Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » அடித்துக் கொன்றவர்கள், அழிக்கப்பட்டனர்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-34]

அடித்துக் கொன்றவர்கள், அழிக்கப்பட்டனர்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-34]

அடித்துக் கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர்

ஒரு ஊர் இருந்தது. அந்த ஊருக்கு அல்லாஹ் மூன்று தூதர்களை அனுப்பினான். அந்த ஊர் மக்கள் அல்லாஹ்வின் அருளுக்குத் தகுதியானவர்களாக இருக்கவில்லை. அழிந்து போனார்கள்! ஆம் ‘அன்தாக்கியா’ எனும் ஊர் மக்கள் அறியாமையிலும் சிலை வணக்கத்திலும் மூழ்கியிருந்தனர். அங்கே அநியாயமான ஒரு ஆட்சியும் இருந்தது. அந்த ஊரில் ‘ஹபீப்’ என்ற ஒருவர் இருந்தார். அவர் சிலை வணக்கத்தை வெறுத்தார். மூட நம்பிக்கைகளை மறுத்தார். ஆனால் தனிமரம் தோப்பாகாதே! அவர் தனித்திருந்தார்.

ஒருநாள் அந்த ஊரில் இருவர் மக்களிடம் சிலை வணக்கத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தனர். அந்த மக்கள் “நீங்கள் யார்?” என்று கேட்டபோது “நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள்” என்று அவ்விருவரும் கூறினர். அந்த மக்கள், இறைத்தூதர்களின் வருகையையும் அறிந்திருந்தனர். அல்லாஹ்வையும்
அறிந்திருந்தனர். ஆனால் அல்லாஹ்வுடன் வேறுவேறு சிலைகளையும் வழிப்பட்டு வந்தனர்.

எனவே இறைத்தூதர்களைப் பார்த்து “நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்கள் தானே! சராசரி மனிதர்கள் எவ்வாறு இறைத்தூதர்கள் ஆகலாம்?” என்றனர். சராசரி மனிதர்களையே கடவுள்களாக வழிப்பட்டவர்கள், மனிதர்கள் என்ற காரணத்திற்காக அவர்களை இறைத்தூதர்களாக ஏற்க மறுத்தனர்.”உங்களுக்கு
‘ரஹ்மான்’ எதையும் இறக்கவில்லை. நீங்கள் பொய் சொல்கிறீர்கள்” என்று இறைத்தூதர்களைப் பொய்ப்பித்தனர். இரண்டு தூதர்களையும் அந்த மக்கள் பொய்ப்பித்த போது மூன்றாவது ஒரு தூதரையும் அல்லாஹ் அனுப்பினான்.

துரதிஷ்டம் பிடித்த மக்கள் மூவரையும் மறுத்தனர். அவர்களின் அபாக்கியத்தனத்தின் உச்சகட்டமாக அந்தத் தூதர்களைப் பார்த்து “உங்களால் எங்களுக்கு சனியன் பிடித்து விட்டது. உங்களது அந்த பிரச்சாத்தை விட்டுவிடாவிட்டால் உங்களைக் கல்லால் அடித்தே கொன்று விடுவோம். கடுமையான வேதனையை நீங்கள் அடைவீர்கள்” என்று எச்சரித்தனர்.

அதற்கு இறைத்தூதர்கள், “எங்களால் எந்த சனியனும் பிடிக்கவில்லை. உங்கள் சனியன் எல்லாம் உங்களுடன்தான் இருக்கின்றன. எங்கள் பொறுப்பு உங்களுக்கு சத்தியத்தைத் தெளிவாக எத்திவைப்பது தான். நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாக உள்ளீர்கள்” என்று தமது பிரச்சாரத்தைத் தொடர்ந்தனர். அந்த மக்கள் அந்தத் தூதர்களைக் கொலை செய்ய முற்பட்டனர். அப்போதுதான் தகவல் அறிந்த அந்த ‘ஹபீப்’ ஊரின் எல்லையில் இருந்து ஓடி வந்தார். அவர் தனது மக்களைப் பார்த்து, “மக்களே! இந்த இறைத்தூதர்கள் சொல்வதைக் கேளுங்கள். அவர்கள் உங்களிடத்தில் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் சத்தியத்தைச் சொல்கிறார்கள். அவர்களைப் பின்பற்றுங்கள்” என்று கூறினார்.இது கேட்ட மக்கள், “நீயும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாயா” எனக் கேட்டனர். இந்த கேள்வியைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவர் சத்தியத்தைத் தெளிவாகக் கூறினார்.”என்னைப் படைத்தவனை வணங்காமல் இருக்க எனக்கு என்ன கேடு பிடித்து விட்டது? நீங்களும் மரணித்த பின்னர் அவனிடம் தான் மீட்டப்படுவீர்கள்” என்று கூறி தவ்ஹீதையும் மறுமை நம்பிக்கையையும் எடுத்துக் கூறினார்.

“அல்லாஹ்வை விட்டுவிட்டு வேறு கடவுள்களை நான் எடுத்துக் கொள்வேனா? என் ரஹ்மான் எனக்கு ஏதேனும் தீங்கைச் செய்ய நாடினால் இந்த போலி தெய்வங்களின் பரிந்துரை எந்தப் பயனையும் தரப்போவதில்லை. இந்த போலி தெய்வங்களால் என்னைப் பாதுகாக்கவும் முடியாது” என இணைவைப்புக்கு எதிராகவும் முழங்கினார். “அல்லாஹ்வை விட்டுவிட்டு வேறு பாதுகாவலர்களை எடுத்தால் நானும் தெளிவான வழிகேட்டில் வீழ்ந்து விடுவேன். உங்கள் இறைவனை நான் நம்பிவிட்டேன். நான் சொல்வதைக் கேளுங்கள்’’ என நீண்ட ஒரு உரையே ஆற்றிவிட்டார்.

இந்த அறிவுரையை ஏற்காத அக்கிரமக்கார மக்கள் ஆத்திரம் கொண்டனர். அவரை அடித்தே கொன்றனர். அவர் சத்திய சோதனையில் தனது உயிரை அர்ப்பணித்தார். ஷஹீத் எனும் உயிர்த்தியாகியானார். ஷஹீத் எனும் உயிர்த்தியாகிகள் இறந்த உடன் பறவையின் வடிவில் சுவனம் நுழைந்து விடுவர். அவரையும் அல்லாஹ் சுவனத்தில் நுழைத்தான். அந்த ஹபீப் சுவனத்தில் இருந்து கொண்டும் தனது சமூகம் சத்திய வழிக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால், “என் இறைவா! நான் சுவனத்தில் இருக்கிறேன். என் ரப்பு என்னை மன்னித்து விட்டான். என்னை கண்ணியப்படுத்தி விட்டான் என்பது என் ஊர் மக்களுக்கு தெரிய வேண்டுமே! அப்படித் தெரிந்தால் அவர்கள் திருந்தி மன்னிப்புக் கேட்பார்களே!” என்று ஏங்கினார். ஆனால் மூன்று இறைத்தூதர்களை அனுப்பியும் சத்திய வழிக்கு வராமல் அந்த இறைத்தூதரைக் கொன்ற மக்களை அல்லாஹ் மன்னிக்கவில்லை. தூதருக்கு துணையாக வந்து அறிவுரை சொன்னவரை அடித்துக் கொன்றவர்களை ஒரு இடி முழக்கத்தால் அல்லாஹ் அழித்தான்.

இந்த சம்பவத்தை சூறா யாசீன் 36ம் அத்தியாயம் 13&31 வரையுள்ள வசனங்களில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *