Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » நேர்வழி இன்னதென்று தெளிவான பின்னும்…? – 1

நேர்வழி இன்னதென்று தெளிவான பின்னும்…? – 1

நேர்வழி எது, சரியான பாதை எது என்பதை தெளிவாகத் தெரிந்தும் அதை புறக்கணித்து வேறுவழியில், தவறான வழியில் செல்பவனை முட்டாள் அல்லது மடையன் என்று நாம் சொல்வோம்.

இந்த வகையினரை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகையினர் வேண்டுமென்றே மனமுரண்டாக தவறான வழியை, சரியான பாதை இதுதான் எனத் தேர்ந்தெடுத்து பயணிப்போர். இரண்டாம் வகையினர் முதல் வகையினரின் அழைப்பை ஏற்று அவர்களை நம்பி அவர்களின் பின்னால் பயணிப்போர்.

சரியான பாதை இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னரும் வேண்டுமென்றே மனமுரண்டாக தவறான பாதைக்கு அழைக்கும் அழைப்பாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் இவர்களைப் பின்பற்றி செல்லும் பொது ஜனங்கள் அதிகம். உதாரணமாக கிருஸ்துவ அழைப்பாளர்களையும், அவர்களைப் பின்பற்றி செல்லும் மக்களையும் கூறலாம். அடுத்து இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய ஷிய்யாயிசம், சூபிஃயிசம் போன்ற பிரிவுகளின் அழைப்பாளர்களையும் அவர்களை நம்பி பின்பற்றும் மக்களையும் கூறலாம்.

வழிகேட்டை இதுதான் நேர்வழி என மனமுரண்டாக அழைப்பவர்களின் அழைப்புக்கு இருக்கும் ஆதாரம் என்ன? என்பதை சற்று உற்றுநோக்கினால், அல்லாஹ் இறக்கிவைத்த வேத வசனங்களுக்கும், அல்லாஹ் அனுப்பிவைத்த தூதரின் பொன்மொழிகளுக்கும் அவர்கள் வழங்கிய தவறான விளக்கங்களும், தவறான வியாக்கியானங்களும் முக்கிய காரணமாக இருக்கிறது.

அல்லாஹ் இறக்கிவைத்த வேதத்திற்கு உண்மைக்குப் புறம்பான பொருளும், தவறான வியாக்கியானமும் வழங்குவதில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் மிகவும் கைதேர்ந்தவர்கள். அல்லாஹுவின் வசனங்களுக்கு இவர்கள் வழங்கிய தவறான வியாக்கினம் போன்றுதான், இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவின் அழைப்பாளர்கள் அல்குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் தவறான பொருளும், தப்பான வியாக்கியானமும் வழங்கினார்கள்.

உதாரணமாக: அல்லாஹ்வுக்கு முகம், கை,கால், இருப்பதாகவும், அல்லாஹ் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் இருக்கின்றான் என்றும், அல்லாஹ் கியாம நாளில் வருவான் என்றும், அல்லாஹ் அவனது அர்ஷில் அமைந்துள்ளான் என்பது பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன் வசனங்களுக்கு தவறான பொருளும் வியாக்கியானங்களும் கொண்டனர். (பார்க்க அல்குர்ஆன் : 2:127, 2:137, 3:35, 89:22, 68:42, 58:01, 43:80)

அதேபோன்று ஸஹீஹான நபிமொழிகளில் வந்துள்ள அல்லாஹ் சிரிப்பான், ஸஹீஹுல் புகாரி: 7437, 3798, 6573 போன்ற ஹதீஸ்களுக்கும், அல்லாஹ் கடைசி இரவில் மூன்றாம் வானத்திற்கு இறங்கி வருவான் என்ற ஸஹீஹுல் புகாரி1145, ஸஹீஹுல் முஸ்லிம்1389,1387 போன்ற ஹதீஸ்களுக்கு பித்அத்வாதிகளும், அல்குர்ஆன் – சுன்னாவை பகுத்தறிவோடு உரசிப்பார்ப்பவர்களும் மாற்றுக் கருத்தும் வேறு வியாக்கியானங்களையும் வழங்கினார்கள்.

இங்குதான் அல்குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் நபித்தோழர்களின் புரிதலும், அவர்களின் கூற்றும் தேவைப்படுகின்றது. காரணம் இது மார்க்கத்தின் அகீதா அடிப்படையான விஷயம் என்பதால் அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து குர்ஆனையும் – ஸுன்னாவையும் எவ்வாறு புரிந்துகொண்டார்கள் என்ற விவரம் அவசியப்படுகின்றது.

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய அத்தனை பிரிவாருக்கும் ஸஹாபாக்கள் எதிரியாவார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். ஸஹாபாக்களின் கூற்றையும், அவர்களின் புரிதலையும் பொய்யாக்கினால்தான் தங்களது கூற்றை நிலை நாட்டமுடியும் என்பது இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய பிரிவினர்களின் சதித்திட்டங்களில் ஒன்றாகும்.

தொடரும்…, இன்ஷாஅல்லாஹ்,
—————–
S.A.Sulthan,
17/01/2019
#Jeddah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *