Featured Posts
Home » வரலாறு » இலங்கை முஸ்லிம்கள் » பேராசிரியர் S.H. ஹஸ்புல்லாஹ் – ஓர் ஆளுமைமிக்க செயற்பாட்டாளர்

பேராசிரியர் S.H. ஹஸ்புல்லாஹ் – ஓர் ஆளுமைமிக்க செயற்பாட்டாளர்

அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி,ரியாதி (M.A)

இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஆய்வும் செயற்திறனுமிக்க ஒரு சிலரில் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். சமூகத்தில் பலர் கற்பார்கள். பட்டமும் பெறுவார்கள். ஆனால், சமூக எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஆளுமைகள் சொற்பமாகவே உள்ளன. சமூக அக்கறை நிறைந்த அந்த சொற்ப ஆளுமைகளுள் இலங்கை, வடமாகாணத்தில் மிக முக்கிய கிராமமான எரிக்கலம்பிட்டியில் 03/09/1950 ம் ஆண்டு பிறந்த பேராசிரியர் S.H. ஹஸ்புல்லாஹ் அவர்கள் ஒருவராகத் திகழ்கின்றார்கள்.

இயற்கையில் நல்ல குணநலமும் கிராமத்திற்குரிய நல்ல பண்பும் கொண்டவராகத் திகழ்ந்தார். கணினியில் சிறந்த தேர்ச்சியும் தாய் மொழியோடு, ஆங்கில மொழியறிவில் திறமையும் பெற்று விளங்கினார். புவியியல் – Geography மானிடப் புவியியல் – Human Geography துறைக்குள் தனது ஆளுமையை வளர்த்து, அத்துறையில் துறைபோகக் கற்றார்;. PhD பட்டம் பெற்று, பேராசிரியராகக் கடமையாற்றினார். University of Zurich, Edinburgh, Norwegian, Columbia, Canada போன்ற சர்வதேசிய பல்கலைக்கழகங்களில் Visiting lecturer ஆகக் கடமையாற்றினார்.

புவியியல் துறை சார்ந்த கல்வியில் அதிக அக்கரை காண்பித்தார்; இயற்கையான அவரது திறமையினால் முன்னணிக்கு வந்தார்; முஸ்லிம் சமூகம் சார்ந்த ஆய்வில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் காண்பித்தார். மானிடப் புவியியலில் இருந்து அவர் தனது சமூக ஆய்வுகளை வடிவமைத்துள்ளார் என்பதை அவரது நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன. எப்போதும் சமூகப் பொது நலத் தன்மை கொண்டதாக அவரது ஆய்வும், எழுத்தும், பேச்சும் அமைந்திருந்தது. முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடியான கட்டங்களில் அபாயங்களையும் சவால்களையும் சுயாதீனமாகவும், தற்துணிவுடனும் எழுதினார். தான் சார்ந்த சமூகத்திற்குத் தனது அறிவு ஆளுமையால் பாரிய பங்களிப்பைச் செய்தார். அதனால், சமூகத்தின் அவதானத்திற்கும் அன்பிற்கும் உரியவராக மாறினார். அவரது இழப்பு வெற்றிடத்தையும் கவலையையும் ஏக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புவியியல் துறை சார்ந்த மிக முக்கிய, குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாக அவர் விளங்கினார். வட மாகாண முஸ்லிம்களுடைய பலவந்த வெளியேற்றத்தின் தாக்கங்களை மதிப்பீடு செய்தார். இடம் பெயர்ந்த மக்களை நேரில் சந்தித்து, துல்லியமாகத் தகவல்களைச் சேகரித்துப் பதிவு செய்து, ஆவணப்படுத்தினார். 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்த முஸ்லிம்கள் 24 மணி நேரக் கெடுவைத்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது “வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு” என்ற ஒன்றைச் சிலருடன் இணைந்து உருவாக்கினார். “அகதி” என்ற சஞ்சிகையை வெளியிட்டார். அப்போது, ஸலபிய்யாவில் கற்றுக் கொண்டிருந்த நானும் அந்த அமைப்பின் பணியில் ஈடுபாடு கொண்டேன். இந்த அமைப்பின் ஊடாக தேசிய, சர்வதேசிய மட்டத்தில் வடமாகாண அகதி முஸ்லிம்களின் பிரச்சினையைக் கொண்டு சென்றார். பலவந்த வெளியேற்றத்தின் தாக்கங்களை மதிப்பீடு செய்து, இலங்கையின் இனப்பிரச்சினையும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களும் என்ற தொனிப்பொருளில் பல நூல்களை எழுதினார்.

தனது வாழ்வின் பெரும் பகுதியை வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான போராட்டத்தில் செலவிட்டார். சமூகத்திற்கு நன்மையளித்த ஆய்வுப் பணியில் அவர் பல சோதனைகளையும் பிரச்சினைகளையும் எதிர் கொண்டார். எனினும், அவர் தயங்கவில்லை. துணிவாக விவாதித்தார்; ஆக்கப்பூர்வமாகப் பேசினார்; கனதியான ஆக்கங்களை சமூக விழிப்புணர்விற்காக எழுதினார்.

தனது சமூகத்தின் அரசியல், சுய நிர்ணய, நில விவகாரங்களைச் சேகரித்து அறிவாய்வு ரீதியாகச் சமர்ப்பிப்பதிலும் சர்வதேசிய பார்வைக்குள் கொண்டு செல்வதிலும் அவரது பங்களிப்பு தனித்துவமான பண்புக் கூறுகளை உட்பொதிந்து காணப்பட்டது. “எப்போதும் சமூகம் சார்ந்த தரவுகளையும் தகவல்களையும் ஓர் இயந்திரம் போல் வழங்கினார்” என்று அவருக்கு நெருக்கமான பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.

எப்போதும் தான் மேற்கொள்ளும் பணியைப் பிரமாண்டமாக மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தார். ஒரு சபையில் கருத்தை எப்படி முன்வைக்க வேண்டும் என்ற புலமை அவரிடம் இருந்தது. வெளி நாடுகளில் பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டார். 2002ல் LTTE யுடனான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலத்தில் முஸ்லிம் தரப்பு ஆலோசனைக் குழுவில் ஒருவராகப் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்களும் உள்வாங்கப்பட்டிருந்தார். இந்தத் தேர்வு ஒன்றே அவரின் தனித்துவ ஆளுமைக்கு அடையாளமாகக் கொள்ளப்போதுமானது.

தான் சார்ந்த வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு அவரின் சிந்தனைப் போக்கில் மாற்றங்களையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. அதனால், அவர்களின் விடயங்களில் தனது ஆய்வை விரிவுபடுத்தினார். 1991களில் அனைத்து வீடுகளும் பூட்டப்பட்டிருந்த போது, வீட்டு உரிமையாளரைத் தேடிச் சென்று இழப்புகளை மதிப்பிடு செய்தார். ஆய்வு வளங்கள் மிகக் குறைந்த நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த போதும் தனது சமூகத்திற்கு ஏற்பட்ட இழப்பையும் அவமானத்தையும் விஞ்ஞான பூர்வமாக, சரியாக மதிப்பீடு செய்து பாராளுமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்தார். “அவரது வீட்டில் வடக்கு முஸ்லிம் சமூகம் சார்ந்த ஆய்வுகள் மலை போல் குவிந்திருந்தன” என அவரை வீட்டில் சந்தித்த நிகழ்வைப் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் நினைவு கூறுகின்றார்கள்.

UNO விலிருந்து இலங்கை வந்த குழு கூட அவரது ஆய்வை ஏற்றுக் கொண்டது. பாதிப்புக்குள்ளான தான் சார்ந்த சமூகத்தின் மீது அதீத அன்பை வெளிப்படுத்தினார். அவரும் ஓர் இடம்பெயராளர் என்பதால் உணர்வுடனும் உயிர்த்துடிப்புடனும் செயற்பட்டார். அவரது பணி ஆராய்ச்சி மட்டுமல்ல; அந்த மக்களுடன் கலந்து ஆறுதலும் வழங்கினார். உள்ளூர் மக்களுக்கும் இடம் பெயர்ந்து குடியேறியோருக்குமிடையில் சில இடங்களில் பிணக்குகள் வந்த போது, அதைத் தீர்க்கவும் ஒற்றுமைக்காகவும் பாடுபட்டு, அவர்களுக்கு வாழும் சூழலை உருவாக்க உழைத்துள்ளார். சமூக நல்லுறவிற்காக தொடர்ச்சியாகப் பங்காற்றியுள்ளார்.

இன நல்லிணக்க விடயங்களில் அதிக அக்கறையும் காட்டினார். வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும்; வில்பத்துப் பிரச்சினையும் இனவாத நோக்கில் அணுகப்பட்டு, முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்ட போது “Denying the Right to Return” (மீள் குடியேறுவதற்கான உரிமை மறுப்பு) எனும் நூலை எழுதினார், இந்த நூல் மூலம் மேலாதிக்க எண்ணம் கொண்ட பெரும்பான்மை இன இனவாதம் பேசுவோருக்கு உண்மை நிலையைத் தெளிவுபடுத்த முனைந்தார்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் சமூகம் சார்ந்த உடனடியான பிரச்சினை(Issues)களை அவர் உடனுக்குடன் தெளிவுபடுத்தி, எச்சரித்தார். அவர் நிர்ணயிக்கின்ற ஒரு விடயத்தை இடம் பெயர்வு, வில்பத்து ஏதுவாக இருந்தாலும் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தினார். முஸ்லிம் சமூக நலனிற்காக அக்கறையுடன் எழுதியும் பேசியும் வந்தார். தன்னால் முடிந்த அளவு பொது விடயங்களில் மற்றவர்களுக்கு வழிகாட்டினார். இளைஞர்களுக்குக் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

யாழ்ப்பாணம் தொடக்கம் கிழக்கு மாகாண வாகரை வரை நிலம் தொடர்பான பிரச்சினைகளை அணுகினார். இதில் இன முரண்பாட்டிற்கு நிலப் பிரச்சினை எவ்வாறு காரணமாக அமைகிறது என்பதை ஆய்வு செய்தார். நில விவகாரத்தில் சிங்கள – முஸ்லிம் கலவரங்கள் தோன்றுகிறது; அது பொருளாதாரம் வரை விரிவடைகிறது என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்தார். திகன பிரச்சினையையும் அவ்வாறே அவர் அணுகினார். அதனால், அவரது ஆய்வு மற்றவர்களின் நோக்கிலிருந்து வேறுபட்டு, ஒரு தனிப் பண்பை வெளிப்படுத்தியது. எதற்கும் Documents கேட்கப்படும் போது, அதை உடனே சமர்ப்பிக்கும் திறமை அவரிடம் இருந்தது. இலங்கை முஸ்லிம் சமூகம் தொடர்பான தகவல், ஆவணம் சார்ந்த புலமைக்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டு. சமூகம், அரசியல், பொருளாதாரம் என்று எல்லா விடயங்களிலும் அவருக்கு அவதானம் இருந்தது. அதனால், பல சமூக விடயங்களில் தலையிட்டார். பயில்வான் – அப்துல் ரவூப் விடயங்களில் கூட காத்தான் குடி சென்று அவதானித்து, கட்டுரை எழுதினார். தனியார் சட்டப் பிரச்சினையில் கூட ஈடுபாடு காட்டினார். வெளிநாட்டு ஆய்வாளர்கள் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான தரவுகளையும் தகவல்களையும் பெறுவதற்கு இவரையே நாடினர்.

அண்மையில் சமூகக் கவனயீர்ப்பைப் பெற்று விவாதிக்கப்பட்டுவரும் மாகாண எல்லை நிர்ணய ஆணைக் குழுவில் ஒற்றை முஸ்லிம் உறுப்பினராகக் கடமையாற்றினார். எல்லை, தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கும் சட்ட மூலம் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தினை குறைத்து, மேலும் பலவீனப்படுத்தும் என்பதை மிகத் தெளிவாகவும்; பகிரங்கமாகவும் தெளிவுபடுத்தினார். இச்சட்ட மூலத்தினை அனுமதிக்கக் கூடாது என்று துணிச்சலாக வாதிட்டார். இந்த அறிக்கையில் குறிப்பாக முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் துணிகரமாகக் கூறி, முஸ்லீம் மக்களுக்கு விழிப்பூட்டல் நிகழ்வுகளை நடாத்தினார். இந்த அறிக்கை தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற உணர்வுடன் செயற்பட்டார். அவரது மரணத்திற்கு முன்னரே அது பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. மாகாண எல்லை நிர்ணய ஆணைக் குழுவின் அறிக்கையில் காணப்பட்ட தவறுகளை நீக்கி சுயமாக அவர் சிறுபான்மை சமூகத்தைப் பாதிக்காத வகையில் ஓர் அறிக்கையைத் தயாரித்தார்.

பேராசிரியர் S.H. ஹஸ்புல்லாஹ் அவர்கள் ஓர் ஆய்வாளர், கல்வியாளர் என்பதற்கு அப்பால், அவர் ஒரு (Activities) செயற்பாட்டாளர். சுமுகத்திற்காக இயங்கினார். மற்றவர்களை இயங்குமாறு தூண்டினார். முற்போக்கான விடயங்களில்தான் அவர் ஈடுபட்டுள்ளார்; தனது கல்வியை முஸ்லிம் சமூகத்திற்குப் பயன்படும் வகையில் தனது பயணத்தைத் தொடர்ந்தார் என்பதை அவரது பணிகள் தெளிவாக உணர்த்துகிறது.

(2018 ஆகஸ்ட் மாதம் பேராசிரியர் S.H. ஹஸ்புல்லாஹ் அவர்கள் இறையடி சேர்ந்த போது, எழுதப்பட்ட கட்டுரை. சில மாற்றங்களுடன்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *