Featured Posts
Home » இஸ்லாம் » தடுக்கப்பட்டவை » பித்அத் » பித்அத்களைப் புரிந்துகொள்வதற்கான விதிமுறைகள் – 2

பித்அத்களைப் புரிந்துகொள்வதற்கான விதிமுறைகள் – 2

பித்அத்தின் வரைவிலக்கனம்

  • மொழி ரீதியான வரைவிலக்கனம்
  • முன்னுதாரணமின்றி புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்று

ஆதாரம்: தூதர்களில் நான் புதியவரல்ல – அல்குர்ஆன் 46:9

இங்கு புதியவர் என்பதற்கு “பித்அன்” என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.

உமர் (ரழி) அவர்கள் ஜமாஅத்தாக தராவீஹ் தொழுகையை தொழுமாறு கூறிவிட்டு இது சிறந்த பித்அத்தாகும் என்றார்கள். ஏனெனில் மார்க்கத்தில் அக்காரியம் பித்அத் அல்ல. மாறாக நபியவர்கள் செய்துவிட்டு பின்பு விட்டதை உமர் ரழி அவர்கள் மீண்டும் புத்துயிர் ஊட்டினார்கள்.

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பித்அத் என்பது பாராட்டத்தக்கது மற்றது கண்டனத்துக்குரியது என இரு வகைப்படும். சுன்னாவுக்கு உடன்பாடானது பாராட்டுக்குரியதாகும். அதற்கு மாற்றமானது கண்டனத்திற்குரியதாகும்.

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள், இங்கு, பொதுவாக உலக விடயங்களில் உருவாக்கப்படும் புதிய விடயங்களையே குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் மார்க்கத்தில் சுன்னாவுக்கு உடன்பாடானதை பித்அத் என வர்ணிக்க முடியாது.

இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “மொழிரீதியான கருத்தையே சில அறிஞர்களது வார்த்தைகளில் இடம்பெற்றுள்ள நல்ல பித்அத் என்ற பிரயோகம் குறிக்கும். மார்க்க ரீதியான பித்அத்தையல்ல.”
உமர் (ரழி) அவர்களது வார்த்தையை அதற்கு உதாரணமாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எனவே உமர் (ரழி) அவர்களது இந்தப் பிரயோகத்தை வைத்துக்கொண்டு மார்க்கத்தில் புதிய வணக்கங்களுக்கு நல்ல பித்அத் எனப் பெயர் சூட்டுவது மிகப்பெறும் தவறும் அநியாயமும் மக்களை ஏமாற்றுவதுமாகும்.

பித்அத் என்ற வார்த்தைக்கு ஒட்டகம் களைப்படைதல் என்ற ஒரு கருத்தும் மொழிவழக்கில் உண்டு.

பித்அத்தின் மார்க்க ரீதியான வரைவிலக்கணம்

எவ்வித ஆதாரமுமின்றி மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படுபவை. (ஆதாரம்: பித்அத் சம்பந்தமாக இடம்பெற்றுள்ள 4 நபிமொழிகள்)

  1. நபியவர்கள் கூறியதாக இர்பாழ் பின் ஸாரியா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் ஒரு பகுதி: புதுமையான காரியங்களை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு புதுமையும் பித்அத்தாகும். பித்அத் ஒவ்வொன்றும் வழிகேடாகும்.
    ?அபூ தாவூத் 4607
  2. ஜாபிர் பின் அப்தில்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: நபியவர்கள் தமது உரைகளில் பின்வருமாறு கூறுவார்கள்: வார்த்தைகளில் மிக உண்மையானது அல்லாஹ்வின் வார்த்தையாகும். வழிகாட்டல்களில் சிறந்தது நபியவர்களது வழிகாட்டலாகும். காரியங்களில் மிகக் கெட்டது புதுமைகளாகும். ஒவ்வொரு புதுமையும் பித்அத்தாகும். பித்அத் ஒவ்வொன்றும் வழிகேடாகும்.
    ?முஸ்லிம் 867வழிகேடு ஒவ்வொன்றும் நரகிலேதான்.
    ?நஸாஈ1575

    மேற்கூறிய இரு நபிமொழிகளின் அடிப்படையில் அனைத்துப் புதியவைகளுமே பித்அத் என்பது நிரூபனம் ஆகின்றது. ஆனால் தடைசெய்யப்படும் புதுமை என்ன என்பதை கீழ்வரும் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு செய்ய முடியும்.

  3. ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழி:
    எமது இந்தக் காரியத்தில் யார் புதிதாக ஒரு விடயத்தை உண்டாக்குவாரோ அவ்விடயம் மறுக்கப்பட வேண்டியதாகும்.
    ?முஸ்லிம் 1718
  4. வேறு ஒரு அறிவிப்பில் எமது மார்க்கத்தில் இல்லாத ஒரு காரியத்தை யாராவது மேற்கொண்டால் அதுவும் மறுக்கப்பட வேண்டியதாகும்.
    ?புகாரி 2697, முஸ்லிம் 1718

தடைசெய்யப்பட்ட இந்த பித்அத் 3 நிபந்தனைகளை உள்ளடக்கியதாகும். இவற்றில் ஏதாவது ஒன்றேனும் இல்லையென்றாலும் அது பித்அத் அல்ல.

முதலாவது – புதுமை

இரண்டாவது -இப்புதுமை மார்க்கத்துடன் இணைக்கப்படல்

பின்வரும் மூன்று முறைகளின் மூலமாக அது மார்க்கமாகக் கருதப்படும்.
1- அல்லாஹ் விதியாக்காதவற்றின் மூலம் அவனை நெருங்குதல்
2- மார்க்க ஒழுங்கை மீறல்
3- பித்அத்துக்கு இட்டுச்செல்லும் காரணிகளாக அமைதல்

இந்த இரண்டாவது நிபந்தனையின் படி புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உலக கண்டுபிடிப்புக்கள் மொழிரீதியான பித்அத்தில் உள்ளடங்கினாலும் மார்க்க ரீதியான பித்அத்துகளில் உள்ளடங்கமாட்டாது.

அது போன்றே புதிதாக உருவாகியுள்ள பாவச் செயல்களும் இதில் உள்ளடங்காது. ஏனெனில் அவை மார்க்கத்தின் பெயரால் செய்யப்படுவதில்லை. ஒரு புதிய பாவம் மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றப்பட்டாலே தவிர.

மூன்றாவது- இப்புதுமைக்கு பிரத்யேக அல்லது பொதுவான எவ்வித ஆதாரமும் இல்லாதிருத்தல்

எமது மார்க்கத்தில் இல்லாத என்று ஹதீஸில் இடம்பெறும் வார்த்தைகளிலிருந்தே இந்நிபந்தனை பெறப்பட்டுள்ளது.
இந்நிபந்தனை பலராலும் தவறாகப் புரியப்பட்டு மார்க்கம் என்ற பெயரில் பல அநாச்சாரங்கள் முஸ்லிம் சமூகத்தில் ஊடுருவியுள்ளன. மார்க்கத்தில் பொதுவாக அனுமதிக்கப்பட்ட காரியங்களுக்கு நேரம் காலம் இடம் எண்ணிக்கையை இதனடிப்படையில் நிரணயிப்பதில் தவறில்லை என்பதாக நினைத்ததன் விளைவே இது. ஆனால் உண்மை அதுவல்ல. இந்த நிபந்தனையின் கருத்து யாதெனில் மார்க்கத்தில் மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள விடயங்களை உயிர்பிப்பது பித்அத் அல்ல என்பதையே குறிக்கின்றது.
உதாரணமாக தானதர்மம் செய்வது வரவேற்கப்பட்ட ஒரு விடயம். ஒரு தேவை ஏற்படும் போது ஒருவர் முன்வந்து அதனை ஆரம்பித்து வைத்தால் அது அந்நேரத்தில் அல்லது அச்சமுதாயத்தில் புதிதாக இருந்தாலும் அது பித்அத் அல்ல.

இது போன்றுதான் உமர் (ரழி) அவர்கள் தராவீஹ் தொழுகையை ஒரு இமாமின் தலைமையில் ஜமாஅத்தாக நிறைவேற்றியமை. இது நபியவர்களது காலத்தில் சில நாட்கள் இடம்பெற்று பின்பு கடமையாகிவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக விடுபட்டுப் போன ஒரு சுன்னா. இதனை உமர் (ரழி) அவர்கள் புத்துயிரூட்டி அறிமுகப்படுத்தியது பித்அத் அல்ல. ஏனெனில் மார்க்கத்தில் உள்ள ஒரு விடயம்.

ஆனால் இதை வைத்துக்கொண்டு ஸலவாத்துக்கு சிறப்பு உள்ளது என்பதற்கு அதானுக்கு முன் ஸலவாத் சொல்வது, துஆ வரவேற்கப்பட்டது ஏன்பதற்காக நபிவழியில் இல்லாத துஆ அமைப்புக்களை குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் எல்லோரும் பேணுதலாக செய்து வருவது போன்ற காரியங்களை அனுமதிக்க முடியாது.

ஏனெனில் இவ்வாறான காரியங்கள் மார்க்கத்தில் உள்ளதல்ல. ஸலவாத் இருந்தாலும் அதனை அதானுக்கு முன் கூறுவது மார்க்கத்தில் உள்ளதல்ல. துஆ வரவேற்கப்பட்டது என்றாலும் அதனைத் தொழுகைக்குப் பின்னால் கூட்டாகச் செய்வது நபிவழியில் உள்ளதல்ல.

இம்மூன்று நிபந்தனைகளையும் கூர்ந்து கவனிக்கும் போது பித்அத்துகளுக்கே உரிய 4 பண்புகளைக் காணலாம்.

✅முதலாவது:
குறிப்பிட்ட ஒரு பித்அத்தான காரியத்தைத் தடுக்கும் விதத்தில் பிரத்தியேகமான ஆதாரம் எதுவும் இருக்கமாட்டாது. அது கூடாது என்பதற்கு பொது ஆதாரங்களே பயன்படுத்தப்படும். எனவே குறிப்பிட்ட பித்அத்தைத் தடைசெய்யும் ஆதாரத்தைக் காட்டுமாறு வாதிடுவது அறியாமையாகும். மாறாக செய்பவர்களே பிரத்யேக ஆதாரத்தைக் காட்டவேண்டும்.

✅இரண்டாவது:-
பித்அத் எப்பொழுதுமே மார்க்கத்தின் நோக்கங்களுக்கு முரணாகவே காணப்படும்.

✅மூன்றாவது:
பித்அத் என்பது நபியவர்கள் காலத்திலோ அல்லது நபித்தோழர்கள் காலத்திலோ இல்லாதவற்றை மேற்கொள்வதன் மூலமே ஏற்படும்.

✅நான்காவது:
மார்க்க விடயங்களைப் போன்ற ஒரு மாயை அதில் காணப்படும்.
உதாரணமாக: அதன் ஆதாரம், அதன் அமைப்பு

இதனால்தான் பலர் பித்அத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே ஒரு விடயத்துக்கு பிரத்யேக ஆதாரம் முன்வைக்கப்படாதவரை அதனைத் தவிர்ந்துகொள்ள வேண்டும்.

பித்அத் எனத் தீர்மானிப்பதற்கு அவசியமற்ற விடயங்கள்:

1- பித்அத்தில் எவ்விதமான பயனும் இருக்கக் கூடாது என்பது நிபந்தனையல்ல.

2- தொடர்ந்து செய்யவேண்டும் என்பதும் நிபந்தனையல்ல.

3- வணக்கம் என்ற நோக்கத்தில் செய்யப்பட வேண்டும் என்பதும் நிபந்தனையல்ல. உதாரணம் காபிர்களுக்கு ஒப்பாகுதல்.

4- பித்அத்தைச் செய்பவர் தவறான நோக்கமுடையவராக இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. மாற்றமாக பித்வாதி சில வேளை நல்ல நோக்கத்துடன் இருந்தாலும் அவரது செயல் வழிகேடு என அழைக்கப்படும்.
உதாரணமாக : இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நன்மையை நாடும் எத்தனையோ பேர் அதனை அடைவதில்லை.

5- எவ்விதமான ஆதாரமும் இருக்கக் கூடாது என்ற நிபந்தனை கிடையாது. சில வேளை பித்அத்துகளுக்கு பொது ஆதாரங்கள் காட்டப்படலாம். ஆனால் அது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

அதிகமானவர்கள் மஸ்லஹா முர்ஸலாவான காரியங்களை பித்அத் என்பதாகக் கருதி, தாம் செய்யும் பித்அத்துகளுக்கு ஆதாரமாக அதனை முன்வைக்கின்றனர். உதாரணமாக நபித்தோழர்கள் குர்ஆனை ஒன்று திரட்டியமை. எனவே அவையிரண்டுக்கும் மத்தியிலுள்ள வேற்றுமையையும் ஒற்றுமையையும் புரிந்துகொள்வது, இச்சிக்கலையும் குழப்பத்தையும் தீர்க்கலாம்.

“மஸ்லஹா முர்ஸலா” என்றால் என்ன?

மஸ்லஹா என்றால் நலன் அல்லது பயன் என்பதாகும்.

சில நலன்கள் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டது. உதாரணமாக மதுவின் மூலம் கவலையைத் தீர்ப்பது சூதாட்டத்தின் மூலம் பெறும் வருமானத்தை தர்மம் செய்வது இவைகள் நலவுகளாக இருந்தாலும் மார்க்கம் அதனைத் தடைசெய்துள்ளது. ஆனால் இன்னும் சில நலன்கள் தடைசெய்யப்படவில்லை. உதாரணமாக தொழுகையாளிகளுக்கு பள்ளிவாயில்களில் வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்துவது, கல்வி கற்பதற்கு வசதிகளை ஏற்படுத்துவது. கல்வியில் ஆர்வமூட்டுவதற்காக பரீட்சைகள் நடாத்துவது சான்றிதல்கள் வழங்குவது. இவைகளுக்கே மஸ்லஹா முர்ஸலா (தடைசெய்யப்படாத நலவுகள்) எனக் கூறப்படும்.

பித்ஆவுக்கும் மஸ்லஹா முர்ஸலாவுக்கும் (ஆதாரமோ தடையோ அற்ற நலன்) இடையிலுள்ள தொடர்பு

இரண்டுக்கும் மத்தியிலுள்ள ஒற்றுமை

1- இரண்டுமே நபியவர்கள் காலத்தில் நடைபெறாதவை குறிப்பாக மஸ்லஹா முர்ஸலா.

சில பித்அத்துகள் நபியவர்களின் காலத்தில் நடைபெற்றுள்ளது. உதாரணமாக நபியவர்களது வணக்கவழிபாடுகளைப் பற்றி கேட்டறிவதற்காக வந்த மூன்று நபர்களின் சம்பவம். அதில் ஒருவர் இரவு பூராக நின்று வணங்குவதற்கும் மற்றொருவர் திருமணத்தைத் தவிர்ப்பதை வணக்கமாக்குவதற்கும் மற்றொருவர் தொடர்ந்து நோன்பு நோற்பதற்கும் முடிவு செய்திருந்தார். இதனை நபியவர்கள் தடைசெய்தார்கள். தஹஜ்ஜுத் தொழுகைதானே அல்லது நோன்புதானே என்று அனுமதிக்கவில்லை. மாறாக இவ்வாறான காரியங்கள் தனது சுன்னத்தைப் புறக்கணிப்பதாகும் என எச்சரிக்கை செய்துவிட்டு இவ்வாறு செய்பவர்கள் தன்னைச் சார்ந்தவர்கள் அல்ல எனவும் கூறினார்கள்.

இங்கு நபியவர்கள் செய்யவில்லை என்பதைத் தான் கவனிக்க வேண்டுமே தவிர நல்ல விடயம்தானே என்பதை மாத்திரம் பார்க்கக் கூடாது என்பதே மேலுள்ள ஹதீஸின் மூலம் நாம் பெறும் முக்கிய படிப்பினையாகும்.

2- பெரும்பான்மையான பித்அத்துகளுக்கும், அனைத்து மஸ்லஹா முர்ஸலாவுக்கும் பிரத்யேக ஆதாரம் இருக்கமாட்டாது. பொதுப்படையான ஆதாரங்களே அவைகளுக்கு காட்டப்படும்.

இரண்டுக்கும் மத்தியிலுள்ள வேற்றுமை

1- பித்அத் வணக்க வழிபாடுகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்களிலே உருவாக்கப்படும். மாறாக மஸ்லஹா முர்ஸலா புரிந்து கொள்ளமுடியுமான காரண காரியங்களுடன் சம்பந்தப்படும்.

2- பித்அத் செய்யக் கூடியவர்கள் தாம் வணக்கத்தில் ஈடுபடுகிறோம் என்ற எண்ணத்தில் செயல்படுவார்கள். அதுவே தமது முதல் குறிக்கோளாகக் கருதுவார்கள். ஆனால் மஸ்லஹா முர்ஸலா என்பது ஒரு குறிக்கோளாகக் கொள்ளப்படாமல் மார்க்கத்தில் வேண்டப்பட்ட உயரிய ஒரு இலக்கை அடையும் சாதனமாகவே கருதப்படும்.

3- பித்அத் மக்களின் மீது சுமையை அதிகரிக்கும் அதே வேளை மஸ்லஹா முர்ஸலா சுமையை குறைக்கும் அல்லது அவர்களது அத்தியவசியமான ஒரு விடயத்தைப் பாதுகாக்கும்.

4- பித்அத் மார்க்கத்தின் நோக்கங்களை சின்னாபின்னப்படுத்தும் அதே வேளை மஸ்லஹா முர்ஸலா அவைகளுக்குட்பட்டு காணப்படும்.

5- மஸ்லஹா முர்ஸலா என்பது நபியவர்களது காலத்தில் நடைபெறாததற்கு காரணம் அதற்கு வாய்ப்பு இல்லாமை அல்லது வாய்ப்பிருந்தும் தடை காணப்பட்டமையாகும். ஆனால் பித்அத்தைப் பொருத்தவரை சந்தர்ப்பம் இருந்தும், தடை இல்லாமலிருந்தும் அது நிகழ்ந்திருக்கமாட்டாது.

அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி
PHD Reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *