Featured Posts
Home » பொதுவானவை » கவிதைகள் » மகளெனும் தேவதைக்கு

மகளெனும் தேவதைக்கு

இதயத்தில் குறித்திருக்கிறேன்
அந்த அபூர்வ கணத்தை.

சிறகுகள் உணராத
செல்ல தேவதையே..
என் வாழ்வின் பொருளே..
சந்தோஷமே…
அப்போது தான்
நீ கண்மலர்ந்தாய்

வெறும் சிப்பியென்றிருந்த
எனக்குள் முத்தாக நீ வந்தாய்.

ரோஜாக் குவியலாய்
உனைக் கையிலேந்திய
அந்தத் தருணத்தில்
வானத்தில் மிதக்கத் தொடங்கியிருந்தேன்.
இன்று வரை இறங்கவில்லை.

ஏனையில் நீ உறங்குகையில்
உன்னுடைய
அந்தப் புன்சிரிப்பை
அள்ளிக் கொண்டு தான்
என் நாளை நிரப்பிக் கொள்வேன்
அப்போதெல்லாம்.

ஆதியில் நீ
அன்னை வயிற்றுச் சுமை.
பிறகு எங்கள்
இதயங்களுக்கு
இடம் பெயர்ந்தாய்
எனினும்
நீ தவழத் தொடங்குகையில் தான்
உன்னை முதுகிலமர்த்த
முட்டிக் காலிட்டு
நானும் தவழ்ந்தேன்.
இந்த விளையாட்டு தான்
களைக்கவேயில்லை
உனக்கும்
உன் கையில் இருக்கும்
பொருளாதாரப் பிரம்புக்கும்.

இரட்டைச் சடை பின்னி
பள்ளிக்கூடம் நீ சென்றாய்.
வாழ்க்கை எனக்கு
வகுப்பெடுக்கத் தொடங்கியது.

இந்த காலமெனும் உண்டியலில்
கண்டெடுக்கப்பட்ட பொற்காசு தான் நீ.
உனக்கான பொற்காசுகளை
உருவாக்குவதில் தான்
என் காலம் கழிந்துகொண்டிருக்கிறது.

எங்கள் இதயத் தோட்டத்தின்
தங்கப் பட்டாம்பூச்சியே
உனக்கான தோட்டத்தை
உருவாக்கத் தான்
உழைத்துக் கொண்டிருக்கிறேன்
உயிர்ப்புடனும் உள்ளன்புடனும்.

வளர வளர உன்மீது
வாலிபக் கண்கள்
இனிப்பை மொய்க்கும்
ஈக்கள்.

உன் பருவம் சமைத்த
அடிவயிற்று நெருப்பு
அன்னைக்கும் எனக்கும்
அணையவேயில்லை
உனக்கான துணை வந்து
உன்னை அ(ரவ)ணைக்கும் வரை.

காலமெனும் கலம்
கடலில் ஓட
உனக்கும் பிறக்கும்
இன்னொரு தேவதை.

அப்போது புரியலாம் உனக்கு
இந்தத் தேவதைகள்
ஆனந்தத்தை மட்டுமல்ல
பொறுப்பையும்
பொருத்திவிடுகிறார்கள் பெற்றோருக்கு
சிறகுகளாகவோ
சிலுவைகளாகவோ.

என் உயிர்ப்பூவே…
செல்ல மகளே…
மறுமையின் தோட்டத்தில்
மகத்தான வாசத்தில்
தேவதை உன்னை
தேவதையாகவே
திருப்பிவிட்ட
எங்கள் வளர்ப்புக்கு
இறையருளின் மழை
இனிதே பெய்யட்டும்.
என்பதன்றி
வேறில்லை வேண்டுதலே

– இப்னு ஹம்துன்

9 comments

  1. அருமையான வரிகள்!
    கவிஞரின் பாச வரிகளில் கட்டுண்டு போனேன்.
    உம்மை இப்படி எழுத வைத்த உம் மகள் வாழ்க பல்லாண்டு.

    மகள் எனும் மந்திரச் சொல் எத்தகைய அரணையும் உடைக்கும் மாயக் கடவுச் சொல்.

    அவள் சிறகு முளைக்கா தேவதை.

    நம் வீடுகளில் அவள் தெளிக்கும் வண்ணக் கோலங்கள் நம் இருப்பை அர்த்தமுள்ளதாக்கும்.

    வீட்டுப் பொழுதுகளை வண்ண மயமாக்கும் மகள் நம் வீட்டுக்குள் ஒரு வானவில்.

  2. மாஷாஅல்லாஹ். அருமை! வாழ்த்துகள்!!

    நஜிர் உபைதுல்லாஹ்

  3. Dr முஹையுதீன்

    பட்டாம்பூச்சிகளின் நந்தவனத்தில் ஒரு தாலாட்டு

    நண்பர் இப்னு ஹம்துன் வரிகள் அருமை

  4. Mohamed Asik Abdul Wahab

    அருமை.. அருமை…

  5. மாஷா அல்லாஹ்.ரெம்ப அருமை…வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கவிதை மணியாக கோர்த்துள்ளீர்கள்.சிற்பி சிலையை செதுக்குவது போல் செதுக்கியுள்ளீர்கள்.இன்ஷா அல்லாஹ்

  6. முகம்மது அலி ஜின்னா

    அருமையான கவிதை

  7. சாதிக். அப்துல் ஹமீது

    அருமையான கவிதை!

    மகளைப் பெற்ற ஒவ்வொரு தந்தையின் மன உணர்ச்சிகளின் வெளிப்பாடு!

    உணர்ச்சிகளின் பிரவாகமாக வெளிப்பட்டுள்ள இந்தக் கவிதை உண்மையிலேயே தந்தையரின் மனத்தை மென்மையாக வருடிவிடும் மயிலிறகு!

    இதமான ஒத்தடம்!

    வாழ்த்துக்கள்!

  8. கவிதை அருமை

  9. அருமையான வாழ்க்கைப்பாடம் உணர்த்தியுள்ளீர்
    உணர்வுகளை உச்சி முகரசெய்துவிட்டீர்
    வாழ்த்துக்கள் வளமான வரிகள் தொடரட்டும் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *