Featured Posts
Home » பொதுவானவை » தலையங்கம் » சூடான்: என்ன நடக்கிறது அங்கே?

சூடான்: என்ன நடக்கிறது அங்கே?

எம்.ஐ அன்வர் (ஸலபி)

முப்பது ஆண்டுகளாக சூடானின் அதிபராக இருந்து வந்த உமர் பஷீரின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் சற்றும் எதிர்பாராத திருப்பமாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்து வந்த அவல் இப்ன் அவ்ப் கடந்த 11 ஆம் திகதி இராணுவத்தின் உதவியுடன் உமர் பஷீரின் ஆட்சியை கவிழ்த்தார். உமர் பஷீர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு செய்திருந்தார்.

அரச தொலைக்காட்சியில் தோன்றிய சூடான் பாதுகாப்பு அமைச்சர் அவல் பின் அவ்ப் மூன்று மாத காலத்துக்கு அவசர நிலை நாட்டில் செயல்பாட்டில் இருப்பதாகவும், இராணுவத்தின் மேற்பார்வையில் இரண்டு ஆண்டு காலம் நாட்டின் ஆட்சி இருக்குமென்றும், அதனை தொடர்ந்து தேர்தலை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

1989 முதல் சூடான் அதிபராக பதவி வகித்து வந்த உமர் பஷீருக்கு எதிராக அவரை ஆட்சியிலிருந்து விலக கோரி கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் நாட்டில் நடைபெற்று வந்த மக்கள் போராட்டத்தின் பின்னணியிலேயே மேற்குறித்த அறிவிப்பு இராணுவத்தின் புறத்திலிருந்து வெளியிடப்பட்டது.

உமர் பஷீரின் ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது தற்போது அவர் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் மேலும் அதிகார துஷ்பிரயோகம், ஊழல், அநீதி காரணமாக நாடு கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என குறிப்பிட்டார். மேலும் நாட்டின் அரசியலமைப்பு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் எல்லைகள் காலவரையின்றி மூடப்படுவதாகவும் தமது நாட்டின் வான் எல்லை 24 மணி நேரத்துக்கு மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

உமர் பஷீருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே சர்வதேச பிடி ஆணை வழங்கியிருக்கிறது. போர் குற்றங்களில் ஈடுபட்டது மற்றும் சூடானின் மேற்கு தார்பூர் பிராந்தியத்தில் மனிநேயமற்ற குற்றங்கள் நிகழ்த்தியதாக குற்றம் சாட்டியிருக்கிறது.
இருப்பினும் இராணுவத்தால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பஷீரை சர்வதேச நீதிமன்றத்தில் ஒப்படைக்கமாட்டோம் அவரது குற்றச்சாட்டுகள் குறித்து உள்நாட்டிலேயே விஷேட குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் எனவும் இராணுவ தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இராணுவ ஆட்சியை மக்கள் ஏற்காத நிலையில் பெருமளவில் போராட்டங்கள் நடத்த தொடங்கினர். 2 நாள் போராட்டத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர். அடுத்த திருப்பமாக இராணுவ ஆட்சித்தலைவர் அவல் இப்ன் அவ்ப் தான் பதவி விலகி விட்டதாகவும், இராணுவ ஆட்சியை இராணுவ தளபதி அப்துல் பத்தாஹ் அப்துல் ரஹ்மான் புர்ஹான் தலைமை ஏற்று தொடர்ந்து நடத்துவார் என்றும் மீண்டும் ஒரு திடீர் திருப்பமாக தெரிவித்திருந்தார்.

சூடான் – ஒரு சிறு வரலாற்று குறிப்பு

சூடான் ஆபிரிக்க கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். வட ஆபிரிக்காவில் அமைந்துள்ள இது பரப்பளவின் அடிப்படையில் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடாகும். எனினும் 2011 இல் பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் தென் சூடான் பகுதி தனி சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் இது மாற்றமடைந்தது. இது தற்போது அல்ஜீரியா மற்றும் கங்கோ குடியரசுக்கு அடுத்தபடியாக ஆபிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாக விளங்குகின்றது.

வடக்கில் எகிப்து வடகிழக்கில் செங்கடலும் கிழக்கில் எரித்திரியாவும் தென்கிழக்கில் எதியோப்பியாவையும் தெற்கில் தென் சூடானும் தென்மேற்கில் மத்திய ஆபிரிக்க குடியரசும் மேற்கில் சாட் நாடும், லிபியா வடமேற்கிலும் அமைந்துள்ளன. உட்புறமாக, நைல் நதி நாட்டை கிழக்கு மற்றும் மேற்கு அரைப்பகுதிகளாகப் பிரிக்கின்றன.

சூடானின் 2018 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் சூடானின் வடக்கு, கிழக்கு, மேற்கு பகுதிகளில் கணிக்கப்பட்ட மக்கள் தொகை 30 மில்லியனிற்கு மேற்பட்டதாக காணப்படுகின்றது. இது தெற்கு சூடானில் இருந்து பிரிந்த பின் எஞ்சிய பகுதிகளின் நடப்பு மக்கள் தொகை 30 மில்லியனிற்கு மேற்பட்டதாக காணப்படுகின்றது என்பதை காட்டுகின்றது. 1983 இன் சூடான் மக்கள் தொகை கணக்கெடுப்பையும், தற்போதைய சூடானின் மக்கள் தொகையையும் ஒப்பிடுகையில், கடந்த இரண்டு தசாப்தங்களில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். இது கிட்டதட்ட 21.6 மில்லியன் அதிகரித்துள்ளது.

சூடான் ஐக்கிய நாடுகள் சபை ஆபிரிக்க ஒன்றியம் அரபு லீக் இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் அணிசேரா நாடுகள் இதேபோல் உலக வர்த்தக அமைப்பின் பார்வையாளர் நாடாக உள்ளிட்ட அங்கத்துவங்களை வகிக்கின்றது. இதன் தலைநகர் கர்த்தூம் ஆகும். நாட்டின் அரசியல், கலாசார மற்றும் வர்த்தகமையமாக கர்த்தூம் நகர் காணப்படுகின்றது. சூடானின் அரசியல் நடவடிக்கைகள் தேசிய சட்டமன்றம் என அழைக்கப்படும் ஒரு பாராளுமன்ற அமைப்பினால் நெறிப்படுத்தப்படுகின்றது.

யார் அந்த உமர் பஷீர்?

உமர் பஷீர் 1989 முதல் 2019 ஏப்ரல் 11 வரை சூடானின் ஏழாவது அதிபராகவும், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தார். இவர் சூடான் இராணுவத்தில் படைத் துறை தலைவராக பதவியில் இருந்த போது 1989 ஆம் ஆண்டில் மக்களாட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றைய பிரதமர் சாதிக் மஹ்தியின் ஆட்சியை இராணுவ புரட்சியின் மூலம் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றினார். அன்றிலிருந்து இவர் பின்னர் நடைபெற்ற தொடரான மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு அரசத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல்களில் பல முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இராணுவ புரட்சியின் மூலம் உமர் பஷீரை சூடானின் அதிபராக நியமித்ததில் இக்வான்சார்பு அமைப்பான ஹரகா இஸ்லாமிய்யாவுக்கு முக்கிய வகிபாகம் உண்டு. அதனை திரைமறைவில் இருந்து வழிநடத்தியவர் கலாநிதி ஹசன் துராபி ஆவார். இது குறித்து விமர்சனத்திற்குற்பட்ட போது அவர் புறத்திலிருந்து பின்னர் கூறப்பட்ட காரணம் குறித்த நேரத்தில் இன்னுமொரு தரப்பால் ஆட்சிக்கெதிராக புரட்சி நடக்க இருந்ததாகவும் அதனாலேயே அவர் பாதிப்பு குறைந்த வகையில் உமர் பஷீரை கொண்டு ஆட்சியை கைப்பற்றியதாகவும் இருந்தது. எனினும் பிற்பட்ட காலப்பகுதியில் முரண்பாடுகள் காரணமாக உமர் பஷீர் துராபியின் செல்வாக்கை தனது ஆட்சி அதிகார ஸ்திரத்தன்மைக்காக நசுக்கினார். தனது ஆட்சியை நீடிப்பது குறித்தான சகல முயற்சிகளையும் மேற்கொண்டார். இங்கு ஹரகா இஸ்லாமிய்யாவிலிருந்து பிரிந்து சென்ற ஒரு சாரார் உமர் பஷீருக்கு ஆதரவாக செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2005 அக்டோபரில் பஷீரின் அரசு சூடானின் இரண்டாம் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. இதன் மூலம் தெற்கில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தெற்கு சூடான் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. தார்பூர் மாநிலத்தில் நடத்தப்பட்ட போரில் சூடானிய அரசின் தகவலின் படி 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் இப்போரில் 200,000 முதல் 400,000 பேர் வரை இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இவரது ஆட்சிக்காலத்தில் தார்பூர் மாநிலத்தில் யன்சாவீது போராளிகளுக்கும், சூடான் விடுதலை படை போன்ற போராளிகளுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றன. உள்நாடுப்போரினால் தார்பூரில் மொத்த மக்கள்தொகையான 6.2 மில்லியனில் 2.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். இதன் மூலம் சூடானுக்கும் அயல் நாடுகளான எதிரிதியாவிற்கும், தசாடிற்கும் இடையே சுமுகமற்ற உறவுகள் நிலவின. லிபியத் தலைவர் கடாபியின் இறப்பின் பின்னர் போராளிகள் லிபியாவின் ஆதரவை இழந்தனர்.

2008 ஜூலையில் தார்பூரில் இனப்படுகொலை, மனித குலத்திக்கெதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் இழைத்ததாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2009 மார்ச் 4 அன்று பஷீருக்கு எதிராக போர்க்குற்றம் மற்றும் மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றுக்கு பிடிஆணை பிறப்பித்தது. போதிய ஆதாரங்கள் இல்லாமையால் இனப்படுகொலைக் குற்றங்கள் சுமத்தப்படவில்லை. 2010 ஜூலை 12 அன்று, இனப்படுகொலைக்களுக்காக நீதிமன்றம் இரண்டாவது பிடி ஆணையப் பிறப்பித்தது. இப்பிடியாணை சூடானிய அரசிடம் கையளிக்கப்பட்டது, ஆனால் அவற்றை அரசு அங்கீகரிக்கவில்லை. நீதிமன்றத்தின் முடிவை ஆபிரிக்க ஒன்றியம், அரபு நாடுகள் கூட்டமைப்பு , அணிசேரா இயக்கம் மற்றும் சீன அரசும் எதிர்த்துக் கருத்துத் தெரிவித்திருந்தன.

இந்த மக்கள் போராட்டத்தின் பின்னணி என்ன ?

சூடானில் மக்கள் எழுச்சிக்கு நீண்ட வரலாற்றுப் பின்னணி உள்ளது. 2013 செப்டம்பரில் தலைநகர் கார்டூமில் வெடித்த எதிர்ப்புப் பேரணிகளை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் அடக்கியது. சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையின்படி, அதில் 185 பேர் கொல்லப்பட்டனர். சூடானின் இன்றைய நிலை மிகவும் சிக்கலானது. தற்போதைய சூடான் நெருக்கடிக்கான மூல காரணம் என்ன எனும் கேள்விக்கு பெரும்பான்மையான கட்சிகள் உமர் பஷீரின் அரசாங்கமே பிரதான காரணம் என்கின்றன.

ஆரம்பத்தில் பாண் விலை தீடிரென அதிகரிக்கப்பட்டதனை எதிர்த்தே மக்கள் வீதிக்கு இறங்கினார்கள். பின்பு அது அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் பேரலையாக வடிவமெடுத்தது. அடுத்த ஓரிரு தினங்களுக்குள்ளேயே ஜனாதிபதி உமர் பஷீர் பதவி விலக வேண்டும் என்ற கோஷமாக மாறியது. நிலையை கட்டுப்பாட்டுக்குல் கொண்டு வரும் நோக்கில் உணவுத் தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கும், பொருட்களது விலையேற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. இருந்த போதும் மக்கள் கொந்தளிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது.

இவைபோக, கடந்த சில மாதங்களாக வங்கிகளில் போதியளவு நிதியில்லாமையால் வங்கிக் கணக்குகளில் தங்களது பணத்தை வைப்பிலிட்டவர்களுக்கு அதனைப் திருப்பிப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. அத்தியவசியப் பொருட்களில் விலையேற்றம் ஒரு புறமிருக்க அவற்றை பெற்றுக் கொள்வதிலும் கஷ்டங்களை மக்கள் எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது.

எரிபொருள் விலை வேகமாக அதிரித்துச் சென்றது. நாட்டின் பண வீக்கம் 116 வீதத்தை அடைந்துள்ளது. டொலர் ஒன்றுக்கான சூடான் நாணயத்தின் பெறுமதி 18 வீதத்திலிருந்து 52 வீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அன்றாட வாழ்வை கொண்டு செல்வதற்கே முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதன் பின்புதான் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பு உக்கிரமடைந்தது.

நாட்டின் 75 வீதமான எண்ணை வளத்தை கொண்டிருந்த தெற்கு சூடான் 2011 ஆம் ஆண்டு தனி ஆட்சி கோரி பிரிந்து சென்றதிலிருந்து சூடானின் மொத்த செலவையும் வருமானத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக இருந்த நாட்டின் முக்கிய வளத்தை சூடான் அரசு இழக்க நேரிட்டது. இதன் விளைவாக நாட்டின் பொருளாதாரம் மேலும் பலவீனமடைய ஆரம்பித்தது.

எண்ணைக்கு அடுத்த படியாக சூடானுடைய பொருளாதார பலத்தை தீர்மானிக்கும் அம்சம் தங்க ஏற்றுமதி விளங்குகிறது. 2017 ஆண்டு மொத்தமாக 90 டொன் தங்கத்தை சூடான் ஏற்றுமதி செய்திருக்கிறது. ஆனால், துரதிஷ்டவசமாக தங்க ஏற்றுமதி மூலமாக பொருளாதார பலத்தை அதிகரித்துக் கொள்ள சூடானால் முடியவில்லை. தங்க அகழ்வாராய்ச்சியில் தனியார் நிறுவனங்களே ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களிடமிருந்து அதனை கொள்வனவு செய்வதற்கான போதிய நிதி மத்திய வங்கியிடம் இல்லாமையால் அரசாங்கத்தையும் தாண்டி அவை கருப்பு சந்தைக்கூடாக தங்கத்தை விற்பனை செய்யலாயின. இதுவும் சூடானின் பொருளாதார நிலையை மிகவும் பாதித்த காரணியாகும்.

1997 ஆம் ஆண்டு முதல் சூடானின் மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடையானது நாட்டின் பொருளாதார நிலையை மிகவும் பாதித்திருந்தது. போர்க்குற்ற காரணங்களை காட்டி அமெரிக்காவால் பஷீரின் அரசுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட குறித்த பொருளாதார தடையால் உள்நாட்டின் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததோடு மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்து. விளைவாக கடந்த இருவது வருட வரலாற்றில் சூடான் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆண்டாக 2018 ஆம் ஆண்டு அடையாளப்படுத்தப்படுகிறது.

உமர் பஷீருக்கு எதிரான மக்கள் போராட்டம் அந்நாட்டிலுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் தொழின்முறை அதிகாரிகளின் பெருத்த வலை பின்னலோடு முன்னெடுக்கப்பட்டது. சூடான் தொழின்முறை அதிகாரிகளின் சபை (SPA) நாடு முழுவதும் பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. 22 அரசியல் கட்சிகளும் இணைந்து மாற்றத்திற்கான தேசிய முன்னணி (NFC- National Front for Change) என்ற ஓர் அமைப்பை நிறுவி ஆட்சி மாற்றம் கோரி போராடி வந்தன.

இராணுவ புரட்சி மூலம் உமர் பஷீரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்ட இராணுவ சபையின் கீழான ஆட்சியை எதிர்த்து அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். உமர் பஷீரின் கடந்த கால ஆட்சிக்கு முடிவு கொண்டுவரப்பட்டு நாட்டில் ஜனநாயக வழிமுறை மூலம் சுத்திகரிப்பான தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் புதியதோர் அரசு உருவாக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இராணுவத்தின் குறித்த அறிவிப்பு தமது எதிர்பார்ப்புக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக அவர்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றனர். அதே போன்று இப்போது உருவாக்கப்பட்டுள்ள இராணுவத்தின் தலைமையிலான இடைக்கால அரசு அரசியல் கட்சிகளையும் சிவில் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மீள் அமைதல் வேண்னுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் நாட்டில் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் இடைக்கால இராணுவ சபையிடம் அரசியல் கட்சிகள் முன்வைத்துவரும் அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்த கோரிக்கைகளில் சில அரசியல் கட்சிகள் நாட்டில் அமுலில் உள்ள இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களை நீக்குவதோடு அதற்கு பகரமாக மதச்சார்பற்ற சட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கருத்துக்கள் முன்வைத்துவருகின்றன.

உமர் பஷீரின் அரசாங்கத்தை இதுவரை தேர்தல் மூலமாக தோல்வியடைச் செய்வதற்கு மதச்சார்ப்பற்ற சக்திகளால் முடியாது இருந்த நிலையில் சூடானின் இஸ்லாமிய அடையாளத்தையும் மற்றும் அரபுத்துவத்தையும் கேள்விக்குட்படுத்தும் எந்த அரசியல் நிகழ்ச்சி நிரலும் இடம்பெறவில்லை. சூடானினுடைய அரபு மற்றும் இஸ்லாமிய அடையாளத்தை தீர்த்துக் கட்டுவதற்கான இறுதிச் சந்தர்ப்பமாக தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் இராணுவ புரட்சிக்கு பிந்திய ஆட்சி மாற்றத்தை பயன்படுத்திக்கொள்ள மதச்சார்பற்ற சக்திகள் தலைப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரபு வசந்தம் என்னும் பெயரில் அரபுலக நாடுகளில் இடம்பெற்றது போல் இந்தக் கிளர்ச்சி நாட்டை அதாள பாதாளத்துக்குள் இட்டுச் சென்றுவிடக் கூடாது. அது சூடானின் அரசியல் ஸ்திரத்தையும் பொருளாதார நிலையையும் மேலும் சிக்கலாக்குவதோடு, வெளிநாடுகளின் தலையீட்டையும் அங்கு கூர்மையடயச் செய்யும் என்று எச்சரிக்கப்படுகிறது. எது எப்படியோ சூடானின் தற்போதைய அரசியல் நெருக்கடியான நிலை அதனை சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாக மாற்றிவிடக்கூடாது என்பதுவே அநேகமானோரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *