Featured Posts
Home » நூல்கள் » இறைநேசர்களிடம் உதவி தேடலாமா? தொடர் » 4. அவ்லியாக்களின் பொருட்டால் தேவைகளைக் கேட்குதல்

4. அவ்லியாக்களின் பொருட்டால் தேவைகளைக் கேட்குதல்

மார்க்கத்தில் ஓரளவு விபரமுள்ள இன்னும் சிலர் அவ்லியாக்களிடம் நேரடியாக கேட்டுப்பெறுவது தான் பாவம். ஆனால் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாக பிரார்த்திக்கவில்லை, மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம் என்கின்றனர். இவ்வாறு கேட்பதற்கு மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தால் நம்மைவிட நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் நன்றாக அறிந்திருப்பார்கள். அதிலும் உமர் (ரலி) அவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவர்களின் மார்க்க ஞானத்தை எவராலும் குறைவாக எடை போட்டுவிட முடியாது. அத்தகைய உமர் (ரலி) அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் மழைக்காக நபி (ஸல்) அவர்களின் பொருட்டால் இறைவனிடம் கேட்டிருக்கலாம். ஏனென்றால் அப்பாஸ் (ரலி) அவர்களைவிட நபி (ஸல்) அவர்களே இறைவனிடம் மிக நெருக்கமானவர்கள். அந்தஸ்திலும் உயர்ந்தவர்கள். அவ்வாறு உமர் (ரலி) அவர்கள் கேட்காததிலிருந்து மறைந்தவர்களின் பொருட்டால் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பது தெளிவாக விளங்குகிறது. ஒருக்கால் அனுமதிக்கப்பட்டது உமர் (ரலி) அவர்களுக்கு தெரியாமலிருந்தால், இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள அப்பாஸ் (ரலி) அவர்களோ இதை அறிவிக்கும் அனஸ் (ரலி) அவர்களோ உமர் (ரலி) அவர்களுக்கு உணர்த்தியிருப்பார்கள். நம்மைவிட அதிகம் மார்க்கத்தை அறிந்து செயல்பட்ட நபித்தோழர்களான உமர் (ரலி) அப்பாஸ் (ரலி) அனஸ் (ரலி) போன்றவர்கள் அதுபோல் செய்து நமக்கு வழிகாட்டியிருப்பார்கள். அவ்வாறு செய்யாததிலிருந்து அவ்லியாக்களின் பொருட்டால் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

‘ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு தொழ வைத்தார்கள். பின்பு எங்களை நோக்கி நீண்ட உரை நிகழ்த்தினார்கள். அப்பொழுது கண்கள் கண்ணீரை சொறிந்தன. இதயங்கள் அச்சத்தால் நடுங்கின. ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! இது விடை பெறுபவரது உரையாக அல்லவா தெரிகிறது. எனவே தாங்கள் எதைக் குறித்து எங்களுக்கு கட்டளையிடுகிறீர்கள் என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுமாறு உங்களுக்கு கட்டயிடுகிறேன். ஒரு அபிஸீனிய அடிமை உங்களுக்கு தலைமையேற்றால் கூட அவருக்கு செவிமடுங்கள். எனக்கடுத்து நீங்கள் நிறைய கருத்துவேற்றுமைகளை சந்திப்பீர்கள். அப்போது எனது வழிமுறைகளையும், நேர்வழி நடந்த எனது கலீஃபாக்களின் நடைமுறைகளையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்! புதுமைகளை விட்டொழியுங்கள்! ஒவ்வொரு புதுமையும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடே! என்று கூறினார்கள்’ அறிவிப்பாளர்: இர்பாழ் இப்னு ஸாரியா (ரலி) நூல்: அபூதாவூத் (3991), இப்னுமாஜா (42), அஹ்மத் (16521), தாரமி (95).

மேற்கண்ட ஹதீஸில் தனக்குப்பிறகு பின்பற்றுவதற்கு தகுதியான அபூபக்கர், உமர், உஸ்மான், அலி ரலியல்லாஹு அன்ஹும் ஆகிய நால்வரை குறிப்பிட்டு அவர்களை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது.

மாறாக அவ்லியாக்களின் பொருட்டால் கேட்கலாம், அவ்வாறு கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கூறுபவர்கள்:

* மேற்கண்ட ஹதீஸை நிராகரிக்கின்றனர்.

* உமர், அப்பாஸ், அனஸ் ரலியல்லாஹு அன்ஹும் போன்ற நபித்தோழர்களுக்கு தெரியாதது தங்களுக்கு தெரிந்து விட்டதாக வாதிடுகின்றனர்.

* அவ்வாறு எண்ணுவதன் மூலம் நபித்தோழர்களை குறைத்து மதிப்பிட முனைகின்றனர். நவூதுபில்லாஹி மின்ஹா. இத்தவற்றை விட்டும் நாம் நீங்கிக் கொள்ள வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக! ஆமீன்!

ஆய்வு தொடரும்

One comment

  1. Dear

    Assalamu Alaikum

    Really Great, but in Tamil Nadu all Ulamas are doing the same, are they real muslims

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *