Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்-2 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-36]

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்-2 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-36]

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்-1 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-35]

அந்தக் கொடுங்கோல் அரசனின் அரச சபையில் ஒரு பிறவிக் குருடன் இருந்தான். அவனுக்கும் செய்தி எட்டியது. அவன் நிறைய பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்ட சிறுவனிடம் வந்தான்.

பொருட்களைக் காட்டி, “நீ என் கண்ணைக் குணமாக்கினால், இத்தனைப் பரிசுப் பொருட்களையும் உனக்குத் தருவேன்” எனக் கூறினான்.

அதற்கு சிறுவன், “என்னால் எவருடைய நோயையும் குணப்படுத்த முடியாது. அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நோய் நீக்க முடியும். ‘அல்லாஹ் ஒருவன்தான் என் இறைவன்’ என நீ ஏற்று நம்பிக்கைக் கொண்டால், அவனிடம் நான் உனக்காகப் பிரார்த்திப்பேன். அவன் உனக்கு சுகம் அளிப்பான்” என்று கூறினான்.

இது கேட்ட குருடன் அல்லாஹ்வை நம்பினான். அல்லாஹ் அவனுக்கு பார்வையைக் கொடுத்தான். (அடுத்த நாள்) அரச சபைக்கு வந்த குருடன் தனது ஆசனத்தில் வழமைப்போல் அமர்ந்தான். குருடன் பார்வையைப் பெற்றிருப்பதைக் கண்ட அரசன் திகைத்தான்.

அரசன்: உனக்கு பார்வை திரும்பத் தந்தது யார்?

குருடன்: என் இறைவன்.

அரசன் : என்னை விட்டால் உனக்கு வேறு இறைவன் உண்டா?

குருடன் : எனது இறைவனும், உனது இறைவனும் அல்லாஹ் ஒருவனே! (அவனே எனக்கு சுகம் அளித்தான்.)

(இதைக் கேட்டு கோபம் கொண்ட) அரசன் அவனைப் பிடித்து, (‘அல்லாஹ்தான் உனது இறைவன் என உனக்கு சொல்லித் தந்தது யார்?’ எனக் கேட்டு) சித்திரவதை செய்தான். அவனும் (வேதனை தாங்க முடியாமல்) சிறுவனைக் காட்டிக் கொடுத்து விட்டான்.

அரசன், சிறுவனை அழைத்து பின்வருமாறு உரையாடினான்:

அரசன் : மகனே! நீ கற்ற சூனியம் மூலம் தொழுநோயையும், பிறவிக் குருட்டையும் கூட சுகப்படுத்துகிறாயாமே! பெரிய பெரிய அற்புதம் எல்லாம் செய்கிறாயாமே?

சிறுவன் : நான் யாருக்கும் நோய்க்கு நிவாரணம் அளிக்கவில்லை. நோயை அல்லாஹ் ஒருவனே குணமாக்குகிறான்!

இது கேட்ட அரசன் சிறுவனையும் சித்திரவதை செய்தான். “உனக்கு அல்லாஹ்வைப் பற்றி சொல்லித் தந்தது யார்?” எனக் கேட்டான்.

சிறுவன் வேதனை தாங்க முடியாமல் தனக்கு மார்க்கத்தைக் கற்றுத் தந்த அறிஞரை காட்டிக் கொடுத்து விட்டான்.

மார்க்க அறிஞர் அரச சபைக்கு அழைத்து வரப்பட்டார். “உன் பழைய மார்க்கத்துக்கு வந்துவிடு” என அரசன் கூறினான். “முடியாது!” என அவர் மறுத்தார்.

(மரம் அறுக்கும் வாள் போன்ற) பெரிய ரம்பம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அவரின் உச்சந்தலையில் அது வைக்கப்பட்டது. (அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக) இரு பாதிகளாக அவர் உடல் கீழே விழும் வரை அறுக்கப்பட்டது. (எவ்வளவு கொடுமை பார்த்தீர்களா? இதை சகித்துக் கொண்டாரே! அவர் எவ்வளவு உறுதியான மனிதர்?)

அதன்பின் ஏற்கனவே குருடனாக இருந்து பார்வைப் பெற்ற அந்த மனிதன் தலையில் அது வைக்கப்பட்டது. பழைய மார்க்கத்திற்கு வந்துவிடுமாறு கூறப்பட்டது. அவர் மறுத்தார். எனவே அவரும் வாளால் இரு பாதியாகக் கூறு போடப்பட்டார்.

பிறகு சிறுவனை நோக்கி,

அரசன் : பழைய மார்க்கத்திற்கு வந்துவிடு!

சிறுவன் : முடியாது! (துளி கூட அச்சமில்லாமல் துணிவுடன் மறுத்தான்)

அரசன் சில கூலியாட்களைக் கூப்பிட்டு, “இவனை ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்று, பழைய மார்க்கத்திற்கு வருமாறு கூறுங்கள்! முடியாது என்றால் மலைக்குக் கீழே தூக்கி எறிந்து விடுங்கள்!” எனக் கட்டளையிட்டு அனுப்பினான்.

அவர்கள் எல்லோரும் மலை உச்சிக்குச் சென்ற வேளையில் சிறுவன், “அல்லாஹ் இவர்களிடம் இருந்து நீ நாடிய விதத்தில் என்னைக் காப்பாற்றுவாயாக!” என்று ‘துஆ’ கேட்டான். மலை குலுங்கியது. சிறுவனைத் தவிர அனைவரும் மலைக்குக் கீழே விழுந்தனர்.

அந்த சிறுவன் நேராக அரச சபைக்கு வந்தான். அரசன் அவனை நோக்கி, “உன்னோட வந்தவர்களுக்கு என்ன நடந்தது?” எனக் கேட்டான். “அவர்களின் தீங்கில் இருந்து என்னை அல்லாஹ்வே காப்பாற்றினான்” எனச் சிறுவன் பதிலளித்தான்.

அரசன் இன்னும் சிலரை அழைத்து, “இவனைத் தோணியில் ஏற்றி நடுக்கடலுக்கு கொண்டு செல்லுங்கள்! பின்னர், பழைய மார்க்கத்துக்கு வருமாறு கூறுங்கள். மறுத்தால் கடலில் தூக்கிப் போட்டு விடுங்கள்!” என்றான்.

நடுக்கடலுக்குச் சென்றதும் சிறுவன், “யா அல்லாஹ்! நீ விரும்பிய விதத்தில் இவர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்றுவாயாக!” என பிரார்த்தனை செய்தான். தோணி ஆட ஆரம்பித்தது. சிறுவனைத் தவிர மற்ற அனைவரும் கடலில் வீழ்ந்து மாண்டனர். சிறுவன் நேராக அரச சபைக்கு வந்தான்.

அரசன் : உன்னுடன் வந்தவர்களுக்கு என்ன நேர்ந்தது?

சிறுவன் : அவர்களின் தீங்கில் இருந்து என்னைக் காக்க அல்லாஹ் ஒருவனே போதுமானவன். நீ நினைப்பது போல் என்னைக் கொலை செய்துவிட முடியாது. நான் சொல்லும் வழியைக் கடைப்பிடித்தால் மட்டுமே என்னைக் கொல்ல முடியும்.

அரசன் : அந்த வழி என்ன?

சிறுவன் : மக்களை ஒரு திடலில் ஒன்று திரட்டு. என்னை ஈச்சமரக் கட்டையில் (ஆணியால்) அறைந்துவிடு! (என் முதுகுப் பக்கம் அம்புகள் உள்ள பை இருக்கும்) அதில் ஓர் அம்பை எடுத்து, கணையில் பூட்டி “பிஸ்மில்லாஹிரப்பில் குலாம்” (சிறுவனின் இறைவனாகிய அல்லாஹ்வின் பெயரால் எறிகின்றேன்) எனக்கூறி அம்பை எய்த வேண்டும். இப்படிச் செய்தால்தான் உன்னால் என்னைக் கொல்ல முடியும்!

இதைக் கேட்ட அரசன், மக்களை ஒன்று திரட்டினான். சிறுவனை ஈச்சமரத்தில் அறைந்தான். சிறுவனின் அம்புத்தூளில் இருந்து அம்பை எடுத்து வில்லில் பூட்டினான். “சிறுவனின் இறைவனாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் எறிகின்றேன்” எனக் கூறி அம்பை எய்தினான்.

அம்பு சிறுவனின் (வலது) கன்னத்தில் தைத்தது. தன் கன்னத்தில் சிறுவன் கையை வைத்தான். அவன் உயிர் பிரிந்தது.
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.)
(பொருள்: ஒரு வீரமிக்க சிறுவன் (ஷஹீத்) தியாகி ஆனான். அவன் தியாகம் வீண் போகவில்லை. தொடர்ந்து படியுங்கள்)

இது கண்ட மக்கள் “சிறுவனின் இறைவனை நம்பினோம். விசுவாசித்தோம்” எனக்கூறி புனித இஸ்லாமை ஏற்றனர்.

அரசனின் காவலாளிகள் அவனிடம் வந்து, “அரசே! மக்கள் (ஈமான்) நம்பிக்கை கொள்ளக்கூடாது என்பதற்காக எவ்வளவோ எச்சரிக்கையாக இருந்தீர்கள். (நீங்களே சிறுவனின் இறைவனாகிய அல்லாஹ்வின் பெயர் கூறி அம்பு எய்ததினால்) மக்கள் எல்லோரும் அல்லாஹ்வை விசுவாசம் (ஈமான்) கொண்டு விட்டனர்.” என்று கூறினார்கள்.

இதுகேட்ட அரசன் “பெரிய கிடங்கு வெட்டுங்கள். நெருப்பு மூட்டுங்கள். மக்களை ஒன்று திரட்டுங்கள். பழைய மார்க்கத்திற்கு வராதவர்களை நெருப்பில் பாயச் சொல்லுங்கள். அல்லது தூக்கிப் போடுங்கள்” எனக் கட்டளை பிறப்பித்தான். (அவன் கட்டளை நிறைவேற்றப்பட்டது)

இறைநம்பிக்கை (ஈமான்) கொண்ட அத்தனை மக்களும் தாங்களாகவே நெருப்பில் குதித்து (ஷஹீத்) தியாகி ஆகினர். இக்காட்சியை அரசனும் அவனது கூலிப்பட்டாளமும் கண்டு மகிழ்ந்தனர்.

இறுதியில் ஒரு தாய் தனது ஆண் குழந்தை ஒன்றைக் கையில் ஏந்திய வண்ணம் அஞ்சி அஞ்சி மெது மெதுவாக அடியெடுத்து வந்தாள். (அப்போதுதான் ஓர் அதிசயம் நடந்தது)

அந்தக் குழந்தை பேசியது: “தாயே! நீங்கள் நிச்சயமாக சத்தியத்தில் இருக்கின்றீர்கள். (எனவே தயங்காமல் குதித்துவிடுங்கள்) இந்த வேதனையைப் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியது குழந்தை. அவளும் நெருப்பில் பாய்ந்து விட்டாள்.

நெருப்பில் பாய்ந்த விசுவாசிகள் (முஃமின்கள்) நெருப்பில் போய் விழுவதற்கு முன்னரே அல்லாஹ் அவர்களின் உயிர்களைக் கைப்பற்றி விட்டான்.

பெரியதொரு காற்று வந்தது. அந்தக் காற்று நெருப்பைக் கிளறிவிட்டது. அந்த நெருப்பு, இறை நம்பிக்கையாளர்(முஃமின்)கள் நெருப்பில் விழுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவர்களைச் சுட்டு எரித்தது.

இறுதியில் அநியாயக்கார அரசனும், அவனது காவலாளிகளும் அந்த நெருப்பினாலேயே அழிக்கப்பட்டனர். (தன் வினை தன்னையே சுடுமல்லவா?)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *