Featured Posts
Home » மீடியா » விவாதம் » விவாதத்தின் பெயரால் அருவருப்பான பேச்சுகள் ஆகுமானதா?

விவாதத்தின் பெயரால் அருவருப்பான பேச்சுகள் ஆகுமானதா?

மவ்லவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை

மக்களுக்கு இஸ்லாத்தை எப்படி எத்திவைக்க வேண்டும். மார்க்கத்தின் தெளிவுகளை எப்படி சொல்லி கொடுக்க வேணடும். என்று அல்லாஹ் குர்ஆன் மூலம் நமக்கு சொல்லித் தருகிறான். ஆனால் அதே குர்ஆன் ஹதீஸின் பெயரால் குர்ஆன் ஹதீஸ் போதனைகளை மீறி கண் மூடித்தனமாக தஃவா களத்தில் உள்ளவர்கள் செயல்படுகிறார்கள் என்றால், அல்லாஹ்வை பயந்து நடுநிலையோடு சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.

மார்க்கம் என்பது அல்லாஹ்விற்கு உரியது, நமது அனைத்து செயல்பாடுகளும் அல்லாஹ்விற்காக இருக்க வேண்டும். தனி மனிதனுக்காக, அல்லது தனி குழுக்களுக்காக, அல்லது தனி அமைப்பிற்காக இருக்க கூடாது. அப்படி இருக்குமாக இருந்தால் அது உண்மையான தஃவாவாக இருக்காது.

மார்க்கத்தின் பெயரால் அடுத்தவரை ஏசுவது, கேலி செய்வது, இழிவாக பேசுவது, மானபங்கப் படுத்துவது, இப்படியான ஜாஹிலியத்தான செயல்பாடுகளை இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கிறது.

அந்த தூதரிடத்தில் அழகிய முன் மாதிரி உள்ளது என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அந்த தூதர் தனது தஃவா களத்தை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை கவனித்து நமது தஃவா களத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

தஃவா இப்படி தான் செய்ய வேண்டும் என்று நமக்கு காட்டி தரப்பட்டுள்ளன, அதை மீறி நாம் செயல் படுவோமேயானால் அது இறைவனுக்காக செய்யப்படும் தஃவாவாக இருக்காது. 

இஸ்லாத்தை பிறரிடம் சொல்லும் போது, அல்லது விவாதம் செய்யும் போது எப்படி சொல்லி அழைக்க வேண்டும் என்று பின் வரும் குர்ஆன் வசனம் தெளிவுப் படுத்துவதை அவதானியுங்கள். “

விவேகத்துடனும், அழகிய உபதேசத்துடனும், இறைவனின் பக்கம் அழைப்பீராக… ! ( 16 – 125 )

அழகிய முறையில் அழையுங்கள் என்று இறைவன் சொல்லியிருக்க அதற்கு மாற்றமாக குர்ஆன், ஹதீஸ், பெயரைப் பயன்படுத்தி அனல் தெரிக்கும் அருவருப்பான வார்த்தைகளை மவ்லவிமார்கள் பேசுகிறார்கள் என்றால், வேலியே பயிரை மேய்வதுப் போல இன்றைய தஃவா களம் சீரழிவதை கண்டு வருகிறோம்?

இன்றைய விவாத மேடைகளில் பிறர் உள்ளங்களை வேதனைப் படுத்தும் சுடும் சொல்லால், அந்த மேடை சமர்களமாக மாறியுள்ளதை காணலாம்..

அருவருப்பான வார்த்தைகள், தனிப்பட்டவரின் அந்தரங்கத்தை தோண்டிப் பார்க்கும் துர்க்குணம், நீயா, நானா, என்ற அநாகரிகமான வார்த்தைகள், வீட்டுப் பெண்களை மேடையில் சீரழிக்கும் அசிங்கங்கள், அதே நேரம் மவ்லவிமார்கள் மாறி, மாறி, பொய் பேசும் இடமாக தஃவா மேடைகள் வலம் வந்துக் கொண்டிருப்பதை கண்டு வருகிறோம். நான் கேட்ட எந்த கேள்விக்கும் இது வரை பதில் சொல்லவில்லை என்று இரண்டு குழுவினரும் பரஸ்பர குற்றச்சாட்டுகள்? இதன் மூலம் பொய்யால் அந்த மேடை அலங்கரிக்கப்படுகிறது.

அரசியல் மேடைகள் தோற்றுப் போகும் அளவிற்கு விவாதம் என்ற பெயரில் அராஜகம்? மார்க்கத்தின் தெளிவைப் கொடுக்கப் போகிறோம் என்ற பெயரில் போட்டி, பொறாமை, பகைமை, பழிவாங்கும் தன்மை வளர்க்கும் இடமாக இன்றைய தஃவா களங்கள் மாறி வருவதை யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

விவாதம் முடிந்தப் பின் நாங்கள் தான் வெற்றிப் பெற்றோம் என்று மாறி, மாறி சொல்லிக் கொண்டு மேலும், மேலும் வெறித் தனமான பகையை வளர்க்கும் நிலையை காண்கிறோம்.

சமீபகாலமாக நடந்து வரும் மார்க்க விவாத அரங்குகளை எடுத்துப் பார்த்தால் சீ என்று போகும் அளவிற்கு வார்த்தைப் பிரயோகங்கள். அடே நீ அயோக்கியன்டா? அடே நீ பொம்புல கள்ளன்டா, அடே நீ ஆம்புல கள்ளன்டா, இவன் ஒரு பேடி, இவன் ஒரு பெட்டை, இவன் ஒரு ஆம்புலையும் விட மாட்டான், இவன் ஒரு ஏமாத்துக்காரன், இவன் ஒரு மோசடிக்காரன், அடே கூறு கெட்டவனே ! அடே மோடயனே! அடே நாய்களா? உங்களை நாய்கள் என்று தான்டா சொல்ல வேண்டும்? என்ற அசிங்கமான வார்த்தைகள் ஒரு பக்கம் தூள் பறக்க, மற்றொரு பக்கம் உங்கள் ஜமாத்தில் உள்ளவர்கள் எல்லாம் பண மோசடி செய்யும் ஊழல் பேர் விழிகள், உங்கள் ஜமாத்தில் உள்ளவர்கள் எல்லாம் பெண்கள் விடயத்தில் பலகீனமானவர்கள். நீ இந்த பெண்ணின் இடுப்பைக் கிள்ளி செருப்படி வாங்கியது ஞாபகம் இருக்கிறதா? உனது மனைவி உத்தமி என்று நிரூபித்துக் காட்ட முடியுமா? என்று அறியாமை பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது? மேற்ச் சுட்டிக் காட்டிய வார்த்தைகள் சும்மா கற்பனையாக எழுதப் பட்டது கிடையாது, மார்க்கம் என்ற பெயரில் மவ்லவிமார்காளால் காரசாரமாக பேசப் பட்டவைகள். இது கதையல்ல நிஜம்?

இதனுடைய உச்சக் கட்டம் அடிதடியில் போய் முடிந்துள்ளதை அனைவர்களும் அறிவார்கள். இதனால் அடி தடி தஃவா என்ற சிறப்பு பெயரையும் பெற்றுள்ளார்கள்?

ரசிகர் மன்றங்கள் போல மார்க்கத்தின் (அமைப்பின்)ஆதரவாளர்கள் இப்படியான பேச்சுக்களையும் சரி காண்கிறார்கள் என்றால் இவர்களின் மார்க்கத்தின் பக்தியா? அல்லது தனி மனித பக்தியா? என்று பார்க்க வேண்டி உள்ளது?

உண்மையில் மார்க்கத்தில் பற்றுள்ளவர்கள் என்றால் இப்படி பேசுபவர்களை விட்டும் ஒதுங்கி விடுவார்கள். ஏன் என்றால் அல்லாஹ் குர்ஆனிலும், நபியவர்கள் ஹதீஸிலும் இப்படி பேசுவதை தடை செய்துள்ளார்கள்.

அல்லாஹ்வும், மேலும் நபியவர்களும், தடை செய்தவற்றை பேசிவர்களுக்கு ஆதரவு கொடுக்க முடியுமா? அதை வரவேற்க முடியுமா? சற்று நிதானமாக சிந்தியுங்கள். என் மகள் பாத்திமா திருடினாலும் கை வெட்டப்படும் என்று சொல்லித் தந்த மார்க்கம் இந்த இஸ்லாம் மார்க்கம். அப்படிப் பட்ட மார்க்கத்தில் மவ்லவிமார்கள் பகிரங்கமாக ஆபசமான, அருவருப்பான, பிறரை கேலி செய்யும் வார்த்தைகள் பேசுவதை எப்படி ஒரு விசுவாசி ஏற்றுக் கொள்ள முடியும்.?

அல்லாஹ் முஃமின்களைப் பற்றி கூறும் போது “முஃமின்கள் வீணான விடயங்களை புறக்கணிப்பார்கள். ( 23 – 19 ) இந்த வசனத்தின் படி இன்றைய தஃவா களம் மார்க்கத்தின் பெயரால் அசிங்கங்களை அரங்கேற்றும் இடமாக உள்ளதாலும், அது வீணான இடமாக இன்று அடையாளப் படுத்தப் பட்டுள்ளதாலும், கட்டாயமாக இறை விசுவாசிகள் அதை விட்டும் ஒதுங்கியே இருக்க வேண்டும். யாருக்காகவோ நாம் நம்மை (நன்மையை) இழந்து விடக் கூடாது.

அதே போல

“முஃமின்கள் விடயத்தில் மானக்கேடான விடயங்கள் பரவுவதை விரும்புவர்களுக்கு இந்த உலகிலும், மறு உலகிலும் வேதனை இருக்கிறது… (24 – 19 )

இதை இன்றைய தஃவா களத்தில் மவ்லவிமார்கள் பிறரை பழிவாங்க வேண்டும் என்ற தீய நோக்கத்திற்காக சர்வ சாதாரணமாக கேவலமாக பேசி வருதை காணலாம்.

இந்த வசனத்தை பயந்துக் கொள்ளக் கூடாதா?

மேலும் “விசுவாசிகளே ! நிச்சயமாக (தவறான) எண்ணங்கள் பாவமாகும். மேலும் துருவித் துருவி ஆராயாதீர்கள். உங்களில் சிலர் சிலரை புறம் பேசி திரியாதீர்கள்…(49 -12 )

இப்படி பல எச்சரிக்கையான வசனங்களை காணலாம்.

ஆனால் இந்த குர்ஆன் வசனங்களை எல்லாம் புறக்கணித்த நிலையில் தவறாக பேசுவது, தவறான நோக்கத்தில் துருவித் துருவி குறைகளை தேடுவது, புறம் பேசுவது, இப்படி மார்க்கத்திற்கு முரணாக மவ்லவிமார்கள் நடந்து கொள்வது வெட்க கேடாக உள்ளது?

ஒரு மனிதனிடம் இருப்பதை அவர் இல்லாத நேரத்தில் பேசுவது தான் புறம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இல்லாததை பேசுவது இட்டுக் கட்டி பேசுவது என்றார்கள்.

இன்று இப்படி பேசுபவர்களிடம் ஏன் பிறரைப் பற்றி அருவருப்பாக பேசுகிறீர்கள் என்று கேட்டால், நாங்கள் அவரிடம் இருப்பதை தானே பேசுகிறோம் என்று கூறுவதை காண்கிறோம். இருப்பதை பேசுவது தான் புறம் என்று தெரியாத அளவிற்கு தஃவா செய்கிறார்கள் என்றால், இவர்களின் தஃவாவில் வெற்றி பெற முடியுமா?

மேலும் “பேசினால் நல்லதை பேசுங்கள், இல்லா விட்டால் மௌனமாக இருங்கள்“ என்று நபி (ஸல்) கூறினார்கள். ஆனால் பேசினால் அசிங்கமாக பேசுவோம், இல்லாவிட்டால் மௌனமாக இருப்போம் என்ற அளவிற்கு தஃவா களம் சீரழிந்துக் கொண்டிருக்கின்றது? பிறருடைய குறைகளை மறையுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் நாங்கள் பிறருடைய குறைகளை மறைக்க மாட்டோம் பகிரங்கப்படுத்தி மானபங்கப் படுத்துவோம் என்று நபியவர்களுக்கே சவால் விடுவதைப் போல இவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. மேலும் ஒரு முஃமினுடைய கண்ணியத்தை களங்கப் படுத்தாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் நாங்கள் களங்கப் படுத்துவோம் என்ற அடிப்படையில் தஃவா மேடைகள் சூடுபிடிக்கின்றன.

பேசினால் நல்லதை பேசுங்கள் இல்லா விட்டால் மௌனமாக இருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் நாங்கள் பேசினால் மோசமாகவும், ஆபாசமாகவும், தான் பேசுவோம் என்ற அவல நிலையைக் காண்கிறோம். பிறருடைய குறையை மறையுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் நாங்கள் மேடைப் போட்டு பிறரின் குறையை கேவலப் படுத்துவோம் எனறு நபியவர்களுக்கே பாடம் நடத்துவதை கண்டு வருகிறோம்.

இப்படி இன்றைய தஃவா களத்தில் தஃவா செய்யும் உலமாக்கள் இருக்கிறார்கள் என்றால் இவர்கள் தஃவா செய்வதற்கு தகுதியானவர்களா? இவர்களுக்குப் பின்னால் நம்பி போக முடியுமா? நல்ல பண்புகள், நல்ல பழக்கங்கள், நல்ல குணங்கள், இல்லாத இவர்களை பின் பற்றுவதை விட ஒதுங்கிக் கொள்வதே நமது ஈமானுக்கு பாதுகாப்பானதாகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *