Featured Posts
Home » பொதுவானவை » தலையங்கம் » மது , போதை வஸ்துப் பாவனையும் இன்றைய இளைஞர் சமுதாயமும்

மது , போதை வஸ்துப் பாவனையும் இன்றைய இளைஞர் சமுதாயமும்

-எம்.ஐ அன்வர் (ஸலபி)-

போதைப் பொருள் பாவனை நாடளாவிய மட்டத்தில் மோசமாக அதிகரித்து வரும் நிலையில் அதனை ஒழிப்பதற்கான கடும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது. இருந்த போதிலும் நாளாந்தம் போதைப்பொருள் பாவனை குறித்த செய்திகள் வந்தவண்ணமே இருக்கின்றன.

உலகளாவிய ரீதியில் 15-64 வயதுக்கு இடைப்பட்ட 243 மில்லியன் மக்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இவர்களுல் 80% ஆண்களும் 20% பெண்களும் அடங்குவர். கடந்த மூன்றாண்டு காலமாக 6 லட்சம் பேர் போதைவஸ்து பாவனை காரணமாக உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலக நாடுகள் எல்லாம் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்து கட்டுப்படுத்தி வருகின்றன. ஆனால் ஹெரோயின், கஞ்சா போன்ற பொருட்களை விற்பதும் பிற நாடுகளுக்கு கடத்துவதும் இன்று வரையிலும் பெரும் இலாபம் தரும் தொழிலாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

உலகளாவியரீதியில் அதிகரித்துவரும் போதைப்பபொருள் பாவனையினை கட்டுப்படுத்தும் வகையில் 1987 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

போதைப் பொருள் பாவனை ஓர் இஸ்லாமிய நோக்கு
ஜாஹிலிய்யாக்கால மக்கள் மதுபானப் பிரியர்களாக இருந்தனர். இஸ்லாம் மதுபானத்தை கட்டம் கட்டமாக, படிப்படியாக தடைசெய்து, இறுதியில் மதுப் பழக்கத்தை முற்றாக ஒழித்தது. ஆரம்பத்தில் மதுபானத்தில் உள்ள நன்மைகளை விட தீமைகள் அதிகம் என்று அல்குர்ஆன் கூறியது. அடுத்த கட்டமாக போதையுள்ள நிலையில் தொழுகைக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தது. மூன்றாம் கட்டமாக ஸுரா அல்மாயிதாவின் 90, 91ஆம் வசனங்கள் இறங்கின:

”விசுவாசிகளே! மதுபானமும் சூதாட்டமும் விக்கிரக வணக்கமும், அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளிலுள்ளவையாகும். ஆகவே, இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி பெறுவீர்கள்”

”மதுபானத்தின் மூலமும் சூதாட்டத்தின் மூலமும் உங்களுக்கிடையில் விரோதத்தையும் குரோதத்தையும் உருவாக்கவும் அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே இவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா?”

அல்லாஹுதஆலா இந்த இரு வசனங்களிலும் மதுபானத்தையும் சூதாட்டத்தையும் ஷிர்க்குடன் இணைத்துக் குறிப்பிட்டுள்ளான். அறுவருக்கத்தக்க செயல்கள் என்றும் வர்ணிக்கின்றான். மதுவையும், சூதையும் தவிர்ப்பதை வெற்றிக்கான வழி என்றும் கூறுகின்றான். மேலும் இவை இரண்டின் மூலமாகவும் ஏற்படும் சமூக ரீதியான தீங்குகள் என, உறவுகள் அறுக்கப்படுவதையும், பகைமையும் வெறுப்பும் தோன்றுவதையும் குறிப்பிட்டுள்ளான். மேலும் திக்ர், தொழுகை முதலான ஆன்மீக சன்மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தடையாக இவை இரண்டும் அமைகின்றன எனக் கூறி இவற்றினால் விளையும் ஆன்மீகக் கேடுகளையும் அல்லாஹ் விளக்குகின்றான்.

இந்த அல்குர்ஆன் வசனங்களை நபித் தோழர்கள், இறைவிசுவாசிகள் எதிர்கொண்ட விதம் அற்புதமானது. அல்லாஹ்வின் இந்தக் கட்டளையை செவிமடுத்தவுடன் மதுக் கிண்ணங்களை கையில் வைத்துக் கொண்டிருந்தோர் அப்படியே அவைகளை தரையில் தூக்கி எறிந்தார்கள். வீதிகளில் இருந்த மதுபானப் பீப்பாக்களை உடன் கொட்டி வீதிகளில் ஓடவிட்டார்கள்.

இஸ்லாம் மதுபானத்தை ஹராமாக்கியுள்ளமைக்கான காரணம் அது போதையை ஏற்படுத்துகின்றது என்பதாகும். எனவே, ஒரு பானம் எந்தப் பொருளில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் சேர்மானங்கள் எதுவாக இருந்தாலும் அது போதையை ஏற்படுத்தும் என்றிருந்தால் அது ஹராமாகக் கொள்ளப்படும்.

ஒரு முறை நபியவர்களிடம் தேன், அல்லது பார்லி அல்லது கோதுமை முதலானவற்றில் தயாரிக்கப்படும் ஒருவகை மதுபானம் பற்றி வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள், சொற் சுருக்கத்துடனும் பொருட் செறிவுடனும் பின்வருமாறு கூறினார்கள்:

‘போதையை ஏற்படுத்தும் அனைத்தும் ‘கம்ர்’ எனும் மதுபானமாகும். அனைத்து ‘கம்ரும்’ ஹராமாகும்.’ (முஸ்லிம்)

மேலும் அதிக போதை ஏற்படுத்தக்கூடிய மதுபானங்கள் மட்டுமன்றி குறைவாகப் போதையைக் கொடுப்பவையும் ஹராமானவையாகும். இது பற்றி நபி மொழி ஒன்று பின்வருமாறு கூறுகின்றது.

அதிக போதை ஏற்படுத்தக் கூடியதை குறைவாக உட்கொள்வதும் ஹராமாகும்’ (அஹ்மத், அபூதாவுத், திர்மிதி). இந்த வகையில் மதுபானம் போன்றவற்றில் ஓரிரு மிடர்கள் அருந்துவதும் ஹராமானதாகவே கொள்ளப்படும்.

மதுபானம் அருந்துவது மட்டுமன்றி அதை விற்பனை செய்வதும் ஹராமானதாகும். ஒரு முஸ்லிம் மதுபானம் வடிக்கவோ, விற்கவோ, விற்கும் இடத்தில் வேலை செய்யவோ முடியாது. மதுபானம் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள், அதனை வடிப்பவர், விற்பவர், வாங்குபவர், குடிப்பவர், சுமப்பவர் உட்பட மதுபானம் பரிமாறப்படுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களிப்புச் செய்யும் பத்துப் பேரை சபித்தார்கள் (திர்மிதி)

அதிகரித்த போதைவஸ்து பாவனையில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்
வீட்டுச் சூழலிலிருந்து பல பிள்ளைகள் போதை பாவனைக்கு ஆளாகுகின்றார்கள். தந்தை சிகரட் புகைப்பவராக இருந்தால், அந்த சிகரட்டை வாங்குவதற்கு பிள்ளையிடம் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார். அந்தப் பிள்ளை தந்தையுடைய புகைத்தல் “ஸ்டைலை” பார்த்து நாளடைவில் அதனை திருட்டுத் தனமாக புகைக்க ஆரம்பிக்கின்றது.
வீட்டில் வைபவங்களின் போது பியர் மற்றும் மது பாவிக்கப்படும்போது பிள்ளைகள் அவற்றின் ஆபத்துக்களை பொருட்படுத்தாமல் பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர்.

வீட்டுச் சூழலில் பயன்படுத்திய போதைபொருட்களை பிள்ளைகள் நாளடைவில் சமூக சூழலில் சக தோழர்களுடன் தொடர்ந்தும் பழகிக் கொள்ள முனைகின்றனர். சிலவேளை வீட்டுச் சூழலில் சிகரட் புகைத்தல், மது அருந்துதல் போன்றவை இல்லாவிட்டாலும் சமூக சூழலில் அவை பயன்பாட்டில் இருக்குமாயின் அவர்கள் இலகுவில் போதைக்கு ஆளாகிவிடுவார்கள்.

குடும்பத்தில் எல்லா பிள்ளைகளிடமும் பெற்றோர் சரி சமமான அன்பு பாசம் காட்டி அரவணைக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மை வளர விடாமல் காத்துக் கொள்ள வேண்டும். பெற்றோரிடம் உரிய அன்பும் அரவணைப்பும் கிடைக்காத சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் தங்களுக்கு ஏற்படும் மன முறிவை போக்க போதையை பயன்படுத்தி தீர்வு காண முனைகின்றனர்.

பொது வாழ்வில் ஏற்படும் போட்டி சூழலுக்கு முகம் கொடுக்க முடியாமை
சவால்களை சந்திக்க முடியாமல் தோல்வி மனப்பான்மைக்கு ஆளாகும்போது போதையை நாடுகின்றனர். பரீட்சையில் தோல்வி, போட்டி நிகழ்ச்சிகளில் தோல்வி, படிக்க முடியாத பிரச்சினை எனும்போது அவற்றுக்கு தீர்வாக போதையினை பயன்படுத்துகின்றனர்.

மேலே கூறப்பட்ட காரணிகளுக்கு உடந்தையாக மீடியா செயற்படுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். எந்தவொரு பிரச்சினையின் போதும் அதற்கு முகம் கொடுக்க முடியாதபோது போதையை பயன்படுத்துவதையே மீடியா முக்கியமான செய்தியாக காட்சிப்படுத்துகின்றது.
காதல் தோல்வி, குடும்பத் தகராறு, வாழ்வில் தோல்வி, வேலையின்மை, விரக்தி, நண்பர்களுக்கிடையிலான உறவில் விரிசல் போன்ற காட்சிகளில் கதாநாயகன் நாடக் கூடிய முதல் தீர்வு சிகரட் புகைப்பது, மது அருந்துவது என்பதைத்தான் இந்த சினிமா மற்றும் நாடகங்களில் காட்டப்படுகின்றது.

இலங்கையில் போதைப் பொருள் நுகர்வின் நிலை
இலங்கையில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அதிகளவிலான போதைப் பொருள்கள் பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்படுவதாகவும் ஆபத்தான போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரசபையின் (National Dangerous Drugs Control Board) அறிக்கை தெரிவிக்கின்றது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் பிரகாரம் இலங்கையில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போதைப் பொருளுக்கு நிரந்தரமாக அடிமையாகியுள்ளதாக தேசிய போதைத் தடுப்பு சபை எச்சரித்துள்ளது. குறிப்பாக இளைஞர்களிடையே இப்பாவைனை சடுதியாக அதிகத்திருப்பதை அது சுட்டிக் காட்டியுள்ளது.

கடந்த ஆண்டில் போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட 29,790 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 60% ஆனோர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், 39% ஆனோர் 20 வயதை நெருங்கியவர்களாவர். கடந்த ஒரு சில வருடங்களில் சிறுவர்களிடத்தில் குறைந்திருந்த போதைப்பொருள் பாவனை மீண்டும் நாட்டில் தலை தூக்கிவருவதாகவும் புகைத்தல் மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.

உலக அளவில் சுமார் 140 மில்லியன் குடிகாரர்கள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. குடியை எடுத்தால் உலக அரங்கில் இலங்கைக்கு 4 ஆவது இடம் கிடைத்திருக்கிறது. இலங்கையில் தனி மனித மது பாவனை 4 லீற்றராக இருக்க, அதுவே ஆணுக்கு 15.2 லீற்றராக உள்ளது.

சமூக வறுமையுடன் கூடிய அவல வாழ்க்கையை மறக்க குடி ஒரு தீர்வாகக் கையாளப்படுகின்றது. குடி சமூகப் பிரச்சனைக்கு வடிகாலாகின்றது. இதன் விளைவாக நகர்புற குடிசைப் பகுதிகளில் 43 சதவீதமானவர்கள் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர். பெருந் தோட்டப் பகுதியில் இது 55 சதவீதமாக உள்ளது. பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களில் 18 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாக உள்ளனர். இது தவிர இதற்காக அவர்கள் சராசயாக செலவழிக்கும் பணம் நாளொன்றுக்கு 950 1000 ரூபா என்று மதிப்படப்பட்டுள்ளது.

போதை வஸ்துக்கு அடிமையானவர்கள் 50% திருமணமாகாத இளைஞர்களாவர். இவர்களுல் பலர் பல் கலைகழகம், உயர்தர, சாதாரணதர மாணவர்களாவர். 45% திருமணமானவர்கள். இதில் 50% இல் 69% ஆனவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிடுகிறது.

இலங்கையின் மொத்தக் குற்றச் செயல்களில் 38 சதவீதமானவை மது பாவனையால் ஏற்படுகின்றது. அதாவது போதையினால் ஏற்படுகின்றது. கடந்த ஆண்டில் நடந்த மொத்த வாகன விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 2800 ஆகும். இதில் 90 சதவீதமானவை மதுவினால் நடந்துள்ளது. ஒட்டு மொத்தத்தில் கொலை, பாலியல் வன்முறை, விபச்சாரம் போன்றவை தேசிய பண்பாகி கொடிகட்டிப் பறக்கின்றது.

போதைப் பொருள் பாவனையில் இலங்கையில் முதலாம் இடமாக கொழும்பு மாவட்டம் காணப்படுகின்றது. இது 71% ஆக காணப்படுகின்றது. இரண்டாவதாக கம்பஹா மாவட்டம் உள்ளது. இது 22% ஆக காணப்படுகின்றது. மேல் மாகாணமே முதலிடத்தில் காணப்படுகின்றது. 600 000 இற்கு மேற்பட்டவர்கள் கஞ்சா பாவிப்பவர்கள். நாட்டில் கடந்த ஆண்டுகளில் ஹெரொயின் எனும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.

தென்னிலங்கையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் காரணமாக கொழும்பு மற்றும் புறநகர்ப் பிரதேசமெங்கும் போதைப் பொருள் பாவனை காரணமாக சமூகம் பேரழிவைச் சந்திக்கும் நிலையே காணப்படுகிறது.

ஹெரோயின், கொக்கேன் போன்ற சர்வதேச போதைவஸ்துகள் தாராளமாக புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள் தமக்கு அவற்றை வாங்குவதற்கு பணம் கிட்டாத போது திருட்டுச் சம்பவங்களிலும், கொள்ளைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். சில சந்தர்ப்பங்ளில் அதற்காக கொலை வெறியர்களாக மாறும் நிலை கூட ஏற்படுகின்றது.

தென்னிலங்கையைப் போன்று வட-கிழக்கிலும் போதைப் பொருள் பாவனை கூடிக் கொண்டே போகின்றது. அதுவும் இளம் பருவத்தினரே அதிகமாக போதைக்கு அடிமையாக வருகின்றனர். கிழக்கில் மறைமுகமாக இடம்பெற்று வந்த போதைப் பொருள் பாவனை இன்று வெளிப்படையாகவே இடம்பெற்றுவருவதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. முக்கியமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் மாவா, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. மற்றொரு அதிர்ச்சி தரும் தகவல் சில பாடசாலை மாணவிகளும் ‘மாவா’ என்பதில் சிக்கியுள்ளமையாகும்.

வடக்கிலும் போதைவஸ்துப் பாவனை அதிகரித்து வருகின்றது. வடபுலத்தில் போதைப் பொருட்களை தாராளமாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதொரு நிலைமை உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

தலைநகரிலும் கிராமப் புறங்களிலும் முக்கியமாக பிரசித்தி பெற்ற பாடசாலைகளுக்கு அண்மித்த இடங்களில் மறைமுகமான விதத்தில் மாணவர்களுக்கு போதை வஸ்து விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் நகரம், கிராமம், வீதிக்கு வீதியென சகல இடங்களிலும் போல் இன்று போதைப் பொருட்கள் கிடைக்கக் கூடிய நிலையையே காண முடிகிறது.

பொதுவாக இலங்கையில் ஹெரோயின், கஞ்சா, அபின், மர்ஜுவானா ஆகிய நான்கு போதை தரும் பொருட்களே பாவனையிலுள்ளன. இவற்றை 12 சதவீதமானோர் ஊசி மூலமே ஏற்றிக் கொள்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெவிக்கின்றன.

போதையால் ஏற்படும் உடல் , உள பாதிப்புகள்
இன்றைய இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பொருளுக்கு அடிமையாகி கொண்டே உள்ளனர். சாராயம் அருந்துதல் மற்றும் போதை மருந்துகள் உட்கொள்வதால் போதை மயக்கத்தில் ஆழ்த்தி அவர்களுடைய விழிப்புணர்வை தொலைப்பது மட்டுமன்றி உடல் நலத்தை கெடுத்து அவர்களை அழித்து விடுகிறது. போதை பொருள் பாவனையால் இன்றைய இளைஞர்கள் சீரழிந்து கொண்டே செல்கின்றனர்.

மது, போதை வஸ்து மற்றும் சிகரெட்டினால் உடலின் அநேக தொகுதிகள் பாதிப்புக்குள்ளாக்குகின்றது. ஈரல் நிரந்தர பாதிப்பிற்குள்ளாவதால் உடலின் நஞ்சகற்றல் தொழிற்பாடு, குருதியுறைதலிற்கு அவசியமான பதார்தங்களின் தொகுப்பு என்பன இடம்பெறுதல் தடைப்பட்டு போய்விடுகிறது. உடலில் நச்சுப்பதார்தங்களின் சேர்க்கையால் இவ் நச்சுப்பதார்தங்களே பல தொகுதிகளில் அல்லது உடலுறுப்புக்களில் புற்றுநோயைத் தோற்றுவிக்கிறது.

இன்றைய இளைஞர்கள் இவ்வாறான விளைவுகளை பற்றி கொஞ்சம் கூட கவலை கொள்ளாமல் இதனை ஒரு கலாச்சாரமாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள். இதனால் மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியிருத்தல், உளச்சோர்வுக்குள்ளாகல் நித்திரையின்மை போன்ற உளரீதியான பாதிப்புக்களுக்கு நாளடைவில் உள்ளாகின்றனர்.

இதனால் குடும்பத்தில் வன்முறைகள் சிறுவர் துஷ்பிரயோகங்கள், பொருளாதார வீழ்ச்சி மற்றும் கடன் தொல்லை, தற்கொலை, கொலை முயற்சி, பிள்ளைகளின் பராமரிப்பு பிரச்சினைகள், விபத்துக்கள் என்பன இடம்பெறுகின்றன.

அதே போன்று தான் சிகரெட் மதுபானம் ஆகியனவும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான போதைப் பொருட்களாகவுள்ளன. பொதுவாக போதைப் பொருட்களை உபயோகிப்போர் அதன் மூலம் ஒரு வித இன்ப உணர்வு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இவர்களுக்கு ஏற்படும் இந்த இன்பம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்களுக்கே நீடிக்கும் அதன் பிறகு அவர்களுக்கு மன அழுத்தம் எளிதில் கோபமடைதல் நினைவாற்றலில் குறைபாடு போன்ற குணங்களை கொண்டவர்களாக மாறுவர் என தெவிக்கப்படுகிறது.

போதைவஸ்துப் பாவனையும், புனர்வாழ்வும்
இலங்கையில் 12 சதவீதமான போதைப் பொருள் பாவனையாளர்கள் ஊசி மூலமே போதையேற்றுவதாக அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இவர்கள் குடும்பப் பிரச்சினை, கல்வியில் தோல்வியடைதல், வேலையின்மை, காதல் தோல்வி மற்றும் கூடாத சகவாசம் போன்ற பல காரணங்களுக்காக இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.

இலங்கையில் திறந்த பொருளாதாரக் கொள்கை உல்லாசப் பயணிகளின் வருகை போன்ற காரணிகளால் நவீன போதைப் பொருட்கள் நாட்டினுள் பிரவேசிக்க ஆரம்பித்துள்ளன. இந்த போதைப் பொருட்கள் கடந்த ஆண்டுகளில் இலங்கையில் பரவ ஆரம்பித்தாக தெவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் ஹெரோயின் 1 டு, 3 மில்லியன் ரூபா பெறுமதியானது. இதில் 2 கிராமை சுமார் 500 பேர் பாவித்து போதை ஏற்றிக் கொள்ள முடியுமாம். வெளிநாடுகளில் வருடாந்தம் இலட்சக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

உலக போதைப்பொருள் பாவனையாளர்கள் தொடர்பான அறிக்கையின் புள்ளிவிபரப்படி உலகில் 2 கோடி பேர் ஹெரோயின் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் உள்ளனராம்.

புதிதாக அப்பாவனைக்கு அடிமைப்படாமல் இளம் சதாயத்தை பாதுகாப்பது என்ற நோக்கிலே அரசாங்கங்கள் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. என்ற போதும் இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பொறுத்தவரை இப் பாவனையை தடுத்து நிறுத்தப் போதுமானதாக இல்லை. எனவே இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியமாகிறது.

மேற்கத்திய நாடுகளில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை தற்போது சதவிகிதத்தின் அடிப்படையில் குறையத் தொடங்கியுள்ள நிலையில் ஆசிய நாடுகளில் போதைப்பொருளுக்கு அடிமையானோரின் வீதம் அதிகமாகிக் கொண்டே செல்கின்றமை துரதிஷ்டமானதாகும். இதற்குக் காரணம் மேலைத்தேய நாடுகளில் ஏற்பட்டுள்ளதைப் போன்ற விழிப்புணர்வுகள் நம் நாடுகளில் இல்லாமல் போனமையாகும்.

ஒட்டு மொத்த சதாயத்தையும் பாதிக்கவல்ல இந்த போதைப் பொருளை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் அனைத்தும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக போதைப் பொருள் கடத்தலுக்காக சில நாடுகள் மரண தண்டனையையும் சட்டமாகப் பிரயோகித்து வருகின்றன.

மது பாவனையை குறைக்க முற்படும் திணைக்களங்களாக இலங்கை பொலீஸ் திணைக்களம், பொலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, மது வரித் திணைக்களம், சிறைச்சாலைகள், சுங்கவரித் திணைக்களங்கள், அரச திணைக்களங்கள் காணப்படுகின்றன.

இதே போல் இலங்கையில் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதற்காக போதைத் தடுப்பு பணியகம் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த முறைகேடான பழக்கத்தை முற்று முழுதாக ஒழிக்க அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.

இந்த போதைப் பொருள் பாவனை சிறுபராயத்திலியே ஏற்பட்டு விடுவதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக அவர்கள் தனிமையை விரும்பினால் அடிக்கடி பணம் கேட்டால், படிப்பில் நாட்டம் குறைந்தால் நடத்தைகளில் மாற்றம் தெரிந்தால் வழக்கத்திற்கு மாறாக நடவடிக்கை தென்படுமாயின் அவர்களை சற்று கூர்ந்து அவதானிப்பது சிறந்தது.

முக்கியமாக இன்றைய இளம் சதாயத்தினர் இணையதளத்தை தங்கள் உலகமாகக் கருதி வாழ்வதால் அடிக்கடி அவர்கள் பார்க்கும் இணைய தளங்கள் குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்கவேண்டும். இவற்றைத்தவிர சிறுவயதிலிருந்தே கற்றலில் அதிக நாட்டத்தை ஏற்படுத்தல் பத்திரிகை வாசித்தல் விளையாடுதல் இறைவழிபாடு செய்தல் போன்ற பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுத்தல் சிறந்தது. இதன் மூலம் எங்கள் குழந்தைகளை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம்.

மாறாக அவர்கள் யாராயினும் போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டார்கள் எனின் மருத்துவர்களினதும் உள வளத்துணையாளர் களினதும் ஆலோசனைப்படி செயலாற்றுவது நல்ல பலனைக் கொடுக்கும். இது அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிச் செல்லாமல் இருக்கவும் வழி சமைக்கும்.

புகைத்தல் பாவனைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது போன்று போதைப் பொருள் பாவனையையும் தடுக்கச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இருக்கும் சட்டத்தை கடுமையாக்குவதன் அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

பொலிஸார், பொது மக்கள் தொடர்பு செயற்பட்டுத் திட்டத்தின் மூலம் நாடு தழுவிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சமுதாயச் சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தவறினால் எமது தேசத்தினதும், சமுதாயத்தினதும் எதிர்காலம் பேரழிவுக்குள் தள்ளப்பட்டதாகவே அமைந்து விடும்.

ஆறுமணி நேர அற்ப சந்தோஷத்திற்காக தங்கள் வாழ்கையை பணயம் வைக்கும் இளைய சதாயத்தினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை மீட்பது நம் அனைவரதும் கடைமையாகும். எனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போதை பொருள் பாவனையில்லாத சமூகத்தை உருவாக்குவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *