Featured Posts
Home » சட்டங்கள் » ஜகாத் » தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 4 – ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல் – ஜகாத் திருடர்கள்

தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 4 – ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல் – ஜகாத் திருடர்கள்

அன்வர்தீன், பெரம்பலூர்

ஜகாத்தை வருடா வருடம் கொடுக்காமல் ஆயுளுக்கு ஒருமுறை மட்டும் கொடுத்துவிட்டு, ஏழைகளுக்கு போய்ச்சேரவேண்டிய அமானிதமான ஜகாத் தொகையை அபகரித்து வைத்துள்ளபடியால், NTF, TNTJ கூட்டத்தினரை ஜகாத் திருடர்கள் என்று அழைப்பதில் எந்த தவறோ, தயக்கமோ இல்லை என்பதை மனதில் பதிய வைத்துக்கொண்டு மேலே செல்லுங்கள்.

இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைகளில் ஜகாத் ஒரு பலமான தூணாகும். 1400 வருடங்களுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த ஜகாத் விஷயத்தில் எந்தக் காலத்திலும் எடுத்து வைக்கப்படாத இஸ்லாத்தின் அடிப்படையையே ஆட்டம் காண வைக்கும் சில விஷம பிரசாரத்தை நவீன குழப்பவாதிகள் முன்னிறுத்தினர். வழக்கம்போல், குர் ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் அவர்களின் பொய் வாதங்கள் நிரூபிக்கப்பட்டு புறமுதுகிட்டு ஓடிவிட்டனர்.

ஹதீஸ் நிராகரிப்பாளர்கள் இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான ஜகாத்திலும் தங்களுடைய யூகங்கள், பகுத்தறிவு, மனோ இச்சையை புகுத்தி, தமிழக முஸ்லிம்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர். எல்லாவற்றிலும் தனித்துவத்தை(?!) நிலைநாட்டும் இவர்கள், PJ, TNTJவின் ஜகாத் கொள்கை என்று ஒரு புதிய ஜகாத் கொள்கையை புகுத்துவதற்காக வழக்கம்போல, செல்லரித்துப்போன வாதங்களையும், குர்ஆன் ஹதீஸில் புல்லரித்து போகும் தங்களின் பித்தலாட்டங்களையும் எப்படி அறங்கேற்றினார்கள் என்று பார்ப்போம்.

பகுத்தறிவை முற்படுத்தி குர்ஆன் ஹதீஸை பிற்படுத்தி ஜகாத்தில் செய்த தில்லுமுல்லுகள்:

  • கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுக்கத்தேவை இல்லை
  • ஆயுளுக்கு ஒருமுறை கொடுத்தால் போதும்
  • ஒவ்வொரு வருடமும் கொடுத்தால் ஓட்டாண்டி ஆகிவிடுவார்
  • ஒவ்வொரு வருடமும் கொடுத்தால் வறுமை வந்தடையும்
  • ஒவ்வொரு வருடமும் கொடுப்பதால்தான் செல்வந்தர்கள் கொடுக்க தயங்குகிறார்கள்
  • பொருள் ஒரு முறை தூய்மை அடைந்து விட்டதால் மீண்டும் கொடுப்பதன் மூலம் தூய்மை அடையாது. ஆகையால் ஒரு தடவை கொடுத்தால் போதும்.

ஜகாத் கொடுக்கும்போது கொடுத்த பொருள் கொடுக்காத பொருள் என்று பிரித்துப்பார்க்கும் வாசகத்தை எந்த குர்ஆன், ஹதீஸில் இருந்து எடுத்தார்கள் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க கடமைபட்டுள்ளார்கள். வாய்க்கு வந்தபடி உளருவதற்கு இஸ்லாம் ஒன்றும் இவர்கள் அப்பன் வீட்டு சொத்தில்லை.

ஜகாத் ஒவ்வொரு வருடமும் கொடுத்தால், ஒருவரிடம் உள்ள செல்வம் கரைந்து ஓட்டாண்டி ஆகிவிடுவார் என்பதுதான் இவர்கள் கொடுத்த முதல் உலக மகா ஆதாரம். அட நுனிப்புல் மேயும் அறிவு ஜீவிகளா? ஜகாத் கொடுத்துக்கொண்டு இருந்தால் செல்வம் மென்மேலும் வளரும் என்ற குர் ஆன் வசனத்தை நீங்கள் பார்த்ததே இல்லையா?

ஜகாத் செல்வத்தை மேலும் மேலும் வளரச் செய்யும் வட்டி செல்வத்தை அழித்தொழிக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்குர்ஆன் (30:39)

இந்த அல்குர்ஆன் வசனத்தை இவர்களின் வாதங்களுக்கு எதிராக தூக்கிப்போட்ட உடன், ஜகாத் கொடுப்பதினால் செல்வங்கள் கரைந்து வறுமை உங்களை வந்தடையும் என்று பீலா உட்டுப்பார்த்தார்கள். வறுமையை கொண்டு ஏவுபவர்கள் உங்களைப்போல வழிகெட்ட ஷைத்தான் என்ற வசனத்திற்கு பதில் சொல்ல முடியாமல் ஜகா வாங்கினார்கள்.

தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான். அல்குர்ஆன் (2:268)

ஜகாத் கொடுப்பதால் அவர்களின் (மனிதர்களின்) உள்ளும் புறமும் தூய்மையாகும் என்ற குர்ஆன் வசனத்தை திரித்து, ஜகாத் கொடுக்கும் பொருள் தூய்மை ஆகும் என்று பொய் விளக்கம் கொடுத்தார்கள்.

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக……………   அல்குர்ஆன் (9:103) 

இந்தப் பொய் வாதங்களினால் தங்களின் சுயரூபம் அம்பலமாகி விட்டதால், ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதால்தான் அதிகமான தனவந்தர்கள் ஜகாத் கொடுக்கத் தயங்குகிறார்கள். ஆயுளுக்கு ஒரு முறைதான் ஜகாத் என்றால் எல்லா செல்வந்தர்களும் ஜகாத் கொடுக்க முன் வருவார்கள் என்ற விஷத்தை விதைத்தார்கள்..

எப்படி இருக்கிறது பீ.ஜேயின் உளுத்துப்போன வாதம்? நாளை இந்த ஹதீஸ் மறுப்பாளர் ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகை என்றிருப்பதால்தான் அதிகமான முஸ்லிம்கள் தொழுவதில்லை. ஒரு நாளைக்கு ஒரு வேளைத் தொழுகை மட்டும்தான் என்றால் முஸ்லிம்கள் அனைவரும் தொழுகையாளிகள் ஆகிவிடுவார்கள் என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை. பீ.ஜேயும் அவரது அதிக பக்தகோடிகளும் ஐவேளைத் தொழுகைகளைப் பேணித் தொழுது, தொழுகையை நிலைநாட்டுவதில்லை என்பது ஊரறிந்த உண்மை.

அல்லாஹ் அல்குர்ஆனில் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகையை நிலைநாட்டுங்கள். ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள் என்று மடக்கி மடக்கிச் சொல்வதிலிருந்தே தொழுகையும், ஜகாத்தும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியவை என்பது உறுதியாகத் தெரிகிறது.

……..இன்னும் யார் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்). அல்குர்ஆன் (9 : 34, 35)

தொடர்ந்து செலவு செய்யப்படாமல் சேமித்து வைத்திருக்கும் பொருளுக்கு அல்லாஹ் கன்ஜ் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறான். இந்த வசனங்களில் இருந்து, பொருள்கள் செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை அல்லாஹ் தெளிவாக விளக்குகிறான். 

வழிகெட்ட தலைவர்கள் தங்களின் மனோஇச்சை வாதங்களிலே மூக்கறுபட்டு விட்டனர். அடிபட்ட பாம்பு சினம் கொண்டு எழுவது போல, தங்களின் இருப்பை நிலை நாட்டிக்கொள்ள ஹதீஸிலே தங்களின் கைவரிசையை காட்ட ஆரம்பித்தனர்.

அல்லாஹ்வின் தூதர், மூன்று காரியங்களைச் செய்பவர்கள் ஈமானின் ருசியைச் சுவைத்துக் கொள்வார்கள் என்று சொன்னார்கள், அவற்றில் ஒன்று: 

தனது செல்வத்தின் ஜகாத்தை பரிசுத்த எண்ணத்துடனும், உளப்பூர்வமாகவும் வருடா வருடம் கொடுப்பவர்.    உமர்(ரழி), அபூதாவூத் : 1349

தங்களுடைய முரட்டு வாதங்களுக்கு முட்டுக்கொடுக்கும் என்றிருந்தால் பலவீனமான ஹதீஸையும், பலமான ஹதீஸாக ஆக்குவதற்கு அனைத்து விதமான தில்லு முல்லுகளையும் அரங்கேற்றுவார்கள். தங்களுடைய வாதங்கள் எடுபடவில்லை என்றால் பலமான ஹதீஸையும், பலஹீனமாக்குவதற்கு எந்த எல்லைக்கும் போய் விடுவார்கள். இந்த வகையில் தான் மேலே சொன்ன ஹதீஸையும் பலவீனமான ஹதீஸ் என்று சொல்லி தங்களை தக்லீது செய்பவர்களை ஆட்டம் போட வைத்தனர்.

ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரத்தை அள்ளிபோட்டு, அவர்களின் முகத்தில் கரியை பூசிவிட்டபடியால், வழக்கம்போல் பலவீனமான ஹதீஸ் என்ற ஆயுத்தைதை எடுத்து கம்பு சுற்ற ஆரம்பித்துவிட்டனர். மேலே உள்ள ஹதீஸின் அறிவிப்பாளர் ஆஸிம் இன் லமூரா (ரலி) அவர்கள் நம்பகமற்றவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் கூறியுள்ளதால் இது பலவீனமானது என்பது இவர்களின் வாதம். பொதுவாக இவர்களுக்கு குர்ஆன், ஹதீஸில் ஞானம் இல்லை என்பதை அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் ஹதீஸ் கலையின் உஸூல்களும் இவர்களுக்கு தெரியவில்லை என்பது கொடுமையிலும் கொடுமை.

ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸின் அறிவிப்பாளர் ஆஸிம் இன் லமூரா (ரலி) அவர்களை நம்பகமாவனவர் என ஏற்றுக்கொள்ளும் அறிஞர்களின் பட்டியல்….

இமாம் நாஸிருத்தீன் அல்பானி

இமாம் அஹமது இப்னு ஹம்பல்

இமாம் தஹபி

இமாம் நஸயீ

இமாம் இப்னு ஸஅத்

மேலும் இந்த ஹதீஸ் ஹஸன் தரத்தில் உள்ளது என்று குர்தூபி, இப்னு ஹஜம் போன்றோர் சான்று பகர்ந்துள்ளனர். இமாம் திர்மிதீ அவர்கள் இமாம் புஹாரியிடம் இந்த ஹதீஸ் பற்றி கேட்கும்போது ஸஹீஹ் தரத்தில் உள்ளது என்று கூறியுள்ளார்கள்.

இந்த ஹதீஸ் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இருப்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கும்போது, தங்களுடைய பலவீனத்தை முட்டுக்கொடுப்பதற்காக, பலவீனமான ஹதீஸ் என்ற கீரல் விழுந்த ரெக்கார்டை ஓட விட்டு பார்த்தனர். ஆனால் பலவீனமான TNTJ வின் ஜகாத் கொள்கையை அவர்களின் ஆதரவாளர்கள் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவர்களின் முகத்தில் பளேர் என்று அறைந்தது போல் ஆகிவிட்டது.

ஜகாத் ஒவ்வொரு வருடமும் கொடுத்து விட்டால் கையில் காசில்லாமல் ஓட்டாண்டி ஆகிவிடுவார்கள், கேட்கும்போதெல்லாம் நம்முடைய இயக்கத்துக்கு வாரி கொடுக்க முடியாமல் போய்விடுமே என்ற சுயநலம் கூட இதுபோன்ற அச்சு பிச்சு ஃபத்வாக்களின் பின்னனியில் இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் எழுகிறது. 

மேலும் அபூதாவூதில் வரக்கூடிய 1336, 1338, 1340 ஹதீஸ்களும் கொடுத்த பொருளுக்கே ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுருத்துகின்றன.

ஒவ்வொரு வருடமும் ஒட்டகம், மாடு, ஆடு ஆகியவற்றின் ஜகாத்தை வசூலிக்க பொருப்பாளர்களை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கும் போது, ஏற்கனவே கொடுத்த பொருளுக்கு ஜகாத் வாங்காதீர்கள் என்று சொன்னதாகவோ, ஜகாத் கொடுப்பவர்களும் இந்த பொருளுக்கு ஏற்கனவே கொடுத்து விட்டேன் என்று சொன்னதாகவோ எந்தத் தகவலும் ஹதீஸ்களில் காணவில்லை.  எனவே ஒவ்வொரு வருடமும் ஏற்கனவே ஜகாத் கொடுத்த பொருள், கொடுக்காத பொருள் எனப் பாகுபாடில்லாமல் எல்லாவற்றுக்கும் ஜகாத் வசூலிக்கப்பட்டுள்ளது என்றே நம்ப வேண்டும். இதற்கு மாற்றமாக யாராவது கூறினால் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த சஹாபாக்களும், கலீபாக்களும், தாபியீன்களும், அவர்களுக்கு பின்னால் கடந்த 1400 வருடங்களுக்கு மேலாக குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இஸ்லாமிய சமூகம் ஜகாத் கொடுத்துக்கொண்டிருக்கும்போது, நேரடியாக வானத்தில் இருந்து குதித்ததுபோல் இந்த கவாரிஜிய கூட்டத்தினர் ஜகாத்தில் குழப்பத்தை விளைவிப்பதில் இருந்து, இவர்கள் ஷைத்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம். மேலும் நாங்கள் தான் நேரான வழியில் இருக்கிறோம், சஹாபாக்கள் முதல் இதுவரை உள்ள இஸ்லாமிய சமுதாயம் ஜகாத் கொள்கையில் தவறான புரிதலில் இருந்துள்ளார்கள் என்பதை கொஞ்சமும் இறைஅச்சம் இல்லாமல் கூவிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஏழைகளும் அவர்களுடைய உரிமையை பெறவேண்டும் என்பதற்காக, செல்வம் ஒருவரிடமே நிலைபெற்று இருக்காமல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும் என்பது ஜகாத்தின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று. ஆயுளுக்கு ஒருமுறை கொடுத்து விட்டு செல்வத்தை பதுக்கி வைப்பதால் செல்வம் சுழன்று கொண்டு இருக்குமா? ஏழைகள் அவர்களுடைய உரிமையை பெற்று விடுவார்களா? என்பதை இந்த அறிவு ஜீவிகள் சிந்திக்க கடமை பட்டுள்ளார்கள்.

ஒரு வாதத்துக்காக நாம் எடுத்து வைத்த வாதங்கள் தவறாக இருந்தாலும், இறைவன் ஏன் ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுத்தாய் என்று தண்டிக்கப்போவதில்லை. மேலதிகமாக கொடுத்தது நமக்கு நன்மையாக அமைந்துவிடும். அதே சமயத்தில் இவர்களின் மனோஇச்சை ஃபத்வாக்கள் தவறாகி இறைவனின் கட்டளைகளை நிறைவேற்ற தவறி கூனி குறுகி நிற்கும்போது, இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள் என்று நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் நாளை நினைத்துப்பார்க்க வழிகெட்ட தலைவர்களும், அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றிய வர்களும் கடமை பட்டுள்ளார்கள்.

ஆதாரத்தின் அடிப்படையிலும், அறிவு பூர்வமாக சிந்தித்தாலும், ஆக எப்படி பார்த்தாலும் நவீன குழப்பவாதிகள் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதை சிந்திப்பவர்கள் விளங்கி கொள்வார்கள்.

இறைவா சத்தியத்தை ஏற்று செயல்படவும், அசத்தியத்தை விட்டு விலகி விடவும் எல்லோருக்கும் அருள் புரிவாயாக.

நவீன ஹதீஸ் நிராகரிப்பாளர்கள், ஹதீஸ்களை மட்டும் நிராகரிக்காமல், தங்களுடைய கைவரிசையை குர் ஆனிலும் காட்டிவிட்டார்கள். வழிகெட்ட TNTJ வின் சூனியக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக, இந்த ஞானசூனியங்கள் எப்படியெல்லாம் குர்ஆன், ஹதீஸை திரித்து விளையாடினார்கள் என்பதை அடுத்த தொடரில் இன்ஷா அல்லாஹ்.

                                                                                                                                           தொடரும்.. .. ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *