Featured Posts
Home » பொதுவானவை » வாழ்வின் சிரமங்களும் அவற்றுக்கான இஸ்லாமிய தீர்வுகளும்

வாழ்வின் சிரமங்களும் அவற்றுக்கான இஸ்லாமிய தீர்வுகளும்

– அஷ்ஷேய்க் A.J.M மக்தூம் இஹ்ஸானி
மறுமை வாழ்வுக்கு தயார் செய்து கொள்ளும் பொருட்டு இவ்வுலக வாழ்வை அளித்துள்ள இறைவன் இவ்வாழ்வு முழுவதும் சோதனையாகும் என்பதை அல் குர்ஆன் வாயிலாக எமக்கு தெளிவு படுத்தியுள்ளான். எனவே இந்த வாழ்வில் செல்வ செழிப்பு, பிணிகள், சிரமங்கள், துயரங்கள், வறுமை, குழப்பம், வன்முறை, கலகம், அச்சுறுத்தல், அடக்குமுறைகள், மலை, வெள்ளம், காற்று போன்ற இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட என்னிலையை நாம் கடந்து செல்ல வேண்டி ஏற்பட்டாலும் அனைத்தும் சோதனையே என்பதை உணர்ந்து கொள்வது அவசியமாகும். இதனையே அல் குர்ஆன் பின்வருமாறு தெளிவு படுத்துகிறது.

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ وَنَبْلُوكُم بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً ۖ وَإِلَيْنَا تُرْجَعُونَ
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல் குர்ஆன் 21:35(

இவ்வாறான பல்வேறு விதமான சோதனைகளைக் கொண்டு இவ்வுலக வாழ்வில் இறைவன் மனிதர்களை சோதிப்பது அவர்கள் தொடர்ந்தும் தமது தவறுகளின் நிலைத்திருக்காது, இறைவன் பால் மீண்டு, தமது வாழ்வை சீர் செய்து கொள்ள வேண்டும் என்பதற்கே. எனவே வாழ்வில் ஏற்படும் எந்த சிரமங்கள், பிரச்சினைகளாக இருந்தாலும் அதன் போது தமது தவறை உணர்ந்து, வருந்தி, திருந்தி இறைவனிடம் மன்னிப்பு வேண்டுவதோடு, அதிகமதிகம் நல்லறங்கள், இறை வழிப் பாடுகளில் ஈடுபடுவது அவசியமாகும். மேலும் இறைவனிடம் பச்சாதாபப் பட்டு இறைஞ்சுவதும் அவசியமாகும். இதனையே பின்வரும் வசனங்கள் உணர்த்துகின்றன.

ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُم بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ
மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (அல் குர்ஆன் 30:41)

وَمَا أَرْسَلْنَا فِي قَرْيَةٍ مِّن نَّبِيٍّ إِلَّا أَخَذْنَا أَهْلَهَا بِالْبَأْسَاءِ وَالضَّرَّاءِ لَعَلَّهُمْ يَضَّرَّعُونَ
நாம் நபிமார்களை அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம் மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை. (அல் குர்ஆன் 7:94(

وَلَقَدْ أَرْسَلْنَا إِلَىٰ أُمَمٍ مِّن قَبْلِكَ فَأَخَذْنَاهُم بِالْبَأْسَاءِ وَالضَّرَّاءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُونَ
(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு. (அல் குர்ஆன் 6:42)

فَلَوْلَا إِذْ جَاءَهُم بَأْسُنَا تَضَرَّعُوا وَلَٰكِن قَسَتْ قُلُوبُهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ مَا كَانُوا يَعْمَلُونَ
நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான். (அல் குர்ஆன் 6:43)

فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّىٰ إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُم بَغْتَةً فَإِذَا هُم مُّبْلِسُونَ
அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் – பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர். (அல் குர்ஆன் 6:44(

فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا ۚ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; “எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்.” (அல் குர்ஆன் 6:45)

وَلَوْ رَحِمْنَاهُمْ وَكَشَفْنَا مَا بِهِم مِّن ضُرٍّ لَّلَجُّوا فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ
ஆனால் அ(த்தகைய)வர்கள் மீது கிருபை கொண்டு, அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கிவிடுவோமானால், அவர்கள் தட்டழிந்தவர்களாக தங்கள் வழிகேட்டிலேயே அவர்கள் நீடிக்கின்றனர். ( அல் குர்ஆன் 23:75)
وَلَقَدْ أَخَذْنَاهُم بِالْعَذَابِ فَمَا اسْتَكَانُوا لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُونَ
திடனாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்திருக்கிறோம்; ஆனால், அவர்கள் தங்கள் இறைவனுக்குப் பணியவுமில்லை; தாழ்ந்து பிரார்த்திக்கவுமில்லை. (அல் குர்ஆன் 23:76 )

குழப்பங்களின் போது நல்லறங்களில் அதிகம் கவனம் செலுத்தல்
عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنْ الدُّنْيَا . رواه مسلم
இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைராஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: குழப்பங்களின் போது இறை வழிப் பாடுகளின் பக்கம் விரையுங்கள்; (ஏனெனில் விரைவில் குழப்பங்கள் உருவாகும்) அதன் போது காரிருளில் சிக்கிய மனிதன் தடுமாற்றத்தில் காணப் படுவது போன்று பாரிய குழப்பங்கள் தோன்றி மனிதர்களைத் தடுமாற்றத்தில் ஆக்கிவிடும், அப்போது காலையில் இறை விசுவாசியாக இருந்தவன் மாலையில் காபிராக மாறிவிடுவான். மாலையில் இறை விசுவாசியாக இருந்தவன் காலையில் காபிராக மாறிவிடுவான். உலகின் அற்ப பொருளுக்காக தனது மார்கத்தை விற்கும் நிலை உருவாகிவிடும். (முஸ்லிம்)
ஒரு காலத்தில் பாரிய குழப்பங்கள் ஏற்படும், அதன் போது மனிதர்கள் செய்வதறியாது தடுமாற்றத்தில் இருப்பார்கள் என்பதை இறைத் தூதர் (ஸல்) முன்னரே அறிவித்து சென்று விட்டார்கள். மேலும் பணம், பதவி, பட்டம், மதிப்பு போன்ற உலகின் அற்ப பொருளுக்காக தனது மார்க்கத்தையே விற்று அதனை அடைய முயற்சி செய்யும் அளவுக்கு ஈமானில் பலகீனமானவர்கள் அக்காலத்தில் தோன்றுவார்கள் என்பதையும் மேற் குறிப்பிடப் பட்டுள்ள செய்தி தெளிவு படுத்துகிறது. அதே நேரத்தில் அக்குழப்ப நிலையிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி அதிகமதிகம் நல்லறங்களில் ஈடுபடுவதே என்பதையும் இந்த செய்தி உணர்த்துகிறது.

عن أُمِّ سَلَمَةَ – رضي الله عنها – قالت: اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ – صلى الله عليه وسلم – لَيْلَةً فَزِعًا يَقُولُ: ((سُبْحَانَ اللَّهِ، مَاذَا أَنْزَلَ اللَّهُ مِنْ الْخَزَائِنِ، وَمَاذَا أُنْزِلَ مِنْ الْفِتَنِ، مَنْ يُوقِظُ صَوَاحِبَ الْحُجُرَاتِ)) يُرِيدُ أَزْوَاجَهُ ((لِكَيْ يُصَلِّينَ؟ رُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ فِي الآخِرَةِ ((رواه البخاري.
நபி (ஸல்) அவர்களின் துணைவி உம்மு ஸலமா (ரலி) அறி விக்கின்றார்கள்:
ஒரு (நாள்) இரவில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (திடீரென) பதற்றத்துடன் விழித்தெழுந்து ‘அல்லாஹ் தூயவன்! (இன்றிரவு) அல்லாஹ் இறக்கிவைத்த கருவூலங்கள் தாம் என்ன! (இன்றிரவு) இறக்கி வைக்கப்பட்ட குழப்பங்கள் தாம் என்ன! இந்த அறைகளிலுள்ள பெண்களை (தமது மனைவி மார்களை) எழுப்பி விடுகிறவர் யார்? அவர்கள் (அல்லாஹ்வைத்) தொழட்டும்! ஏனெனில், இவ்வுலகில் உடையணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுவுலகில் நிர்வாணிகளாய் இருப்பார்கள்’ என்று கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழப்பங்களின் போது நல்லறங்களில் சிறந்ததான தொழுகையின் பக்கம் விரைந்து தொழுது பிரார்த்தனை செய்வதோடு, தமது குடும்பத்துக்கும் அதனை கற்றுக் கொடுத்துள்ளார்கள் என்பதை மேற்படி செய்தி தெளிவு படுத்துகிறது. அதே நேரத்தில் கவர்ச்சிக்காக ஆடை அணிந்து திரியும் பெண்கள் குழப்பங்களுக்கு தூண்டு கோலாக உள்ளார்கள்; இவர்கள் ஆடை அணிந்திருந்த போதிலும் நிர்வாணிகளாகவே உள்ளார்கள் என்பதையும் இங்கு சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
தொழுகை, நோன்பு, சகாத், ஹஜ் போன்ற கடமையான வணக்கங்களில் தரக் குறைவு செய்யாது, சுன்னாவைப் பின்பற்றி, பூரணமாக அவற்றை நிறைவேற்றுவதோடு, உபரியான தொழுகைகள், நோன்புகள், தான தர்மங்கள், நல்லதை ஏவி தீமைகளைத் தடுத்தல், பெற்றோருக்கு உபகாரம் செய்தல், உறவுகளைப் பேணி நடத்தல், விருந்தினருக்கு மதிப்பளித்தல், பக்கத்து வீட்டாரின் உரிமைகளை பேணி நடத்தல், வறியோருக்கு உதவுதல், சிரமப் படுவோரின் சிரமங்களை நீக்கல், நோய்வாய்ப் பட்டோரின் நலன் விசாரிக்கச் செல்லல், முதியோரை மதித்து நடத்தல், சிறியோருக்கு இறக்கம் காட்டல் உட்பட இஸ்லாம் கூறும் அனைத்து விதமான நல்லறங்களையும் முடிந்தளவு அதிகமதிகம் நிறைவேற்றுவது எமக்கு இறை யுதவியை பெற்று தந்து நிம்மதியானதொரு வாழ்வுக்கு வழிகோலும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً ۖ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ
ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (அல் குர்ஆன் 16:97)

பாவங்களில் இருந்து மீண்டு தௌபா செய்தல்
அதே போன்றே கடமைகளை பாழாக்கல், இறைவனுக்கு இணை கற்பித்தல், விபச்சாரம், கொலை, மது, சூது, இலஞ்சம், களவு, வட்டி, ஏமாற்றல், மோசடி, அநியாயம், பொய், பொறாமை, கோல், புறம், பிறரை மானப் பங்கப் படுத்தல் போன்ற அனைத்து விதமான இஸ்லாம் தடை செய்துள்ள கொடிய பாவங்கள் அனைத்தும் இருள் சூழ்ந்த நெருக்கடியான வாழ்வுக்கு இட்டுச் செல்லும் என்பதும் அல் குர்ஆன் கூறும் உண்மையாகும்.
وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا
“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; (அல் குர்ஆன் 20:124)

எனவே இப்படியான கொடிய பாவங்களில் இருந்து விடுபட்டு இறைவனிடம் தௌபா செய்வதும் அவசியமாகும். இறைவனிடம் பாவமன்னிப்பு வேண்டுதல் சிக்கள் நிறைந்த வாழ்விலிருந்து ஈடற்றத்தைப் பெற்றுத் தரும் என்பதை பின்வரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் செய்தி உறுதிப் படுத்துகிறது.
عن عبد الله بن عباس رضي الله عنهما قَال : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : “مَنْ لَزِمَ الِاسْتِغْفَارَ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا ، وَمِنْ كُلِّ هَمٍّ فَرَجًا ، وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ” رواه أبو داود ، وابن ماجه ، وأحمد
யார் இறைவனிடம் பாவமன்னிப்பு (இஸ்திக்பார்) வேண்டுவதை வழக்கமாக கடைப் பிடித்து வருகிறாரோ, இறைவன் அவருக்கு எல்லா விதமான நெருக்கடிகளில் இருந்தும் நீங்கிக் கொள்வதற்கான வழிகளையும், துயர்களில் இருந்து நிவாரணத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பான். மேலும், அவர் நினையாப் புறத்திலிருந்து அவருக்கு ஆகாரமும் அளிப்பான். என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூ தாவூத், இப்னு மாஜாஹ், அஹ்மத்)
இக்கருத்தையே இறைவன் பின்வருமாறு குரிபிடுகிறான்:
وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُم مَّتَاعًا حَسَنًا إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ ۖ وَإِن تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ
“நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி (பாவங்களை விட்டு) அவனிடம் திரும்புங்கள்; (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் ஒரு குறித்த தவணைவரை உங்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவான்; இன்னும், அருளுடைய ஒவ்வொருவருக்கும் (மறுமையில்) தன் அருளை (அதிகமாகவே) கொடுப்பான்; ஆனால் நீங்கள் (ஈமான் கொள்வதைப்) புறக்கணித்தால், மாபெரும் நாளின் வேதனை குறித்து நிச்சயமாக உங்களுக்காக நான் பயப்படுகிறேன்” (என்றும்). (அல் குர்ஆன் 11:3(

ۚ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا
எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான். (அல் குர்ஆன் 65:2)
65:3 وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ۚ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ ۚ
அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; (அல் குர்ஆன் 65:3)

وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَٰكِن كَذَّبُوا فَأَخَذْنَاهُم بِمَا كَانُوا يَكْسِبُونَ
நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் – பரகத்துகளை – பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம். (அல் குர்ஆன் 7:96(

பதற்றத்தை தவிர்த்து நிதானமாக பிரச்சினைகளை அணுகல்
பொதுவாக நல்லக் காரியங்கள் என உறுதியாக தெளிவான விடயங்களை தாமதமின்றி அவசரமாக நிறைவேற்றுவதை ஊக்குவிக்கும் இஸ்லாம், சிக்கல்கள், பிரச்சினைகள் மற்றும் குழப்ப நிலைகளின் போது பதற்றப் படுவதை தவிர்த்து பொறுமையையும், நிதானத்தையும் கடைப் பிடித்து சாணக்கியத்துடன் காரியமாற்றுவதை வலியுறுத்துகிறது.
அவசரம், பதற்றம், தீவிரம் என்பன ஷைத்தானின் தூண்டுதலால் உருவாகும் தீய பண்புகளாகும். இதன் காரணமாக பல்வேறு தவறுகளிலும், குற்றச் செயல்களிலும் மனிதன் வீழ்ந்து விடுவதோடு, பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை எட்ட முடியாமல் தவிக்கிறான். இன்று சிறு, சிறு சிக்கல்கள் பெரும் குழப்பமாக விஸ்வரூபம் எடுத்து பாரிய அழிவுகள் ஏற்பட இத்தகைய தீய குணங்களே காரணமாக அமைகின்றன.

وَيَدْعُ الْإِنسَانُ بِالشَّرِّ دُعَاءَهُ بِالْخَيْرِ ۖ وَكَانَ الْإِنسَانُ عَجُولًا
மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 17:11)

அஷஜ் இப்னு அப்தில் கைஸ் என்ற நபித் தோழரைப் பார்த்து இறைத் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
” إن فيك خصلتين يحبهما الله: الحلم والأناة”
“உம்மிடம் இறைவன் விரும்புகிற இரண்டு பண்புகள் இருக்கின்றன; அவை: சகிப்புத் தன்மை மற்றும் நிதானம் என்பனவாகும்” (முஸ்லிம்)

சோதனைகளை சகித்து பொறுமையை கடைப் பிடிப்பவர்களை மெச்சிப் பாராட்டி இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:
وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல் குர்ஆன் 2:155(

الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (அல் குர்ஆன் 2:156)

أُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ
இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல் குர்ஆன் 2:157)

ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ
நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். (அல் குர்ஆன் 41:34)
وَمَا يُلَقَّاهَا إِلَّا الَّذِينَ صَبَرُوا وَمَا يُلَقَّاهَا إِلَّا ذُو حَظٍّ عَظِيمٍ
பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள். (அல் குர்ஆன் 41:35)

روى البخاري عن علي رضي الله عنه قال: “لا تكونوا عُجُلاً مذاييع بُذُرًا، فإن من ورائكم بلاءً مبرِّحًا مُمْلِحًا ” (الأدب المفرد)
“அவசர காரர்களாகவோ, வதந்திகளைப் பரப்பி விடுபவர்களாகவோ, தீமைகளுக்கு வித்திடுபவர்களாகவோ நீங்கள் இருக்காதீர்கள்; உங்களுக்குப் பின்னால் ஒரு காலம் வரும் அக்காலத்திலே பாரிய குழப்பங்கள் தோன்றும்” என அலி (ரழி) அவர்கள் கூறினார்கள். (அல் அதபுல் முப்ரத்)
பதறிய காரியம் சிதறி விடும் என்று சொல்வது போல் எக்காரியத்திலும் நிதானமிழந்து, தீவிரப் பட்டு முடிவெடுக்க முற்படும் போது மென்மேலும் சிக்கல்கள் அதிகரிக்குமே தவிர, தீர்வை அடைந்து கொள்ள முடியாது. மேலும் ஒரு பிரச்சினைப் பற்றி கேள்வி பட்டவுடனேயே, அதனை உறுதி படுத்திக் கொள்ளாது உடனே அதனை பரப்பிவிடுவதும் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றி விடுவது போன்று பிரச்சினைகள் மேலும் உக்கிரமம் அடைந்து வியாபித்து செல்ல வழி வகுத்துவிடும். இப்படிப் பட்டவர்களே பிரச்சினைகளுக்கு வித்திடுபவர்களாகவும், தூண்டுகோலாகவும் விளங்குகிறார்கள். இவர்கள் பற்றியே இறைத் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” إِنَّ مِنَ النَّاسِ نَاسًا مَفَاتِيحَ لِلْخَيْرِ مَغَالِيقَ لِلشَّرِّ ، وَمِنَ النَّاسِ مَفَاتِيحَ لِلشَّرِّ مَغَالِيقَ لِلْخَيْرِ ، فَطُوبَى لِمَنْ جَعَلَ اللَّهُ مِفْتَاحَ الْخَيْرِ عَلَى يَدَيْهِ ، وَوَيْلٌ لِمَنْ جَعَلَ مِفْتَاحَ الشَّرِّ عَلَى يَدَيْهِ “. أخرجه ابن ماجة ، وابن أبي عاصم في السنة
“மனிதர்களில் சிலர் நலவுக்கு திறவு கோலாகவும், தீமைகளுக்கு தடையாகவும் உள்ளனர், வேறு சிலர் தீமைகளுக்கு திறவு கோலாகவும் நலவுக்கு தடையாகவும் உள்ளனர், அல்லாஹ் எவரின் கரத்தினால் நலவின் வாயில்களை திறந்து விடுகிறானோ, அவருக்கு சுவசோபனம் உண்டாகட்டும், மேலும் எவன் மூலம் தீமைகளின் வாயில்கள் திறக்கப் படுகிறதோ அவன் மீது நாசம் உண்டாகட்டும்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு), (இப்னு மாஜாஹ்).

عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: سَتَكُونُ فِتَنٌ ، الْقَاعِدُ فِيهَا خَيْرٌ مِنْ الْقَائِمِ ، وَالْقَائِمُ فِيهَا خَيْرٌ مِنْ الْمَاشِي ، وَالْمَاشِي فِيهَا خَيْرٌ مِنْ السَّاعِي ، وَمَنْ يُشْرِفْ لَهَا تَسْتَشْرِفْهُ ، وَمَنْ وَجَدَ مَلْجَأً أَوْ مَعَاذًا فَلْيَعُذْ بِهِ ) رواه البخاري، ومسلم
‘விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றுக்கிடையே (மெளனமாக) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனைவிடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் நடப்பவனை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடவும் சிறந்தவன் ஆவான். அதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ,காப்பிடத்தையோ பெறுகிறவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (புகாரி)
குழப்பங்களுக்கு தம்மைத் தாமே ஆளாக்கிக் கொள்வது ஆரோக்கியமானதல்ல. அது நிம்மதியற்ற வாழ்வுக்கு இட்டுச் செல்லும். கடமைகளை முறையாக செய்வதற்கும் தடையாக அமைந்துவிடும். எனவே குழப்பங்களின் போது முடிந்தளவு தூர விலகிச் செல்வது அவசியமாகும். இதனையே பின்வரும் ஹதீஸ் வலியுறுத்துகிறது:
عن المقداد بن الأسود أن النبي -صلى الله عليه وسلم- قال: (إِنَّ السَّعِيدَ لَمَنْ جُنِّبَ الْفِتَنَ إِنَّ السَّعِيدَ لَمَنْ جُنِّبَ الْفِتَنَ إِنَّ السَّعِيدَ لَمَنْ جُنِّبَ الْفِتَنَ) (رواه أبو داود، وصححه الألباني(
“குழப்பங்களில் இருந்து தூரமாக்கப் படுகிறவன் பாக்கியசாலியாவான்” என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் மடக்கி மடக்கி மூன்று விடுத்தம் கூறியதாக மிக்தாத் இப்னுல் அஸ்வத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூ தாவூத்)

இறைவனிடம் பச்சாதாபப் பட்டு இறைஞ்சுதல்
அனைத்துக்கும் ஆற்றல் மிக்க இறைவனின் நாட்டமின்றி அணுவும் அசையாது என்பதே ஒரு இறை விசுவாசியின் நம்பிக்கயாகும். அவனை ஆட்கொண்டுள்ள துன்பங்களையும் இறைவனையன்றி வேறு யாராலும் நீக்கக முடியாது. இறைவன் பின்வருமாறு கூறுகிறான்.

وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ ۖ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
“(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். 6:17
وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ ۚ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ
அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன், இன்னும் அவனே பூரண ஞானமுள்ளவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன். 6:18

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (அல் குர்ஆன் 2:153)

தாபிஈன்களின் காலத்தில் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுபின் அடக்கு முறைகள் இரத்தக் கரை படிந்த வரலாறாக வரலாற்று நூல்களில் பதிவாகியுள்ளது; இதன் போது பாதிப்புக்குள்ளான மக்களில் ஒருவராக இருந்தவரே ஹஸன் அல் பசரி (ரஹ்) அவர்களும். அவர்கள் தமது மக்களைப் பார்த்து பின்வருமாறு கட்டளையிடுகின்றார்கள்:

“ஹஜ்ஜாஜை சோதனைக் காகவே இறைவன் உங்கள் மீது சாட்டியுல்லான். எனவே அவனின் அடக்கு முறைகளுக்கு எதிராக வாள் ஏந்தி போர் செய்ய முற்படாதீர்கள். மாற்றமாக அமைதியை கடைப் பிடித்து இறைவனிடத்தில் பச்சாதாபப் பட்டு பிரார்த்தனை செய்யுங்கள்” (தபகாத் அல் குப்ரா)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : ” تَكُونُ فِتْنَةٌ لا يُنَجِّي مِنْهَا إِلا دُعَاءٌ كَدُعَاءِ الْغَريْق “أخرجه ابن أبي شيبة
“ஒரு காலத்தில் (பாரிய) குழப்பங்கள் தோன்றும்; அந்த நேரம் நீரில் மூழ்கும் போது ஒருவன் எவ்வாறு (மனத் தூய்மையுடன்) இறைவனைப் பிரார்த்திப்பானோ அப்படியான துஆவையன்றி வேறொன்றும் அக்குழப்பங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்காது” என அபு ஹுரைராஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (இப்னு அபி ஷைபஹ்)

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ ۚ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ
உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.” (அல் குர்ஆன் 40:60(

One comment

  1. Jazakumullahu khaira!
    valuable article, may Allah help to your dahwa journey. Allah hafiz.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *