Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » இஸ்லாம் அறிமுகம் » இறைவன் இருக்கின்றான்!

இறைவன் இருக்கின்றான்!

சில ஒழுக்கக் கோட்பாடுகளை மட்டும் கொண்ட மதங்களும், நவீன கொள்கைகளும் “இறைவன் உண்டா?” என்ற வேண்டாத வினாவை எழுப்பி, மக்களைத் தவறான வழிகளில் இட்டுச் செல்கின்றன. அவற்றின் இந்த கெடுதி மிக்க போதனைகளால் ஆவது ஒன்றுமில்லை – மக்கள் கெட்டு குட்டிச்சுவராவதைத் தவிர!

“இறைவன் இருக்கின்றான்” என்பதற்கு இப்பிரபஞ்சமும், இதன் அமைப்பும், இவ்வமைப்புக்கு உட்பட்ட ஏனைய படைப்புகளின் இயக்கத்தன்மையும், மேற்காணும் வகையில் வினா விடுப்பவர்களது உடலமைப்பும், அதன் அற்புதமான செயற்பாடும் போதிய ஆதாரங்களாகின்றன. அறிவின்மை எனும் பூட்டுகளை உடைத்தெறிந்து, சிந்தனைக் கதவுகளைத் திறந்து விட்டால் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வரும்.

எதற்கும் ஓர் உதாரணத்தை பார்ப்போம்:

ஒரு மாமரத்தின் மறைந்த மறுபக்கம்..

ஒரு வித்திலிருந்து அது தனது பயணத்தை ஆரம்பிக்கின்றது.

பூமியில் ஊன்றப்பட்ட அவ்வித்து வேறு பல இயற்கைச் சக்திகளின் துணையுடன் பிரசவமொன்றுக்குத் தயாராகின்றது. சில நாட்கள் செல்கின்றன. ஒருநாள் அதிலிருந்து சின்னஞ்சிறிய செடியொன்று பிரசவித்து – முளைத்து – உலகை எட்டிப் பார்க்கின்றது. பிறகு, அது மெதுமெதுவாக வளர்ந்து கிளைகளும் இலைகளும் நிறைந்த பூரண மரமாகின்றது.

அதன் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் கனி தரும் பருவத்தை அடைகின்றது. அப்பொழுது மரமெங்கும் இலைகளுக்கிடையில் அரும்புகள் தோற்றம் தருகின்றன. அவை பின்னர் மொட்டாகி, மலராகி, காய்கள் தோன்றி, அதிலும் படிமுறையான வளர்ச்சிகள் கண்டு, கனியாகி மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் சுவைத்துண்ணக் கொடுப்பதற்குத் தயாராகி விடுகின்றது.

எனினும், அந்த மாமரத்தின் வளர்ச்சி நிற்கவில்லை; தொடர்கிறது. கனி தரும் பணியும் அதற்குரிய காலங்களில் நடைபெறுகின்றது. குறிப்பிட்ட ஒரு எல்லைக்காலம் வந்ததும் அதன் வளர்ச்சி நின்று தளர்ச்சி ஏற்படுகின்றது. ஆனால், கனி தரும் உயரிய பணி மட்டும் நிற்கவில்லை. அது அதன் தளர்ச்சிக்குத் தக்கவாறு படிப்படியாகக் குறைந்துகொண்டு போகின்றது.

இப்படியான இதன் பயணத்தில்..

ஒருநாள் பாரிய பணியொன்றை நிறைவு செய்த திருப்தியுடன் அந்த மாமரம் பட்டுப்போகின்றது; செத்து விடுகின்றது.

அந்த மாமரத்தின் இந்த வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அந்த மாவிதையின் அமைப்பு

அதிலிருந்து முளைத்த செடியின் தோற்றம்

ஏனைய இயற்கை வளங்களான பூமி, நீர், காற்று, வெப்பம் போன்றவற்றின் ஒத்துழைப்பு

அதன் உரிய பருவத்தில் நடைபெறும் கனி தரும் பணி

குறித்த காலம் வந்ததும் – பணி முடிந்ததும் – பட்டுப் போனமை

போன்ற யாவுமே தாமாக நடந்தனவா? இதை இந்த அமைப்பில் இயக்குபவன் – இறைவன் – என்றொருவன் இல்லையா? இந்த மாமரத்தின் வளரும் முறை, ஒழுங்கு, கனி கொடுக்கும் பருவம் பொன்றவற்றை நேருக்குநேர் பார்க்கும் நீங்கள், “இவற்றை ஒழுங்குற நடத்தி வைப்பவன் எவனும் இல்லை” என்று யாரோ கூறுவதை நம்புவீர்களா? அத்துடன், உங்கள் உள்ளம் அவ்வாறு நம்புவதில் ஒத்து வருகிறது என நீங்கள் உணர்கின்றீர்களா?

மேலும், மாமரத்தின் அமைப்பில் பாரிய வித்தியாசம் எதுவுமே தெரிவதற்கில்லை. ஆனால்,

எத்தனை வகையான ரகங்கள்

எத்தனை விதவிதமான வடிவங்கள்

எவ்வளவு வித்தியாசமான, மதுரமான சுவைகள்!

இத்தனை ஏற்பாடுகளையும் செய்து, பல வகையான, பல்வேறு சுவையுடைய மாம்பழங்களை வழங்க வேண்டும் என்று அந்த மாமரமே நினைத்துக் கொண்டதா?

“இல்லை” என்பதுதான் இறைமறுப்பாளர் ஒருவரின் பதிலென்றால், “இத்தனை ஏற்பாடுகளையும் செய்தவன் யார்?” என நாம் அவரிடம் கேட்கலாம்.

“எதுவும் இல்லை. எல்லாம் இயற்கை” என்பதுதான் அவரது பதில் என்றால், “அந்த இயற்கையை, ஒழுங்கமைப்பைத் தனது அதிகாரத்தில் வைத்து இயக்கும் சக்தி எது?” என்ற மற்றொரு வினா எழுவதை அந்த மனிதன் தடுத்து, தட்டிக் கழித்து விட முடியாது.

அதற்கான இஸ்லாத்தின் விடை இதுதான்:

ஆழமான ஞானமும், நிகரில்லா பேராற்றலும் கொண்டு அம்மாமரத்தை மட்டுமல்ல, அகிலத்தையே ஓர் ஒழுங்கின்படி நடத்திச் செல்லும் அச்சக்தியின் பெயர் “அல்லாஹ்” என்பதாகும்!

அந்த அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது இஸ்லாம் வேண்டி நிற்கின்ற பிரதான அம்சமாகும். இதுதான் இஸ்லாத்தின் ஆணிவேர். இந்த நம்பிக்கை இல்லாத எவரும் ஒருபோதும் முஸ்லிமாகி விட முடியாது.

உண்மையில் ‘முஸ்லிம்’ என்பது ஓர் இனத்தின் பெயரல்ல; ஒரு சாதியினது அல்லது ஒரு நாட்டவரது பெயரும் அல்ல. எவர்கள் அல்லாஹ்வை முழுமையாக நம்பி, அவனுக்கு வணக்க வழிபாடுகள் செய்து, அவன் கட்டளையிட்டபடி வாழ்கின்றனரோ அவர்களுக்குரிய பெயராகும். அவர்கள் எந்த நாட்டை, சமூகத்தை, இனத்தை, சாதியைச் சேர்ந்தவர்களாயினும் சரியே.

ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! வேறு எவரிடமுமன்றி உங்களிடம் மட்டும் தெரிந்துக் கொள்ளக் கூடியவாறு இஸ்லாத்தைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள்’ என்றார்.

அதற்கு பதிலளித்த நபி (ஸல்) அவர்கள் ‘நான் அல்லாஹ்வை நம்புகிறேன் என்று மொழிந்து, பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நில்லுங்கள்’ என்றார்கள்.
ஆதாரம்: முஸ்லிம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது இந்த பதிலிலிருந்து இஸ்லாத்தில் இறைநம்பிக்கை எந்த அளவு முக்கியமானது எனப் புரிந்து கொள்ளலாம். உண்மையில், இறைநம்பிக்கை இல்லாத இடத்தில் இஸ்லாமே இல்லை என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறைநம்பிக்கையைத் தொடர்ந்து நம்பிக்கை கொள்ள வேண்டிய ஏனைய அம்சங்களாவன:
வானவர்கள்
வேதங்கள்
இறைத்தூதர்கள்
மறுமைத் தினம்
விதி எனும் இறை நிர்ணயம்
என்று விரிவடைந்து செல்லும். இவை ஒவ்வொன்றையும் சுருக்கமாக விளங்கிக் கொள்வது பயனுடையதே

குவைத் இஸ்லாமிய நிலையத்தின் (IPC) வெளியீடாகிய “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என்ற நூலிலிருந்து. ஆசிரியர்: S.M. மன்சூர் அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *