Featured Posts
Home » பொதுவானவை » கல்வி » தமிழக முஸ்லிம்கள் தவற விட்ட ஓர் உலகத்தரம் வாய்ந்த இஸ்லாமிய கல்விக்கூடம்

தமிழக முஸ்லிம்கள் தவற விட்ட ஓர் உலகத்தரம் வாய்ந்த இஸ்லாமிய கல்விக்கூடம்

பயணம் மற்றும் தொகுப்பு : பூவை அன்சாரி

front-u

முன்னுரை:
1980-களில் தமிழகத்தில் ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கியது என கூறலாம். இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக திகழ்கின்ற அல்லாஹ்வின் வேதமாகிய ‘குரான்’ மற்றும் நபிகளாரின் பொன்மொழிகளுக்கு (ஹதீஸ்) ஏற்ப ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற பிரச்சாரம் தொடங்கியது. மார்க்கம் என்ற பெயரால் முஸ்லிம்கள் செய்து வந்த தர்கா வழிபாடு மற்றும்ப கந்தூரி விழாக்கள் போன்றவை இஸ்லாத்தில் இல்லாதவை என்று ஆதாரங்களோடு முஸ்லிம்களுக்கு உணர்த்தியது மட்டுமல்லாமல், அவை ஓரிறை கொள்கைக்கே குந்தகம் விளைவிக்கும் செயல் என்பதனை மிக ஆழமாக சிலர் பிரச்சாரம் செய்ய துவங்கினர். காலம் காலமாக வழிபாடு என்ற பெயரில் தாயத்து தட்டுக்களை வைத்து பிழைப்பு நடத்தி வந்தவர்களுக்கு இது பேரிடியாக அமைந்தது.

ஓரிறை கொள்கையை பிரச்சாரம் செய்பவர்களை நோக்கி அம்புகள் பாய்ந்தன, விமர்சனங்கள் குவிந்தன, பிரச்சாரம் செய்யும் மக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோஷங்கள் முழங்கப்பட்டன,

காவல்துறையினரிடம் புகார்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், அல்லாஹ்வின் உதவியை கொண்டு சிறு கூட்டம் பெரும் கூட்டமாக வளர்ச்சி பெற துவங்கியது.

ஒரு பெரும் மாற்றத்திற்கான காரணங்கள் யாவை, அதற்கான காரணகர்த்தாக்கள் யார் என்பதை கண்டறிய சிலர் முற்பட்டபோது, இந்த பிரச்சாரத்தை முழு முயற்சியோடு செய்பவர்கள் சில “மதனி”மார்கள் என்று தெரிய வந்தது. “மதனி” என்ற வார்த்தை எம் தமிழக முஸ்லீம் சமூகத்திற்கு மத்தியில் அப்போது புதிது. அதனுடைய அர்த்தத்தை தெரிந்துக்கொள்ள அவர்கள் முற்பட்டபோதுதான் “மதினா பல்கலைக்கழகத்தில் தூய இஸ்லாமிய மார்க்கத்தை பயின்று பட்டம் பெற்றவர்களை “மதனி” என்று அழைப்பார்கள் என தெரிய வந்தது.

தமிழக முஸ்லிம்கள் தங்களது வாழ்வாதாரத்தை தேடி வளைகுடா நாடுகளுக்கு 1965 ஆம் ஆண்டுகளில் பயணம் செல்ல துவங்கினர். 1970 களின் துவக்கத்தில் சவுதி அரேபியாவை நோக்கி தமிழ் முஸ்லீம் சமூகம் வேலைகளுக்காகவும், வியாபாரத்திற்காகவும் வந்ததற்கான குறிப்புக்கள் உள்ளன. இப்படி, வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள வந்த மக்கள் ஒருபுறமிருக்க, இஸ்லாமிய கல்வி அறிவை பெருக்கிக்கொள்ளும்  நோக்கில் சிலர் முயற்சி செய்து மதினா பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இணைந்தனர். தமிழகத்திலிருந்து மதினாவில் வந்து கல்வி கற்று, அதனை உலக அளவில் ஏகத்துவ பிரச்சாரமாக கொண்டு சென்ற முக்கியமானோரில் இக்பால் மதனி,கமாலுத்தீன் மதனி போன்றோரின் பங்கு அளப்பெரியது. அதற்கான அடித்தளமாக மதினா இஸ்லாமிய பல்கலைக்கழகம் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

உலக அளவில் பிரசித்திப்பெற்ற ஒரு இஸ்லாமிய பல்கலைக்கழகத்தை முஸ்லீம் மாணவர்கள் சரியான முறையில் பயணப்படுத்தி கல்வி பயில்கிறார்களா என்பதனை கண்டறிய குழுவாக ஒரு பயணம் மேற்கொண்டோம். நாம் சந்தித்த மாணவர்கள் மற்றும் சேகரித்த தகவல்களை முகநூலில் ஒரு சிறு தொடராக வெளியிட்டு முஸ்லீம் மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு, இப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயில முயற்சிப்போருக்கு அமைய வேண்டும் என விரும்புகின்றோம். வாய்ப்புள்ளவர்கள் தங்களது கேள்விகளை அல்லது கருத்துக்களை எம்மோடு முகநூலில் பதிவு செய்யலாம். மேலதிகமான தகவல்களை பெற்றுத்தர நாம் எப்போதுமே நாம் தயாராகவே இருக்கின்றோம். எம் பயணத்தை பொருந்திக்கொண்டு நோக்கத்திற்காக கூலியை கொடுக்க அல்லாஹ்வே போதுமானவன்.

பாலைவனங்களுக்கு நடுவே  அமைந்துள்ள ரியாத் – மதினா நால்வழி சாலை எங்களது வாகனத்தின் (Speed Limit 120 only) வேகத்தை கூட்டவே செய்தது. காலை சுபுஹு தொழுகைக்கு மஸ்ஜிதுந்நபவியை அடைந்துவிட வேண்டும் என்ற நோக்கில் நாம் முன்கூட்டியே புறப்பட்டாலும் – ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த  (வேகத்தை கண்காணிக்கும்) புகைப்பட கருவிகளால் வேகத்தை குறைத்தே ஓட்டி செல்ல வேண்டியிருந்தது. இறுதியில் மதினாவிற்கு 200 கிலோமீட்டருக்கு முன்னதாகவே ஒரு பள்ளியில் தொழுதுவிட்டு பயணத்தை தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் மதினா பல்கலைக்கழகத்தை சென்றடைந்தோம் (இடத்தை சரியான வழியில் சென்றடைய உதவிய கூகிளின் GPS சேவைக்கு எமது மனமார்ந்த நன்றிகள்).

மஸ்ஜித் நபவியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. நம் குழுவில் நம்மோடு பயணம் செய்த மௌலவி. ரஹ்மத்துல்லாஹ் பிர்தவுசி அவர்கள் தமிழகத்திலிருந்து அங்கு படிக்கும்  இரு மாணவர்களுக்கு நாம் வருகின்ற நோக்கத்தை செய்தியாக முன்பே தெரிவித்திருந்ததனால் அவர்கள் நம் வருகையை எதிர்பார்த்து இருந்தனர். வாகனத்தை நிறுத்திவிட்டு நாம் அலைபேசியில் அவர்களை அழைத்தபோது மகிழ்ச்சியோடு எம் அனைவரையும் வந்து வரவேற்று அவர்களது விடுதிக்கு அழைத்து சென்றனர்.  மிக பிரம்மாண்ட நிலப்பரப்பில், கம்பீரமான நுழைவு வாயிலோடு மாணவர்களுக்கான தங்கும் விடுதி,பள்ளிவாசல், பிரம்மாண்ட ஸ்மார்ட் போர்ட் வகுப்பறைகள், நூலகம், உணவு விடுதிகள், உணவகங்கள், விளையாட்டு அரங்கம் என பல்கலைக்கழகத்தின் சூழல் நம்மை ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தியது.

ஏறத்தாழ 171 நாடுகளிலிருந்து இருபது ஆயிரத்திற்கும் (20,000) அதிகமான மாணவர்கள் அங்கு தங்கி  கல்வி பயில்கிறார்கள் என்ற தகவலை அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் சென்னையை சேர்ந்த ஆசிக் என்பவரும் பேரனாம்பேட்டை சேர்ந்த மௌலவி ஹபீஸ் அவர்களும் தெரிவித்தனர். மௌலவி. ஹபீஸ் அவர்கள் உமராபாத்தில் ஏற்கனவே ஆலிம் பட்டத்தை முடித்தவர். மேற்படிப்பிற்காக மதினா பல்கலைக்கழகத்தில் BA இரண்டாம் ஆண்டு பயில்கிறார். மௌலவி ஆசிக் என்பவர் முழு குரானையும் மனனம் செய்தவர். நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று ஓராண்டுக்கு பின்னர் இங்கு இடம் கிடைத்ததாக தெரிவித்தார். அங்கிருக்கும் விடுதியில் மௌலவி ஹபீஸ் அவர்களுடைய அறைக்கு சென்று தேநீர் அருந்திவிட்டு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு தயாராகும் விதமாக குளிக்க தயாரானோம். மாணவர்கள் தங்குவதற்கு மிக சிறந்த விடுதிகளாக அவை இருந்தன. இரண்டு மாணவர்களுக்கு ஒரு அறை என்று அவை இருந்தன. அனைவரும் உபயோகிக்கும் வகையில் பொது குளியல் அறைகளும், கழிவறைகளை இருந்தன. மாணவர்கள் தங்களது துணிகளை துவைத்துக்கொள்ள துவைக்கும் இயந்திரங்களுடன் கூடிய தனி அறை, தேநீர் போன்றவைகளை தயார் செய்வதற்காக அடுப்புக்கள் கூடிய அறை என அணைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு எந்த குறையும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறைகளிலும் இரு வேறு நாட்டவர் அல்லது மொழி தெரிந்தவர்களையே தங்க வைப்பது வழக்கம் என்று மௌலவி. ஹபீஸ் அவர்கள் கூறினார். காரணம் கேட்டதற்கு, அப்போதுதான் அரபு மொழியை பேச முயற்சிப்பார்கள் என கூறினார். அது உண்மைதான் என்பேன். ஏனென்றால், ஒரு மொழியை அறிந்த இருவர் ஒன்றாக தங்கும்போது தங்களது மொழிகளில் பேசுவார்கள். அதனால் தங்களது கல்விக்கு மூலதனமாக இருக்கும் அரபி மொழியை பேசுவதில் சிரமம் ஏற்படலாம். எனவே, விடுதிகளை கையாள்பவர்கள் இந்த யோசனை வரவேற்கத்தக்கது என்று நம்மிடம் கூறினார்.

அன்றைய தினம் ஜும்மாஹ் என்பதால் நாங்கள் அனைவரும் விரைவாக சென்று குளித்துவிட்டு நபிகள் நாயகத்தின் பள்ளிக்கு செல்ல தயாராகி விடுதியை விட்டு வெளியில் வந்தோம். விடுதியின் வாசலில் சற்று தொலைவில் பேருந்துகள் தயார் நிலையில் நின்றுக்கொண்டிருந்தன. சுமார் 10 முதல் 15 பேருந்துகள் பார்த்ததாக நியாபகம். சில மக்கள் அந்த பேருந்துகளில் ஏறி அமர்கின்றனர். விடுமுறை நாளில் பேருந்து இயக்கப்படுவது மிகுந்த ஆச்சரியம். என் அருகாமையில் இருந்த மௌலவி ஹாபிஸ் அவர்களிடத்தில் அதைப்பற்றி கேட்டபோது, அவை பல்கலைக்கழகத்திலிருந்து மஸ்ஜித் நபவிக்கு தொடராக செல்லக்கூடிய பேருந்துகள் என கூறினார். அவை எல்லா நாட்களிலும் இயக்கப்படும் பேருந்துகள் என்றும், யார் வேண்டுமானாலும் அதனை பயன்படுத்தலாம் எனவும் கூறினார். மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அவை தந்தன. அதன் பிறகு அங்கிருந்த பாடசாலைகளுக்கு செல்லாம் என்று அனைவரும் விடுதியிலிருந்து கிளம்பி சென்று பாடசாலைகளின் வாயிலை அடைந்தபோது அவை மிக கம்பீரமான தோற்றங்களோடு காட்சியளித்தன (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன). இங்கு படிக்கும் மாணவர்கள் கீழ் தரப்பட்டுள்ள ஐந்து துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் சேர்ந்து கல்வி பயிலும் வாய்ப்பை அவர்கள் அளித்துள்ளனர்.

madina-u-image2-768x576

1 ஷரியாத்துறை (The Faculty of Shariah)

2 ஹதீஸ்துறை (The faculty of Hadees)

3 குரான்துறை (The faculty of Quran)

4 தாவா (அழைப்பு) (The faculty of Dawah)

5 அரபு மொழித்துறை (The faculty of Arabic Language)

madina-u-image1-768x576

இது அல்லாமல் தற்போது பொறியியல் துறையும் இணைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினார்.

உலகில் பல்வேறு பாகங்களில் இருந்து வந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் விதமாக உதவித்தொகை திட்டத்தை இப்பல்கலைக்கழகம் 1961 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. திறமைமிகுந்த மாணவர்கள் எவரும் பொருளாதாரம் இல்லாத ஒரே காரணத்தால் மார்க்கக்கல்வி பயில்லாமல் இருந்துவிடக்கூடாது என்பதனால், மாணவர்களுக்கான ஊக்கத்தொகையை சவுதி அரசு தொடர்ந்து கொடுத்து, மாணவர்களை ஊக்குவித்து வருவது பாராட்டத்தக்கது. இருப்பதற்கு இடம், உண்பதற்கு உணவு (வெறும் 150 ரியால்கள் ஊக்கத்திகையிலிருந்து இதற்கு கொடுக்கப்பட்டால் தினமும் மூன்று வேலை உணவு தரப்படுகிறது), வருடம் ஒருமுறை விமானப்பயணம், முதுநிலைக்கல்வி (MA or PhD) பயில்பவர்களாக இருந்தால், குடும்பத்தோடு வசிக்கும் வாய்ப்பு மற்றும் அவருடைய மனைவி இஸ்லாமிய கல்வி கற்கவும் ஏற்பாடுகள்  பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருக்கும் சலுகைகள் வரவேற்கத்தக்கது.

இளநிலை பட்டம் படிக்கக்கூடிய ஒவ்வொரு மாணவருக்கும் ஊக்கொத்தொகையாக சுமார் 840 ரியால்கள் (இந்திய ரூபாய் மதிப்பிற்கு 15000/-) வழங்கப்படுகிறது என்பதனை இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன். இந்த அளவிற்கு மார்க்க கல்வியை படிக்க ஊக்கப்படுத்தும் சவுதி அரசிற்கு அல்லாஹ் தனது அருள் மழையை பொழிய வேண்டுகிறேன். இறுதியாக அங்கிருந்து மஸ்ஜித் நபவிக்கு செல்லும் வழியில் நம்மோடு இருந்த இரு ஆலிம் பெருமக்களிடமும் மாணவர்களுக்கான சேர்க்கை சம்மந்தமாக வினவினேன். உலகத்தரம் வாய்ந்த இந்த பல்கலைக்கழகத்தை தமிழக மக்கள் சரியாக பயன்படுத்த தவறி வருகின்றனர் என்றும் அவர் கூறியபோது, நமக்கான பொறுப்பு எது என்பதனை தெரிய முற்பட்டேன்.

இந்தியாவை பொறுத்தவரை ஒரு சில மதரஸாக்கள் மட்டுமே மதீனா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவைகளில் இரண்டு முக்கியமான மதரஸாக்களை நம்மில் ஏனையோர் அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஒன்று, 1894 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற லக்னோவில் அமைந்துள்ள “தாருல் உலூம் நத்வதுல் உலமா” மதரஸா. இரண்டாவதாக, தமிழகத்தின் உமராபாத்தில் அமைந்துள்ள “தாருஸ்ஸலாம்” மதரஸா. இந்த இரண்டு இடங்கள் மற்றும் ஒரு சில மதரஸாக்களிலும் மாணவர்களுக்கான நேர்காணலை அவர்கள் சவுதியிலிருந்து வந்து செய்கின்றனர். அது அல்லாமல் வேறு இடங்களில் அவர்கள் செய்வதில்லை என்றும் கூறினார். வட இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் மதினா பல்கலைக்கழகத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைப்பதோடு, அதனை தங்களது வாழ்நாள் லட்சியமாகவும் கொண்டுள்ளனர். உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருக்கும் முஸ்லீம் மாணவர்களின் வாழ்நாள் கனவாக மதினா பல்கலைக்கழகம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால், தமிழகத்தில் அவ்வாறான ஆர்வமோ, முயற்ச்சிகளோ இருப்பதாக தெரியவில்லை என்று வருத்தத்தோடு கூறினர்.

அவர்கள் இருவரில் ஒருவர் உமராபாத்தில் உள்ள தாருஸ்ஸலாம் மதரஸாவில் கல்வி பயின்றதினால் நேர்காணலில் தேர்வு செய்யப்பாட்டிருந்தார். அது எனக்கு புரிகிறது. ஆனால் மௌலவி ஆசிக் அவர்களே நீங்கள் எவ்வாறு இங்கு தேர்வு செய்யப்பட்டீர்கள் என்று நான் கேட்டேன். அப்போது அவர் தந்த பதில் நமக்கான பல வழிகள் இருப்பதை காட்டியது.

மௌலவி ஆசிக் அவர்களின் தந்தை சென்னை புதுக்கல்லூரியில் கணிதத்துறையில் பேராசிரியராக பணிபுரிகிறார். மௌலவி ஆசிக் அவர்களுக்கு 10 வயதாக இருக்கும்போது பள்ளிப்படிப்பை இரண்டு ஆண்டுகள் நிறுத்திவிட்டு திருக்குர்ஆணை மனனம் செய்ய விருப்பமா ? என கேட்டுள்ளார். ஆசிக் அவர்களும் அதனை ஏற்றுக்கொள்ள, ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் சென்னை, அமைஞ்சாக்கரயில் உள்ள ஒரு குரான் மதரஸாவில் சேர்ந்து மனனம் செய்ய தொடங்கினாராம். இரண்டாண்டுகளில் முழு குரானையும் மனனம் செய்தவுடன், தனது 8 ஆம் வகுப்பு தேர்விற்காக தயாராகி, தேர்வை சந்தித்து அதிலும் வெற்றி பெற்றுள்ளார். குரானை மனனம் செய்த பின்னர் தனது பள்ளிப்படிப்பை 12 ஆம் வகுப்பு வரை தொடர்ந்து தேர்ச்சி பெற்றுள்ளார். பிறகு அவருடைய தந்தை மதினா பல்கலைக்கழகத்தில் படிக்க விருப்பமா என கேட்க, தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, மதினா பல்கலைக்கழக இணையத்தளத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பதிவு செய்துவிட்டு அவரும் அவரது பெற்றோரும் உம்ரா விசாவில் சவூதி அரேபியாவிற்கு வருகைத்தந்து உம்ராவை முடித்துவிட்டு மதினா பல்கலைக்கழகத்தில் நேர்முக தேர்வுக்காக அணுகியுள்ளனர். வருடத்தில் அணைத்து வேலை நாட்களிலும் அங்கு வரும் மாணவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் அப்பல்கலைக்கழக நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேர்முகத்தேர்வை முடித்துவிட்டு ஆசிக் அவர்களும் அவரது பெற்றோரும் ஊருக்கு கிளம்பிவிட்டனராம். கிட்டத்தட்ட ஒரு ஆண்டிற்கு எந்த பதிலும் மதினா பல்கலைக்களத்திலிருந்து வரவில்லையாம். ஊர் திரும்பியதும் இதனை எதிர்பாராமல் தனது பொறியியல் படிப்பை கற்க துவங்கியிருக்கிறார். முதலாமாண்டு நிறைவு செய்யும் தருவாயில் மதினா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்திருப்பதாக கடிதம் வந்துள்ளது. மட்டற்ற மகிழ்ச்சியில் தனது பொறியியல் படிப்பை நிறுத்திவிட்டு இங்கு வந்துவிட்டதாக கூறினார். அல்லாஹ் அவரது எண்ணங்களுக்கும், உழைப்பிற்கும் கூலி வழங்க போதுமானவன். அங்கிருந்த கட்டிடங்களுக்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு மதீனா பல்கலைக்கழகத்தை விட்டு நபிகளாரின் பள்ளிக்கு நாங்கள் அனைவரும் ஜும்மா தொழுகைக்காக பிரியா விடை கொடுத்து புறப்பட்டோம்…

madina-u-image6-768x576

சகோதர, சகோதரிகளே…

நம் பிள்ளைகளை இந்த அற்ப உலகத்திற்காக, வராத படிப்புகளையெல்லாம் வரவழைத்து, அதனை அவர்களிடையே திணித்து வளர்க்கின்றோம். ஆனால்,அல்லாஹ்வயும் அவனது தூதரையும் பின்பற்றும் சமூகமாக அவர்களை நாம்  உருவாக்குகின்றோமா ? என்ற கேள்வியை மறந்து விடுகின்றோம், அல்லது நினைக்க மறுக்கின்றோம். நம் மரணத்திற்கு பின்னர் நமக்காக விட்டு செல்லும் மிகப்பெரிய செல்வமாக பிள்ளை செல்வம் இருக்கிறது என்று நபிகளார் கூறிய பொன்மொழிகளை மறந்து வாழ்கிறோமா ? அவர்களை மார்க்கம் படித்த சிறந்த கல்வியாளர்களாக உருவாக்கிட நாம் முயற்சிக்கின்றோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம். எம் முன்னோர்களின் சமூகத்தில் மாற்றம் என்பது மார்க்கம் படித்த தலைசிறந்த ஆலிம்களால் உருவானது என்பதனை மறுக்க முடியுமா ? அப்படிப்பட்ட தலைசிறந்த மக்களை உருவாக்கி அடுத்த தலைமுறைக்காக விட்டு செல்லும் கடமையை நாம் உணராத வரையில் சமூக மாற்றம் என்பது கானல் நீராகவே செல்லும் என்பதை உணர்ந்து பயணிப்போம். எம் பிள்ளைகளில் ஒருவரையாவது மார்க்கம் படித்த மதனியாக,மக்கியாக, உமரியாக உருவாக்கிட முயற்சிப்போம், உழைப்போம், வெற்றி பெறுவோம். நல்ல செய்திகளை கேட்டு, நல்ல முயற்சிகளை மேற்கொள்ள உங்களுக்கும் எனக்கும் உதவி செய்ய அல்லாஹ் போதுமானவன்.

பயணக்குழுவில் என்னோடு இடம் பெற்றிருந்தோர்:

மௌலவி. ரஹ்மத்துல்லாஹ் பிர்தவ்ஸி, மதுரை நிசார் முஹம்மது, சலீம் ராஜா,

மதினா பல்கலைக்கழக மாணவர்கள்: பேரனாம்பேட்டை ஹபீஸ் மதனி,சென்னை ஆசிக் மதனி

அன்புடன்,

பூவை அன்சாரி

6 comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.
    நான் மதினா பல்கலைக்கழகத்தில் பயில ஆர்வமாக உள்ளேன். இந்த வருடம் இதற்காக விண்ணப்பித்திருந்தேன். எனக்கு எந்த பதிலும் வரவில்லை. மேலும் , இதுப் பற்றி மேல் விபரம் தேவை படுகிறது. எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  2. Ya allah give us this opportunity …

  3. Dear Abdul Salam bai,
    Pls contact me in 00966555090269.
    Let me know what you have done exactly. Based on that I can guide you.

  4. S.Thahir Saifudheen

    சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் பிர்தவ்சி அவர்கள் மதினா இஸ்லாமிய பல்கலையில் பயில வேண்டும் என்ற பேராவல் கொண்டவர். அதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. என்றாலும் அப்பல்கலைகழகம் பற்றிய செய்திகளை தமிழ் சமூகத்திற்கு வழங்கிட உதவியிருக்கிறார். அல்லாஹ் அவருக்கும் குழுவினருக்கும் அருள் பொழிவானாக!
    செ.தாஹிர் சைபுதீன் – பாம்பன்.

  5. Assalamu alaikum.yeanathu 6yrs mahalum, 3yrs mahanum maarka kalviyai pera …yennana vazhi muraihalai seiya veyndum.yenakku vazhi kaatungal.Maarka kalvike muthal idam thanthu…yen pillaihalai valarkka…mihavum aavalaha ullean…in sha Allah.

  6. How i can get the admission in madinah university?. pls some information given me. Iam sri lanka student

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *