன? இன்று பல மாநில அரசுகளே மதுக்கடைகளை திறந்து வைத்து மாபெரும் ஒழுக்க சீர்கேட்டிற்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு முழுக்க முழுக்க முஸ்லிம்களின் உள்விவகாரமான ஷரீஅத்தை மாற்றி பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டுமென்று கூப்பாடு போடுவது எவ்வளவு பெரிய விஷமத்தனம் என்பதை நாட்டு மக்கள் அனைவருமே நன்றாக உணர்ந்திட வேண்டும்.

மேலும், இந்த சங்பரிவார்களின் கூக்குரல் இந்திய அரசியல் சாசனத்திற்கே முற்றிலும் விரோதமானது என்பதைக்கூட வசதியாக மறந்து விட்டது இந்த கும்பல். இந்திய அரசியல் சாசனம் பிரிவு 25-ல், “எல்லாக் குடிமக்களும் மனசாட்சி சுதந்திரத்திற்குச் சமமான உரிமை பெற்றவர்கள். தனக்கு விருப்பமான மதத்தில் நம்பிக்கை கொண்டு, அதனை ஏற்றுக்கொண்டு அமல் செய்யவும், அதனைப் பிரச்சாரம் செய்யவும் எல்லாக் குடிமக்களுக்கும் உரிமை உண்டு.” எனக் கூறுகிறது. இதன்படி, எந்த ஒரு மதத்தினர் மீதும் யாரும் அவரவர்களுடைய மதச்சட்டங்களையோ, நடைமுறைகளையோ கைவிடும்படி எந்தவிதத்திலும் நிர்ப்பந்திக்க முடியாது. அப்படித் திணிக்கும் பட்சத்தில் அது இந்தியாவில் சிறுபான்மையினர்கள் தன் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்வதற்கான உரிமைப்புரட்சி வெடிக்கக் காரணமாகிவிடும். இந்த உண்மையை சங்பரிவார்களின் தலைமையே ஒருமுறை ஒப்புக்கொண்டதுதான் சிறப்பு.

MOTHER LAND என்ற பத்திரிக்கையில் 21/08/1972 அன்று வெளியான ஒரு செய்தியில், “ஆர்.எஸ்.எஸ் தலைவரான குரு கோல்வால்கர், 1972 ஆகஸ்ட் 20-ல் தீனதயாள் உபாத்யாயா ஆராய்ச்சிக்கழகத்தைத் துவக்கி வைத்துப் பேசியபோது,’பாரதத்தில் தேசிய ஒற்றுமையை உருவாக்கப் பொது சிவில் சட்டம்தான் கருவியாகும் என்று சொல்வது தவறு; இயற்கைக்கு விரோதமானது; விபரீத விளைவுகள் உண்டாக்கக் கூடியது.’ என்று அறிவுறுத்தி இருக்கிறார்” என்று தெரிவிக்கிறது. ஆனால், தன் தலைமையின் கருத்தையே புறக்கணித்து விட்டு இன்று பொது சிவில் சட்டம் வேண்டும் என்று ஓலமிடுகிறது சங்பரிவார் கும்பல்.

இந்நாட்டின் சிறுபான்மையினர்கள் எவ்விதத்திலும் தங்கள் மத சுதந்திரத்தை இழந்து விடக்கூடாது என்பதைக் கருத்திற்கொண்டே, அரசியல் சாசனத்தை வகுத்தளித்த சிந்தனையாளர்கள் சாசனத்தின் 25-வது பிரிவை ஏற்படுத்தி வைத்தார்கள். பொது சிவில் சட்டத்தைப் பாராளுமன்றம் அங்கீகரிக்க முயன்றால் அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களின் விருப்பத்திற்கேற்ப, அவர்களின் கலாச்சாரத்தை ஒட்டிய சட்டமாகவே அமையும். அவ்வாறாகும் பட்சத்தில் அதை பொது சிவில் சட்டம் (COMMON CIVIL CODE) என்று சொல்வதைவிட ஹிந்து சிவில் சட்டம் (HINDU CIVIL CODE) என்று அழைப்பதே பொருத்தமாயிருக்கும்.

பொது சிவில் சட்டம் என்ற வார்த்தை பாமர மக்களைக் கவர வசதியான பெயராக அமைந்து விட்டது. ஆனாலும் அவர்களது எண்ணம் ஈடேறப்போவதில்லை என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி வைப்போம்.

28 comments

  1. அடி ஆத்தி

    //* சிவில் சட்டங்களுக்கும், கிரிமினல் சட்டங்களுக்குமிடையில் மிகப்பெரும் வேறுபாடு உண்டு. கிரிமினல் விஷயங்கள் நேரடியாக நீதிமன்றங்களால் தீர்க்கப்படக்கூடிய ஒன்று. ஆனால், சிவில் விஷயங்கள் அப்படியல்ல. சிவில் விஷயங்களை நீதிமன்றத்துக்கு வெளியில் மக்கள் மன்றத்திலும் தீர்த்துக்கொள்ள முடியும். உதாரணமாக, ஒருவன் மற்றொருவனைக் கொலை செய்து விடுகிறானென்றால் அவனுடைய பிரச்சினையை எவ்விதத்திலும் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக்கொள்ள முடியாது. அதை அரசாங்கம் அனுமதிக்கவும் செய்யாது.

    ஆனால், திருமணம், தலாக், பாகப்பிரிவினை போன்ற சிவில் விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் அதை நீதிமன்றத்துக்கு வெளியிலும் தீர்த்துக்கொள்ள முடியும். இதை அரசாங்கம் கட்டுப்படுத்த முடியாது. *//

    பொது சிவில் சட்டம் பற்றிய மிகத் தெளிவான விளக்கம்

    //* இவர்களின் இந்த மனப்பான்மையைச் சற்று சிந்தித்துப்பார்த்தால், அடுத்த வீட்டுக்காரன் மீது ஆளுமை செலுத்தத் துடிக்கும் அதிகாரப் போக்குதான் இங்கு வெளிப்படுகிறது. எனது அடுத்த வீட்டுக்காரர் ஐயங்கார் என்று தெரிந்தும் அவரை, நான் சாப்பிடுவதைப் போல் மீனையும் இறைச்சியையும் சாப்பிடு என்றோ அல்லது நாமிருவரும் பொதுவாக இன்றிலிருந்து முட்டை சாப்பிடுவோம் என்றோ கூறுவது அடுத்த வீட்டுக்காரரை நமக்கு எதிராகத் தூண்டுமே தவிர இணக்கமாக வாழ்வதற்குரிய வழி அதுவாக இருக்க முடியாது. *//

    பாமர மக்களுக்கும் விளங்கும் வகையில் தெளிவான விளக்கம்

    //* மேலும், பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல் போன்ற சமூக விரோத நடவடிக்கைகளுக்கு அரசியல் சாசனத்தில் அவற்றைத் தடுத்து சட்டமியற்றப்பட்டும் கூட மறைமுகமாக வக்காலத்து வாங்கும் சங்பரிவார்கள் பொது சிவில் சட்ட விஷயத்தில் மட்டும் தங்களை அரசியல் சாசன பாதுகாவலர்களாக காட்டிக் கொள்ள முனைந்து நிற்கிறார்கள். *//

    ஊரார் வீட்டுப் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும் போல…

    //* ‘பாரதத்தில் தேசிய ஒற்றுமையை உருவாக்கப் பொது சிவில் சட்டம்தான் கருவியாகும் என்று சொல்வது தவறு; இயற்கைக்கு விரோதமானது; விபரீத விளைவுகள் உண்டாக்கக் கூடியது.’ என்று அறிவுறுத்தி இருக்கிறார்” *//

    பரிணாம வளர்ச்சியில் நம்பிக்கை உள்ளவர்கள் தானே இவர்கள், அவர்களின் (குரங்கு) தலைவரின் கொள்கையின் பரிணாம வளர்ச்சித்தான் இப்பொழுது பொது சிவில் சட்டம்.

  2. பொது சிவில் சட்டம் குறித்த அருமையான அலசல்.
    திருமணம், தலாக், பாகப்பிரிவினை, ஜீவனாம்சம் ஆகிய நான்கே நான்கு அம்சங்களில் தான் இந்திய முஸ்லிம்கள் தம் மத சட்டப்படி நடக்க அனுமதியுண்டு!
    இவ்வாறான அனுமதி பிற மதப் பிரிவினருக்கும் ஏதேனும் நான்கு அம்சங்களில் அளிக்கப்பட்டேஉள்ளன என்பதும் உண்மை.
    இந்த உண்மைகளை வெளிப்படுத்தாமல் முஸ்லிம்களுக்கு மட்டுமே சலுகைகள் உள்ளதாக ஒரு பொய்ப்பிரச்சாரம் அரவிந்தன் நீலகண்டன்களாலும், நேச குமார்களாலும் காலங்காலமாக பரப்பப்பட்டு வருகிறது.
    இதில் கவனிக்க வேண்டிய அம்சம் இந்த இரு தரப்புக்கும் நோக்கம் ஒன்றே: ‘அது இஸ்லாமை களங்கப்படுத்த வேண்டும். ஒருவருக்கு ‘இந்துத்துவா முகம். மற்றவருடையதோ: முற்போக்கு முகமூடி

  3. I read the article. I don’t agree your Karuthu. If we live in democratic country where all should be treated as equal in front of the law then there should be only one reference to the citizens of India as “People of this country”. Be it Marriage law or penal law, it should be applicable same for everybody. Often we Indian people get confused with Religious freedom. If the same Hindu, Christian or Muslim born in US abides to the marriage law and still excersie their religious freedom that is what we should get and I feel that can be acheived with one civil code. We lack in this regretably (please read carefully – I am not blaming us, I simply want to get the good things from wherever possible and I know we have a lot of good things which West envy)

  4. அய்யய்யோ பெலிக்ஸ்,

    இங்கயும் அமேரிக்காவா? ஏன்யா, எதுக்கெடுத்தாலும் அமேரிக்காவை பாலோ பண்ணித்தான் ஆகனுமா? சொந்த சரக்க பயன்படுத்துங்கய்யா?

  5. ஆஹா, ஜன்னல் கதவு, காத்து அது இதுன்னு எல்லாம் பீலா விடும் நீங்கள் உலகம் முழுதும் உள்ள இஸ்லாமிய நாடுகளில் எதற்காய்யா மாற்று மத்தத்தினரை சுதந்திரமாக அவர்கள் இஷ்டத்திற்கு செயல் பட விட மாட்டேன் என்கீறீர்கள்? அது வேறு, இது வேறு என்று ஜல்லியடிக்க வேன்ணாம். நேர்மையான விளக்கம் தரவும். அடுத்தவங்க விஷயத்திலே இவங்க தலையிட மாட்டாங்களாம். உங்க ஆள் ஒருத்தரு அங்கே ஒரு பதிவிலே அநாவசியமா அடுத்த மத நம்பிக்கைகளில் மூக்கை நுழைத்து புண்ணாக்கி கொண்டிருக்கிறார். அவரை எதிர்த்து யாராச்சும் ஒரு பின்னூட்டமாவது கொடுத்தீங்களா?! பேச வந்திட்டீங்க கும்பலா.

  6. மதங்கள் அனைத்தும் பிற்போக்கானவை.

    இவை மனித வளர்ச்சிக்கும், அறிவுப் பெருக்கத்துக்கும் எதிரானவை. ஆன்மீகத் தேவையுள்ள தனிமனிதர்களுக்கு இவை நன்மையளிப்பனவாக இருக்கலாம். ஆனால் மக்கள் கூட்டமாகச் சேர்ந்து வாழும் சமூகங்களுக்கோ, நாடுகளுக்கோ அவை உதவுவதில்லை. எனவே மதமும் அரசும் பிரிந்திருப்பது நல்லது. பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் கூடிவாழும் இந்தியா போன்ற நாடுகளில் இந்தப் பிரிவினை இன்னும் கூடுதல் கவனத்துடன் பின்பற்றப்படவேண்டியது அவசியமாகும். பொதுச் சிவில் சட்டத்தைக் கொண்டுவருவது இந்தப் பிரிவினையைப் பலப்படுத்துவதற்கு எடுத்துவைக்கும் முதல் அடியாகும். தனி மனிதரின் வழிபாட்டுக்கு மட்டுமே மதம், மற்றவற்றுக்கு அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

    தனிமனிதரே ஒரு நாட்டின் அடிப்படை அலகு. குடும்பமோ, மதமோ, இனமோ அல்ல. தனிமனிதருக்கும் நாட்டுக்கும் இடையில்தான் கடமைகளும் உரிமைகளும் பற்றிய ஒப்பந்தம் உள்ளது. இந்தக் கடமைகளும் உரிமைகளும் இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவானவை; சமமானவை. முஸ்லீம்களுக்கும் மற்றவர்களுக்கும் இவற்றில் வேறுபாடு காட்டுவது தவறு.

    ஒரு முஸ்லீம் பெண் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்பெண்ணின் கணவர் இரண்டாவது மூன்றாவது திருமணம் செய்துகொள்கிறார். இதில் அப்பெண்ணுக்கு உடன்பாடு இல்லை. அவர் யாரிடம் முறையிடுவது? இந்திய அரசு “நீ ஷரியா சட்டத்துக்குட்பட்டே இயங்கமுடியும்” என்று கைவிரித்தால், ஒரு நாட்டுக் குடிமகளைக் கைவிடும் ஒரு குற்றத்தை இந்த நாடு இழைத்ததாக ஆகிறதே! சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது என்ன ஆயிற்று? ஷரியா சட்டத்துக்கும் கட்டப்பஞ்சாயத்துக்கும் வேறுபாடு இல்லை. இந்துக்களின் கட்டப்பஞ்சாயத்துக்குத் தடைவிதிக்கும் அரசு முஸ்லீம்களின் கட்டப்பஞ்சாயத்திடம் அப்பெண்ணைத் தள்ளிவிடுவது எந்த வகையில் நீதி?

    குழந்தை மணம், சதி, தீண்டாமை போன்ற வழக்கங்கள் இந்துக்களின் பாரம்பரியங்கள் என்பதால் அவற்றைத் தடை செய்வதற்கு இந்துச் சமயவாதிகளின் ஒப்புதலை எதிர்பார்த்திருந்தால் அது சரியாகாது என்பது போலவே பலதார மணம், தலாக், மணவிலக்கான பெண்களுக்கான பேணற்தொகை போன்ற விடயங்களில் இஸ்லாமிய சமயக் குருக்களின் ஆலோசனைகளை வேண்டுவதும் கண்டிப்பாகச் சரியாகாது. தவறுகள் எங்கிருந்தாலும் களைய வேண்டியது அரசின் கடமை. பொதுச்சிவில் சட்டம் கொண்டுவராதவரை இந்திய அரசு கடமை தவறுகிறது என்றே பொருளாகும்.

    ஒரு சில நாடுகளில் ஷரியா சட்டங்கள் குடிமக்களின் விருப்பத்திற்கேற்ப விடப்பட்டுள்ளன. அவை கட்டாயமல்ல. ஷரியா சட்டங்களை அறவே விரும்பாத முஸ்லிம்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட வழக்கின் ஷரியா தீர்ப்பை ஏற்காத முஸ்லிம்கள் பொதுச்சிவில் சட்டத்தை நாடுவதற்கு அந்நாடுகளில் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகூட இந்தியாவில் இல்லை.

    ***

    பொதுச் சிவில் சட்டத்தால் சிறுபான்மையினர் உரிமைகள் (அதாவது முஸ்லிம்களின் உரிமைகள்) பறிக்கப்படும் என்று இடதுசாரிகளும் முற்போக்குச் சிந்தனை உள்ளவர்களும் கூட கருதுவது புதிராக உள்ளது. பறிபோகும் உரிமைகள் எவை என்று ஒரு கணம் எண்ணிப் பார்த்தால் ஒன்றுமில்லை என்பது புரியும். இந்துப் பாரம்பரியங்களை ஏற்காதவர்களாகவும் ஏற்காதவர்களுக்கு ஆதரவளிப்பவர்களாகவும் இருக்கும் முற்போக்குவாதிகள் முஸ்லீம் பாரம்பரியங்களை ஏற்க விரும்பாதவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் பிற்போக்குச் சமயக்குரவர்களுக்கு ஆதரவான ஒரு நிலையை மேற்கொள்வது வியப்பையே ஏற்படுத்துகிறது.

    ***

    மதத்துக்கும் அரசுக்கும் இடையில் உள்ள பிரிவினை இந்தியாவில் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. நாட்டின் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் அனைவரும் அரசுச் செலவில் பயணம் செய்து கோவில்களுக்குப் போவதும், சாமியாரின் காலைத் தலைகளில் தாங்குவதும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானவை. அரசு அலுவலகங்களில் சமய விழாக்களைக் கொண்டாடுவதும் சட்டப்படி தவறு.

    எந்தச் சாதியைச் சேர்ந்தவரும் இந்துக் கோயில்களில் அர்ச்சகராகலாம் என்பது பொதுச்சிவில் சட்டத்தால் மட்டுமே சாத்தியமாகும்.

    ***

    பிரெஞ்சு அரசைப் போல இந்திய அரசும் அரசுப் பள்ளிகளிலும் அரசின் நிதியுதவிபெறும் தனியார் பள்ளிகளிலும் சமயச் சின்னங்கள், முக்காடு போன்றவற்றைத் தடை செய்ய வேண்டும். சீக்கியர்களுக்கும் இதில் விலக்கு கூடாது.

    கிறித்துவ மதப் போதனைகளில் ஈடுபடும் பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும். நிதியுதவி வேண்டுமானால் சமயப்போதனைகள் நிறுத்தப்பட வேண்டும் என்னும் கட்டளையைப் பிறப்பிக்க வேண்டும்.

  7. “…சிவில் விஷயங்களை நீதிமன்றத்துக்கு வெளியில் மக்கள் மன்றத்திலும் தீர்த்துக்கொள்ள முடியும். உதாரணமாக, ஒருவன் மற்றொருவனைக் கொலை செய்து விடுகிறானென்றால் அவனுடைய பிரச்சினையை எவ்விதத்திலும் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக்கொள்ள முடியாது. அதை அரசாங்கம் அனுமதிக்கவும் செய்யாது”

    அரசாங்கம், நீதி மன்றங்கள் பற்றியெல்லாம் ஏன் கவலைப்படுகிறீர்கள், உச்ச நீதிமன்றம்தான் பொது சிவில் சட்டத்தின் அவசியத்தையும் அடிக்கடி வலியுறுத்துகிறது, கண்டு கொண்டோமா என்ன? மார்க்க நெறி மற்றும் ஷரியா பாதுகாக்கப்படுவது என்பவை குறித்துத்தான் கவலைப்பட வேண்டும். பொது சிவில் சட்டத்தை விட்டு விடுவோம், கிரிமினல் குற்றங்களுக்கும் ஷரியா சட்டம் முஸ்லீம் நாடுகளில் நடைமுறையில் உள்ளது போல நம் நாட்டிலும் கொண்டு வரவேண்டும் எனக்குரல் கொடுக்க வேண்டும்.

    நூற்றாண்டுகள் கடந்த பின்னும் ஒரு மதத்தில் உள்ளவர்க்கு பழைய மத அடிப்படை சிவில் சட்டங்கள் பொருந்தும் என்றால், அதே விதத்தில் மத அடிப்படை கிரிமினல் சட்டங்களும் அம்மதம் சார்ந்தோருக்கு இன்றும் நன்றாகவே பொருந்தும்.

    கிரிமினல் சட்டங்களில் ஷரியாவை மறுப்பது மார்க்க நீதியின் மாறாத்தன்மையை மறுப்பதற்கு ஒப்பல்லவா? இதனை அனுமதிக்கலாமா? ஷரியா அடிப்படையிலான கிரிமினல் சட்டம் மார்க்கப்பற்றாளர்களுக்கு அவசியமானதொன்று.

    சிவில், கிரிமினல் என்ற இரு கண்களில் ஒரு கண்ணுக்கு மட்டும் வெண்ணெயும் மறுகண்ணுக்கு சுண்ணாம்பையும் வைப்பது ஏன்? கொண்டு வாருங்கள் இஸ்லாமியர்களுக்கு ஷரிய அடிப்படை தனிக்கிரிமினல் சட்டம்.

  8. // நூற்றாண்டுகள் கடந்த பின்னும் ஒரு மதத்தில் உள்ளவர்க்கு பழைய மத அடிப்படை சிவில் சட்டங்கள் பொருந்தும் என்றால், அதே விதத்தில் மத அடிப்படை கிரிமினல் சட்டங்களும் அம்மதம் சார்ந்தோருக்கு இன்றும் நன்றாகவே பொருந்தும். //

    அய்யா அருணகிரி,

    கிரிமினல் சட்டங்களிலும் ஷரீயத் படி நாம் தீர்ப்புப் பெறத் தயார். நான் திருடினாலும் என் வீட்டில் ஒரு ஹிந்து திருடினாலும் கை வெட்டப்படுவதில் எங்களுக்கு உடன்பாடே. அதுபோல் கொலைக் குற்றத்துக்கும் இன்ன பிற கிரிமினல் நடவடிக்கைகளுக்கும், நாம் பாதிக்கப் பட்டால் ஷரீயத் படி நமக்குத் தீர்ப்புக் கிடைத்தால் சரி.

  9. நல்லது, இனி இதற்காக தெருவில் இறங்கி போராடவில்லை என்றாலும் குறைந்தது “இஸ்லாமியருக்கு ஷரியா அடிப்படையில் கிரிமினல் சட்டம் அவசியம்” என தனிப்பதிவு போட்டு அறைகூவல் விடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். லோக்கல் கட்டப்பஞ்சாயத்து முல்லாக்களின் காதிலும் ஒரு வார்த்தை போட்டு விடுங்கள். மற்றபடி இஸ்லாமிய நட்புக்கட்சிகளான இடதுசாரி திராவிட முஸ்லீம் லீக் காங்கிரஸ் (கமாவை விட்டது தற்செயல் அல்ல) போன்றவற்றின் CMPஇல் இதனையும் ஒரு அங்கமாக்க உங்களைப்போன்ற மார்க்க அறிஞர்கள் இனி குரல் கொடுக்க வேண்டும்.

  10. PRABHU RAJADURAI

    பொது சிவில் சட்டம் குறித்த எனது பதிவு. இதில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயனளிக்கலாம் என்பதால்
    http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_09.html

  11. கிரிமினல் சட்டங்களிலும் ஷரீயத் படி நாம் தீர்ப்புப் பெறத் தயார். நான் திருடினாலும் என் வீட்டில் ஒரு ஹிந்து திருடினாலும் கை வெட்டப்படுவதில் எங்களுக்கு உடன்பாடே. அதுபோல் கொலைக் குற்றத்துக்கும் இன்ன பிற கிரிமினல் நடவடிக்கைகளுக்கும், நாம் பாதிக்கப் பட்டால் ஷரீயத் படி நமக்குத் தீர்ப்புக் கிடைத்தால் சரி.

    It will be barbaric.Should
    we go back to eye for eye
    and tooth for tooth era or
    should be we think of more
    civilized criminal justice
    system.You can cut off a
    person’s hand but you cant
    give him/her than hand back.
    Only barbarians will justify
    such punishments (killing
    by stoning) in the name
    of religion.

  12. ஜயராமன்

    பொது சிவில் சட்டம் அரசியலமைப்பில் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

    இதை அமல் படுத்தச்செய்வது அரசியல் அமைப்பால் அரசாங்கத்துக்கு ஏற்படுத்தப்பட்ட கடைமை.

    இதை ஏதோ சங்க பரிவார்கள் மட்டும் பாலிஸியாக ஏற்றுக்கொண்டது போல் தாங்கள் கூப்பாடு போடுவது நல்ல வேடிக்கை.

    இரட்டை வேடம் போடுவது சங்க அமைப்புகள் அல்ல. அரசியல் அமைப்பை நிலைநிறுத்துவேன் என்று உறுதி எடுத்து இப்பொழுது இஸ்லாமிய பிற்போக்கு வாதிகளுக்கு காவடி தூக்கும் பல அரசியல் அமைப்புகளும் முஸ்லிம் லீக் அமைப்பும் தான்.

    இஸ்லாமில் உள்ள பல சிவில் பழக்கங்கள் மிக பிற்போக்கானவை. இவை கலையப்பட வேண்டும். சமுதாயத்தில் முற்போக்கு சிந்தனை வளர இஸ்லாமின் சட்டங்கள் மிகப்பெரிய இடைஞ்சல். இந்து மதத்திலும் இது போன்ற அநியாயங்கள் ஏகம் இருந்தன. ஆனால், இந்து சமுதாயம் அவற்றை களைந்து முன்னேறி வருகிறது.

    தங்கள் வழியில் இஸ்லாமியர்கள் சிந்தித்தால் இஸ்லாமும், அந்த சமுதாயமும் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் போடப்படுவார்கள். இது சரித்திரத்தின் கட்டாயம்.

    நன்றி

  13. அன்பின் அருணகிரி ஐயா,
    நீங்கள் தெரிந்துக்கொள்வதற்காகத் தான் கேட்கிறீர்கள் என்று (தவறாக) நினைத்திருந்தேன். இடைநிறுத்தம் இல்லாமல் எழுதிப் புரியவைத்து விட்டீர்கள்.

    இருந்தாலும், உங்கள் கேள்வியை பின் தொடர்பவர்களுக்காக: சிவில் சட்டங்களில் ஒரு இனத்தார் தங்களுக்குள் தான் செயற்படுத்திக்கொள்கிறார்கள். குற்றவியல் சட்டங்களிலோ, பாதிப்பும் தாக்கமும் ஒரு இனத்துக்குள் மட்டும் நடைபெறுவது சாத்தியமல்ல. எதற்கும் பிரபு ராஜ துரை அவர்களின் சுட்டியை சொடுக்கி ஒரு முறை படித்துப்பாருங்கள். ஒருக்கால், புரிய வரலாம்.

    (இஸ்லாமிய சட்டங்கள் என்று குறிப்பிட விரும்பாமல்) ‘அரபு நாட்டு சட்டங்களை அமல் படுத்த வேண்டும்’ என்று CMP (Center Minded Period)ல் நீங்கள் குறிப்பிட்டு சொல்லாத பி.ஜே.பியினர் கூட அவ்வப்போது குரல் கொடுத்ததுண்டே.

    இன்னொரு செய்தி: நான் ‘மார்க்க அறிஞன்’ அல்லன்.

    பிரபு ராஜ துரை அவர்களே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  14. இறை நேசன்

    //கிரிமினல் குற்றங்களுக்கும் ஷரியா சட்டம் முஸ்லீம் நாடுகளில் நடைமுறையில் உள்ளது போல நம் நாட்டிலும் கொண்டு வரவேண்டும் எனக்குரல் கொடுக்க வேண்டும்.//

    ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்கிறேன்,

    பிஞ்சு குழந்தை என்றும் பாராமல் கற்பழிக்கும் காம கொடூரர்களையும், ஆன்மீகத்தின் பெயரால் காமி ஆகும் மன்மத சாமியார்களையும், புனிதமான மருத்துவ தொழிலை வேசித் தொழிலாக மாற்றும் பிரகாச மருத்துவர்களையும், தங்களது வாழ்க்கையையே பொது நலத்திற்கு அர்ப்பணித்து சேவை செய்து கொண்டிருக்கும் கன்னியாஸ்திரிகளை பள்ளியேறி மானபங்கபடுத்தும் பெண் வயிற்றில் பிறக்காத மிருகங்களையும் நடுரோட்டில் பொது மக்கள் முன் கல்லெறிந்து கொல்லும் காட்சியை.

    கர்ப்பத்தில் இருக்கும் சிசு என்றும் பாராமல் வயிற்றைக் கிழித்து எடுத்து தீயிட்டு கொழுத்தி அகங்கரிக்கும் காட்டுமிராண்டிகளையும், ஒரு சமூகத்தை அழிப்பதற்காக தங்களுடைய மத/இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று கூட பாராமல், அவர்கள் வந்த இரயில் பெட்டியை தீயிட்டுக் கொழுத்தி கூட்டக் கொலை செய்து விட்டு அதனை சமயோஜிதமாக மற்றவர்கள் மேல் திருப்பி அச்சமூகத்தையே கருவறுக்கும் இரத்தக் காட்டேறிகளையும், முடிந்த மட்டும் நாட்டை அந்நிய சக்திகளுக்கு காட்டிக்கொடுத்து தங்களது கையிருப்பை வெளிநாட்டு வங்கிகளில் சேர்த்து வைக்கும் தேசவிரோத கும்பல்களையும், அப்பாவி மக்களை அநியாயமாக கருவறுக்கும் அனைத்து தீவிர/பயங்கரவாதிகளையும் மக்கள் முன்னிலையில் முண்டமாக்கப்படும் காட்சியை.

    ஹவாலா முதல் சவப்பெட்டி ஊழல் வரை எல்லா வழிகளிலும் மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளையடித்து மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்து நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் சவாலாக விளங்கும் எல்லா ஊழல் அரசியல்வாதிகளையும், வாழ்வதற்கு தேவையான வசதியிருந்தும் மற்றவர்களின் உழைப்பைத் திருடும் திருட்டுக் கூட்டங்களையும் கையில்லா காலில்லா முண்டங்களாக காணப்படும் காட்சியை.

    இவை அனைத்தும் நாட்டில் நடந்தாலே, பெண்கள் நிம்மதியாக காந்தி கண்ட கனவு போல் இரவு 12 மணிக்கும் தைரியமாக வெளியில் சென்று விட்டு கற்போடு வீடு வர முடியும் எனில்,

    மக்கள் சந்தோஷமாக ஒற்றுமையோடு இன வேற்று வெறுப்பு இன்றி வாழ முடியும் எனில்,

    பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் அனைத்தும் வெளியாகி நாடு பஞ்சம் பசி இன்றி உலக நாடுகளுக்கு நிகராக வளர்ச்சிப் பாதையில் பீடு நடை போட முடியும் எனில்,

    இன்ன பிற ஜாதி, தீண்டாமை, கலவரம், கொலை, கொள்ளை போன்ற அட்டூழியங்கள் குறைந்து நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியும் எனில்,

    அப்பாவி பொது மக்கள் தைரியமாக தீவிர/பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இன்றி சுபிட்சமாக நடமாட முடியுமெனில்

    வரட்டும் இந்தியாவில் இஸ்லாமிய முறையிலான கிரிமினல் சட்ட திருத்தங்கள்.

    வாருங்கள் அதற்காக இணைந்து குரல் கொடுப்போம்.

    அன்புடன்
    இறை நேசன்

  15. There are cities in Europe which are safe for all.They have no sharia.In countries where muslims
    are a majority there is so much
    violence.So sharia is no solution.
    Islamic terrorists like Hamas and
    Talibans want Sharia.Irainesan who is opposed to girls mingling with
    boys wants sharia so that he can
    punish those women in the islamic
    way. In other words he wants barbaric punishments like cutting
    off hands, kiiling by stoning,
    giving 100 lashes as punishment
    etc to be decided by all male
    judiciary.So in the name of
    islam he wants to suppress women
    and resort to barbaraic pratices.

  16. srinidhi அவர்களே…
    சிவில் சட்டம் குறித்த இப்பதிவு வெற்றிகரமாக கிரிமினல் சட்டங்கள் குறித்து பேச திசைத்திருப்பப்படுகிறது. பாதகமில்லை.

    இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களைக் குறித்த அறியாமையும் அரைகுறைப் புரிதலுமே அதன் மீதான விமர்சனத்தில் அதிகப் பங்கு வகிக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.

    புரிதலுக்காக சில விளக்கங்கள்:
    1). கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்பதை ஒரு தனிமனிதன் (பாதிக்கப்பட்டவனாயிருந்தாலும்) கையிலெடுக்க முடியாது.
    2). பாதிக்கப்பட்டவன் மன்னித்துவிட்டால் அரசாங்கமும் தலையிட முடியாது.
    3). குற்றம் புரிந்தவனைத் தண்டிப்பதற்கு முன் குற்ற சூழலை, பின்னணியை முழுதுமாக இஸ்லாமிய சட்டம் கணக்கிலெடுக்கும்.

    4). ஒரு முறை கொடுக்கும் தண்டனை ஒராயிரம் குற்றங்களைத் தடுக்கவல்லது.

    தங்களின் ‘கமெண்ட்டு’களை தயவு செய்து தமிழிலேயெ அனுப்புங்கள். ஏன்னா, நமக்கு அவ்வளவா ஆங்கிலம் வரா…….து.

  17. ஜயராமன் வாங்க!
    பொதுசிவில் சட்டம் நமது அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடமை அல்ல; வழிகாட்டும் நெறிமுறை தான்.

    ‘சூத்திரன் செய்தால் அறு; தன் கோத்திரன் செய்தால் பொறு’ என்கிற பாகுபாடு இல்லாத காரணத்தாலேயே இஸ்லாமிய சட்டங்களின் மீது பொதுவாக இங்கு ‘ஆத்திரம்’ என்பது உணரப்பட்ட உண்மையே. ஆகவே, உங்கள் வயிற்றெரிச்சல் எனக்கு வியப்பு ஏற்படுத்த போதுமானதில்லை.

    BTW, சுவனப்பிரியன் என்பவரது ‘இந்து மதத்திலும் ஒற்றை கடவுள்கொள்கை தான்’ பதிவில் உங்களைப்பார்த்த நினைவு. முஹம்மது நபியை ஹிந்து மதமும் இறைத்தூதராக ஏற்றுக்கொள்கிறது என்று சொல்லியிருந்தீர்கள். நீங்கள் தானே?

  18. ஜயராமன்

    அபுஆதில் அவர்களே,

    தங்கள் பதிலில் தங்கள் இயலாமையும் தங்களின் காழ்ப்புணர்ச்சியுமே வெளிப்படுகின்றன.

    ///’சூத்திரன் செய்தால் அறு; தன் கோத்திரன் செய்தால் பொறு’ என்கிற பாகுபாடு இல்லாத காரணத்தாலேயே இஸ்லாமிய சட்டங்களின் மீது பொதுவாக இங்கு ‘ஆத்திரம்’ என்பது உணரப்பட்ட உண்மையே. ////

    இது அபத்தம். இஸ்லாமிய சட்டங்களின் மீது எல்லா மாடர்ன் சிந்தனையாளர்களுக்கும் அருவருப்பு வருவது இயல்பு. மேலைநாடுகளில் இஸ்லாமின் எதிர் குரலில் பல இதனால் கிளம்பியவை. அங்கு என்ன சூத்திர்ர்களா இருக்கிறார்கள்.

    சூத்திரன் கோத்திரன் என்று தாங்கள் சொல்வது எதன் அடிப்படையில்? தாங்கள் சம்பந்தமில்லாமல் சாதி பேசுவது தங்கள் இயலாமைதான். என்ன பரிதாபம்.

    நான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே என் முன் பதிவில். இந்து சமயத்தின் குறைகள் இப்போது களையப்பட வேண்டியவை என்று எல்லோரும் ஏற்றவை.

    மேலும், இந்து சமய குறைகள் இந்துக்களின் மூல நூலான வேதங்களில் சொல்லப்பட்டவை அல்ல. வேதத்தில் சாதிகளில் ஏற்றதாழ்வு சொல்லியோ அல்லது வேறு விஷயங்களிலோ ஒரு குறையை கூட காட்ட முடியாது.

    மாறாக, இஸ்லாத்தின் குறைகள் குரானையே ஆதாரமாக கொண்டவை. அதற்கு எத்தனை உதாரணம் வேண்டும்.

    இஸ்லாத்தை குறை சொல்பவர்களுக்கு எல்லாம் சாதி வெறியன் என்று பட்டம் கட்டி தப்பிக்க முடியாது.

    //ஆகவே, உங்கள் வயிற்றெரிச்சல் எனக்கு ….//

    என்ன வயிற்றெரிச்சல்! என் எந்த வரி வார்த்தை தங்களுக்கு ‘வயிற்றெரிச்சல்’ ஆக தோன்றுகிறது. எதை வேண்டுமானாலும் எழுதுவதா? தங்களின் மீதுள்ள மரியாதையை இழக்காதீர்கள். தனிப்பட்ட முறையில் தங்களிடம் எனக்கு வேண்டியதும், வேண்டாததும் ஒன்றுமில்லை.

    இஸ்லாமிய குறைகளை களையவேண்டும் என்று சொல்பவன் எப்படி வயிற்றெரிச்சல் பட முடியும்? வயிற்றெரிச்சல் பொதுவாக பொறாமையில் அல்லவா ஏற்படும்? எனக்கு இஸ்லாமிய கோட்பாடுகளில் குறை அல்லவா படுகிறது.

    முகம்மதுவை இந்து இறை தூதராக ஆக்கப்பட்டிருப்பார் என்பதில் எனக்கு எள்ளவும் சந்தேகமில்லை.

    முகம்மதுவின் பல கோட்பாடுகள் இந்து கோட்பாடுகளின் ஒன்றியிருக்கின்றன. இந்துமதம் என்ற கடலில் பல ஒடங்கள் பயனிக்கலாம். சைவம், வைணவம், இறைவன் இல்லான் நிர்வாணமே எல்லாம் என்று சொல்லும் சூன்ய வாதம் (புத்தர் பிரலபடுத்தியது). கர்மாதான் கடவுள் என்று சொல்லும் மீமாம்சா நியாயம், இறைவனும் நானும் ஒன்று என்று சொல்லும் அத்வைதம், இறைவனுக்கு உருவம் பெயர் இல்லை என்று (இஸ்லாம்) போல சொல்லும் நிர்குண வாதம் எல்லாமே இந்து மத்த்தில் அடங்கியவை.

    அதில் முகம்மது சொன்னது ஒன்றும் புதிய விஷயமேயில்லை.

    பிஸ்மில்லாஹிர்ரஹுமானுர்ரஹிம் என்பது விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களில் ஐந்தாவது செய்யுளில் இதே மூன்று பெயர்களாக நேரிடையாக மொழிபெயர்க்கிறது.

    நன்றி

  19. புதுச்சுவடி

    // நூற்றாண்டுகள் கடந்த பின்னும் ஒரு மதத்தில் உள்ளவர்க்கு பழைய மத அடிப்படை சிவில் சட்டங்கள் பொருந்தும் என்றால், அதே விதத்தில் மத அடிப்படை கிரிமினல் சட்டங்களும் அம்மதம் சார்ந்தோருக்கு இன்றும் நன்றாகவே பொருந்தும். //
    என்ற அருணகிரியின் வினாவுக்கு நாம் அளித்த விடையில் ஸ்ரீநிதிக்கு என்ன குழப்பம். தனியார் சிவில் சட்டம் வேண்டும்போது தனியார் கிரிமினல் சட்டங்களிலும் எமக்கு உடன்பாடுதான் என்பது எப்படி It will be barbaric.ஆகும்?

    நாகரீகச் சட்டங்களால் திருட்டை ஒழிக்க முடிந்துள்ளதா? எழுபது முறை திருடியவர் மீண்டும் திருட்டுக் குற்றத்துக்காகக் கைது எனப் பாமரர்கள் படிக்கும் தினத் தந்தி, மாலை முரசு இதழ்கள் செய்தி வெளியிடுவதைப் பார்த்துள்ளீர்களா?

  20. //இஸ்லாமிய சட்டங்களின் மீது எல்லா மாடர்ன் சிந்தனையாளர்களுக்கும் அருவருப்பு வருவது இயல்பு. மேலைநாடுகளில் இஸ்லாமின் எதிர் குரலில் பல இதனால் கிளம்பியவை. அங்கு என்ன சூத்திர்ர்களா இருக்கிறார்கள்.//

    அய்யா ஜயராமன்,
    மாடர்ன் என்று எதை; யாரைச் சொல்கிறீர்கள்?
    நிஜமான சிந்தனையாளர்கள் மாரீஸ் புகைலிலிருந்து கேட் ஸ்டீவன்சன்; மைக்கேல் ஹார்ட்; சமீப கமலா வரை இஸ்லாத்தை நோக்கித்தான், குர்ஆனை நோக்கித்தான் வந்துக்கொண்டிருக்கிறார்கள். சிந்தனையாளரிடம் செல்லுபடியாவது இஸ்லாம் தான்.

    ஆனால், ஒரு பெண் எந்த ஆணின் விந்துவையும் ஏற்றுக்கொள்ளலாம் என்கிற மாடர்ன் சிந்தனையாளர்கள் இஸ்லாத்தை அருவெறுப்பு கொண்டால் அது ஏன் என்பது எனக்கும், உங்கள் மனசாட்சிக்கும் தெரியும்.

    //அங்கு என்ன சூத்திர்ர்களா இருக்கிறார்கள்.//
    இருக்கிறார்கள். நிறத்தின் அடிப்படையில். மால்கம் X படித்திருக்கிறீர்களா?

    //என்ன வயிற்றெரிச்சல்! என் எந்த வரி வார்த்தை தங்களுக்கு ‘வயிற்றெரிச்சல்’ ஆக தோன்றுகிறது. //
    புண்படுத்தியிருந்தால் மன்னிக்க.

    உங்களைச் சொன்னதற்கே தாங்கமுடியவில்லை. ஆனால் சர்வசாதாரணமாக, இஸ்லாம் குப்பை கூடை என்றெல்லாம் சொன்னீர்களே.!

    //எனக்கு இஸ்லாமிய கோட்பாடுகளில் குறை அல்லவா படுகிறது.//
    மேலும் ஏற்கனவே,
    //இஸ்லாமில் உள்ள பல சிவில் பழக்கங்கள் மிக பிற்போக்கானவை. இவை கலையப்பட வேண்டும்.// என்று சொல்லியிருந்தீர்கள். பொத்தாம் பொதுவாகச்சொல்லாமல் குறிப்பிட்டு சொல்லி வாருங்கள். விவாதிக்கலாம்.

    //முகம்மது சொன்னது ஒன்றும் புதிய விஷயமேயில்லை//. நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். முஹம்மது நபி(ஸல்)க்கு முன் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இறைதூதர்கள் வந்திருக்கிறார்கள்.

    //இந்து சமய குறைகள் இந்துக்களின் மூல நூலான வேதங்களில் சொல்லப்பட்டவை அல்ல. வேதத்தில் சாதிகளில் ஏற்றதாழ்வு சொல்லியோ அல்லது வேறு விஷயங்களிலோ ஒரு குறையை கூட காட்ட முடியாது.//

    ஒரு முறையாவது தங்கமணியின் ‘வேதத்தில் சாதி இருக்கிறதா?’ பதிவை படித்துவிட்டு வாருங்கள். பிறகு பேசலாம்.

    //இந்துமதம் என்ற கடலில் பல ஒடங்கள் பயனிக்கலாம்.//

    Agnostic ஆக இருந்த புத்தனையும் உள்ளடக்கிவிட்டீர்கள்.

    But, ஓரிறைக்கொள்கையை ஓட்டைகளில்லாமல் 100 சதம் ஏற்காமல், குர் ஆனை முழுதுமாக ஏற்காமல் முஹம்மது (ஸல்) அவர்கள் புதுப்பித்த கொள்கையை உள்ளடக்க முடியாது என்பதை உணருங்கள்.

  21. பொது சிவில் சட்டம் தேவையான ஒன்றுதான்.

  22. சகோதரர் நாகு, நல்வரவு.
    (பல கலாச்சாரத்தார் நிரம்பிய இந்தியாவில்) பொது சிவில் சட்டம் தேவை என்றால் எப்படி? ஏன்? சொல்ல முடியுமா?

  23. பலமதம், கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியாவில், பொது சிவில் சட்டம் தேவைதான். ஒருசிநேரங்களில் சிலமதச்சட்டங்களில் தனிமனித உரிமை பறிக்கப்படுகிறது. குறிப்பாக பெண்களின் உரிமை. உதாரணமாக சிலமதச்சட்டங்களில் ஆண்களின் பலதாரமணம் ஒப்புக்கொள்ளப்படுகிறது. அப்படியெனில் பெண்களின் நிலைமை? அடிப்படையில் இந்தியா இந்துமதத்தை அடிப்படையாக கொண்ட நாடு. இருந்தாலும், இந்துக்களுக்கு என்று தனிச்சட்டமோ, முஸ்லீம்கள், சீக்கியர்…..என்று நீளும் பட்டியல் ஏன்? பொதுப்படைய சிவில் சட்டம் கட்டாயம் வேண்டும்.

  24. சகோதரர் இறை நேசன், சகோதரர் ‘புது’ச்சுவடி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    சகோதரர் நாகு, புதியவரான உங்களுக்கு விரிவாக விடையளிக்க எண்ணியுள்ளேன். நேரமின்மையால் இப்போது இயலவில்லை. அதற்கு முன் இந்தப்பதிவையும் சகோ.சுட்டுவிரல், சகோ. இறைநேசன் ஆகியோர் எழுதிய பலதாரமணம் குறித்த பதிவுகளையும் நன்றாகப் படித்து வையுங்கள்.

  25. //உதாரணமாக சிலமதச்சட்டங்களில் ஆண்களின் பலதாரமணம் ஒப்புக்கொள்ளப்படுகிறது. அப்படியெனில் பெண்களின் நிலைமை? //

    நாகு சார், பலதார மணம் ஒப்புக்கொள்ளப்பட்ட மதங்களை விட அதை ஒப்புக்கொள்ளாததாக ‘ஒப்புக்கு’ சொல்லப்படுகிற மதங்களில் பெண்களின் நிலை எந்தவிதத்தில் உயர்ந்துள்ளது? விளக்கமுடியுமா?

    //அடிப்படையில் இந்தியா இந்துமதத்தை அடிப்படையாக கொண்ட நாடு.//

    இல்லை. அடிப்படையாகவோ, படிப்படியாகவோ இந்து மதத்தை அடிப்படையாக கொண்ட நாடில்லை இந்தியா. (அதற்கான முயற்சிகளும் முறியடிப்புகளும் நடந்துக் கொண்டிருப்பது வேறு விடயம்).
    சரி, இந்து மதம் என்றால் எந்த இந்து மதம்? வேதங்களை உயர்த்திப்பிடிக்கிற பிராமணிய மதமா?
    வேதங்களென்று இருப்பதை அறியாத பழங்குடியினர் மதமா? அல்லது வேதத்தை மறுத்துவருகிற திராவிடர் மதமா? அல்லது…

  26. நாகு அவர்களே..,
    முஸ்லிம்களின் பலதாரமணம் குறித்த பதிவுகளைப் படித்திருந்தால் கீழ்க்காண்பவற்றை ஐயந்திரிபற அறிந்திருப்பீர்கள்> இல்லையா?
    1). முஸ்லிம்களுக்கு பலதாரமணம் கட்டாயக்கடமை அல்ல.
    2). பெண்களின் தொகை மிகைக்கும் காலகட்டத்தில்/பெண்களின் இல்லற வாழ்வு கேள்விக்குறியாகும் காலக்கட்டத்தில் அது சமூகக்கேடுகளிடமிருந்து ஒரு நிவாரண நடவடிக்கையே.
    3). பலதார மணம் புரிந்த முஸ்லிம்கள் தன் மனைவியரிடையே சமநீதி பேணுவது கடமை.
    4). இன்றைக்கும் அனுமதிக்கப்பட்ட முஸ்லிம்களை விடவும் பலதார அனுமதி இல்லாத (முஸ்லிமல்லாத) மற்ற சமூகத்தினரே அதிக அளவில் பலதாரமணம் செய்கின்றனர். (அரசாங்க புள்ளிவிவரங்களைப் பாருங்கள்).

    எனவே, பொதுசிவில்சட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களிடம் மூக்கை நுழைக்க ‘பலதாரமணம்’ என்கிற காரணம் பொருந்தாது என்பதை அறிவீர்களாக.

  27. //பெண்களின் தொகை மிகைக்கும் காலகட்டத்தில்/பெண்களின் இல்லற வாழ்வு கேள்விக்குறியாகும் காலக்கட்டத்தில் அது சமூகக்கேடுகளிடமிருந்து ஒரு நிவாரண நடவடிக்கையே.//

    அப்பட்டமான சப்பைக்கட்டு! இது எப்படி இருக்கிறது என்றால், பணத்தட்டுப்பாட்டைக் காரணம் கா ட்டி நாமலே நோட்டு அடிச்சிக்கலாம்னு சொல்றாப்ள இருக்கே…..நல்ல கூத்துங்க!

    // இன்றைக்கும் அனுமதிக்கப்பட்ட முஸ்லிம்களை விடவும் பலதார அனுமதி இல்லாத (முஸ்லிமல்லாத) மற்ற சமூகத்தினரே அதிக அளவில் பலதாரமணம் செய்கின்றனர். (அரசாங்க புள்ளிவிவரங்களைப் பாருங்கள்).//

    புள்ளிவிவரங்களெல்லாம் இருக்கட்டும். அவர்கள் மதச்சட்டத்தில் மனைவிக்குக் கொடுக்கும் அதிகாரத்தி னை உங்கள் சட்டம் தருகிறதா? இந்து மததிருமணச்சட்டத்தில் இன்னொரு பெண்ணிடம் வாழவிரும்பும் கணவன் முதல் மனைவியிடம் விவாகரத்தை பெறுவது அவ்வளவு சுலபமல்ல! சட்டம் நீண்ட நெறிமுறைகளை வைத்திருக்கிறது. உங்களுடையது அப்படியல்ல….. இன்னும் எவ்வளவோ சொல்லலாம். பொதுவாக இந்திய பெண்களுக்கு சமௌரிமைக் கொடுக்கப்படவேண்டும். அதற்கு பொது சிவில் சட்டம் துணைநிற்கும்.

  28. சகோதரர் நாகு அவர்களே,
    இஸ்லாத்தின் வரலாறை காய்த்தல் உவத்தலின்றி சற்றேனும் படியுங்கள். நான் ‘சப்பைக்கட்டு’ செய்யவில்லை என்பது விளங்கும்.
    உங்களுடைய வாதம் தான் மகா விசித்திரமானது.
    ‘பலதார மண’ அனுமதி சட்டமில்லாத மற்ற மத (சமுதாய)த்தவரே அதிக அளவில் பலதார மணம் செய்வது ஒன்றும் கற்பனையில்லை. பேராசிரியர் அருட்செல்வன் எழுதிய ‘நீதிமன்றங்களின் பார்வையில் பலதாரமணம்’ நூலை வாசியுங்கள். (முடிந்தால், உங்களுக்கு தனிஅஞ்சலில் அனுப்புகிறேன்).
    அனுமதி இருந்தும் (மற்ற சமூகத்தினரை விட) குறைந்த அளவில் பலதார மணம் புரிகிற முஸ்லிம்களின் மனைவியருக்கு சட்ட அந்தஸ்தும் சமூக அந்தஸ்தும் கிடைக்கிறது. முதல் மனைவியின் அனுமதி பெறாமல் சட்ட அந்தஸ்தும் சமூக அந்தஸ்தும் மறுக்கப்படுகிற மற்ற சமூக ‘வைப்பாட்டி’களுக்கு இது மேல் என்பதை மனசாட்சியோடு சிந்தித்தால் நீங்கள் உணரலாம்.

    மட்டுமின்றி,யாரும் திருத்தம் செய்ய தேவைப்படாத அளவுக்கு (இன்றைய சட்ட வல்லுனர்கள் சிந்திக்கத் தொடங்கும் முன்பே) பெண்ணுக்கு சொத்துரிமை, மறுமண உரிமை, மணவிலக்கு உரிமை போன்ற தேவையான அனைத்து உரிமைகளையும் அளித்தது இஸ்லாம் மட்டுமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *