Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » TNTJவின் திருகுதாளங்கள் – இஸ்லாமா? இயக்கமா? மாநபி வழியா? மாநில தலைமையா? குர்ஆன் ஹதீஸா? அறிஞர் குழுவா?

TNTJவின் திருகுதாளங்கள் – இஸ்லாமா? இயக்கமா? மாநபி வழியா? மாநில தலைமையா? குர்ஆன் ஹதீஸா? அறிஞர் குழுவா?

அன்வர்தீன், பெரம்பலூர்

தமிழகத்தில் குர்ஆன் ஹதீஸை மட்டும் போதிப்பதாக சொல்லி, ஞானமில்லாமல் மனோ இச்சையின் அடிப்படையில் தவறான மார்க்கத் தீர்ப்புகளை அளித்து, முஸ்லிம்களிடையில் பிரிவினையை ஏற்படுத்தி, தானும் வழிகெட்டு அவர்களை ஜானுக்கு ஜான் முழத்துக்கு முழம் பின்பற்றுவோரையும் வழிகெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு தமிழக இயக்கம்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். குர்ஆனுக்கு சுய விளக்கம், ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல், மனம்போன போக்கில் மார்க்க தீர்ப்புகள் என்று மார்க்கத்தில் மட்டும் இவர்கள் கைவரிசையை காட்டாமல், ஈகோ காரணமாக ஸைத்தானின் வலையில் வீழ்ந்து, பள்ளிவாசல்களை பூட்டுதல், அபகரித்தல் போன்ற இஸ்லாத்தின் எதிரிகள் செய்யக்கூடிய வேலைகளையும் ஏகத்துவத்தின் பெயரால் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் பாண்டிச்சேரி மஹல்லா வாசிகளுக்கு சொந்தமான் சுல்தான்பேட்டை பள்ளிவாசலில் புகுந்து, அராஜகம் செய்து, உடைத்து அதை அபகரிக்க முயன்றுள்ளனர். இவர்கள் செய்யக்கூடிய அராஜகத்தால் ஒரு சில இடங்களில் பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டு, வெளியில் தொழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதை கண்டு தமிழக முஸ்லிம்கள் பாஜக, RSS-ஐ எதிர்ப்பதை போன்று வெறுக்க ஆரம்பித்து விட்டனர்.

திருச்சி சிங்காரத்தோப்பு பள்ளிவாசல் ஜாக் அமைப்புக்கு சொந்தமானதாக இருந்தும், அதை அபகரிக்க TNTJ வினர் முயன்றபோது, பிரச்சனையானால் இறையில்லம் இழுத்து மூடப்படும் என்றெண்ணி பெருந்தன்மையாக விட்டுவிட்டு வந்த ஜாக் அமைப்பினரின் செயல்பாடுகள் எங்கே? தனக்கு சொந்தமில்லாத பள்ளிகளாக இருந்தும், அதை அபகரிக்க முயலும்  TNTJ வினர் எங்கே?

ஐந்து நேர தொழுகையை ஜமாஅத்தோடு தொழுவதில் பொடு போக்கானவர்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும்,  எந்த பள்ளியில் தொழலாம், எந்த பள்ளியில் தொழக்கூடாது என்பதைக்கூட இன்னும் இவர்களால் முடிவு செய்ய இயலவில்லை. இதுதான் கடந்த 30 வருடகால ஏகத்துவ பிரச்சாரத்தின் சாதனை.

TNTJ மர்கஸ் தவிர மற்ற பள்ளிவாசல்கள் இணைவைப்பவையாக உள்ளதால், அதிலே தொழக்கூடாது என்று சொல்லி மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி தனிப்பள்ளி கண்டவர்கள், வழக்கம்போல் அறிஞர் குழுக்கள்? ஆய்வுகள் செய்ததில் தவறாக சொல்லிவிட்டோம், அனைத்து பள்ளிகளிலும் தொழலாம் என்று தங்களுடைய பழைய நிலையிலிருந்து ஜகா வாங்கி விட்டனர்.

மண்டையில் உதிப்பதெல்லாம் மார்க்கம் என்று நீங்கள் கொடுக்கும் விளக்கங்களை பார்க்கும்போது, மக்கள் சிரித்து மகிழும் நல்ல நகைச்சுவை பட்டிமன்றங்களை பார்ப்பதுபோல் உள்ளது.

தற்போது, இந்த போலி ஏகத்துவவாதிகளே, தங்களுக்குள் அடித்துக்கொண்டு, தனி மர்கஸ் அமைக்க காரணமான சகோதரர் பீஜே, TNTJ மர்கஸ் தொழ தகுதியற்றவை என ஃபத்வா கொடுத்து, தங்களின் ஆய்வுகள் குப்பைகளுக்கு சமம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார்.

முனாஃபிக்குகள் கட்டிய மஸ்ஜித் ழிரார் சம்பந்தமான சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக இதுவரை பேசிவந்தவர்கள், கூடாரங்கள் காலியாகிக்கொண்டு வருவதை பார்த்து, வழக்கம்போல் பலவீனமான் ஹதீஸ் என்று சாட்டையை சுழற்ற ஆரம்பித்துவிட்டனர். TNTJவிலே ஒருவர் இது ஸஹீஹான ஹதீஸ் என்று சொல்ல வேறொருவர் இது பலவீனமான ஹதீஸ் என்று சொல்லி முரண்படுவது மோடி மஸ்தான் வேடிக்கையின் உச்சகட்டம்.

ஸஹீஹான ஹதீஸ் எது, பலவீனமான ஹதீஸ் எது என்பதை பிரித்தரிவிப்பதில் தங்களுக்குள்ளே முரண்பட்டுக்கொள்ளும் இவர்களை பின்பற்றுபவர்கள் குர்ஆன், ஹதீஸை அல்ல அறிஞர் குழுவின் அபத்தமான ஆய்வுகளைத்தான் என்பது நிரூபணமாகி விட்டது.

தங்களுக்கு வேண்டுமெனில், பலமான ஹதீஸை, பலவீனமான ஹதீஸாக மாற்றுவதில் எங்களை மிஞ்சுவதற்கு ஆளில்லை என்பதை இதன்மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டனர். ஸஹீஹான ஹதீஸ் மறுப்பாளர்களை, தாம் செய்து கொண்டிருப்பது தவறு என்பதை இறைவன் மக்களின் முன்னிலையில் அடையாளப்படுத்தி விட்டான்.

நம்முடைய சமுதாயத்தில் இயக்கங்கள் அதிகரித்துக்கொண்டு இருப்பது போல, நம்முடைய உள்ளங்களிடையே கருத்துவேறுபாடுகளும் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. அவை நம்மை இணைப்பதற்கு பதில், தாமரை இலைமேல் தண்ணீர் போல் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பிரிவினையை அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன என்றால் மிகையாகாது.

அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்ட மாமருந்தாக இருக்கும் இஸ்லாத்தில், இதுபோன்ற கருத்துவேறுபாடுகளுக்கு தீர்வு இல்லையா? அல்லது முஸ்லிம்கள் இஸ்லாம் போதித்த தீர்வுகளை கடைபிடிக்க வில்லையா என்று யோசித்து பார்த்தால், கண்டிப்பாக குர்ஆன், ஹதீஸில் அழகிய வழிமுறைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன, ஈகோவின் காரணமாக பின்பற்றுவதில் நாம் கோட்டைவிட்டு ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு இருக்கிறோம். உள்ளங்களில் ஏற்படும் குரோதங்கள் காரணமாக நாம் பிரிவினையின் உச்சத்தில் இருக்கிறோம்.

இறைவன் திருமறையில் முஃமின்கள் அனைவரும் சகோதரர்கள் என்று சொல்கிறான். TNTJ என்ற இயக்கத்தின் திருகுதாளங்களால், சுய இச்சையின் அடிப்படையில் மார்க்கத்தை பிரித்து விட்டபடியால், இன்று மக்களிடையே இயக்கம் என்ற சொல்லை கேட்டாலே, அது ஏதோ கெட்ட வார்த்தைபோல் நினைப்பது மட்டுமல்லாமல், இயக்கமே வேண்டாம் என்ற அளவுக்கு வந்துவிட்டனர். சகோதரத்துவம் என்ற சொல்லை இந்த அமைப்பினர் கேள்விக்குறியாக்கிவிட்டனர். அவர்களுடைய பாஷையில் சகோதரர் என்றால், TNTJ வை சேர்ந்த கொள்கை சகோதரர்கள் மட்டும்தான்.

  • என் இயக்கத்தவருக்கு மட்டும் சலாம் சொல்வேன்
  • என் இயக்கத்தவரின் கூட்டத்தில் மட்டும் கலந்து கொள்வேன்
  • என் இயக்கத்தினரின் பயானை மட்டும் கேட்பேன்
  • என் இயக்கத்தினரோடு மட்டும் கலந்துரவாடுவேன்
  • என் இயக்கத்தவரின் திருமணத்தில் மட்டும் கலந்து கொள்வேன்
  • என் இயக்கத்தவரின் ஜனாஸாவில் மட்டும் கலந்து கொள்வேன்

இப்படி முஸ்லிம்களிடையே பிரிவினையை உண்டாக்கி, சகோதரத்துவம் என்ற சொல்லை இந்த அமைப்பினர் கேள்விக்குறியாக்கி விட்டனர்.

சொல் ஒன்று செயல் வேறு என்பதற்கு TNTJவினர் மிகப்பெரும் உதாரணமாக உள்ளனர். பிறர் மானத்தில் விளையாடுவது தடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லிக்கொண்டே, முபாஹலா என்ற பெயரில் மனைவி மக்களை வைத்துக்கொண்டு ஒருவர் மற்றொருவரின் மானத்தை கப்பலேற்றிக்கொண்டு இருப்பார். இந்த அசிங்கத்தை உலகமே பார்த்து காரித்துப்பும் அளவுக்கு LIVE போட்டு ஒளி பரப்பிக்கொண்டு இருப்பார்கள். முஃமின்கள் அனைவரும் சகோதரர்கள் என்று சொல்லிக் கொண்டே, மற்ற இயக்கத்தவரின் ஜனாஸாவில் கலந்து கொள்ளலாமா என்று விவாதம் செய்து கொண்டு இருப்பார்கள். இப்படி இருந்தால் எப்படி சமத்துவம் சகோதரத்துவம் தளரும்.

நேற்று வரை என்னோடு இருந்தவர், என்னோடு பேசியவர், பழகியவர், இன்று அவர்களைவிட்டு நீங்கிவிட்டால், பேசுவதற்கு கூட தயங்குகிறார். அப்படி எனில் அவர் என்னோடு பேசியது, பழகியது எல்லாம் இயக்கத்துக்காக போட்ட வேசம் என்று தெரியவில்லையா?

இஸ்லாத்தில் சிறந்த செயல் என்ன என்று கேட்டதற்கு, அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் சலாம் சொல்லுதல் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கற்றுத்தரவில்லையா? அங்கே வேண்டப்பட்டவருக்கு சலாம், தெரிந்தவருக்கு சலாம், இயக்கதவருக்கு சலாம், கொள்கை சகோரதரருக்கு சலாம்??? இதில் கொள்கை எங்கே இருக்கிறது. இஸ்லாத்தை ஏன் கேளிக்குறியதாக்குகிறீர்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்களின் காலத்தில் கிறித்தவர்கள், இணைவைப்பாளர்கள், நெருப்பு வணங்கிகள், யூதர்கள், இப்படி பல சமூகத்தவர் வாழ்ந்து வந்தார்கள். இரட்டை வேடதாரியான யூதர்கள் இஸ்லாத்தை அழிப்பதற்காக கூடவே இருந்து குழிபறிப்பார்கள். அப்படிப்பட்ட யூதர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெறுக்கவில்லை. பள்ளிவாசலுக்கு வரவேண்டாம் என்று சொல்லவில்லை, சலாம் சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை. முனாபிகீன்களின் தலைவன் இறந்த போது அவர்களுக்காக தொழுகை நடத்தி பாவமன்னிப்பு கேட்டு சொர்க்கத்தில் சேர்க்க நாடினார்கள்.

இவர்களின் செயல்பாடுகளை உற்று நோக்கினால், இஸ்லாத்தைவிட இயக்கத்தை தான் அதிகம் நேசிக்கிறார்களோ என்று சந்தேகம் வலுக்கிறது. நீங்க செய்யும் செயல் தவறாக தெரியவில்லையா என்று கேட்டால், தலைமை சொல்லிவிட்டது என்று சாதாரணமாக சொல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

இயக்கத்தில் இருந்தவன், இயக்கத்தின் கொள்கைக்கு மாறு செய்து விட்டான் என்று சொல்லி அவனை வெறுக்கும் நாம் எங்கே?

அஸ்ஸாமு அலைக்கும் என்று யூதன் சொன்னபோது, அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நம்மைப்போல் மேடைபோட்டு, உனக்கும் சாவு உண்டாகட்டும் என்று அவனை திட்டாமல் வ அலைக்கும் என்று சொல்லி அதை மென்மையாக கையாண்ட இறைத்தூதர் எங்கே? இறைத்தூதரின் மென்மையை கைவிட்டுவிட்டு, கடுமை என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கம்பு சுத்திக்கொண்டிருக்கும் TNTJ வினர் இதை சிந்திப்பார்களா?

இறைவன், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர் (3:159)

TNTJ வினரின் செயல்பாடுகளால் நண்பர்கள்கூட எதிரிகளாக ஆகிவிடுவதை பார்க்க முடிகிறது. நாளுக்கு நாள் நன்மையை சம்பாதிப்பதை விட எதிரிகளை சம்பாதித்ததுதான் அவர்களின் சாதனை. இதை நாம் கண்கூடாக பார்த்துவருகிறோம். ஏகத்துவத்தை போதிக்கிறேன் என்று சொன்னவர்கள்,  தங்களிடையே கொள்கை, ஊழல், பாலியல் போன்ற பிரச்சனைகளால் ஒற்றுமையாக இருப்பதற்கு பதிலாக பல பிரிவுகளாக பிரிந்து சண்டையிட்டு கொண்டு இருப்பதை தமிழ் சமூகம் சான்று பகர்ந்து கொண்டு இருக்கிறது. இதை மறுக்க முடியுமா?

உலகத்தில் வேறு எங்கும் இல்லாமல், தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த ஃபித்னாக்கள்.

இயககத்தை நேசிப்பதற்கும், அதனை வெறிகொண்டு பின்பற்றுவதற்கும் நிறைய வேறுபாடுண்டு. இயக்கங்களையும், அதை நேசிப்பதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை. ஆனால் மாநில தலைமை சொல்லி விட்டால், மாநபி வழியை ஓரம்கட்டிவிட்டு, மாநில தலைமையில் இருந்து வஹீ வந்தது போல் பின்பற்றும் அளவுக்கு இயக்க வெறி பிடித்து அலைவதுதான் கவலை கொள்ள வைக்கிறது.

இயக்கங்களை ஏன் எதிர்க்கிறோம்? ஏன் பாசம் வரவில்லை. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கற்றுத்தந்த முறையில் குர்ஆன், ஹதீஸை மக்களுக்கு போதிக்க வேண்டும் என்ற இலக்கோடு மட்டும் நிற்காமல்

  • பிற இயக்கங்களை இழிவாக நினைப்பது
  • பொதுவெளியில் மற்ற இயக்கங்களை தேவை இல்லாமல் விமர்சிப்பது
  • ஒருவர் இன்னொருவரை பழிதீர்த்துக்கொள்வது
  • தேவை இல்லாமல் பிறரை குறை சொல்வது
  • மற்றவரின் மானத்தில் விளையாடுவது
  • ஒருவரை ஒருவர் பகைத்துக்கொள்வது
  • மற்றவர்களின் குறைகளை துருவி துருவி ஆராய்வது
  • தங்களைத்தவிர வேறு யாரும் பரிசுத்தவான்கள் இல்லை என்று தம்பட்டம் அடிப்பது,

இஸ்லாத்தை விட இயக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் TNTJவின் இயக்க வெறி செயல்பாடுகளால், மக்கள் இயக்கம் என்ற பேரை கேட்டாலே தலை தெறிக்க ஓடுகின்றனர்.

இறைவன் திருமறையில் முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்று கூறுகிறான் (49:10). ஆனால் தன்னுடைய இயக்கத்தை சேர்ந்த சிலர் வேறு இயக்கத்தைச் சேர்ந்த சகோதரர்களுடன் வாலிபால் விளையாடியதற்காக அவர்களை ஸைத்தான்கள் என்றும் அவர்களுடன் வாலிபால் விளையாடியவர்கள் வன் நெஞ்சம் கொண்டவர்கள் என்றும் சொல்பவர் TNTJவின் தலைவர் பதவியில் இருக்கிறார். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இப்படித்தான் தாவா பணி செய்தார்களா?

தன்னுடைய மனைவி மீது களங்கம் சுமத்தியவர்களை மன்னித்த அல்லாஹ்வின் தூதர் எங்கே? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நடப்பதாக சொல்லிக்கொண்டு சகோதரர்களை ஸைத்தான்கள் என்று சொல்லும் தலைவர் எங்கே?

ஒரு இயக்கத்தின் தலைவர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு தற்போதய TNTJவின் தலைவரே மிகப்பெரும் உதாரணம் இல்லையா? மாற்றுமத சகோதரர்கள் கூட இந்த அளவுக்கு தன் இயக்கத்தைச் சார்ந்தவர்களை கண்ணியக்குறைவாக விமர்சிப்பதில்லையே. இப்படி தவறான வழியை காட்டக்கூடிய தலைவரின் தொண்டர்கள் எப்படி இருப்பார்கள்? இஸ்லாமிய மார்க்கத்தின் அகீதாவிலே கோட்டை விட்ட இவர்கள், உலக வாழ்க்கையில் தாவா பணியிலும் கோட்டை விட்டு விட்டார்களே.

ஒருவருக்கொருவர் கோபப்படாதீர்கள், ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள், ஒருவருக்கொருவர் முரண்பட்டு சண்டை இட்டுக்கொள்ளாதீர்கள் அல்லாஹ்வின் அடியார்களே, நீங்கள் சகோதரர்களாக ஆகிவிடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அழகான உபதேசத்தை கற்றுத்தர வில்லையா?

ஒரு முஃமினின் செயல்பாடுகள் அனைத்தும் அல்லாஹ்வை மட்டும் சந்தோஷப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் TNTJ வினரின் செயல்பாடுகள் அல்லாஹ்வைவிட, மாநபி வழியைவிட மாநில தலைமையை சந்தோஷப்படுத்தக் கூடியதாக இருப்பதை பார்க்கும்போது மறுமையின் பயம் கின்ஜிற்றும் இல்லயோ என்று நினைக்கத்தோன்றுகிறது.

தற்போது உள்ள இக்கட்டான காலகட்டத்தில் TNTJ வினருக்கு தேவைப்படும் முக்கியமான உபதேசங்கள்:

  • பிறரை பழிக்காதே
  • பிறரின் மீது அன்பு செலுத்து
  • பிறரை வெறுக்காதே
  • பிறரின் மானத்தில் விளையாடாதே
  • முஸ்லிம்களிடையே பிரிவினை காட்டாதே
  • சக முஸ்லிம்களை சகோதரர்களாக நினை.
  • இறை இல்லங்களிடையே பிரிவினை காட்டாதே
  • தங்களை மட்டும் பரிசுத்தவான்கள் என்று நினைக்காதே
  • மண்டையில் உதிப்பதெல்லாம் ஃபத்வா என்று உளறாதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *