Featured Posts
Home » இஸ்லாம் » ஒழுக்கம் » நெறிப்படுத்தலை வேண்டி நிற்கும் இளமைப் பருவம்

நெறிப்படுத்தலை வேண்டி நிற்கும் இளமைப் பருவம்

எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A.)

மனித வாழ்வில் மிக முக்கியமான, பெறுமதியான, உறுதியான பருவமாக இளமைப் பருவம் இருக்கிறது. ஒருவனின் செல்நெறியை கெட்டதா? நல்லதா? எனத் தீர்மானிக்கும் காலகட்டமாக உள்ள இளமைப் பருவத்தில், ஒருவனின் உடல் நிலை மாற்றமடைவதைப் போல், உள்ளத்து உணர்வுகளும் சிந்தனைகளும் மாற்றமடையத் தொடங்குகின்றன.

இளமைப் பருவம் என்பது, தனி மனித ஆளுமை வளர்ச்சிப் படியில் மிக முக்கிய பருவமாகவும் படித்தரமாகவும் அமைகிறது. உடலாரோக்கியமும் உணர்ச்சி உத்வேகமும் துடிதுடிப்பும் அதிகமாக அமையப்பெறும் இப்பருவத்தில், பக்குவப்படுத்தப்படல் அவசியமாகும். உடல் வலிமை மிக்க இப்பருவத்தில் இளைஞர்களின் ஆற்றல்களும் ஆவல்களும் வேட்டைகளும் உணர்வுகளும், சரியான நெறிமுறையில் வளப்படுத்தப்படல் வேண்டும். பொறுப்புள்ளவர்கள் இதில் பொறுப்பற்ற நிலையிலிருந்து விட்டால், இளைஞர்கள், தவறான திசைகளில் வழி நடத்தப்பட்டு, அவர்களது ஆற்றல்களும் திறமைகளும் அழிவு சக்திகளாக மாற்றப்பட்டு, அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் நாட்டிற்கும்; தலையிடியாகப் போவது தவிர்க்க முடியாது. முழு மனித இனத்திற்கும் அது அழிவையும் நாசத்தையும் விளைவித்து விடும்.

எமது சமூகம் இன்று இளைஞர்களின் சக்தியை சரிவரப் பயன்படுத்தத் தவறியுள்ளது. அவர்களின் வளத்தை ஆக்க சக்தியாக பயன்படுத்த பெரும் அக்கறைகொள்ளவில்லை என்ற விமர்சனம் எழுகிறது. பல இளைஞர்கள் போதைப் பொருளுக்கும் புகைக்கும் நிரந்தர அடிமையாகி, அழிவு சக்தியாகச் செயற்பட முனைந்துள்ளார்கள். தமது ஒளிமயமான எதிர்காலத்தை காரிருள் படிந்த கரியாக்கிவிட்டார்கள். அரசியலும் அதிகாரமும் போடும் சில சில்லரைக் காசுகளுக்காகவும் தற்காலிக சுகண்டிகளுக்காகவும் சுயமரியாதையை இழந்து, உயர் இலக்குகளை அடகு வைத்து விட்டிருக்கின்றார்கள்;.

‘மனிதர்கள் அமர்ந்து, மனிதர்களை உருவாக்க வேண்டிய இடத்தில், பணம் வந்து உட்கார்ந்து கொண்டு மக்களை ஏமாற்றிக் கெடுக்க முனைந்து விட்டது’ சத்தியமும் அசத்தியமும் ஒன்றோடொன்று சங்கமமாகி, காக்காய்ப் பொன், பத்தரை மாற்றுத் தங்கம் போலவும், பத்தரை மாற்றுத் தங்கம் துருப்பிடித்த இரும்பு போலவும் காட்சியளிக்கும் இந்த நாளில், அவற்றை இளைஞர்கள் இனம் பிரித்தறியவேணடிய காலத்தின் தேவை உணர்த்தப்படவும் உணரப்படவும் வேண்டும்.

இன்று, எங்கு நோக்கினும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், மது, சூது, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற சமூகக் கொடுமைகளே நிறைந்துள்ளன. அமைதிக்கு வழி என்ன? என்று மனித இனம் ஏங்கித் தவிக்கிறது. குக்கிராமம் முதல், பெருநகரம் வரை, பேரலையாக ஆர்த்தெழுந்து விரவி வரும் இளைஞர்களின் முறை தவறிய, உணர்ச்சி ரீதியிலான போராட்டங்கள், கொலை, கௌ;ளை, கற்பழிப்புச் சம்பவங்கள், மதநிந்தனைகள், வழிபாட்டுத் தள தகர்ப்புக்கள், தற்கொலைத் தாக்குதல்கள் சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இளமைப்பருவம் வாழ்வுக்கான பொறுப்புணர்ச்சியை வழங்க வேண்டிய, வாழ்வின் திசை எதுவென்பதைத் தீர்மானிக்க வேண்டிய பருவமாக உள்ளது. இப்பருவத்தில் ஊட்டப்படுவதே ஓர் இளைஞனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது. இதில், குடும்பச் சூழல் பாரிய தாக்கத்தை அவனில் ஏற்படுத்துகிறது. அவனது சிந்தனை நம்பிக்கை, ஒழுக்கம், உணர்வு, நடத்தை, செயல் என்பன நல்லவையாக, அல்லது நெறி பிறழ்ந்ததாக அமைய வழியமைக்கிறது எதை நோக்கிப் பயணிக்கின்றார்கள்? அவர்களின் பயணப் பாதை எத்தகையது? அவர்களை வழி பிறழச் செய்கின்ற காரணிகள் எவை? அவர்களின் சிந்தனையில் தாக்கம் செலுத்தும் பிரதான காரணிகள் எவை? என்பன பற்றிச் சிந்திப்பதோடு, அவற்றை இனங்காட்டி, அவர்களின் சக்தியை உணரச் செய்து, நேரிய வழியில் பயணிக்க வழிகாட்டப்படவேண்டும்.

இளைஞர்கள் உடல் வன்மை மிக்கவர்கள், பெருமளவு உடல் ஆரோக்கியமானவர்கள் உள்ளம் தெளிவானவர்களது உணர்வுகள் விறுவிறுப்பானவர்களது புலன்கள் துடிதுடிப்பாகச் செயற்படுகின்றவர்கள். எனவே, அவர்கள் ஆவல்களும் வேட்கைகளும் அதிக ஆசைகளும் உடையவர்கள் எல்லா வகையிலும் உயிரோட்டமுடனும் துடிப்புடனும் செயற்படுகின்ற தன்மையுடையவர்கள் மிக இலகுவிலேயே உணர்ச்சி வசப்பட்டு, அதனடியாய் செயற்பட முனைந்து விடுவார்கள். இக்கால கட்டத்தில், இளைஞர்கள் பெற்றோர், உறவினர் போன்ற பிறரில் தங்கி நிற்பதினின்றும் தன்னில் சுயமாக தங்கி நிற்க பிரயத்தனப்படுவர். இது, இளமையின் ஒரு முக்கிய பண்பாகக் காணப்படுகிறது. ‘ஓர் இலக்கை நோக்கி ஆயத்தப்படுத்துகின்ற, வாழ வைக்க முனைகின்ற, பக்குவப்படுத்துகின்ற பருவமாக உள்ளது’ என உளவியலாளர்கள் கருதுகின்றனர்.

புரட்சி ரீதியாக சமூக மாற்றத்தை ஏற்படுத்த முனையும் அமைப்புகள், இயக்கங்கள், தலைவர்கள் எல்லாம் அந்த சமூக மாற்றத்தை, புரட்சியை ஏற்படுத்துவதற்குரிய ஆயுதங்களாக, துணைச் சக்தியாக, உபகரணங்களாக, இளைஞர்களைத் தான் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். ஏனெனில், இளைஞர்களின் உள்ளம் மிகத் தெளிவாகவும் விரிவாகவும், உறுதியாகவும் இருக்கும். எதனையும் பட்டென்று புரிந்து கொள்ளும் தன்மையுடன் காணப்படும். எனவே, அவர்களை ஓர் இலக்கை நோக்கித் தயார் படுத்துவது மிக இலகுவாக அமைந்துவிடுகிறது.

இளமைப் பருவத்தின் இன்னொரு முக்கிய பண்பாக எதிர்காலத்தைப் பற்றிய இலட்சியக் கனவு காணல் அமைகிறது. இளமைக் காலத்திலே துடிப்போடும், கற்பனை வளமிக்க தன்மையுடனும் இருக்கின்ற இளைஞர்கள், தனிப்பட்ட தன் சுய முன்னேற்றம் பற்றியும், குடும்ப உயர்வு பற்றியும், சமூக மேம்பாடு பற்றியும் இலட்சியக் கனவு காண்பார்கள். இப்பருவத்தில் தன்னுடைய முன்னேற்றம் பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் இருப்பார்கள். குடும்ப மேம்பாடு என்று மட்டும் சிந்திப்பவர்கள் இருப்பார்கள். சமூகத்தின் உயர்வு, முன்னேற்றம் பற்றிச் சிந்திப்பவர்கள் இருப்பார்கள். இவ்வாறு பல்வேறு சிந்தனை வேறுபாடுடைய இளைஞர்கள் இருப்பார்கள். தன் சுய நலத்தை மறந்து, சமூக மேம்பாடு பற்றிச் சிந்திப்பவர்கள் மிகக் குறைவாகவே இன்றுள்ளனர். அதே வேளை தனது முன்னேற்றம், குடும்ப வளர்ச்சியுடன் சேர்ந்து சமூக உயர்வுக்காக அர்ப்பண சிந்தனையுடன் உழைப்பவர்களும் நமது சமுதாயத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

‘எந்த சமுதாயத்தில் இளைஞர்களின் உள்ளம் இரும்பை ஒத்திருக்கிறதோ, அந்த சமுதாயத்திற்கு வாள் எடுத்துப் போராடும் கோழைகள் தேவை இல்லை’ என்கிறார் அல்லாமா இக்பால்.

உலகில் வாழும் மனித சமூகம் பல்வேறு வளங்களைப் பெற்றிருக்கின்றன. பௌதீக வளம், இயற்கை வளம், எண்ணெய் வளம், கனியவளம், காட்டுவளம், நீர்வளம் இவ்வாறு பல்வேறு வளங்களை ஒரு நாடு, ஒரு சமூகம் பெற்றிருக்கின்றது. ஆனால், இந்த வளங்கள் அனைத்தையும் விட அது, பெற்றிருக்கின்ற மனித வளம் (Humen Resources) மகத்தானது. ஓர் இனம் பெற்றிருக்கின்ற வளங்களிலெல்லாம் சிறந்த வளமாக இளைஞர் வளம் உள்ளது. அத்தனை வளத்திற்கும் அத்திபாரமாக, மிக முக்கியமானதாக அமைவது இளைஞர் வளம்தான். அந்த இளைஞர் வளம் தான் அனைத்துக்கும் அடிப்படையாகத் திகழ்கிறது. ஒரு சமூகத்தின் அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டாலும், அது மனித வளத்தால் மாண்புற முடியும். சக்தியும் ஆற்றலுமிக்க இளைஞர் வளம் எஞ்சிவிட்டால் மீண்டும் அந்த சமூகம், சர்வதேசிய மட்டத்தில் உயர்ந்து, நிமிர்ந்து, உயிர்பெற்று வாழ முடியும். வரலாற்றில் ஜப்பான், ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஜப்பான் நாடு நிர்மூலமாக்கப்பட்டு, அதன் அத்தனை பௌதீக வளங்களும் அழிக்கப்பட்டன. எதிர்காலத்தில் ஜப்பான் என்ற ஒரு நாடு சர்வதேசிய மட்டத்தில் பேசப்படுமளவு நிமிர்ந்து நிற்குமா? என்று கூட ஐயம் தெரிவிக்கப்பட்டது. ஏனெனில், ஜப்பான் போன்று எந்த ஒரு நாடும் அழிவை எதிர்நோக்கவில்லை. அதேபோல், ஜெர்மனியும் மிக மோசமான அளவு அழிவுக்குட்படுத்தப்பட்டது.

ஆனால், அவ்விரு நாடுகளில் ஒரே ஒரு வளம் மட்டுமே ஓரளவு எஞ்சி இருந்தது. அதுதான் மகத்தான மனித வளம். அந்த மனித வளத்தை அவர்கள் உரிய முறையில், நன்கு பயன்படுத்தியதன் மூலமாக, இன்று அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் முன்னணியில் இருக்கின்றனர்.

நாம் வாழும் சமகால உலகம் அறிவின் உலகம். சிந்தனைப் போர் நிகழும் யுகம். இந்தக் காலத்தில் எந்த சமூகமும் அறிவைப் புறக்கணித்து விட்டு வாழ முடியாது. அறிவு வளத்தைப் பயன்படுத்தாத, அதற்கு முக்கியத்துவம் கொடுக்காத, அறிவில் ஆர்வம் காட்டாத சமூகமாக நமது சமூகம் இருக்கக் கூடாது. அறிவில் ஆர்வம் காட்டாத சமூகம், பிற்போக்கான சமூகமாக, வறுமைக்கு ஆளான சமூகமாக, உலகத்திலே ஒடுக்கப்படுகின்ற சமூகமாக இருக்கும். அறிவால் ஜெயிக்கும் ஓர் இளைஞர் பரம்பரை உருவாக வேண்டும். எனவே, காலத்தையும் நேரத்தையும் அறிவு தேடுவதில் கழிக்க இளைஞர்களை ஆயத்தப்படுத்த வேண்டும். அறிவின் பெறுமதியை, நேரத்தின் மகிமையை ஆழமாக அடிமனதில் பதியும் படியாக அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அறிவை மட்டும் வழங்காது, ஆன்மீக, ஒழுக்க விழுமியங்களையும் பண்பாட்டையும் மற்ற மனிதர்களைச் சமமாக மதிக்கின்ற மாண்புகளை ஊட்டி உணர்வுகளைச் சீர்படுத்த வேண்டும். ஒழுக்க மாண்புள்ள, அறிவார்ந்த ஒரு மாணவ பரம்பரை உருவாகப் பின்வரும் காரணிகள் துணை புரிய வேண்டும்.

1. வீடு
2. பாடசாலை
3. சூழல்
4. உலகம்

இவை, ஓர் இளைஞனுக்கு ஒழுக்கத்தை, நல்ல பண்பை, சீரிய குணநலன்களை, மனித நடத்தைகளைப் புகட்ட வேண்டும். குடும்ப அமைப்பு சீர் பெற்று, நல்ல பயிற்றுவிப்புகளை அது இளைஞர்களுக்கு வழங்க முன் வரவேண்டும். பாடசாலை ஆசான்கள் ஒவ்வொரு மாணவனையும் தனது சொந்தப் பிள்ளையாக நினைத்து, கல்வி புகட்டி, அவனை ஆயத்தப்படுத்த வேண்டும். அடுத்தவர்களின் பாதையில் முட்களை பரப்பக் கூடியவர்களாக அவர்களை ஆக்கிவிடக் கூடாது. மற்றவர்களுக்கு நறுமணம் பரப்பக் கூடியவர்களாக மாணவர்களை மாற்ற ஆவன செய்ய வேண்டும்!

ஒரு சமூகத்தின் ஜீவ நாடியாகவும் நிகரற்ற மகத்தான வளமாகவும், உயிரோட்டமுள்ள ஓர் ஆக்க சக்தியாகவும் இளைஞர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் எமது சமூகம் உயர்ந்த, உன்னத வளர்ச்சி எல்லைகளை தொட முடியும். சமூக எழுச்சியில் இளைஞர்கள் முக்கியமான, சிறப்பான பங்கை வழங்க வேண்டும். ஏனெனில், இளைஞர்கள் சமூகத்தின் முக்கிய அங்கமாகவும் அதன் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பி, அதன் தலைமைப் பொறுப்பை சுமக்கப் போகின்றவர்களாகவும் இருக்கின்றார்கள். எனவே, சமூகத்தின் முக்கிய வளமான இளைஞர் வளத்தைப் பண்படுத்த ஆவன செய்வோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *