Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » கடல் பிளந்த அதிசயம்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-32]

கடல் பிளந்த அதிசயம்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-32]

இஸ்ரவேல் சமூகம் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர். அவர்களது விடுதலைக்காக மூஸா நபி போராடினார். பிர்அவ்ன் இஸ்ரவேல் சமூகத்திற்கு விடுதலைக் கொடுக்கவும் இல்லை. அவர்களை நாட்டை விட்டும் வெளியே செல்ல அனுமதிக்கவும் இல்லை. இந்த நிலையில் தான் மூஸா நபி தமது தாயகப் பூமியான பலஸ்தீனத்திற்கு இஸ்ரவேல் சமூகத்தை அழைத்துக் கொண்டு இரவில் பயணித்தார்.

அவர்கள் பெண்கள் சிறுவர்கள் முதியவர்கள் என பயணித்தனர். ஒருநாள் அதிகாலை வேளை மூஸா நபியும் அவர்களது தோழர்களும் கடலை அடைந்தனர். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பிர்அவ்னின் படை வந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட மூஸா நபியின் தோழர்களில் சிலர், “நாம் வசமாக மாட்டிக் கொண்டோம்”
என்று கூறினர். அப்போது மூஸா நபி, “என்னுடன் என் இறைவன் இருக்கின்றான். அவன் எனக்கு வழி காட்டுவான்” என்று கூறினார். மூஸா நபிக்கு
அல்லாஹ்வின் கட்டளை வந்தது. “கடலில் உமது தடியால் அடியும். கடல் பிளந்து வழிவிடும். அந்த நிலமும் காய்ந்தது போல் பயணிக்க இலகுவாக இருக்கும். அவர்கள் உங்களைப் பிடித்துவிடவும் மாட்டார்கள். நீர் அச்சப்படவும் வேண்டாம்” என்று வஹி அறிவித்தான்.

மூஸா நபி கடலை தனது தடியால் அடித்தார். கடல் பிளந்தது. இரு பக்கமும் மலைபோல் தண்ணீர் நிற்க, இடையில் பாதை இருந்தது. மூஸா
நபியின் சமூகம் அல்லாஹ்வின் மிகப்பெரும் அற்புதத்தைத் தமது கண்களால் கண்டனர். கடல் பிளந்த பின்னர் மூஸா நபியும் அவரது தோழர்களும் அந்தப் பாதை ஊடாகச் சென்றனர். அவர்கள் கடலில் பாதி தூரம் வந்த பின்னர் பிர்அவ்னின் படை கடற்கரையை அடைந்தது. பாதைப் பிளந்ததைப் பார்த்த பிர்அவ்ன்
அப்போதுகூட சிந்திக்கவில்லை. தனக்காகத்தான் கடல் வழிவிட்டுள்ளது என்றான். அவனும் அவனது அநியாயக்காரப் படையும் கடல் பாதையில் பயணித்தனர். அவர்கள் நடுப்பகுதிக்கு வந்ததும் கடல் ஒன்று சேர்ந்தது. ஆணவமும் அக்கிரமமும் நிறைந்த பிர்அவ்னின் படை நீரில் மூழ்கி அழிந்தது. தன்னைக் கடவுள் என்று
கூறிக்கொண்டிருந்த பிர்அவ்னும் நீரில் மூழ்க ஆரம்பித்தான்.

-பிழையான போக்குடைய பிர்அவ்ன் தான் மட்டும் அழியாமல் தன்னை நம்பிய மக்களையும் அழிவுக்கு அழைத்துச் சென்றான். பிழையான தலைவர்கள் மட்டும் ஆபத்தானர்கள் அல்ல, பிழையானவர்க த் தலைவர்களாகளைத் தேர்ந்தெடுப்பவர்களும் ஆபத்தானவர்கள் தான். அழிவு அனைவருக்கும் ஒன்றாகத்தான் வரும் என்பதற்கு பிர்அவ்னின் அழிவு நல்லதொரு பாடமாகும். நீரில் மூழ்கி அழியும் நிலையில் பிர்அவ்ன் மூஸாவின் இறைவனை நானும் ஈமானும் கொள்கிறேன் என்று கூறினான். ஆனால் அவனது ஈமானை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவில்லை. உயிர் தொண்டைக் குழிக்கு வந்த பின்னர் தவ்பா (பாவ மன்னிப்பின்)வின் வாசல் அடைக்கப்பட்டு விடும்.

அல்லாஹ் பிர்அவ்னிடம் “இப்போது தானா? சற்று முன்னர் வரை நிராகரிப்பாளனாக இருந்தாயே! பின்வரும் சமூகத்திற்குப் படிப்பினையாக இருப்பதற்காக உனது உடலை நான் பாதுகாப்பேன்” என்று கூறினான். பிர்அவ்னும் அவனது அநியாயக்கார படையும் முஹர்ரம் மாதம் 10ஆம் நாள் அழிந்தது. இதற்கு நன்றி செலுத்து முகமாக இத்தினத்தில் முஸ்லிம்கள் ஆஷூரா நோன்பு பிடித்து வருகின்றனர். அன்றிலிருந்து இன்றுவரை இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக இயங்கி வரும்
இஸ்ரவேல் சமூகம் பாதுகாக்கப்பட்டதற்காக முஸ்லிம் சமூகமும் இன்று வரை நன்றிக்காக நோன்பு பிடித்து வருவது ஆச்சர்யமானது இல்லையா? இதுதான் இஸ்லாத்தின் நடுநிலையான போக்கு!

இச்சம்பவம் குர்ஆனில் 20:77-79, 2:49,50, 10:90-92, 26:61-67 போன்ற பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.

2 comments

  1. இரு பக்கமும் மாலைபோல் தண்ணீர் நிற்க,

    மாலை என்று தவறாக பதிவாகியுள்ளது. மலை என்று மாற்றவும்.

  2. நிர்வாகி

    Jazakallah Khair.

    Corrected.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *