Featured Posts
Home » இஸ்லாம் » தடுக்கப்பட்டவை » வட்டி » கடனும் அடகு வைத்தலும்

கடனும் அடகு வைத்தலும்

-இம்தியாஸ் யூசுப் ஸலபி-
நாம் நமக்குத் தேவையான பணத்தை அல்லது ஒரு பொருளை ஒருவரிடமிருந்து கடனாகப் பெறும்போது அதற்கு நம்பகமாக நாம் ஏதேனும் ஒன்றை கடன் தருபவருக்குக் கொடுத்து வைப்பதையே அடமானம் அல்லது ஈடுவைத்தல் எனக் கூறப்படும்.

கடன் தருபவர் நேரடியாக சாட்சிகளை நியமித்து எழுத்துபூர்வமாக எழுதி வைத்துக் கொண்டும் தரலாம். அல்லது கொடுக்கும் கடனுக்கு பெறுமதியான ஒரு பொருளை வாங்கி வைத்துக் கொண்டும் கடன் தரலாம்.

கொடுக்கப்படும் கடனுக்கு நம்பகத் தன்மையை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். இந்நோக்கத்தின் மூலம் கடன் கொடுப்பவர் மற்றும் எடுப்பவருக்கிடையே அன்பையும் சிறந்த உறவையும் கட்டியெழுப்பவே இஸ்லாம் முனைகிறது.

இதற்கு மாற்றமாக அடகு வைக்கப்படும் பொருளுக்கு வட்டியை அறவிடுவதை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. இன்று பெரும்பாலும் அடகு வைக்கப்படும் நிலையங்களுக்குச் சென்று மக்கள் தங்களது பெறுமதியான நகைகளை அல்லது வீட்டுப் பத்திரங்களை அடகு வத்து வட்டிக்குக் கடன் பெறுகிறார்கள்.

குறித்த தவணையில் அந்த வட்டியை செலுத்தி நகைகளை மீட்க முடியாது போனால் நகைகள் அருதியாகி விட்டது, அதாவது அந்த வட்டிக்கு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது என்று கூறுகிறார்கள்.

ஒருவர் 10,000 ரூபா தேவை என்பதற்காக 30,000 பெறுமதியான நகைகளை அடகு வத்து 10,000 ரூபா பணத்தைக் கடனாகப் பெறுகிறார் என்றால், அதற்கு 10 வீதம் வட்டி அறவிடப்படுகிறது. இதற்காக ஒரு வருட காலம் அவகாசம் வழங்கப்படுகின்றது. ஒரு வருடம் முடிவடையும் நேரத்தில் வட்டி வீதம் இவ்வளவு செலுத்த வேண்டியுள்ளது அதனை செலுத்தி உங்கள் நகைகளை மீட்டிக் கொள்ளங்கள் என்று அறிவித்தல் (நோட்டீஸ்) வரும் குறித்த தவணையில் அந்த வட்டியையும், எடுத்த 10,000 ரூபாவையும் செலுத்தாவிட்டால் 30,000 ரூபா பெறுமதியான நகைகள் பறிமுதல் செய்யப்படுகிறது. கடன் எடுத்தவர் அனைத்தையும் இழந்து ஒட்டாண்டியாகுகிறார். கடன் கொடுத்தவர் எல்லாவற்றையும் பெற்று ஏப்பமிடுகிறார். ஈடு பிடித்தல் என்ற பெயரில் கொள்ளையடிக்கப்படுகின்றது. மனிதாபிமானமற்ற இச்செயலை இஸ்லாம் கண்டிக்கிறது.

வட்டி எந்த வகையிலும் சம்பந்தப் படாத வகையில் அடகு வைப்பதையே இஸ்லாம் அனுமதிக்கிறது. இதனடிப் படையில் நபி (ஸல்) அவர்களும் அடகு வைத்திருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் ஒரு யூதரிடமிருந்து உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) தமது கவசத்தை அந்த யூதரிடம் அடகு வைத்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல் புகாரி)

அடகு வைக்கப்படும் பொருள் என்பது அமானிதமாகும். அதனைப் பேணி பாதுகாக்க வேண்டும். மாறாக அதனை பாழ்படுத்தவோ அல்லது வேறொருவரிடம் அடகு வைத்து பயன் பெறவோ கூடாது. அடவைக்கும் பொருளில் நகை மட்டுமன்றி துணிமணி போன்றவைகளையும் பெண்கள் அடகு வைப்பர். அதனை உரிமையாளரின் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது.

அதேபோல் கால்நடைகளை (பிரா ணிகளை) அடகுவைக்கும் பழக்கமும் மக்களிடம் உண்டு. அந்த பிராணிகளை பராமரிக்கும் பொறுப்பு கடன் கொடுத்த வருக்கு இருப்பதனால் அவரது பரராமரிப்புக்கேற்ப அதன் பாலைக் கறந்து கொள்ளவும் அதன் மூலம் சவாரி செய்யவும் நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.

“அடகு வைக்கப்பட்ட பிராணியை அதற்கு (பராமரிப்புச்) செலவுக்குப் பகரமாக (அடகு வாங்கிய பின்) வாகனமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பால் தரும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின் அதன் பாலை (அடகு வாங்கியவர்) அருந்தலாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: புகாரி)

அடகு வைக்கப்பட்ட பிராணிகளும் (பராமரிப்புச்) செவுக்குப் பகரமாக அதன் முதுகில் (அடகு வாங்கியவன்) சவாரி செய்யலாம். பால் கொடுக்கும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின் அதற்காக (பராமரிப்புச்) செலவுக்குப் பகரமாக அதன் பாலை (அடகு வாங்கியவன்) அருந்தலாம். சவாரி செய்பவனும் பாலை அருந்துபவனும் தான் அதன் (பராமரிப்புச்) செலவை ஏற்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;. (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: புகாரி)

இதனடிப்படையில் ஒருவர் வாகனத்தை அடகு வைத்தால் அந்த வாகனம் பழுதுபடாமல் இருக்க பயன்படுத்த வேண்டியிருக்கும். அடகு வாங்கியவர் அந்த வாகனத்தை பராமரித்து ஒயில் ஊற்றி, டிசல் அல்லது பெற்றோர் ஊற்றி பராமரிக்கும்போது அந்த பராமரிப்புக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும். பயன்படுத்தும்போது சேதங்கள் விளைவித்தால் அதற்கான மொத்த நஷ்டத்தையும் அவர் பொறுப்பேற்க வேண்டியும் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அசையும் சொத்து, அசையா சொத்து என்ற அடிப்படையில் அதனை பராமரிப்பதில் ஏற்படும் சாதக பாதங்களை அடகு வைப்பவரும் அடகு வாங்கியவரும் பேசி முடிவு செய்யலாம். என்றாலும் அடகு வைக்கப்படும் சொத்தின் மூலம் அதிக லாபத்தையோ பெறுமதியையோ எடுத்துக்கொள்ள முனையக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *