Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » இதுதான் இஸ்லாம் (பகுதி-1)

இதுதான் இஸ்லாம் (பகுதி-1)

Articleஉலகில் வாழும்  மக்கள்  சமுதாயம்  ஆன்மீக ரீதியாகத் தாம்  பின்பற்றும்  மதங்கள், சமயங்கள் கலாச்சாரங்கள்  இவை  சிறந்ததா எனச்  சிந்திக்கும் பொருட்டு  திறந்த  மனதுடன்  இந்த  ஆய்வைக்  படிக்குமாறு முதலாவதாக கேட்டுக்கொள்கிறேன்.

நம்மைப் படைத்த  இறைவன்  நாம் உண்ண, உடுத்த,  வசிக்க, உறவு முறைகள்  இன்பம்  துன்பம்  நோய்  மருந்து  என பல் வேறு  சூழ் நிலைகளை  நம்மீது  விதித்து  நம்மை உலகில் வாழச் செய்துள்ளான். நாம் வாழும் வாழ்கை முறை  ஒழுங்குடன் சீராக  இருக்குமானால்  நாம் மட்டுமின்றி  நம்முடன்  வாழும்  பிற  மக்களும்  நலமுடன்  வாழ்வர். ஒழுக்கமற்ற தரங்கெட்ட சமுதாயத்தில்தான்  குற்றங் குறைகள்  பெருகி  பல்வேறு  கேடுகள்  நிகழும். இக்கேடுகள்  நம்மையும் சமுதாயத்தையும்  பாதிப்பதுடன்  நம்மைப் படைத்த  இறைவனின்  வெறுப்புக்கும்  ஆளாகி விடுகின்றன.  இறைவனுக்கு அதிக வெறுப்புண்டாக்க கூடிய செயல்களில்  மிக முக்கியமானது  படைத்த  அவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய  சிறப்புக்களை, வணக்க வழிபாடுகளை  அவனது படைப்புகளுக்கும் பங்கிட்டு கொடுத்து  இறைவனின்  நிலைக்கு  அவனால்  படைக்கப் பட்ட படைப்பினங்களின்  தன்மையை உயர்த்துதல் ஆகும்.

இறைவனால்  படைக்கப் பட்ட எந்த  மகத்துவமிக்க ஒரு  மனிதனாக மிருகமாக  அல்லது  வானவராகவே இருந்தாலும்  சரியே, இவையனைத்தும்  இறைவனுக்கு இருக்கும்  தகுதியில்  இம்மியளவும்  இணையாகாது.  இவ்வுண்மையைத்  தனது படைப்பினங்களுக்கு எடுத்து கூற சமுதாயத்தில்  ஒழுக்க வாழ்வு  நிலவ  இறைவன்    அந்தந்த சமுதாயத்தார்க்கு முறையே  அவர்களின் மொழியில் வேதங்களை வழங்கி அவர்களிலிருந்தே  ஒருவரை  இறைத்தூதராக  அனுப்பி வைத்தான்.  இவ்வுலகில் வாழும்  வாழ்க்கை ஒரு அந்நியன்  போல்  வழிபோக்கன்போல் ஒரு குறிப்பிட்ட காலம் வரை  வாழ்ந்து மடிவது நியதியாக்கப்பட்டு விட்டது.  இதில் எந்த  படைப்பினமும்  இந்நியதிக்கு  அப்பாற் பட்டதல்ல.

இவ்வுக  வாழ்வில்  வாழும் போது  படைத்த இறைவனின்  வெறுப்புக்கு  ஆளாகாமல்  அவன் எந்த நோக்கத்துக்காக  நம்மைப் படைத்தானோ  அந்த  அம்சங்களோடு  வாழ்ந்து  அவனின் பொருத்தத்தைப் பெறுகிறவர்களுக்கு  மரணித்த பின்  நிகழும்  மண்ணறை  வாழ்கைக்குப் பின்  வரும்  மறுமை நாளில்  நாம் செய்யும்  இவ்வுலக  வாழ்வின்  செயல்பாடுகளுக்குறிய விசாரணைக்குப் பின்னர்  நிரந்தரமாய் வாழும்  சுவனத்தைப் பரிசாகத் தருவதாக  வாக்குறுதி  மாறாத  வல்லோன்  இறைவன் வேதங்கள் வாயிலாக உறுதி கூறியுள்ளான். இச்சித்தாந்தத்தை போதிக்க வந்த  இறைத்தூதர்களின்  அடிப்படைக் கொள்கை  எல்லா காலகட்டத்திலும்  ஒன்றாகவே  இருந்துள்ளது.  “இறைவன் ஒருவனுக்கு மட்டுமே  நாம் வணக்க வழிபாடுகள்  புரிய வேண்டும். அவனைத் தவிர  வேறு யாருக்கும்  எதற்கும்  வழிபாடுகள்  செய்வதற்கு  எந்த அருகதையும் இல்லை”  என்று உரக்க  ஒலித்தனர்.  அவ்வாறு இப்பூவுலக்கு வந்த  இறைத்தூதர்களில் மக்களால் நன்கு அறியப்படுகின்ற இறைத்தூதர்கள் பலர். அவர்களில்  இறுதியாக வந்த  இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆவார்கள்.  அவர்களுக்கு  இறைவனிடமிருந்து  அருளப்பட்ட வேதம்  குர்ஆன்  ஆகும். குர்ஆனில் உள்ள  வேத வசனங்கள்  நபி ஸல் அவர்கள்  வாழும் போது  23 ஆண்டுகளாக  காலச்சூழலுக்  கேற்ப  மக்களைச் சீர் படுத்தும்  விதமாக  கொஞ்சம்  கொஞ்சமாக  அருளப்பட்டது.

குர்ஆனை எவ்வாறு வாழ்கையில்  நடைமுறைப்  படுத்துவது  என்பதை  நபி ஸல்  அவர்கள்  தம் வாழ் நாளில்  பின்பற்றி  வாழ்ந்துக் காட்டினார்கள். குர்ஆன்  அல்லாத நபி ஸல்  அவர்களின்  சொல், செயல், அங்கீகாரம்  ஆகியவை  சுன்னா (நபிமொழி, ஹதீஸ்)  எனப்படும். 

குர்ஆனும், நபி மொழிகளும்  இதற்கு  முன்பு  வந்த  இறைத்தூதர்கள்   அவர்களுக்கு இறங்கிய  வேதங்களை  உண்மைப் படுத்துவதுடன்  சத்தியத்தை சரிவரப் புரிந்து கொள்ள  சான்றுகளாகத் திகழ்கின்றன. இவ்விரண்டும (குர்ஆனும் நபி மொழிகளும்) ஒரு மதத்தாருக்கோ ஒரு நாட்டாருக்கோ ஒரு மொழியாருக்கோ ஒருஇனத்தாருக்கோ உரியது  அல்ல. மாறாக  ஒட்டு  மொத்த  உலக  சமுதாயத்தார்க்கும்  பொதுவானது. இதன் போதனைகளைப் படிப்போர்  பெறுகிற  படிப்பினைகளும்  அறிவுரைகளும் ஏராளம் ஏராளம்.

படைத்த இறைவன்  தன் படைப்பினங்களுக்கு  வழங்கிய வேத “வஹி” என்னும்  இறைச் செய்திகள் சத்தியமானவையும் பின்பற்றப்பட வேண்டியதுமாகும். ஆகையால்  இவற்றில்  எந்த குளறுபடியோ  முரண்பாடோ  சிறிதும்  இல்லை. முற்றிலும்  தெளிவான  இவ்விரண்டு  அடிப்படைகளைக் கொண்டு திகழ்வதுதான்  இஸ்லாமிய மார்க்கம்.  மொத்தத்தில்  உலகில் வாழும்  முஸ்லீம்களைப் பார்த்து அவர்களின் நடைமுறைகளைப் பார்த்து  இப்படித்தான்  இஸ்லாம் கூறுகிறது போலும் என்று சிந்திக்காமல்  இஸ்லாத்தின்  அடிப்படைகளாகிய  குர்ஆனும்  நபி மொழிகளும்  என்ன கூறுகிறது? என்று நோக்கினால்  இஸ்லாத்தின் மீதுள்ள  எந்த  எதிர் நோக்கு சிந்தனைகளும் தூள்தூளாகிவிடும் என்பது உறுதி.

இந்த ஆய்வில்  இடம் பெறும்  அத்துணைத் தகவல்களும்  அல்லாஹ் அருளிய குர்ஆனிலிருந்தும்  அண்ணல் நபி (ஸல்)  அவர்களின்நபி மொழியிலிருந்தும் சான்றுகளாகத்  தரப்பட்டுள்ளன. இனி இஸ்லாம் குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *