Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » தொழுமிடத்தில் ஆண்கள் பெண்களுக்கு மத்தியில் திரையும்… பெண்களுக்கான முகத்திரையும்…

தொழுமிடத்தில் ஆண்கள் பெண்களுக்கு மத்தியில் திரையும்… பெண்களுக்கான முகத்திரையும்…

நாம் வாழும் ஊரிலே மஹல்லாவிலே இப்பிரச்சனை ஏற்பட்டதாலே இதற்கான மார்க்க நிலைபாட்டை இரு சாராரின் கருத்தையும் கேட்டபின் முன்வைக்கிறோம்.

இந்த மார்க்க கட்டுரையின் முடிவில் தான் என்னவெல்லாம் ஆதாரத்தோடு சொல்லப்பட்டு நிருவப்பட்டுள்ளது என்பது வாசகர்களுக்கு முழுவதுமாக புரியும். இரட்சகன் இதற்கான முழு கூலியையும் தருவானாக!

இது இறைச்செய்தி சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளதால் இதை எழுதுபவருக்கும் படிப்பவர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபியின் பெயர் இக்கட்டுரை முழுவதும் திரும்பத்திரும்ப வருமென்பதால் அவர்கள் மீது ஸலாமும் ஸலாவாத்தும் உண்டாகட்டுமாக!

இஸ்லாமிய மார்க்கத்தில் அகீதா எனும் கொள்கை விடயத்தில் நேர்வழிக்கு சாட்சியாக இருக்கும் முஸ்லிம்களிடத்தில் குழப்பம் ஒரு போதும் வராது.

ஆதாரம்:

وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَـنَّمَ‌ وَسَآءَتْ مَصِيْرًا‏‏

எவர் நேர் வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னரும் இத்தூதரை விட்டுப் பிரிந்து மூஃமின்களின் வழி அல்லாத வேறொரு வழியில் செல்கின்றாரோ அவரை நாம் அவர் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு (பின்னர்) அவரை நரகத்தில் சேர்த்து விடுவோம். அது செல்லும் இடங்களில் மிகக் கெட்டது.
(அல்குர்ஆன் 4:115)

நேர்வழியை அறிந்து கொள்வதற்கும் கல்வி என்பது அவசியமே. இல்லை என்று சொன்னால் வழிகேட்டை சரிகாணும் எண்ணத்தை மனோஇச்சை நிரப்பிவிடும்.

எனவே அகீதாவை தவிர்த்த ஏனைய மஸ்அலா(பன்மை – மஸாயீல்) விடயத்தில் இறைச்செய்தியை நேரடியாக கேட்டு கற்றறிந்த ஸஹாபாக்களிடம் தொடங்கி இமாம்கள் அறிஞர்கள் படிப்பவர்கள் வரை இருந்து கொண்டே தான் இருக்கிறது இருக்கும். இதனை நன்கு ஆழ்மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் அனைத்து மஸாயீல் விடயங்களிலும் இரு கருத்து கட்டாயம் இருக்கும் என்ற நிலை இல்லை.

சரி இப்போது விசயத்திற்கு வருவோம்.

தொழுமிடத்தில் பள்ளிவாசலில் ஆண்களுக்கு பெண்களுக்கு நடுவில் திரை போடலாமா கூடாதா?

இந்த கேள்விக்கு சுருக்கமாக பதிலளிப்பதற்கு முன்னால் ஒன்றை மிக கட்டயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
இது இபாதத் சார்ந்த விடயமல்ல!
இது தீர்க்கமான சொல்லப்பட்ட நபிவழி அல்ல!
மாறாக இஸ்லாமிய நடைமுறையாக நபியவர்களின் காலத்தில் இருந்தது.

திரை போடக்கூடாது என்பவர் போடக்கூடாது என்பதற்கான எந்த ஆதாரமும் வைத்திருக்கவில்லை என்பதே நாம் தேடிப்பார்க்க முடிந்த விசயம்.

திரை போடலாம் என்பவரும் போடுவதற்கான நேரடி ஆதாரம் இறைச்செய்தியில், நபியின் காலத்து நடைமுறையில் வைத்திருக்கவில்லை. ஆனால் மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. திரை போடுவதற்கு நபியிடமிருந்து எந்த தடையும் நேரடியாக இல்லை என்பதே நாம் அறிகின்ற ஒன்று.
இனி இந்த இரு சாராரின் முன் வைக்கும் ஆதாரங்களையும் பார்ப்பதற்கு முன்னால் ஒரு விடயத்தை நாம் கூர்ந்து பதிவு செய்து கொள்வது அவசியம்.

நபியின் காலத்திலிருந்த நடைமுறையான திரையற்ற நிலை என்பது ஹிஜாப் சட்டம் இறக்கப்படுவதற்கு முன்பா பின்பா?

இந்த ஹிஜாப் சட்டம் சரியாக புரிந்துவிட்டால் இதுவும் தெளிவாக புரிந்துவிடும்.

சட்டம் இறக்கப்படுவதற்கு முன்பு தான் என்பது அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்!

♦முதல் சாராரின் வாதங்களும் ஆதாரங்களும்♦

திரை போடக்கூடாது என்பவரின் வாதம்:

தொழுகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கண்டிப்பாக திரையிட்டுத்தான் ஆகவேண்டும் என்றால் நபியவர்கள் அவ்வாறு கட்டளையிட்டிருக்க வேண்டும். அல்லது நடைமுறையில் செய்து காட்டியிருக்க வேண்டும் அல்லது அதற்கு சொல்லியாவாது இருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு மாற்றமாக நபியவர்கள் திரையின்றியே பெண்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார்கள். தொழுகை நடத்தியுள்ளார்கள்.

ஹதீஸ் ஆதாரம் 1:

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரலி)
நூல்: ஸஹிஹுல் முஸ்லிம்(1607)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள்; பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால்(ரலி) அவர்கள்மீது சாய்ந்துகொண்டு, இறையச்சத்தைக் கடைப் பிடிக்குமாறும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும் வரியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு (மார்க்க நெறிமுறைகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும், பெண்களை நோக்கி, ”தர்மம் செய்யுங்கள். உங்களில் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவீர்கள்” என்று கூறினார்கள். அப்போது பெண்கள் நடுவிரிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து ”அது ஏன், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ”நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள்; (நன்றி மறந்து) கணவனை நிராகரிக்கிறீர்கள்” என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை (கழற்றி) பிலால்(ரலி) அவர்களின் ஆடையில் போட்டனர்.

விளக்கம்:
நபியவர்கள் பெண்கள் பகுதிக்குச் சென்று எவ்விதத் திரையுமில்லாமல் பெண்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார்கள். நபியவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் இருந்துள்ளார்கள். மேலும் கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து கேள்வி கேட்டார் என்று வந்துள்ளது. திரையிட்டிருந்தால் இவ்வாறு கூறுவதற்கு முடியுமா? மேலும் பெண்கள் பிலால்(ரலி) அவர்கள் ஏந்திய துணியிலே தர்மங்களைப் போட்டுள்ளார்கள். திரையில்லாமல் இருந்தால்தான் இது சாத்தியமாகும். எனவே பெண்களுக்கு உரை நிகழ்த்தும் போது திரையில்லாமல் உரை நிகழ்த்தலாம் என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும்.

இது போன்றே பிரத்யேகமாக பெண்களுக்கு மட்டும் மார்க்க தர்பியாக்களை அவர்கள் கேட்டதற்காக நபியவர்கள் செய்துள்ளார்கள்.
ஆதாரம்: ஸஹிஹுல் புஹாரி (7310)

மேலும், நபியவர்கள் காலத்தில் 5 வேளையும் பெண்கள் பள்ளி வந்து ஜமாஅத்துடன் தொழுபவர்களாக இருந்துள்ளனர். ஆனால் நபியவர்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எத்தகைய தடுப்பையும் திரையையும் ஏற்படுத்தவில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் தடுப்பு அல்லது திரை ஏற்படுத்த வேண்டுமானால் தொழுகையில் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நபியவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இதிலிருந்தும் திரை நபியவர்கள் வழிகாட்டவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஹதீஸ் ஆதாரம் 2:

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத்(ரலி)
நூல்: ஸஹிஹுல் புஹாரி(362)

சில ஆண்கள் சிறுவர்களைப் போன்று தங்களது சிறிய வேஷ்டியை தங்கள் கழுத்தில் கட்டிக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். (இதைக் கண்ட நபியவர்கள்) பெண்களிடம், ”ஆண்கள் (ஸஜ்தாவிலிருந்து எழுந்து) உட்காரும்வரை நீங்கள் (ஸஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தாதீர்கள்’ என்று சொன்னார்கள்.

விளக்கம்:
பெண்களின் பார்வை ஆண்களின் மறைவிடங்களைப் பார்த்துவிடக் கூடாது என்ற காரணத்தினால்தான் நபியவர்கள் பெண்களை தாமதமாக ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்துமாறு கூறுகிறார்கள். இதிலிருந்தே ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எவ்வித திரையும் இருந்திருக்கவில்லை என்பதை நான் விளங்கிக் கொள்ள முடியும்.

ஹதீஸ் ஆதாரம் 3:

அறிவிப்பவர்: அம்ர் பின் ஸலிமா(ரலி)
நூல்: ஸஹிஹுல் புஹாரி(4302)

மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, ”அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள், ‘இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்’ என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள். ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே, (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், ”உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.

விளக்கம்:
இமாமின் ஆடை கிழிந்திருந்தை ஒரு பெண்மணி சுட்டிக்காட்டுகிறார் என்றால் அங்கு எவ்விதத் திரையும் இருந்திருக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். திரை இருந்திருந்தால் இமாமின் ஆடை கிழிந்திருந்ததை அப்பெண்மனி பார்த்திருக்க முடியாது.

ஹதீஸ் ஆதாரம் 4:

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: ஸஹிஹுல் முஸ்லிம்(749)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஜமாத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்தது முதல் வரிசையாகும். தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.

விளக்கம்:
ஆண்களும் பெண்களும் சேர்ந்து தொழும் போது ஆண்களுக்குப் பின்னால் பெண்கள் நிற்பார்கள். இறுதி வரிசையில் நிற்கின்ற ஆண்களின் பார்வை தமக்குப் பின்னால் நிற்கின்ற பெண்களின் மீது படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாகத்தான் நபியவர்கள் ஆண்கள் வரிசையில் மிக மோசமானது இறுதி வரிசை என்று கூறுகிறார்கள். அல்லது முதல் வரிசையில் நிற்கின்ற பெண்கள் தமக்கு முன்னால் நிற்கின்ற ஆண்களின் மீது பார்வை செலுத்தும் நிலை ஏற்படலாம் . இதன் காரணமாகத்தான் நபியவர்கள் பெண்களின் வரிசையில் கெட்டது முதல் வரிசை என்று கூறுகிறார்கள்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் திரையிருந்தால் இவ்வாறு நபியவர்கள் கூறியிருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் நபியவர்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் திரையிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறவுமில்லை. அவரவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அறிவுரைதான் கூறுகின்றார்கள்.

குறிப்பு:
இந்த மேற்குறிப்பிட்ட ஆதாரத்தில் தான் ஒரு ஃ இருக்கின்றது. அது என்னவென்பதை திரை போட தடையில்லை என்பவரின் ஆதாரத்தில் பார்க்கலாம்.

ஹதீஸ் ஆதாரம் 5:

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல்: ஸஹிஹுல் புஹாரி(372)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள் அப்போது இறைநம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களது ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) கலந்துகொள்வார்கள். பின்னர் தங்களது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வார்கள். அவர்களை (யார் யார் என்று) எவரும் அறியமாட்டார்கள்.

ஹதீஸ் ஆதாரம் 6:

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல்: ஸஹிஹுல் புஹாரி(864)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள் நபியவர்களை அழைத்து, ‘பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்’ என்று கூறியதும் நபி (ஸல்) அவர்கள் (தமது அறையிலிருந்து) புறப்பட்டு வந்து, ”பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறு யாரும் இந்தத் தொழுகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கவில்லை” என்று கூறினார்கள். அன்றைய நாளில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாத் தொழுகையை அடிவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து இரவின் முதலாவது மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுதுவந்தனர்.

விளக்கம்:
பள்ளிவாசலில் பெண்கள் தூங்கிவிட்டார்கள் என்பதை உமர்(ரலி) அவர்கள் நபிக்கு கூறுகின்றார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் திரையிருந்தால் நிச்சயமாக உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க முடியாதே.

ஹதீஸ் ஆதாரம் 7:

அறிவிப்பவர்: உம்முஸலமா(ரலி)
நூல்: ஸஹிஹுல் புஹாரி(875)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்து முடித்ததும் (உடனடியாக) பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்றுநேரம் (தாம் தொழுத) அதே இடத்திலேயே வீற்றிருப்பார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ‘அ(வ்வாறு அவர்கள் அமர்ந்திருந்த)து, ஆண்களில் எவரும் பெண்களை நெருங்குவதற்கு முன், பெண்கள் திரும்பிச் செல்லட்டும் என்பதற் காகத்தான்’ என்றே நாம் கருதுகிறோம். அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். ஆதாரம்(புஹாரி 870 )

மேற்குறிப்பிட்ட ஹதீஸிலிருந்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எவ்விதத் தடுப்பும் திரையும் இருந்திக்கவில்லை என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

ஹதீஸ் ஆதாரம் 8:

அறிவிப்பவர்: அனஸ்(ரலி)
நூல்: ஸஹிஹுல் புஹாரி(871)

(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் உம்முஸுலைம்(ரலி) அவர்களது இல்லத்தில் (உபரித் தொழுகை) தொழு(வித்)தார்கள். நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டோம். உம்முஸுலைம் அவர்கள் எங்களுக்குப் பின்னால் நின்றார்கள்.

விளக்கம்:
உம்முஸுலைம்(ரலி) அவர்கள் நபியவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதுள்ளார்கள். ஆனால் நபியவர்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் எவ்விதத் திரையும் இருக்கவில்லை. மேலும் தொழுகையில் இமாம் தவறு செய்து விட்டால் அதை உணர்த்தும் கடமை ஆண்களுக்கு உள்ளது போல் பெண்களுக்கும் இருக்கின்றது. திரையிட்டு விட்டால் அதை சரிவர செய்ய இயலுமா?

மேலும் தொழுமிடத்தில் திரையிடுவது அவசியம் என்றால் மற்ற பொது இடங்களில் திரையிடுவது அதை விட மிகவும் அவசியமாக ஆகும்.

அதே நேரத்தில் உரையாற்றுபவரைத் தவிர மற்றவர்கள் தேவையின்றி பெண்கள் சபைக்குச் செல்வதையும், பெண்களின் சபைகளை நோக்கி பார்வைகளைத் திருப்புவதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும். திரையின்றி ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் இடைவெளியை அதிகரிப்பதில் தவறில்லை. நபியவர்கள் பெண்களுக்கு உரையாற்றும் போதும் பள்ளியில் தொழுகை நடத்தும் போதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எவ்வித ஹிஜாபையும் ஏற்படுத்திக் கொள்வில்லை. நம்முடைய அழகிய முன்மாதிரி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான். அவர்கள் இவ்வாறு நடைமுறைப்படுத்தியிருக்கும் போது அதற்கு மாற்றமாக திரையிடுவதை ஏன் அவசியமாக்க வேண்டும்?

♦இரண்டாவது சாராரின் சம்பவங்களும் வாதங்களும் ஆதாரங்களும்♦

திரை போடலாம் என்பவரின் வாதம்

திரை போடக்கூடாது என்பவரின் வாதங்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்குமே பாடம் எடுப்பதை போலவே உள்ளது.

ஏனேனில் அல்லாஹ்வுக்கு நன்றாக தெரியும் இப்படி ஒரு பிரச்சனை நபிக்கு பின்னால் வரும் என்று இருந்தும் அல்லாஹ் ஏன் திரை போடுவது ஹராம் என்று நபிக்கு அறிவிக்கவில்லை?

நபிக்கு அறிவிக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் இதற்கு இரண்டாம் கருத்து ஏற்படாதவாறு திரையிடக்கூடாது என்று அடித்து சொல்லவில்லை?

இதற்கெல்லாம் நியாயமாக சிந்தித்தாலே விடை கிடைத்துவிடும்.

ஹதீஸ் ஆதாரம் 1:

ஹஜ் செய்ய நபியவர்கள் சொன்னதற்கு பின்பு.
(ஹதீஸின் சுருக்கம்)
ஒரு மனிதர் நபிகளாரிடம் வாழ்நாளில் ஹஜ் ஒரு முறை செய்தால் போதுமா என்று கேட்டார். நபியவர்கள் அமைதியாக இருந்தார்கள். இரண்டாவது தடவையாக கேட்டார். பின்னரும் நபியவர்கள் அமைதியாக இருந்தார்கள். பின்னரும் மூன்றாவதாக கேட்டார். நபியவர்கள் முகம் சிவக்க பதில் கூறினார்கள். இந்த கேள்வியால் அல்லாஹ் எனக்கு வஹி அனுப்பி ஒரு முறைக்கு மேல் ஹஜ் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டால் அனைவராலும் செய்ய இயலுமா?
நான் விட்டுவிடும் நிலையிலேயே விட்டுவிடுங்கள்.

விளக்கம்:
இஸ்லாத்தை கேள்வி கேட்டு அறிந்து கொள்ளுதல் வரவேற்கப்படுகின்ற பகுதி தான் ஆனால் சில இடங்களில் கேள்வி எழுப்புவதும் துருவித்துருவி ஆராய்வதும் வண்மையாக தடுக்கப்பட்டுள்ளது.

அது போல தான் ஸஹாபாக்கள் காலத்தில் மிகுந்த இறையச்சமுறையோர்களாக அனைவரும் இருந்தார்கள். அல்லாஹ் ஒன்றை கூறிவிட்டால் தூதர் ஒன்றை வழிகாட்டிவிட்டால் அதை பேணக்கூடியவர்களாகவும் செய்து முடிப்பவர்களாகவும் இருந்தனர். பின்வரும் ஆதாரங்களில் நன்றாக புரியும்.

ஹதீஸ் ஆதாரம் 2:

ஸஹிஹுல் முஸ்லிம்(749)
அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஒரு நம்பகமான நபிமொழி.

பெண்களின் வரிசையில் கெட்டது முதல் வரிசையாகும். ஆண்கள் வரிசையில் கெட்டது இறுதி வரிசையாகும்.

இந்த ஆதாரம் புதிது அல்ல. முதல் சாராரால் மேற்குறிப்பிடப்பட்ட 4ஆம் ஆதாரம் தான்.

விளக்கம்:
இது தான் நாம் வைக்கும் பிரதான வாதமாகும். ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும் பித்னாவின் பக்கம் இழுத்துச்செல்லும் தொழுகை வரிசைகளை மிகத் தெளிவாக நபியவர்களே கூறியிருப்பது தான் மிகப்பெரும் ஆதாரம். அதே நபியவர்கள் தான் பித்னாவின் குழப்பம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கும் போது எப்படி ஒழுக்கத்தை பேண வழிவகுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.

இன்று நாம் இருப்பது எவ்வளவு மோசமான உலகம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வெளிப்படையில் சொல்லப்போனால் திரையில்லாமல் எந்த தடையுமில்லாமல் ஒரு பள்ளிவாசலில் ஆண்களும் பெண்களும் கலந்து கொள்ளும் சூழல் தான் நம்மிடம் உள்ளதா?

அப்படித்தான் நாம் பள்ளிவாசல் அமைப்பை வைத்துள்ளோமா என்பதை திரையிடக்கூடாது என்று சொல்லும் கடும்போக்குடையவர்கள் சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும்.

நம் மக்களின் தக்வாவின் நிலை தான் என்ன? சூழல் கிடைக்கும்போது மாத்திரம் தவறு செய்வதில்லை சூழலை உருவாக்க முயற்சிக்கிறான். கிடைத்தவுடன் தவறு செய்துவிடுகிறான். கிடைக்கவில்லையா கவலை கொள்கிறான். இது தான் நமது தக்வாவின் நிலையாக இன்று இருக்கிறது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

மேலும் திரையிடக்கூடாது என்று வாதம் வைப்பவர்களே!
இன்றைய உண்மை நிலை தான் என்ன?
அஸர் போன்ற தொழுகையில் இமாம் மட்டும் நின்று தொழும் நிலையெல்லாம் மாதத்தில் பல நாட்கள் பார்க்கலாம். அது போன்ற நாட்களில் பெண் தொழுகை வந்து தடையும் அல்லாமல் திரையும் அல்லாமல் தொழுதால் இச்சமூகத்தில் என்ன நேரும் என்பதை சிந்திக்க மறப்பதேனோ?

குழப்பத்தை அடைக்கும் கதவு என்று பெயரெடுத்த உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் மட்டும் இருந்திருந்தால் நிச்சயமாக உங்களை எதிர்த்திருப்பார்களே!

சரி அடுத்தடுத்த ஆதாரங்களையும் நிகழ்வையும் பார்ப்போம்.

ஹதீஸ் ஆதாரம் 3:

நூல்: புஹாரி(750)

இதுவும் நாம் 2ஆம் ஆதாரமாக பார்த்த நபிமொழிக்கு ஒப்பானது.

ஸஹ்ல் பின் சஅத்(ரலி) அவர்கள் கூறியதாவது (நபியவர்களின் காலத்தில் மேலாடையில்லாமல்) ஆண்கள் அணிந்த கீழாடை சிறியதாக இருந்த காரணத்தால்,சிறுவர்களைப் போன்று அவர்கள் தம் கீழாடைகளை பிடரிகள் மீது கட்டிக்கொண்டு நபியவர்களுக்கு பின்னால் (தொழுதுகொண்டு) இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆதலால், பெண்களே! ஆண்கள் (ஸஜ்தாவிலிருந்து) நிமிரும்வரை நீங்கள் உங்களுடைய தலைகளை (ஸஜ்தாவிலிருந்து) உயர்த்த வேண்டாம் என்று (நபியவர்கள் பிறப்பித்த உத்தரவை) ஒருவர் கூறுவார்.

விளக்கம்:
இதுவும் நம் வாதத்திற்கு வலு சேர்க்கும் நபிமொழியாகும். இதை முறையாக புரிவதற்கு புஹாரி இமாம் போட்ட தலைப்பை சரியாக படித்தாலே புரிந்துவிடும்.

பெண்கள் ஆண்களுக்கு பின்னரே ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்த வேண்டும் என்ற கட்டளை.

இதற்கு அர்த்தம் நிச்சயம் அனைவருக்கும் புரியும். முன்னால் தொழும் ஆண்களின் மறைவிடத்தில் எதனையோ பார்க்க கூடாதா இடத்தையோ பார்த்துவிட்டால் அங்கே மானக்கேடும் பித்னாவும் வருவதற்கு வாய்ப்புண்டு.

இறையச்சத்தில் மேலான ஸஹாபாக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டளையே இதுவென்றால் நாம் இன்று இருக்கும் நவீன செல்போன் கலாச்சார உலகத்தில் என்ன நிலை? இங்கே பித்னா(குழப்பம்) அல்லாமல் ஹைர்(நலவு)ஆ வரும் என்று திரையிடக்கூடாது என்ற சாரார் கொஞ்சம் விளக்குங்கள்.

ஹதீஸ் ஆதாரம் 4:

பத்தாயிரம் மடங்கு நன்மையான மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது பெண்களுக்கு வீட்டில் தொழுவது அதுவும் அவர்களின் அறையில் தொழுவது சிறந்ததாகும் என்று பெருமானார் கூறியுள்ளார்கள்.

விளக்கம்:
இது மிக முக்கியமான ஆதாரமாகும்.
பெண்கள் வீடு தாண்டுவது தேவையில்லாமல் வெளியில் சுற்றுவது கடைத்தெருவுக்கு செல்வது மஹ்ரமில்லாமல் பயணம் செய்வது போன்ற அனைத்திலும் இஸ்லாம் கோபமாக தான் பார்க்கிறது.

எந்த அளவிற்கென்றால் பள்ளிவாசலுக்கு தொழுகை வருவது கூட சிறந்தது அல்ல என்றும் வீட்டில் தொழுவது பல ஆயிரம் மடங்கு நன்மையென்றும் இஸ்லாம் கூறுகிறது.

ஏன்? காரணம் தான் என்ன?
ஷைத்தான் முதன்முதலில் மனிதனுக்கு மானக்கேட்டை தான் முழுமுயற்சி செய்து ஏவுகிறான்(அல்குர்ஆன்). அதன் மூலம் அவனை வீழ்த்திடலாம் அவன் மனதை குழைத்துவிடலாம்.

அதற்கு மிகப்பெரும் காரணியாக இருப்பது பெண்களை ஆண்களோடு களப்பது. அதன் பின் ஒழுக்கக்கேடு வருவது சுலபம்.

இதனை வழுப்படுத்துவதற்கு துணை சான்றாக நபிமொழி ஒன்றை பார்ப்போம். பெண்களே பள்ளிக்கு வந்தால் அலங்காரமும் வாசனை பொருட்களையும் பயன்படுத்துவதை நபியவர்கள் கடுமையாக கண்டிக்கிறார்கள்.

இப்படி மார்க்கத்தில் சிறந்தது ஒன்று இருக்க அதை எத்தனை முறை மக்களிடம் கூறியிருக்கிறோம்?

வீட்டிலேயே வாசனை திரவியத்தையும் அலங்காரத்தையும் செய்து கொண்டு கணவனை சந்தோசப்படுத்தி எந்த ஃபித்னாவுமின்றி இருந்த இடத்திலேயே பல்லாயிரம் மடங்கு நன்மையை பெருவது சிறந்ததா?

அல்லது எந்த அலங்கரித்தலும் இல்லாமல் வாசனை பொருட்கள் பயன்படுத்தாமல் கணவனை அதன் மூலம் மகிழ்ச்சிபடுத்தாமல் ஃபித்னாவோடு நிறைந்து இருக்கும் வெளியில் வந்து பள்ளியில் ஒரு மடங்கு நன்மையை பெருவது சிறந்ததா?

ஆனால் ஃபித்னா பிரச்சனை நடக்கவிடாமல் பாதுகாக்க தங்களிடம் தக்வா நிறைந்துள்ளது என்பவர்களுக்கு நபியவர்கள் பள்ளிவாசலுக்கு வர அனுமதியளிக்கிறார்கள். ஆண்களை தடுக்க வேண்டாம் எனவும் அறிவுருத்தியிருக்கிறார்கள்.

பள்ளிவாசலில் ஃபித்னா வராதே என்று கூறுபவர்களுக்கு பின்னால் வரும் ஆதாரங்கள் காத்துள்ளன.

அஸர் ஆதாரம் 5:

நூல்: ஸஹீஹ் முஸ்லிம்(761)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இன்று) பெண்கள் உருவாக்கியுள்ள (அலங்கார உத்திகள் போன்ற)வற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்திருப்பார்களேயானால் பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாதெனத் தடுக்கப்பட்டதைப் போன்று இவர்களையும் தடுத்திருப்பார்கள்.

விளக்கம்:
இங்கு தான் மென்மேலும் நுணுக்கமாக கவனிக்க வேண்டிய அம்சம் உள்ளது.
நபியவர்களின் மிக நெருக்கமான மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள் ஒழுக்கம் குறித்தும் ஹிஜாப் திரையிடுவது குறித்து அறியாமல் ஒரு செய்தியில்லை.

அவர்கள் நபிகளாரின் மரணத்திற்கு பின்னர் சுமார் 40 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அதில் அவர்கள் பார்த்த தக்வா குறைந்து போனதும் ஃபித்னாவும் பொய்யும் பரவ ஆரம்பித்த காலப்பகுதியில் அவர்கள் இச்செய்தியை கூறுயது இந்த உம்மத்துக்கு மிகப்பெரும் படிப்பினை.
அதனால் தான் இமாம் முஸ்லிம் தனது கிரந்தத்தில் இதனை பதிவு செய்துள்ளார்கள்.
பெண்கள் வீ்ட்டில் தொழுவதே மிகச்சிறந்த ஒன்று

ஹதீஸ் ஆதாரம் 6:

நபியவர்கள் கூறினார்கள்
இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணிய வேண்டாம்.
இஹ்ராம் அணிந்த ஆண் தொப்பி கால் சட்டை அணிய வேண்டாம்.
(சுருக்கம்).

விளக்கம்:
நாம் இங்கு முதல் தலைப்பிற்காக முகத்திரையும் விளக்க வேண்டியுள்ளது. மேலும் ஹிஜாப் சட்டத்தை இங்கே விளக்க வேண்டியுள்ளது.

பெண்கள் முகத்திரை அணிவதை பொருத்தவரை இன்று தமிழ்நாட்டில் குழப்பம் செய்துவிட்டு அடங்கியவரால் இதிலும் ஃபித்னா தான். முகத்திரை அணிவது ஹராம் என்று கருத்து உருவாக்கப்பட்டு நரகத்திற்கு எச்சரிக்கை கொடுக்கும் அளவிற்கு சில இலங்கை அழைப்பாளர்கள் பேசியது அனைவரும் அறிந்ததே.

அது போல சிலர் முகத்திரை அணியாமல் இருப்பதும் குற்றம் என்று பேசிவருகின்றனர்.

அதுவும் தவறு இதுவும் தவறு.

இஸ்லாம் இதிலும் மென்மையான போக்கை தான் வெளிப்படுத்துகிறது.

நபிமொழிகளில் பார்க்க முடிகிறது முகம் கறுத்த ஒரு பெண் என்று.

மேலும் இந்த ஆதாரத்தின் அடிப்படையில் இஹ்ராம் அணியாத பெண்கள் முகத்திரை அணிந்து கொள்ளலாம் என்று தகவல் அப்பட்டமாக தென்படுகிறது.

✅எனவே முகத்திரை விரும்பியவர் அணியலாம் விரும்பாதவர் அணிய தேவையில்லை. அதனால் எந்த குற்றமுமில்லை என்பதை தெளிவாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும், இங்கு மிகமிக முக்கியமாக ஹிஜாப் சட்டத்தை விளக்கினால் பள்ளிவாசலில் திரையிடுவது பற்றி புரிந்துவிடும்.

ஹிஜாப் சட்டம் இறங்குவதற்கு முன்னால் பெண்களின் நிலையை பலவாரியாக நபியவர்கள் திருத்தம் செய்துள்ளார்கள். அதில் ஒன்று தான் மஸ்ஜிதுந் நபவியில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக ஒழு செய்யும் பொது பாத்திரம் பிரிக்கப்பட்டது.

இது போன்ற பல நிகழ்வுகளையும் சொல்லலாம். உதாரணத்திற்கு ஒன்று போதும். எனவே முன்னொரு ஆதாரத்தில் நாம் குறிப்பிட்டது போல ஆண்களும் பெண்களும் சேர்ந்து இருக்கும் அனைத்து இடங்களும் மாற்றப்பட்டன. இப்போது சொல்லுங்கள் அல்லாஹ் இறக்கிய ஹிஜாப் எனும் திரை சட்டத்தை நபியவர்கள் நடைமுறைபடுத்திய முறை இது தானே. அதே அடிப்படையி்ல் ஆண்களுக்கு பெண்களுக்கும் தனித்தனி இடங்களாக மாறும் வகையில் திரையிடுவதில் மார்க்கத்தில் மிகுந்த வரவேற்ப்பை எம்மால் உறுதிசெய்ய முடிகிறது.

இதனை அனைவரும் ஏற்பதற்கு இன்னுமொரு ஆதாரத்தை நபிமொழியாகவே முன் வைக்கிறோம். நன்கு கூர்ந்து விளங்கவும். அவை பின்வருமாறு.

ஹதீஸ் ஆதாரம் 7:

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: ஸஹிஹுல் புஹாரி(372)

பெண்கள் தங்களது ஆடைளால் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக தொழுவார்கள்.
நபியவர்கள் தொழுகை முடித்ததும் பெண்கள் உடனடியாக எழுந்துவிடுவார்கள். அவர்கள் யாரென்று பிறர் அறியாத வண்ணம் வீடுகளுக்கு சென்றுவிடுவார்கள்.

விளக்கம்:
இது ஹிஜாப் சட்டம் இறங்கிய பின்பு என்று பட்டவர்த்தனமாக ஹதீஸிலேயே உள்ளது. இதில் இன்னொன்றும் புரிந்து கொள்ள வேண்டிய அம்சம் உள்ளது. ஒரே சபையில் இல்லாமல் உடனடியாக கலைந்து செல்வது தான் நாம் ஏற்கனவே நிருவிய விடயமாகும். ஹிஜாப் என்பது அனைத்திலும் பெண்களுக்கான திரையே.
மஹ்ரமான ஆண்களல்லதோருக்கு திரைக்குள் நின்றே பதில் சொல்லுங்கள். எனவே திரை விடயத்தில் இதை இஸ்லாம் அனுமதிக்கவே செய்துள்ளது.

எந்த இடத்திலும் திரையிடுவதை நபியவர்கள் எக்காலத்திலும் எச்சூழ்நிலையிலும் தடுக்கவில்லை என்பதை நன்கு விளங்க முடிகிறது.

மேலும், இஸ்லாம் தடுக்காத ஒரு திரையை தடுப்பது வரம்பு மீறுதலாகும். நபியவர்கள இரு கருத்துக்கு உடன்பாடாக கூறியுள்ள விடயத்தை ஒருதலைபட்சமாக ஏற்பது ஸுன்னா அல்ல!

தொழுமிடத்தில் திரையிடாமல் விடுவதற்கும் திரையிடுவதற்கும் ஸுன்னா அடிப்படையில் இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்!

இஸ்லாமிய மார்க்கம் மிகவும் மென்மையான மார்க்கம். கடும்போக்கிற்கு இடமில்லை.

திரையிடக்கூடாது என்று இன்னும் அடம் பிடிப்பவர்கள் நிச்சயம் பதிலளிக்க வேண்டிய பகுதி ஒன்றை நாம் வைத்துள்ளோம்.

♦தொழுமிடத்தில் ஹிஜாப் எனும் திரையிடுவதால் ஒழுக்கம் பேணப்படுமா ஒழுக்கக்கேடு உண்டாக்கப்படுமா?
♦தொழுமிடத்தில் திரையிடுவதை ஹராம் என்றும் பித்அத் என்றும் அல்லாஹ் ரசூல் கூறிய நேரடி ஆதாரம் ஒன்றை காட்ட இயலுமா?
♦தொழுமிடத்தில் திரையிடக்கூடாது என்பது கடும்போக்கு அல்லாமல் வேறென்ன என்பதை சொல்வதற்கு முதல் சாரார் கடமை பட்டுள்ளனர்.
♦தொழுமிடத்தில் திரையில்லா சந்தர்ப்பத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் சைகை பேச்சுக்கள் இடம்பெற்றால் மார்க்க அடிப்படையில் சரியானதா?
♦திரையின்றி ஆண்கள் பெண்களின் தொழுகை அறை இருக்கும் சமகாலத்தில் இருக்கும் பள்ளிவாசலின் பெயர் தான் என்ன?

தொழுமிடத்தில் திரையிடக்கூடாது எனும் கருத்தில் ஒருவர் கூட எனக்கு தெரிந்து இல்லை.

பல கடந்தகால அறிஞர்கள் உட்பட நம் கருத்து ஜாயிஸ்(அனுமதி) என்றே வழு சேர்க்கின்றனர்.

இது குறித்து சமகால உலமாக்களிடமும் ஆய்வாளர்களிடமும் கலந்து ஆலோசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1)ஷைய்க் முஹம்மது யூசுஃப் மிஸ்பாஹி – சிவகாசி
2)ஷைய்க் டாக்டர் முபாரக் மஸ்வூத் மதனி – இலங்கை
3)ஷைய்க் முஜாஹித் இப்னு ரஸீன் – இலங்கை
4)ஷைய்க் அன்சாரி பிர்தவ்ஸி – நாகூர்
5)ஷைய்க் ஹசன் அலி உமரி நளிரி – சென்னை
6)ஷைய்க் யூசுஃப் ஃபைஜி – கடையநல்லூர்
7)ஆய்வாளர் முஹம்மது சதாத் (அபூமலிக்) – இலங்கை
8)ஷைய்க் அபூபக்ர் சித்திக் அல்தாஃபி – மேலப்பாளையம்

கட்டுரை மேற்பார்வை: ஷேய்ஹ் முஹம்மது இஸ்மாயீல் நத்வி – சிங்கப்பூர்

ஆக்கம்:
முஷ்தாக் அஹமது பி.டெக்
இஸ்லாமிய மாணவன்.
+91 98947 36434

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *