Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » மன்னிப்பு இல்லாத பாவம் | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-39 [சூறா அந்நிஸா–16]

மன்னிப்பு இல்லாத பாவம் | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-39 [சூறா அந்நிஸா–16]

اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا

“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவேமாட்டான். அது தவிர ஏனையவற்றை, தான் நாடுவோருக்கு அவன் மன்னிப்பான். எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அவன் நிச்சயமாகப் பெரும் பாவத்தையே இட்டுக் கட்டியவனாவான்” (4:48)

அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்க மாட்டான் என இந்த வசனம் கூறுகின்றது. இந்த வசனத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இணை வைத்த ஒருவர் உயிருடன் இருக்கும் போது தவ்பா செய்து தன்னை மாற்றிக் கொண்டால் அவருக்கு மன்னிப்பு இல்லை என இந்த வசனம் கூறவில்லை. இணை வைப்புக்கும் இந்த உலகில் மன்னிப்பு உண்டு. இல்லையென்றால் மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு வர முடியாது. அவர்கள் இணை வைத்த நிலையில்தானே இருக்கின்றனர். உலகில் இணை வைப்புக்கு மன்னிப்பு உண்டு.

“தமக்குத்தாமே (அநியாயம் செய்து) வரம்பு மீறிய எனது அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்’ நிகரற்ற அன்புடையவன் என (நபியே!) நீர் கூறுவீராக!” (39:53)

அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பதாக இந்த வசனம் கூறுகின்றது.

“மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுளை அழைக்கமாட்டார்கள். அல்லாஹ் தடுத்துள்ள எந்தவோர் உயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யவும்மாட்டார்கள். மேலும், விபச்சாரம் புரியமாட் டார்கள். யார் இவற்றைச் செய்கின்றானோ அவன் வேதனையைச் சந்திப்பான்.”

“அவனுக்கு மறுமை நாளில் வேதனை இரட்டிப்பாக்கப்படும். இழிவுபடுத்தப்பட்டவனாக அதில் அவன் நிரந்தரமாக இருப்பான்.”

“எனினும், யார் பாவமன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு, நல்லறமும் புhpகின்றார்களோ அவர்களுக்கு, அவர்களின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.” (25:68-70)

இந்த வசனங்கள் இணைவைப்புக்கும் மன்னிப்பு உண்டு என்று கூறுகின்றன. இணை வைப்புக்கு மன்னிப்பு இல்லையென்றால் இணை வைத்த நிலையில் மரணித்தவருக்கு மன்னிப்பில்லை. அவர் நிரந்தரமாக நரகத்தில் இருப்பார் என்பதே அர்த்தமாகும்.

அடுத்து இணைவைத்தல் என்றால் கடவுள் இருவர் என்று கூறுவது மட்டுமோ, சிலைகளை வணங்குவது மட்டுமோ அல்ல. நம்பிக்கையிலும், நடத்தையிலும் வார்த்தைப் பிரயோகத்திலும் கூட இணைவைத்தல் ஏற்படலாம். இணைவைத்தல் பற்றிய நல்ல தெளிவோடு இருப்பது அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *