Featured Posts

இஸ்லாத்தின் அடிப்படைகள்

தூய இஸ்லாத்திற்கு இரண்டு அடிப்படைகள் உண்டு. ஒன்று: லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை. நபி (ஸல்) அவர்கள் தூதராவார்கள்) என்ற திருக்கலிமாவை வாழ்க்கையில் மெய்ப்பித்துச் செயல்படுத்திக் காட்டுதல். அதிலும் குறிப்பிடத்தக்கது அல்லாஹ்வுடன் யாரையும் இணையாக்காமல் இருத்தல். அப்படியென்றால் அல்லாஹ்வை நீ நேசிப்பது போல வேறு எந்த சிருஷ்டியையும் நேசிக்கலாகாது. அல்லாஹ்வை நீ ஆதரவு வைத்து வாழ்வது போல வேறு எந்த சிருஷ்டிகளின் மீதும் ஆதரவு வைக்கலாகாது. அல்லாஹ்வுக்கும் அஞ்சுவது போல பிறருக்கு அஞ்சலாகாது. இவற்றில் ஏதேனும் ஒன்றில் இறைவனுடன் படைப்பினங்களைச் சமமாகக் காட்டினால் நிச்சயமாக நீ தவறி விட்டாய். அல்லாஹ்வின் அன்புடனும், அவன் பயத்துடனும், மற்றொரு பயத்தையும், அன்பையும் சேர்த்து இணைத்து விட்டாய். இங்கே இணை வைத்தல் தலை தூக்குகிறது. இந்நேரம் ஆகாயங்களின், பூமியின் இறைவன் ஒருவன் தான் என்று நீ நினைத்தாலும் உன் நம்பிக்கை பழுதாகி விட்டது.

அன்று அரபிகளில் இருந்த முஷ்ரிக்குகள் வானங்களையும், பூமியையும் படைத்தவன் அல்லாஹ் ஒருவன் என்றுதான் ஏற்றிருந்தனர். “(நபியே!) வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவன் யார்? என்று நீர் அவர்களை கேட்பீராயின் அதற்கு அவர்கள், அல்லாஹ் என்றே நிச்சயமாக கூறுவார்கள்” (31:25, 39:38). அப்படியிருக்க அல்லாஹ் அவர்களை முஷ்ரிக்குகள் என்று கூறினான். மேலும் திருமறை கூறுகிறது: “(நபியே!) அல்லாஹ்வுடன் வணக்கத்துக்கு உரிய மற்றொருவரும் இருப்பதாக நீங்கள் சாட்சி கூற முடியுமா? என்று கேளும். அப்படி நான் சாட்சி கூற மாட்டேன் என்று நீரும் கூறும்” (6:19)

“அல்லாஹ்” அல்லாதவற்றை அவனுக்கு இணையாக எடுத்துக் கொண்டு அல்லாஹ்வை நேசிப்பது போல அவற்றையும் நேசிப்போர் மனிதர்களில் பலர் இருக்கின்றனர். எனினும் விசுவாசிகளே! அல்லாஹ்வையே அதிகமாக நேசியுங்கள்” (2:165). இவர்கள் அல்லாஹ்வை நேசிப்பது போல பிற சிருஷ்டிகளை நேசித்து வாழ்வதினால் முஷ்ரிக்குகளாக மாறி விட்டார்கள்.

மற்றொரு ஆயத்தில் இறைவன் கூறுகிறான்: “…அல்லது அவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாகிக் கொண்டிருக்கும் தெய்வங்கள் அவன் படைத்திருப்பதைப் போல எதையும் படைத்திருக்கின்றனவா? (என்றும் நபியே நீர் கேளும்). அவ்வாறாயின் இவ்வுலகை சிருஷ்டித்தவன் யார் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்படலாம்” (13:16).

ஆக்கவோ, அழிக்கவோ முடியாத ஒன்றைத்தான் இவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாக அமைத்து விட்டார்களேத் தவிர வேறொன்றுமில்லை. தம் புதுக் கடவுள் எதையும் செய்யதென்று வாயார ஏற்றதற்கு அப்பாலும் அத்தகைய சக்தியற்ற சிருஷ்டிகளை இவர்கள் ஏன் சிபாரிசுக்கு வேண்டி நடுவராக எடுக்க வேண்டுமென்று இறைவன் கேட்கிறான்.

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “(இணை வைப்போர்) தங்களுக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதுடன் இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை என்றும் கூறுகின்றனர். (எனவே நபியே!) நீர் கூறும். வானங்கள், பூமியில் அல்லாஹ்வுக்குத் தெரியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா? அவன் மிகப் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிக்க உயர்ந்தவன்” (10:18).

ஸூரத்துல் யாஸீனில் வருகிறது: ஹபீபும் நஜ்ஜார் என்ற நல்ல மனிதர் தம் பட்டணத்து மக்களிடம் கூறுகின்றார்: “என்னைப் படைத்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன நேர்ந்தது? அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள். அவனையன்றி (மற்ற எதனையும்) நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? ரஹ்மான் எனக்கு யாதொரு தீங்கிழைக்க கருதினால் இவற்றின் சிபாரிசு (அதில்) ஒன்றையுமே என்னை விட்டு தடுத்து விடாது. அதிலிருந்து என்னை இவற்றினால் விடுவிக்கவும் முடியாது. (அவன் ஒருவனையே நான் வணங்கா விட்டால்) நிச்சயமாக நான் பகிரங்க வழிகேட்டில் சென்று விடுவேன். நிச்சயமாக நான் உங்களைப் படைத்துப் போஷிப்பவன் மீதே விசுவாசம் கொண்டிருக்கிறேன். ஆதலால் நீங்கள் எனக்கு செவி சாயுங்கள்” (36:22-25).
இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *