Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » விமர்சனம் விளக்கம் » அரபியர்களின் கடவுட்க் கொள்கை!

அரபியர்களின் கடவுட்க் கொள்கை!

அரபிகள் ஒருபோதும் கடவுள் நம்பிக்கையற்றவர்களாய் இருந்ததில்லை. ஆனால் ஏகனும், எவர் தயவும் – தேவையும் அற்றவனுமான இறைவன் தன்னைப் பற்றி எவ்வாறு குறிப்பிடுகின்றானோ, அந்தப் பொருளில் இறைவனை அவர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை! அவனுக்கு இணை கற்பித்துக் கொண்டிருந்தார்கள். இறைவனை எப்படி கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்தாதவர்களாகவும், எவ்வாறு அவனை வணங்கிட வேண்டுமோ அவ்வாறு வணங்காதவர்களாகவும் இருந்து வந்தார்கள். தமது முன்னோர்களில் நல்லடியார்களாகவும், கண்ணியத்திற்குரியவர்களாவும் திகழ்ந்தவர்களுக்கோ, அல்லது வானவர்களுக்கோ நினைவுச் சின்னங்களாகத் தாம் வடித்த சிலைகளை இறைவனுக்கு இணையாக்கிக் கொண்டிருந்தார்கள்.

வானவர்களை இறைவனின் பெண்மக்கள் எனக் கருதிக் கொண்டிருந்தார்கள். சில சமயங்களில் அந்தச் சிலைகளை மறந்துவிட்டு இந்தத் தேவைதைகளை வணங்கிக் கொண்டிருப்பார்கள். சிலைகளையோ அல்லது தேவதைகளையோ எதை வணங்கிய போதும் அவையெல்லாம் தம்மை இறைவனிடம் சமீபிக்கச் செய்பவை என்கிற நம்பிக்கையிலேயே வணங்கி வந்தார்கள். இது பற்றித் திருக்குர்ஆனில்..

”அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்) திருக்குர்ஆன், 39:3

இறைவன் மீது அரபியர்கள் நம்பிக்கை கொண்டிருந்ததுடன் (பார்க்க: 29:61,63 ஆகிய வசனங்கள்) அவனுக்கு இணையும் கற்பித்துக் கொண்டிருந்தார்கள். அது அவர்களின் சமயச் சடங்குகள், மத ஆச்சாரங்கள், சித்தாந்தங்கள் அனைத்திலும் காணமுடியும். அவர்கள் தமது குழந்தைகள், கால்நடைகள், விவசாய மகசூல்கள் ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தைத் தமது தெய்வங்களுக்கென ஒதுக்கி வந்தார்கள். சில சமயங்களில் அவர்களின் தெய்வங்கள் மீது அவர்கள் கொண்டிருந்த பக்தியானது அவர்களின் ஆண் குழந்தைகளை அவற்றிற்காக நரபலி கொடுத்திடவும் அவர்களைத் தூண்டியது. அவர்களின் இந்தச் சீர்கேடுகளையும், குழப்பங்களையும் பற்றித்தான் திருக்குர்ஆன், அல்அன்ஆம் அத்தியாயத்தின் வசனங்களில் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறது.

6:136. அல்லாஹ் உண்டாக்கிய விளைச்சலிலிருந்தும், கால்நடைகளிலிருந்தும் அல்லாஹ்வுக்கென ஒரு பாகத்தை ஏற்படுத்தினார்கள். இன்னும் அவர்களின் எண்ணப்படி இது அல்லாஹ்வுக்கு என்றும், இது எங்களுடைய இணை தெய்வங்களுக்கு என்றும் சொல்கிறார்கள் – அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென்று குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேர்வதில்லை அல்லாஹ்வுக்கு ஆகியிருப்பது அவர்கள் தெய்வங்களுக்குச் சேரும் என்றும் சொல்கிறார்கள். அவர்கள் செய்யும் இம்முடிவு மிகவும் கெட்டதாகும்.

6:137. இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன. அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள். எனவே (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்யான கூற்றுக்களையும் விட்டு விலகி விடுவீராக.

6:138. இன்னும் அவர்கள் (தம் கால்நடைகளைக் குறிப்பிட்டு) ”ஆடு, மாடு, ஒட்டகம், விவசாயத்தில் காணும் இந்த விளைச்சல் ஆகியவற்றை நாம் விரும்புபவர்களைத் தவிர வேறு யாரும் புசிப்பது தடுக்கப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர். மேலும் சில கால்நடைகளைச் சவாரி செய்யவும், சுமைகளைச் சுமந்து செல்லவும் பயன் படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது என்றும், இன்னும் சில கால்நடைகளை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூறக்கூடாதென்றும், அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து சொல்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களுடைய பொய்க் கூற்றுகளுக்காக அவர்களுக்குக் கூலி கொடுப்பான்.

6:139. மேலும் அவர்கள், ”இந்தக் கால் நடைகளின் வயிற்றில் இருக்கும் குட்டிகள் எங்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம். அவை எங்கள் பெண்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளன – அவை செத்துப் பிறந்தால், அவற்றில் அவர்களுக்கும் பங்கு உண்டு” என்றும் கூறுகிறார்கள். அவர்களுடைய (இந்தப் பொய்யான) கூற்றுக்கு அவன் தக்க கூலி கொடுப்பான் – நிச்சயமாக அவன் பூரண ஞானமுடையோனும், (யாவற்றையும்) அநிந்தவனுமாக இருக்கின்றான்.

6:140. எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ, இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை.

மேலும் அவர்கள் தம்மை இப்றாஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கத்தின்படி நடப்பவர்களென்றும், தம்முடன் அரபு தீபகற்பத்தில் வசிப்பவர்களான வேதம் கொடுக்கப்பட்ட யூத, கிறிஸ்தவ சமுதாயத்தவர்களைவிடத் தாமே நேர்வழியில் நடப்பவர்களென்றும் நம்பிக் கொண்டிருந்தனர். யூதர்கள் உஸைர் (அலை) அவர்களை இறைவனின் குமாரர் என்றும், கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை இறைவனின் குமாரர் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். (பார்க்க: 9:30 வசனம்) இவர்களுக்கு மத்தியில், இறைவனுக்கு ஈஸா, உஸைர் (அலை) ஆகியோரைவிட மிக நெருக்கமாவர்களாக அவர்கள் நம்பிக் கொண்டிருந்த வானவர்களையும் – தேவதைகளையும் அவர்கள் வணங்கி வந்ததால் தம்மை யூத, கிறிஸ்தவர்களைவிட அதிக நேர் வழியில் இருப்பதாகக் கருதிக்கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் அவர்கள் தம்மை வேறெந்த சமூகத்தையும் விட மிக்க நேரான வழியில் இருக்கும் சிறந்த சமுதாயமாகவே கருதி வந்தனர்.

இதற்கிடையில் முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி, ”இப்றாஹீம் (அலை) அவர்களின் உண்மையான மார்க்கம் இதுதான்” எனக் கூறினார்கள். ‘இல்லை! நாங்கள் இருப்பதுதான் இப்றாஹீம் நபியின் மார்க்கம், எனவே நாங்கள் அதை விட்டுவிட்டு முஹம்மதைப் பினபற்றத் தேவையில்லை!’ என அவர்கள் கூறினார்கள். எனினும் முஹம்மது கூறும் இறைவனுக்குத் தாம் தலைவணங்குவதாகவும், அதற்காக தங்கள் தெய்வங்களுக்கு முஹம்மது தலைவணங்க வேண்டுமென்றும், அவர்களின் தெய்வங்களைப் பற்றியும் – அவர்களின் வணக்க வழிபாடுகள் பற்றியும் முஹம்மது எவ்விதக் குறையும் கூறக்கூடாது என்றும், முஹம்மதும் இதுபற்றி எந்த நிபந்தனையும் விதிக்கலாம் என்றும் ஒரு சமாதான உடன்பாட்டுக்கு முயற்சி செய்தார்கள்.

அவர்களின் சித்தாந்தங்களிலும், சிந்தனைப் போக்குகளிலும் ஒரு தெளிவில்லாத குழப்பநிலை இருந்ததும், பல தெய்வ வழிபாடுகளுடன் இறைவனையும் அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்ததும், முஹம்மதுக்கும் அவர்களுக்குமிடையிலுள்ள தூரம் அதிகமில்லை என அவர்களை நினைக்க வைத்தது. ஒரு நகரத்தை இருபகுதிகளாகப் பிரிப்பதைப் போலவும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து எல்லைத் தகராறுகளைத் தீர்த்துக் கொள்வது போலவும் இந்தப் பிரச்சினையை அவர்கள் கருதியதற்கு இதுவே காரணமாக இருந்தது.

இந்த ஐயத்தைப் போக்கவும், போலிச் சாக்குப் போக்குகள் கூறித் தட்டிக் கழிப்பதற்கு அறவே வழியில்லாமல் ஆக்கவும் இரு வணக்கங்களுக்கும், இரு நெறிகளுக்கும், இரு வழிகளுக்கும், இரு சித்ததாந்தங்களுக்கும் இடையிலுள்ள இடைவெளி இட்டு நிரப்ப முடியாதது என்பதைத் தெளிவுப்படுத்திடவே உறுதியான வார்த்தைகளுடனும், வலியுறுத்தல்களுடனும், மீண்டும் மீண்டும் ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லும் தோரணையில் இந்த அத்தியாயம் அருளப்பட்டது. இது அத்தனை சச்சரவுகளுக்கும் ஒரு முடிவுகட்டி விடுகிறது. அத்தனைப் பேச்சுக்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது. ஏகத்துவத்திற்கும், ஏகத்துவ மறுப்புக்குமிடையிலுள்ள வேறுபாட்டை நன்கு தெளிவுபடுத்தி விடுகிறது. சிறிய, பெரிய எல்லாப் பிரச்சினைகளுக்கும், விவாதத்திற்கும் அறவே இடமில்லாதவாறு எல்லைக் கற்களை மிகத் தெளிவாகப் பதித்து விடுகிறது.

109:1. (நபியே!) நீர் சொல்வீராக: நிராகரிப்போரே’!

109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.

109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.

109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.

109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம், எனக்கு என்னுடைய மார்க்கம்.”

இந்த அத்தியாயம் முழுவதும் மறுப்புக்கு மேல் மறுப்பு, உறுதிக்கு மேல் உறுதி, வலியுறுத்துலுக்கு மேல் அழுத்தமான வலியுறுத்தல் என்று மறுப்பது, உறுதிப்படுத்துவது, வலியுறுத்துவது ஆகியவற்றுக்கான அனைத்து முறைகளும் கையாளப்பட்டுள்ளன.

109:2 ‘நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.”

எனது வணக்கம் உங்கள் வணக்கமாகாது! எனது வணக்கத்திற்குரியவன் உங்களால் வணங்கப்படுபவையாய் ஆகமாட்டான்!

109:3. ”இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.”

உங்கள் வணக்கம் எனது வணக்கமாகாது! உங்களால் வணங்கப்படுபவை எனது வணக்கத்திற்குரியவனாகமாட்டா!

109:4. ”அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.”

அத்தியாயத்தின் முதல் வாக்கியமான வினைச்சொல் வாக்கியத்தின் கருத்தே பெயர்ச்சொல் வாக்கியத்தால் இங்கே மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. இறைவனைத் தவிர உள்ள ஏனையவற்றை வணங்காத பண்பு என்னில் ஊறிப்போய் விட்ட, நீடித்த நிலைத்த பண்பாகி விட்டிருக்கிறது என்பதை இந்த வாக்கியம் மிகச் சிறப்பாக உணர்த்துகிறது.

109:5. ”மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்”.

எவ்வித ஐயத்திற்கும், சந்தேகத்திற்கும் இடமில்லாதவாறு அத்தியாயத்தின் இரண்டாவது வாக்கியத்தையே மீண்டும் வலியுறுத்துவதற்காக இந்த வாக்கியம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஒன்றை மீண்டும் மீண்டும் தெரிவிப்பது, வலியுறுத்திச் சொல்வது ஆகியவற்றின் அனைத்து வகைகளையும் கையாண்டு இந்தக் கருத்து இங்கே தெரிவிக்கப்பட்டப் பிறகு எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லாது போய் விடுகிறது.

இறுதியாக, சந்திக்கவே முடியாத அந்தப் பிரிவு, ஒப்புவமையே இல்லாத அந்தக் கருத்து வேறுபாடு, இணையவே முடியாத அந்த இடைவெளி, கலக்கவே முடியாத அந்தப் பாகுபாடு பின்வருமாறு சுருக்கமாகத் தெரிவிக்கப்பட்டு விடுகிறது.

109:6. ”உங்களுக்கு உங்களுடைய மார்க்கம், எனக்கு என்னுடைய மார்க்கம்.”

நான் இங்கேயும் நீங்கள் அங்கேயுமாக நாம் நின்று கொண்டிருக்கிறோம். இந்த இடைவெளியைக் கடப்பதற்கு எந்த வழியுமில்லை, எந்தப் பாலமுமில்லை. முழுமையானப் பொதுவான இடைவெளி, தெளிவான நுட்பமான பாகுபாடு ”கொள்கைகளே” நம்மிருவருக்குமிடையில் இருக்கின்றன.

அடிப்படைக் கொள்கையில் வேறுபாடு, அடிப்படைச் சிந்தனையில் வேறுபாடு, வழிப்பாதையின் இயல்பில் வேறுபாடு, சன்மார்க்கத்தின் ஏதார்த்தத்தில் வேறுபாடு இத்தனை வேறுபாடுகளுடன் எந்தப் பிரச்சனையிலும் நடுவழியில் இணைவது என்பது இயலாத ஒன்றாகும். எனவே இத்தகைய அடிப்படையானக் கருத்து வேறுபாட்டின் எல்லைக் கற்கள் தெளிவுப்படுத்துவதற்கு இது போன்ற தயவு தாட்சண்யமற்ற கொள்கைப் பிரகடனம் இன்றியமையாததாகும்.

நன்றி:- திருக்குர்ஆனின் நிழலில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *