Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே! |அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-35 [சூறா அந்நிஸா–78-79]

எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே! |அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-35 [சூறா அந்நிஸா–78-79]

‘நீங்கள் எங்கிருந்த போதும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதியான கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால், ‘இது அல்லாஹ்விடமிருந்துள்ளது’ எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், ‘இது உம்மிடமிருந்துள்ளது’ என்கின்றனர்.

‘அனைத்தும் அல்லாஹ்விடமிருந்துள்ளவையே’ என்று (நபியே!) நீர் கூறுவீராக! எந்தச் செய்தியையும் விளங்கிக் கொள்ள முற்படாமலிருக்க இந்தக் கூட்டத்திற்கு என்ன நேர்ந்தது?’

‘உமக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதே. உமக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால் அது உம்மால்தான் நேர்ந்தது. (நபியே!) மனிதர்களுக்குத் தூதராக உம்மை நாம் அனுப்பியிருக்கின்றோம். சாட்சி கூற அல்லாஹ் போதுமானவன்.’ (4:78-79)

இந்த இரண்டு வசனங்களும் ஒன்றுக்கொன்று முரண்படுவது போன்று தோன்றலாம். ஆனால், இதில் முரண்பாடு இல்லை. அந்தக் கால முஸ்லிமல்லாத மக்களும் இதைச் சரியாகப் புரிந்து கொண்டனர். அதனால்தான் இது குறித்து எந்த எதிர்க் கேள்வியையும் அவர்கள் கேட்கவில்லை.

முதல் வசனத்தில் நன்மை தீமை அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே வருவதாகக் கூறப்படுகின்றது. இரண்டாம் வசனத்தில் நன்மை அல்லாஹ்விடமிருந்தும் தீமை அவரவரிடமிருந்தும் வருவதாகக் கூறப்படுகின்றது. இதை எப்படிப் புரிந்து கொள்வது என்ற ஐயம் எழலாம்.

முதல் வசனத்தில் அவர்களுக்கு நன்மை நடந்தால் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பர். ஏதேனும் தீங்கு நடந்தால் இது உம்மால் நடந்தது என்பர் என்று கூறப்படுகின்றது.

அதாவது, நபியவர்கள் காலத்தில் நல்ல விளைச்சல், நல்ல மழை என நல்லவை நடந்தால் அல்லாஹ்வால் நடந்தது என்பர். பஞ்சம், வறுமை போன்ற கஷ்டங்கள் வந்தால் இந்த முஹம்மதால்தான் வந்தது என்பர். இவ்வாறே இதற்கு முன்னரும் இறை நிராகரிப்பாளர்கள் கூறி வந்தனர்.

‘அவர்களிடம் நன்மை வந்தால், ‘இது எமக்குரியது’ என்று கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தாலோ, இது மூஸாவினாலும் அவருடனிருப்பவர்களினாலும் ஏற்பட்ட அபசகுணமாகக் கருதுகின்றனர். அறிந்து கொள்ளுங்கள்! அவர்களின் அபசகுணமெல்லாம் அல்லாஹ்விடமிருந்துள்ள வையே. எனினும், அவர்களில் அதிகமானோர் அறிந்து கொள்ளமாட்டார்கள். ‘ (7:131)

கஷ்டங்கள் ஏற்படும் போது இது நபியின் தரித்திரத்தால் நடந்தது என்று கூறிய மக்களிடம் நபியே அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே வருகின்றது என்று கூறுங்கள் என அல்லாஹ் கூறுகின்றான். இந்த வசனத்தில் அடிப்படையான இரண்டு அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

  1. யாருடைய அதிஷ்டம், துரதிஷ்டத்தினாலும் நன்மை தீமை நடப்பதில்லை.
  2. நன்மை தீமை யாவும் அல்லாஹ்வின் நாட்டப்படி கழா கத்ர் படியே நடக்கின்றது என்ற அடிப்படையாகும்.

இரண்டாம் வசனத்தில் நன்மை நடந்தால் அல்லாஹ்விடமிருந்து வருவதாகவும் தீமை நடந்தால் அது மனிதனால் நேர்ந்ததாகவும் கூறப்படுகின்றது. முதல் வசனம் கூறுவது அல்லாஹ்வின் கத்ரால் அவனது நாட்டத்தினால் நடப்பது என்பது. இந்த வசனத்தில் தீமை நடப்பதற்குக் காரணம் மனிதனது தவறுகள் என்று கூறப்படுகின்றது.

நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்விட மிருந்தே வருகின்றது என்பது அல்லாஹ்வின் கத்ர் – விதிப்படியே நடக்கின்றது என்றும் தீமை மனிதனிட மிருந்தும் வருகின்றது என்பது மனிதன் செய்த பாவத்தால் குற்றத்தால் வருகின்றது என்று காரணத்தைக் கூறுகின்றது. இரண்டும் முரணானது அல்ல.

முரண்பாடில்லாத வேதம்:

‘இக்குர்ஆனை அவர்கள் சிந்தித்துணர வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் அவர்கள் இதில் அதிகமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.’ (4:82)

மனிதன் மறதியாளன். அவன் முன்னர் கூறியதை மறந்து பின்னர் முரண்பட்டுப் பேசலாம். மனிதனது அறிவு கூடிக் குறையும் தன்மை கொண்டதாகும். எனவே, முன்னர் கூறியதற்கு மாற்றமான கருத்துக்கு அவன் மாறலாம். அல்குர்ஆன் ஒரு மனித ஆக்கம் அல்ல. அல் குர்ஆனைப் போதித்த முஹம்மத் நபி ஒரு எழுத வாசிக்கத் தெரியாத உம்மி. அவரால் 23 வருடங்களாக குர்ஆன் போதிக்கப்பட்டது. இது அவரால் உருவாக்கப்பட்டிருந்தால் பல்வேறுபட்ட முரண்பாடுகளைக் காணலாம்.

இந்தக் குர்ஆன் இறைவேதம். இதை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். இது இறைவேதம் இல்லையென்றால் ஏராளமான முரண்பாடுகளைக் காண்பீர்கள். இது இறைவேதம், அதனால் இதில் முரண்பாடு இல்லை என குர்ஆன் கூறுகின்றது. குர்ஆன் இறைவேதம் என்பதற்கு இது ஒரு தக்க சான்றாகும்.

இன்று மக்களால் வேதங்களாக மதிக்கப்படும் வேத நூற்களில் ஏராளமான முரண்பாடுகளையும் அறிவியலுக்கும் வரலாற்று உண்மைகளுக்கும் முரணான பல அம்சங்களைக் காணலாம். இந்த வகையில் அல்குர்ஆன் ஓர் இறைவேதம் என்பதற்கான ஒரு அக்கினிப் பரீட்சையாக இது அறிவிக்கப் படுகின்றது. இதுவரை யாரும் குர்ஆனில் முரண்பாட்டைக் கண்டு பிடிக்கவில்லை. முரண்பாடு என கூறப்பட்ட செய்திகள் கூட உண்மையில் முரணில்லை. அவர்களின் விளக்கத்தில் ஏற்பட்ட குழப்பத்தினாலேயே முரண்பாடுகளாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் சேதாரமும்:

‘மேலும் பாதுகாப்பு, அல்லது பீதியை ஏற்படுத்தும் ஒரு செய்தி அவர்களிடம் வந்துவிட்டால் அதை அவர்கள் பரப்பிவிடுகின்றார்கள். அதை அவர்கள் இத்தூதரிடமும்| அவர்களின் அதிகாரம் உள்ளோரிடமும் கொண்டு சென்றிருப்பார்களாயின், அவர்களில் ஆய்வு செய்வோர் அதை அறிந்து (தக்க நடவடிக்கைகளை மேற்)கொள்வார்கள். அல்லாஹ்வின் அருட்கொடையும், அவனது கருணையும் உங்களுக்கு இல்லாதிருப்பின் சொற்பமானவர்களைத் தவிர ஏனையோர் ஷைத்தானைப் பின்பற்றியிருப்பீர்கள்.’ (4:83)

அச்சம், அமைதி பற்றிய செய்தி கிடைத்தால் அதைப் பரப்பக் கூடாது. அதை அதிகாரிகளிடம் தெரிவித்தால் அவர்கள் உரிய முறையில் இதை அணுகுவார்கள் என இந்த வசனம் கூறுகின்றது.

ஊடக சுதந்திரம் என்ற வகையில் அனைத்தையும் மக்கள் மன்றத்திற்கு வைப்பது குற்றச் செயல்கள் பரவவும், மக்களின் நிம்மதி குறையவுமே வழிவகுக்கும். அத்துடன் தகவல் கிடைத்ததும் நாம்தான் முதன் முதலில் செய்தி சொன்னோம் என்ற பெயரைப் பெறுவதற்காக அதன் உண்மைத் தன்மையை அறியாமல், ஆராயாமல் பரப்பும் நிலையும் அதிகரித்துள்ளது.

சமூக வலைத்தளங்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளதால் சின்னப் பிரச்சினைகளும் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றன. மக்களிடம் தேவையற்ற பதட்ட நிலை உருவாக்கப்படுகின்றது. மக்கள் மனங்களிலும் இனங்களின் உறவுகளிலும் பாரிய தாக்கத்தை இச்செய்திகளையும் ஏற்படுத்துகின்றன. எனவே, ஒரு முஸ்லிமைப் பொருத்தவரையில் ஒரு செய்தியைக் கூறும் போது அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். அடுத்து அது உரியவர்களிடம் எடுத்துக் சொல்லப்பட வேண்டும் என்ற வழிகாட்டல் இந்த வசனம் மூலம் வழங்கப்படுகின்றது.

ஹிஜ்ரி ஆண்டு:

‘அவர்கள் நிராகரித்தது போன்று நீங்களும் நிராகரித்து, நீங்கள் (அவர்களுடன்) சமமாக ஆகிவிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே, அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் எவர்களையும் நீங்கள் நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும், அவர்கள் புறக்கணித்தால் அவர்களை(சிறை)ப் பிடியுங்கள். அவர்களை எங்கு கண்டாலும் கொல்லுங்கள். அவர்களில் எவரையும் பாதுகாவலனாகவோ, உதவியாளனாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.’
(4:89)

இந்த வசனத்தில் ஹிஜ்ரத் பற்றி கூறப்பட்டுள்ளது. ஹிஜ்ரத் என்றால் வெறுத்தல் என்பது அர்த்தமாகும். தான் வாழும் இடத்தில் இஸ்லாத்தைப் பேணி வழ முடியாதநிலை ஏற்பட்டால் இஸ்லாத்தைப் பேணி வாழக் கூடிய இடத்திற்கு இடம் பெயரும் தியாகச் செயலே ஹிஜ்ரத் ஆகும். நபி(ச) அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள். இந்நிகழ்வு இஸ்லாமிய எழுச்சியின் அடிப்படையாகவும் அத்திவாரமாகவும் இஸ்லாமிய சமூக உருவாக்கத்திற்கான முக்கிய காரணமாகவும் திகழ்ந்தது.

கலீபா உமர்(வ) அவர்களது காலத்தில் முஸ்லிம்களுக்கான தனியான ஆண்டுக் கணிப்பீட்டை ஆரம்பிக்க வேண்டும் என்று ஆலோசித்து நபித்தோழர்கள் ஏகமனதாக ஹிஜ்ரத்தில் இருந்து ஆண்டுக் கணிப்பீடு செய்தல் என்ற முடிவுக்கு வந்தனர். அனைத்து முஸ்லிம்களும் இதில் ஏகோபித்து இருக்கும் போது இந்த முடிவு சரியில்லை, ஆமுல் பீலில் இருந்து வந்திருக்க வேண்டும், அல்லது குர்ஆன் நிறைவு செய்யப்பட்டதில் இருந்து வந்திருக்க வேண்டும் என்று கருத்துக் கூறுவது ஒட்டுமொத்த ஸஹாபாக்களையும் சிந்திக்கத் தெரியாதவர்கள்| தான் மட்டும்தான் சிந்திக்கத் தெரிந்தவன் என்ற மமதையின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது.

நபித்தோழர்கள் ஹிஜ்ரத்தில் இருந்து வருடத்தை ஆரம்பிப்பதற்கு குர்ஆனில் இருந்து ஒரு சமிக்ஞையைப் பெற்றே முடிவு செய்தார்கள்.
நபி(ச) அவர்கள் ஹிஜ்ரத் வந்து குபாவில் தங்கிய போதுதான் குபா மஸ்ஜிதைக் கட்டினார்கள். இந்த மஸ்ஜிதைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

‘(நபியே! தொழுகைக்காக) ஒரு போதும் நீர் அதில் நிற்க வேண்டாம். ஆரம்ப தினத்தில் பயபக்தியின் அடிப்படையில் நிறுவப்பட்ட (குபா) மஸ்ஜிதே (தொழுவதற்காக) நீர் நிற்பதற்கு மிகத் தகுதியானதாகும். தாம் தூய்மை பெற வேண்டும் என விரும்பும் சில ஆண்கள் அதிலுள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களையே நேசிக்கின்றான்.’ (9:108)

இந்த வசனத்தில் ஹிஜ்ரத்தின் பின்னர் உள்ள அந்தத் தினம் ‘அவ்வலு யவ்மின்’ -முதல் நாள்- எனப்படுகின்றது.

எனவே, ஹிஜ்ரத்திலிருந்து வருடக் கணிப்பை ஆரம்பித்தனர். இந்த அடிப்படையில் நபித்தோழர் களின் இஜ்மாவை ஏற்று அதற்கு மாற்றுக் கருத்துக் கூறி மடத்தனத்தை வெளிப்படுத்தாமல் நடந்து கொள்வதே முறையானதாகும்.
தொடரும்…
இன்ஷாஅல்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *