Featured Posts
Home » பொதுவானவை » எச்சரிக்கை » குதிகால் கழுவப்படாவிட்டால் நரகம் [நரகத்தில் சில காட்சிகள்- 06]

குதிகால் கழுவப்படாவிட்டால் நரகம் [நரகத்தில் சில காட்சிகள்- 06]

நரகத்தின் கொடூரங்களையும், நரகத்தில் பாவிகள் அனுபவிக்கும் தண்டனைகளையும், எந்த, எந்த பாவங்களினால் நரகத்தில் பாவிகள் வேதனை அனுபவிப்பார்கள் என்று தொடராக உங்கள் சிந்தனைக்கு முன் வைத்து வருகிறேன். அந்த வரிசையில் இந்த தொடரிலும் சில பாவங்களை நினைவுப் படுத்த உள்ளேன்.

எனக்கு மாறு செய்தால்…
“அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்’ என்று பதிலளித்தார்கள். (புகாரி 7280)

நபியவர்கள் கொண்டு வந்த இந்த தூய மார்க்கத்தை நாம் அணு, அணுவாக வாழ்க்கையில் பின் பற்ற வேண்டும். நபியவர்கள் காட்டித் தராத எந்த செயல்களையும் நல்லது தானே, செய்தால் என்ன தப்பா, ஏன் கூடாது, பரம்பரை, பரம்பரையாக பின் பற்றி தானே வருகிறோம், என்று கூறி நபியவர்கள் காட்டித்தராத செயல்பாடுகளை செய்தால், அதுவே நம்மை நரகத்திற்கு தள்ளி விடும் என்பதை தான் நபியவர்கள் மேற்ச் சென்ற ஹதீஸில் நமக்கு கடுமையான முறையில் எச்சரிக்கிறார்கள்.

எனவே நாம் அமல் செய்வதற்கு முன், நாம் செய்யும் அமல்களை நபியவர்கள் நமக்கு வழிக்காட்டியுள்ளார்களா என்று முதலில் பார்க்க வேண்டும். அடுத்தது அந்த அமலை எவ்வாறு செய்யும் படி நமக்கு நபியவர்கள் வழி காட்டியுள்ளார்கள் என்பதை கவனித்து நாமும் அமல்களை வாழ்க்கையில் நடை முறைப்படுத்த வேண்டும்.

குதிகால் கழுவப்படா விட்டால் நரகம்…
“அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். சாலையிலிருந்த ஒரு நீர்நிலைக்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது சிலர் அஸ்ர் (தொழுகை) நேரத்தில் அவசரப்பட்டனர். (அதற்காக) அவசர அவசரமாக அங்கத்தூய்மை (உளூ) செய்தனர். நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்த போது அவர்களுடைய குதிகால்களில் தண்ணீர் படாமல் சொட்டையாக அவை காட்சியளித்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான். உளூவை முழுமையாகச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.(முஸ்லிம் 405)

வுளு என்பது மிக முக்கியமான ஓர் அமலாகும். அந்த அமலை நபியவர்கள் காட்டி தந்த பிரகாரம் சரியான முறையில் ஒழுங்காக செய்ய வேண்டும். வுளுவுடைய ஒவ்வொரு உறுப்புகளும் பரிபூரணமாக கழுவப்பட வேண்டும். சிலர் நடந்து கொண்டிருக்கும் ஜமாஅத் தொழுகையில் எப்படி சரி போய் சேர்ந்து விட வேண்டும் என்பதற்காக வுளுவை அவசர. அவசரமாக செய்வார்கள். இப்படி செய்யும் போது சில நேரங்களில் கழுவப்பட வேண்டிய வுளுவுடைய உறுப்பில் தண்ணீர் சரியாக படாமல் போய் விடலாம்.இதனால் நரகத்திற்கு போக வேண்டிய அவல நிலை ஏற்ப்பட்டு விடும். நல்லது செய்ய போய் நரகத்திற்கு போக வேண்டிய நிலை ? குறிப்பாக நமது காலை கழுவும் போது நன்றாக தேய்த்து, கால் விரல்களுக்கு இடையில் சிறிய விரலை உள்ளே விட்டு நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். வுளு என்ற முக்கியமான அமலில் நமது அலச்சியமே நரகத்திற்கு காரணமாகிவிடும்.

இரவு தொழுகை…
3738. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் உயிரோடியிருந்த காலத்தில் ஒருவர் கனவொன்றைக் காண்பாராயின் நபி(ஸல்) அவர்களிடம் விவரித்துச் செல்வார். எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் விசாரித்துச் சொல்வதற்காகக் கனவொன்று காண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் மணமாகாத ஓர் இளைஞனாக இருந்தேன். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளி வாசலில் நான் உறங்குவது வழக்கம். (ஒரு நாள்) நான் கனவில் இவ்வாறு கண்டேன்; வானவர்கள் இருவர் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சுற்றுச் சுவரைப் போன்று அதற்கு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. மேலும் கிணற்றின் இரண்டு பக்கங்களிலுமுள்ள கல்தூண்களைப் போன்று இரண்டு தூண்கள் அதற்கும் இருந்தன. அப்போது அதில் எனக்குத் தெரிந்த மக்கள் சிலர் இருந்தனர். உடனே நான், ‘நரகத்திலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் கோருகிறேன்.’ என்று பிரார்த்திக்கலானேன். அப்போது (என்னை அழைத்து வந்த) அந்த வானவர்கள் இருவரையும் வேறொரு வானவர் சந்தித்தார். அவர் என்னிடம், ‘இனி ஒருபோதும் நீங்கள் பீதியடையமாட்டீர்கள்’ என்று கூறினார். நான் இதை (என் சகோதரியும் நபி – ஸல் அவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் விவரித்துச் சொன்னேன். (புகாரி 3738)

மேலும்
ஹஃப்ஸா(ரலி) அதை நபி(ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் (இப்னு உமர்) ஒரு சிறந்த மனிதர். அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுதால் (நன்றாயிருக்கும்)’ என்று கூறினார்கள்.

(இதை அறிவித்த அப்துல்லாஹ் இப்னு உமர் – ரலி – அவர்களின் மகன்) சாலிம்(ரஹ்), ‘நபி(ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னதிலிருந்து) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) இரவில் சிறிது நேரம் மட்டுமே உறங்குபவராயிருந்தார்கள்’ என்று கூறுகிறார்கள். (புகாரி 3739)

எனவே இரவு தொழுகையை சரியாக ஒருவர் தொழது வந்தால் நரகத்தை விட்டும் பாதுகாக்கப்படுவார் என்று நபியவர்கள் இந்த செய்தியை மைய்யப்படுத்தி சொல்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *