Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » இஸ்லாம் அறிமுகம் » மறுமை நம்பிக்கையின் மற்றொரு அவசியம்!

மறுமை நம்பிக்கையின் மற்றொரு அவசியம்!

மற்றொரு வகையில் பார்க்கும் பொழுதும் இத்தகைய விசாரணை, அதைத்தொடர்ந்து வழங்கும் வெகுமதிகள் அல்லது தண்டனைகள் என்பன உள்ள மறுமை வாழ்வு அவசியமே என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.

இந்த உலகம் தற்காலிகமானது; என்றோ ஒருநாள் முற்றிலும் சின்னபின்னமாகி அழிந்து விடும். அதேபோன்று மனித வாழ்வும் மிகக் குறுகிய காலத்தை உடையது. எனவே, அவனது எல்லா நல்ல செயல்களுக்கும் சமமான வெகுமதிகள் கொடுப்பதும், எல்லாத் தீய செயல்களுக்கும் சமமான தண்டனைகள் கொடுப்பதும் இங்கு சாத்தியமானது அல்ல.

இப்பொழுது இப்படிச் சிந்தித்துப் பாருங்கள்!

நெஞ்சில் நிறைந்த நபிமணி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்த 63 வருட காலத்திலும், ஒரு சின்னஞ்சிறு தவறான காரியத்தில் ஈடுபடவோ அல்லது பாவமொன்றைச் செய்யவோ இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. அவர்கள் மொழிந்த கருத்துக்களும் செய்த பணிகளும் முற்றிலும் நன்மையானவையே. அவர்கள் காட்டிய வழியில் வாழ்ந்த, வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான மக்கள் அவர்களது உன்னதமான பண்புகள் பற்றி உயர்வாகப் பேசுகின்றார்கள். இதன் பின்னரும் அவர்களது வழியில் எண்ணற்ற மக்கள் அணிதிரண்டு அழகு வாழ்வைப் பெற போகின்றார்கள் என்பதற்கான சான்றுகள் ஏராளம்!

ஆனால், அவர்கள் அனுபவித்த துன்பங்களை நினைத்துப் பாருங்கள். அவை ஒன்றா, இரண்டா?

அவர்கள் பசியில் வாடினார்கள்; கற்களால் அடிக்கப்பட்டார்கள்; எதிரிகள் அவர்கள் போகும் பாதையில் முற்களைப் பரப்பினார்கள்; அவர்களுடைய பொன்மேனியில் அழுகி நாற்றமெடுக்கும் ஆட்டுக் குடலைப் போட்டு அசிங்கப்படுத்தினார்கள். இப்படி எண்ணற்ற கொடுமைகள் தொடரவே அவர்கள் தாம் பிரந்து வாழ்ந்த மக்காவை விட்டு மதீனாவுக்குப் போனார்கள்.

அப்படியாயின் அவர்களது வாழ்வு முழுவதும் புனிதம் நிறைந்ததாய், உலகுக்கே வழிகாட்டுதலாய் அமைந்ததற்கான வெகுமதிகள் எதுவும் இல்லையா? துன்பங்கள் தான் வெகுமதிகளா?

அதேவேளை, மறுபக்கம் சோவியத் ரஷ்யாவின் கொடுங்கோலனாக ஆட்சி புரிந்த கம்யூனிஸத் தலைவன் ஸ்டாலின் பற்றி உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அவன் தனது போக்கை ஏற்காதவர்களை கொடூரமாகக் கொலை செய்து தீர்த்துக் கட்டினான் என்பது உலகறிந்த விஷயம். 1935 முதல் 1939 வரை தன்னுடைய போக்குக்கு விரோதமானவரைச் சுத்தம் செய்யும் இயக்கமொன்றை நடத்திச் சென்றான்.அதன் மூலம் லட்சக்கணக்கான சோவியத் மக்களை பல வகையான சித்திரவதைகள் கொடுத்து கொன்று குவித்தான்.

A History of the World Marvin Perry, Houghton Miffin Co., Boston Massachusetts, U.S.A., (1989), Printed in Philippine, Page: 669

மற்றொருவன் ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர். அவன் இந்நூற்றாண்டில் வாழ்ந்த அலுகோசுவன். அவன் கொடூரமான மிருகங்கள் கூட வெட்கப்படுமளவுக்கு லட்சக்கணக்கான மக்களை இருட்டறைகளில் பூட்டி வைத்து, நச்சுப்புகை மூலம் கொலை செய்தான்.

இப்படி மிக குரூரமாக, புதைகுழிகளின் மீது ஆட்சி நடத்திச் சென்ற இந்த இருவரது வாழ்வு சுகபோகமாகவே கழிந்தது.

அப்படியாயின், அவர்கள் செய்த லட்சக்கணக்கான படுகொலைகளுக்கும், பாவச் செயல்களுக்கும் சமமான தண்டனை எங்கே எப்பொழுது கொடுப்பது? அல்லது இன்பங்கள் தான் அவர்கள் செய்துவிட்ட அடாச் செயல்களுக்குப் உரியப் பரிசா?

1993ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி ஸ்பெயினிலுள்ள ஒரு நீதிமன்றத்தில், ஒரு கொலையாளிக்கு 1338 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதன் விபரம் இதுதான்:

1991ம் ஆண்டு மே மாதத்தில் ஒருநாள் ஜுவான் ஜோஸ் சுபெய்தா கபெல்டியா என்பவன் ஒரு வாகனத்தில் வைத்த குண்டு வெடித்ததன் விளைவாக 9 பேர் கொல்லப்பட்டு, 44 பேர் படுகாயம் அடைந்தனர். இதை விசாரணை செய்த நீதிமன்றம் வாகனத்தில் குண்டு வைத்ததற்காக 27 வருடங்களும், கொல்லப்பட்ட 9 பேருக்கும் தலா 27 வருடங்களாக 243 வருடங்களும், படுகாயமடைந்த 44 பேருக்கும் தலா 24 வருடங்களாக 1056 வருடங்களும், இக்கொடுமையில் ஈடுபட்டதற்காக 10 வருடங்களும், அவன் கொண்டு சென்ற வாகனத்தில் கள்ள எண் தகடு பொருத்தி இருந்ததற்காக 2 வருடங்களும் ஆக மொத்தம் 1338 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

Arab News Daily Newspaper in Saudi Arabia (26-6-93) Page: 20.

இந்தத் தீர்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒருவன் ஆகக்கூடினால் இவ்வுலகில் 150 வருடங்களுக்கு மேல் வாழ்வது இல்லை. 150 வருடங்கள் வாழ்வதே அபூர்வம். இதை அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி அறியாமல் இல்லை. எனினும், அப்படி ஒரு தண்டனையை அவனுக்கு வழங்கி விட்டார். இதன் கருத்து என்னவெனில், அவன் செய்த பாவச்செயல் அவன் வாழ்வு காலத்தையும் கடந்து தண்டனை அனுபவிக்கும் அளவுக்குக் கொடுமையானது என்பதுதான். அப்படியாயின் அவன் செத்தபின் எஞ்சும் கால சிறைவாசத்தை எங்கு அனுபவிப்பது? சொல்லுங்கள் பார்க்கலாம்.

இவை சில உதாரணங்களே. நீங்கள் சற்று சிந்தித்தால் இத்தகைய ஆயிரம் உதாரணங்களைக் காண்பீர்கள். இவற்றிலிருந்து மரணத்திற்குப்பின் விசாரணையும், வெகுமதி அல்லது தண்டனை வழங்கலும், அது தொடர்பான நல்லதோ கெட்டதோ ஒரு வாழ்வு அவசியம் என்ற முடிவுக்கு நீங்கள் வருவீர்கள். அன்றி, மனிதனின் இவ்வுலக வாழ்விலான நல்லதும் கெட்டதுமான செயல்களுக்குச் சமமான வெகுமதியோ அல்லது தண்டனையோ வழங்குவது இவ்வுலக அமைப்பில் சாத்தியமில்லை என்பதைத் தர்க்கமேயின்றி ஏற்றுக் கொள்வீர்கள். அப்படித்தானே?

குவைத் இஸ்லாமிய நிலையத்தின் (IPC) வெளியீடாகிய “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என்ற நூலிலிருந்து. ஆசிரியர்: S.M. மன்சூர் அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *