Featured Posts
Home » பொதுவானவை » கல்வி » மார்க்கத்தை யாரிடமிருந்து கற்க வேண்டும்

மார்க்கத்தை யாரிடமிருந்து கற்க வேண்டும்

-மவ்லவி M. பஷீர் ஃபிர்தவ்ஸி-

இஸ்லாம்,  கல்விக்கும் ஞானத்திற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கக்கூடிய மார்க்கம். கல்வியாளர்களைத்தான் அல்லாஹ் அவனது மார்க்கத்தைப் பாதுகாக்கவும் அதனை பரப்புவதற்கும் தேர்ந்தெடுத்துள்ளான்.

அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.. மாறாக! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது – அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 29:48,49)

இந்த வசனத்திற்கு விளக்கமாக இமாம் இப்னு கஸீர் அவர்கள் கூறினார்
குர்ஆன் என்பது ஏவல், விலக்கல், செய்திகள் என்று சத்தியத்தை தெரிவிக்கக்கூடிய தெளிவான வசனங்களாகும். இதனை அறிஞர்கள் தங்களது உள்ளத்தில் பாதுகாத்து வைத்துள்ளார்கள் இக்குர்ஆனை மனனம் செய்வதையும், ஓதுவதையும், இன்னும் அதனை விளக்குவதையும் அல்லாஹ் அவர்களுக்கு இலகுவாகியுள்ளான். (தஃப்ஸீர் இப்னு கஸீர்)

அல்லாஹ்வின் மார்க்கத்தில் கற்றவருக்கு கல்லாதவர்களைவிட சிறப்புள்ளது:
(நபியே!) நீர் கூறும்: “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.” (அல்குர்ஆன் 39:9)

கல்வியாளர்களுக்கு உயர்ந்த அந்தஸ்து
அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 3:18)

கல்வியாளர்களின் பண்பாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தைப்பற்றிக் கூறிக்காட்டுகிறான்

நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் – ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம்.(அல்குர்ஆன் 35:28)

அறிஞர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சுகிறார்கள் என்பதனால் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் அறிவில்லாமல் பேசமாட்டார்கள் இன்னும் நேர்வழியில் உறுதியாக இருப்பார்கள் அதில் தடம்புரள மாட்டார்கள் அதே போன்று மனோ இச்சையின் அடிப்படையில் மார்க்க விஷயத்தில் எதையும் பேசமாட்டார்கள்.

இந்த வசனத்திற்கு விளக்கமாக இமாம் இப்னு கஸீர் அவர்கள் கூறினார்
அல்லாஹ்வை உண்மையாக அஞ்சுவோர்கள் அவனை அறிந்த உலமாக்கள் தான் ஏனெனில் மகத்துவமும் மேன்மையும் உடையவனும் யாவற்றையும் அறிந்தோனும் முழுமையான பண்புகளுக்குரியவனும் ஆகிய அல்லாஹ்வை முழுமையாக அறிவதன் மூலம் அவரிடம் அல்லாஹ்வைப்பற்றிய அச்சம் அதிகமாகவும் முழுமையானதாகவும் ஆகிறது. (தஃப்ஸீர் இப்னு கஸீர்)

கல்வியை கல்வியாளர்களிடம் தான் கற்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் அது பயனற்ற கல்வியாகவும் சில போது சோதனையாகவும் அமைந்து விடும் எனவே தான் நபி ﷺ அவர்கள் இவ்வாறு கூறினார்கள்

நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ் அறிவித்தார். (நூல் ஸஹீஹுல் புஹாரி 100)

உலமாக்களின் உயிரைக்கைப்பற்றுவதன் மூலம் தான் அல்லாஹ் பூமியில் இருந்து கல்வியை பறிப்பான் கல்வியைப் பறிப்பது என்பது மறுமையின் அடையாளங்களில் ஒன்று எனவும் நபி அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள் அதுமட்டுமல்லாமல் கல்வியாளர்கள் இல்லாத போது மக்கள் மடையர்களை தங்கள் தலைவர்களாக ஆக்கிக்கொள்வார்கள் என்றும் கூறினார்கள் அத்தகைய காலத்திலா நாம் வாழ்கிறோம் என்று நிகழ்கால நிகழ்வுகள் நம்மை சிந்திக்கவைக்கின்றன முறையான கல்வி இல்லாதவர்கள், ஒழுக்கமும், இறையச்சமும் இல்லாதவர்கள் இன்றைக்கு மக்களுக்கு தலைவர்களாக மாறி மனம் போன போக்கில் மார்க்கத்தை வளைத்தொடித்து மார்க்கத் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் இதனால் தானும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுக்கக்கூடிய காட்சியை காணமுடிகிறது.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَيَأْتِي عَلَى النَّاسِ سَنَوَاتٌ خَدَّاعَاتُ، يُصَدَّقُ فِيهَا الْكَاذِبُ، وَيُكَذَّبُ فِيهَا الصَّادِقُ، وَيُؤْتَمَنُ فِيهَا الْخَائِنُ، وَيُخَوَّنُ فِيهَا الْأَمِينُ، وَيَنْطِقُ فِيهَا الرُّوَيْبِضَةُ» ، قِيلَ: وَمَا الرُّوَيْبِضَةُ؟ قَالَ: «الرَّجُلُ التَّافِهُ فِي أَمْرِ الْعَامَّةِ»إبن ماجه 4036 مسند أحمد 7912

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள் மக்களுக்கு மோசடியான ஒரு காலம் வர உள்ளது அதில் பொய்யனை உண்மைப்படுத்துவார்கள் உண்மையாளனை பொய்யனாக்குவார்கள் மோசடியாளனை நம்புவார்கள் நம்பிக்கையாளனை மோசடியாளன் என்று கருதுவார்கள் தகுதி இல்லாதவர்கள் பேசுவார்கள் என்று கூறினார்கள் அப்போது தகுதி இல்லாதவர்கள் யார் என்று கேட்கப்பட்டது அதற்கு அறிவில்லாத மனிதன் பொதுவான விஷயத்தில் கருத்துச்சொல்வதாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் அபூஹுரைரா நூல் சுனன் இப்னி மாஜா 4036,முஸ்னத் அஹ்மத் 7912.

பேச்சாற்றலும் நாவன்மையும் மட்டுமே உள்ள அனைவரும் கல்வியாளர்கள் அல்ல அவர்களிடமிருந்தெல்லாம் கல்வியை எடுத்துக் கொள்ளக்கூடாது.

இமாம் முஹம்மத் பின் சீரீன் அவர்கள் கூறினார்கள் நிச்சயமாக இந்த கல்வியென்பது தீன் ஆகும் எனவே, உங்களுடைய மார்க்க ஞானத்தை எவரிடமிருந்து பெறுகிறீர்களோ அவரை உற்றுக் கவனியுங்கள். பார்க்க ஸஹீஹ் முஸ்லிம் முன்னுரை

கல்வியை உறுதியான கொள்கைப்பிடிப்பும், இறையச்சமும், சரியான அகீதாவும்,தெளிவான (மன்ஹஜு) வழிமுறையும் உள்ளவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ளவேண்டும் (ஃபாஸிக்) தீயவன், பித்அத்வாதி வழிகேட்டின் பால் அழைக்கக் கூடியவனிடமிருந்து கல்வியை கற்கக்கூடாது .

அல்லாஹ் கூறுகிறான்
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். 49:6

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَحْمِلُ هَذَا الْعِلْمَ مِنْ كُلِّ خَلْفٍ عُدُولُهُ , يَنْفُونَ عَنْهُ تَحْرِيفَ الْغَالِينَ , وَانْتِحَالَ الْمُبْطِلِينَ , وَتَأْوِيلَ الْجَاهِلِينَ»الطبراني599 السنن الكبرى للبيهقى 20911

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் இந்தக் கல்வியை நீதமானவர்கள் சுமந்துகொள்வார்கள் அவர்கள் வரம்பு மீறுவோர்களின் கையாடல்களையும் பொய்யர்களின் புரட்டு வாதங்களையும் மடையர்களின் தவறான விளக்கங்களையும் நீக்குவார்கள். அறிவிப்பாளர் அபூஹுரைரா நூல் தப்ரானி 599 அஸ்ஸுனனுல் குப்ரா லில் பைஹகி 20911

இமாம் மாலிக் அவர்கள் கூறினார்கள்

1. அறியாமையைப் பகிரங்கப்படுத்தும் மடையன்,

2. மனோ இச்சையின் பால் அழைக்கும் அழைப்பாளன்,

3. மக்களிடம் பேசும் போது பொய் பேசுபவன் என்று அறியப்பட்டவன். இவன் நபிமொழியைக்கூறுவதில் பொய் சொல்லாவிட்டாலும் சரியே.

4. நல்லவர், வணக்கசாலி, சிறந்தவர் ஆனாலும் ஹதீஸ்களை சரியாக மனனமிடாதவர் ஆகிய நான்கு நபரிடமிருந்து கல்வியை எடுத்துக்கொள்ளாதீர்கள்.

நூல் இமாம் தஹபி அவர்களின் ஸியரு அஃலாமின் நுப்லா 7/162

நாம் நமது உயிரை விட அதிகமாக நேசிக்கும் இந்த மார்க்கத்தைச் சரியான முறையில் கற்கவேண்டும் நேர்மையானவர்களிடமிருந்து கற்கவேண்டும் வழிகேடர்களிடமிருந்தோ, ஒழுக்கமும், நேர்மையும் இல்லாதவர்களிடமிருந்தோ கற்கக்கூடாது மறுமை வெற்றியைக் குறிக்கோளாகக்கொண்டு தான் நாம் இந்த மார்க்கத்தைப் பின் பற்றுகிறோம் நிச்சயமாக மறுமை வெற்றியென்பது இந்த மார்க்கத்தைக்கொண்டு தான் என்பதை நினைவில் கொள்வோம் நமது இரத்தமும், சதையைவிட அதிகமாக அல்லாஹ்வின் மார்க்கத்தை நேசிப்போம்.

يَا مُقَلَّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِيْ عَلَى دِيْنِكَ

உள்ளங்களைப் புரட்டுபவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தில் நிலைத்து நிற்கச் செய்வாயாக!
நேர்வழியை விட்டு தடம்புரளாமல் இருப்பதற்கு துவா கேட்குமாறு நபி ﷺ அவர்கள் நமக்கு வழிகாட்டினார்கள்

عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ: «بِسْمِ اللَّهِ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ»سنن أبي داود5486 سنن الترمذي 3427 سنن إبن ماجه 3884

முஃமின்களின் தாய் அன்னை உம்மு ஸலமா அவர்கள்
நபி ﷺ அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது வானத்தை நோக்கி பார்வையை உயர்த்தி

اللَّهُمَّ أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ، أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيَّ

என பிரார்த்திப்பார்கள் என்று கூறினார்கள்.
நூல்: சுனன் அபீதாவூத் 5094,சுனனுத் திர்மிதி 3427, சுனன் இப்னி மாஜா 3884

இதன் பொருள்: அல்லாஹுவே நான் வழிகெடுவதைவிட்டும் வழிகெடுக்கப்படுவதைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் இன்னும் சறுகுவதை விட்டும் சறுக்கப்படுவதை விட்டும்,அந்நியாயம் செய்வதை விட்டும் செய்யப்படுவதை விட்டும் அறியாதவனாக ஆகுவதை விட்டும் அறிவிலியாக ஆக்கப்படுவதை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன் என்பதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *