Featured Posts
Home » இஸ்லாம் » அல்ஹதீஸ் » ஹதீஸ் விளக்கம் » தீமையைக் கண்டால் தடுப்பதா? மாற்றுவதா?

தீமையைக் கண்டால் தடுப்பதா? மாற்றுவதா?

தொகுப்பு: றஸீன் அக்பர் (மதனி)
அழைப்பாளன்: தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா.

((عن أبي سعيد الخدري رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ , فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ , وَذَلِكَ أَضْعَفُ الْإيمَانِ)). رواه مسلِمٌ.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ”உங்களில் எவரேனும் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அதனை கையால் தடுக்கட்டும், அப்படி முடியவில்லை என்றால் அதனை நாவால் தடுக்கட்டும், அப்படியும் முடியவில்லை என்றால் அதனை தன் உள்ளத்தால் வெறுத்து ஒதுங்கட்டும். இந்த நிலையானது இறைநம்பிக்கையின் பலகீனமா(ன நிலையா)கும்”. (ஆதாரம்: முஸ்லிம் -78)

இப்படித்தான் மேற்கண்ட ஹதீஸை பெறும்பான்மையானவர்கள் மொழிபெயாப்புச் செய்வதுடன், அம்மொழிபெயர்ப்புக்கு ஏற்றார்போல் விளக்கத்தையும் கொடுக்கின்றார்கள்.

ஆனால், மேற்கூறப்பட்ட மொழிபெயர்ப்பு ஓரளவிற்கு சரியாக அமைந்தாலும் அதனை முழுமையான சரியான மொழிபெயர்ப்பாகக் கருத முடியாது. எனவே, இந்த ஹதீஸின் சரியான மொழிபெயர்ப்பு இப்படித்தான் அமைய வேண்டும்.

அதாவது;

”உங்களில் எவரேனும் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அதனை தன் கையால் மாற்றட்டும், அப்படி முடியவில்லை என்றால் அதனை தன் நாவால் மாற்றட்டும், அப்படியும் முடிவில்லை என்றால் அதனை தன் உள்ளத்தால் மாற்றட்டும்…. ”

இந்த ஹதீஸில் வரும் ”யுகையர்” (يُغَيِّر) என்ற வாசகம் ”மாற்றுதல்” என்ற கருத்தைத் தரும்.

மாற்றுதல் என்பது அத்தீமையிலிருந்து அவனை தடுப்பது மாத்திரமில்லை மாறாக அவரை நன்மையின்பால் வழிகாட்டவும் உதவி செய்ய வேண்டும். இதனைத்தான் இஸ்லாமும் வேண்டி நிற்கின்றது. இதனால்தான் அல்லாஹுத்தஆலா இந்த சமுதாயத்தை சிறந்த சமுதாயமாகக் கூறுகின்றான்.

كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ (آل عمران : 110ர்)

”மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள். (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள், தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்.” (ஆலஇம்ரான்: 110)

மேலும், வெற்றிபெற்றவர்கள் யார் என்பதை அல்லாஹுத்தஆலா குறிப்பிடும்போது;

وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏ (آل عمران : 104)

”மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவாகளாகவும், நல்லதைக்கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றவர்கள்.” (ஆலஇம்ரான்: 104)

மேலும், அல்லாஹ் முஃமின்களின் பண்புகளில் ஒன்றாக இதனை குறிப்பிடுகின்றான்;

وَالْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ۘ يَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ (التوبة : 71)

”முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள், தீயதை விட்டும் விலக்குகிறார்கள்.” (அத்தௌபா: 71)

இப்படியான முஃமின்களின் பண்புகளுக்கு எதிர் மாறான பண்புகளையுடைய நயவஞ்சகர்களின் பண்பைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது;

اَلْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ بَعْضُهُمْ مِّنْۢ بَعْضٍ‌ۘ يَاْمُرُوْنَ بِالْمُنْكَرِ وَيَنْهَوْنَ عَنِ الْمَعْرُوْفِ (التوبة : 67)

”நயவஞ்சகர்களான ஆண்களும், நயவஞ்சகர்களான பெண்களும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பாவங்களைத் தூண்டி, நன்மைகளை விட்டும் தடுப்பார்கள்.” (அத்தௌபா: 67)

ஆகவே, நாம் வெறுமனே நன்மையை ஏவுபவர்களாகவோ அல்லது வெறுமனே தீமையை தடுப்பவர்களாகவோ மாத்திரம் இருப்பதால் சிறந்தவர்களாகவோ, வெற்றிபெற்றவர்களாகவோ இருந்துவிட முடியாது. மாறாக, நன்மையை ஏவுவதுடன் தீமையையும் சேர்த்தே தடுப்பதின் மூலமே இப்பாக்கியத்தை அடைந்து கொண்ட முஃமின்களாகமுடியும்.

எனவே, இதன் மூலம் இந்த ஹதீஸ் எப்பொழுதும் ஒரு தீமையைக் கண்டால் அதனை தடுப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாமல் அதன்மூலம் ஒரு மாற்றத்தையும் சேர்த்தே எதிர்பார்க்கின்றது.

இதற்கு மாற்றமாக கையினால் தடுங்கள், நாவினால் தடுங்கள், உள்ளத்தால் வெறுத்து ஒதுங்குங்கள் என்று மொழிபெயர்ப்பதன் மூலம் தீமையைக் கண்டால் தப்பித்துச் செல்லும் (Escape) மனப்பாங்கையே நம்மிடம் உருவாக்கியுள்ளது.

ஏனெனில், உதாரணமாக ஒருவர் ஒரு தீமையை காண்கின்றபோது, அதனை தனது கையினாலோ அல்லது வாயினாலோ மாற்ற முடியாதபோது உள்ளத்தினால் வெறுத்து ஒதுங்குவதே ஸலாமத் (பாதுகாப்பானது) என்ற எண்ணம் தோன்றி வெறுமனே வெறுப்புத்தன்மையுடன் ஒதுங்குவதால் ஒருபோதும் அத்தீய விடயத்தை செய்பவன் – அத்தீய விடயத்தை விட்டுவிடுபவனாக இருக்கமாட்டான். அதற்கு மாற்றமாக ஹதீஸில் கூறப்பட்டுள்ளதுபோன்று ”யுகையிரு” அதாவது ”மாற்றுதல்” ஏற்படவேண்டும் என்ற எண்ணத்துடன், அவனுக்கு என்னால் இச்சந்தர்ப்பத்தில் முடியாது போனாலும் ; இதற்கு தகுதியானவர்களிடம் இதனை மறைமுகமான முறையில் கொண்டுசென்று அவனை நேர்வழிப்படுத்தும் எண்ணத்துடன் அவ்விடத்தை விட்டும் செல்கின்றபோது அவனுக்கு அதற்கான கூலியும், அத்தீய செயல் செய்பவனை – அவனுடைய அத்தீய விடயத்திலிருந்தும் விடுக்கலாம். (அதற்காக அல்லாஹ்வின் உதவியும் கிடைக்கும்.) இல்லை என்றால், நாங்களும் அவனுடைய தீய செயலுக்கும், அதனால் ஏற்படும் விபரீதங்களுக்கும் ஆட்பட்டுவிடுவோம் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு உதாரணத்தின் மூலம் எங்களுக்கு விளக்கினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ”அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்குமுரிய உவமை – ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும், சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டுவர) அவர்கள் மேல்தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருப்பவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தனக்குள்) நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம். நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம் என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் இருப்பவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்.” (ஆதாரம்: புஹாரி-2493)

எனவே, நாம் எடுத்துக்கொண்ட ஹதீஸில் தீமையைக் கண்டால் தடுங்கள் என்ற கருத்தைத் தந்தாலும், அதனுடன் சேர்த்து மாற்றத்தையும் சேர்த்தே நபியவர்கள் கூறியுள்ளதாக விளங்கிக்கொள்ள முடியும்.

அத்துடன் தீமை என்பது ஒரே விதத்தில், படித்தரத்தில் இருக்காது. மாறாக, ஒவ்வொன்றும் அதனை செய்யக்கூடிய மனிதர்களையும், செய்யக்கூடிய விதத்தையும் வைத்து மனிதர்களுக்கு மனிதர் வேறுபடக்கூடியது. எனவே, ஒரு தீமையைக் கண்டவுடன் ”எடுத்தோம் கவுத்தோம்” என்றில்லாமல்… அதற்கு ஏற்ற விதத்திலே அதனை தடுக்கவேண்டும். அதுவும், அதனை எந்த அடிப்படையில் தடுத்து- மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற சிந்தனையுடனே செயற்பட வேண்டும். அதற்கு வல்லவன் அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் அருள்பாளிப்பானாக!

யாரும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *