Featured Posts
Home » இஸ்லாம் » அல்ஹதீஸ் » சுன்னா » ளுஹா தொழுகை -ஒரு கண்ணோட்டம்

ளுஹா தொழுகை -ஒரு கண்ணோட்டம்

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர் –

நபியவர்கள் காட்டித் தந்த பல சுன்னத்தான தொழுகைகளில் ளுஹா தொழுகையும் முக்கியமானதாகும். ளுஹா தொழுகையின் எண்ணிக்கைகள், அதுனுடைய ஆரம்ப நேரம், அதனுடைய முடிவு நேரம் என்பதை ஹதீஸின் வழியில் விடை காண்போம்.

ளுஹா தொழுகையின் ஆரம்ப நேரம்…
சூரியன் உதயமாகி பத்து நிமிடத்திற்கு பிறகிலிருந்து சூரியன் நடு உச்சிக்கு வருவதற்கு பத்து நிமிடத்திற்கு முன் உள்ள நேரம் வரை தொழலாம்.
ளுஹா என்றாலே முற்பகல் என்று பொருளாகும். குர்ஆனில் 93ம் அத்தியாயத்தில் முற்பகல் மீது சத்தியமாக என்று அல்லாஹ் கூறுகிறான். தமிழில் முற்பகல் என்று சொல்லும் போது காலை சூரியன் உதயமாகி நண்பகல் (12மணி வரை) உள்ள நேரத்திற்கு சொல்வதாகும்.

ளுஹா தொழுகையும், நபியவர்களும்…
குறிப்பிட்ட சில நபித் தோழர்கள் நபியவர்கள் ளுஹா தொழவில்லை என்று அறிவித்து இருந்தாலும், நபியவர்கள் ளுஹா தொழுகை தொழுததற்கான பல ஆதாரங்கள் மிகத் தெளிவாக உள்ளன. அவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

ளுஹா தொழுகை எட்டு ரக்அத்துகள்…
‘மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு, நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்றிருந்தபோது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குத் திரையிட்டார். நான் நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அப்போது, ‘யாரவர்?’ எனக் கேட்டார்கள். ‘நான் அபூ தாலிபின் மகள் உம்முஹானி’ என்றேன். உடனே, ‘உம்முஹானியே! வருக!’ என்றார்கள். நபி(ஸல்) குளித்து முடித்த பின்னர் ஒரே ஆடையைச் சுற்றியவர்களாக எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அவர்கள் தங்கள் தொழுகையை முடித்ததும் ‘இறைத்தூதர் அவர்களே! என்னுடைய சகோதரர் நான் அடைக்கலம் அளித்திருக்கும் ஹுபைராவின் மகனைக் கொலை செய்ய எண்ணியுள்ளார்’ என்று நான் கூறியபோது ‘உம்மு ஹானியே! நீ அடைக்கலம் அளித்திருப்பவருக்கு நாங்களும் அடைக்கலம் அளிக்கிறோம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இச்சம்பவம் முற்பகலில் நடந்தது’ என உம்மு ஹானி(ரலி) அறிவித்தார். (புகாரி 357,- 4292 முஸ்லிம் 562,- 563)

மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் ளுஹா தொழுகை எட்டு ரக்அத்துகள் தொழலாம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

ளுஹா நான்கு ரக்அத்துகள்…
“ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் நான்கு ரக்அத்கள் (ளுஹா) தொழுவார்கள்; அல்லாஹ் நாடிய அளவு கூடுதலாகவும் தொழுவார்கள். இதை முஆதா அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம் 1297)

மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் ளுஹா தொழுகை நான்கு ரக்அத்துகள் தொழலாம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

ளுஹா தொழுகை இரண்டு ரக்அத்துகள்…
“அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
‘ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும். ‘ளுஹா’ நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும். உறங்குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுது விடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் தோழர்(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்!’ (புகாரி 1981)

மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் ளுஹா தொழுகை இரண்டு ரக்அத்துகள் தொழலாம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

எனவே ளுஹா தொழுகையின் எண்ணிக்கை குறைந்தது இரண்டு ரக்அத்துகள், கூடியது எட்டு ரக்அத்துகள் தொழலாம் என்பதை நாம் புரியலாம். ஆகவே சுன்னது தானே என்று இந்த ளுஹா தொழுகை விடயத்தில் அலச்சியமாக இருந்து விடாமல், நாளாந்தம் தொடராக தொழக் கூடிய பழக்கத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
சுன்னத்தான, மற்றும் நபிலான வணக்கங்களின் மூலம் அல்லாஹ் நம்மை நெருங்குவதாக நபியவர்கள் உறுதிப் படுத்தியுள்ளார்கள். அல்லாஹ் மிக நன்கு அறிந்தவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *