Featured Posts
Home » பொதுவானவை » சுனிதா வில்லியம்ஸ் இஸ்லாத்தைத் தழுவினாரா?

சுனிதா வில்லியம்ஸ் இஸ்லாத்தைத் தழுவினாரா?

“SUNITHA WILLIAMS ACCEPTED ISLAM” என்ற தலைப்பிடப்பட்ட மின்மடல் இப்போது இணைய உலகை வலம் வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் விண்வெளி நிலையத்தில் அதிகநாள் இருந்து சாதனைப் படைத்த முதல் விண்வெளி வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றவரான சுனிதா வில்லியம்ஸ், இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் நாஸா விண்வெளி மையத்தில் பணியாற்றுபவர். சுனிதா வில்லியம்ஸ் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ஹைதராபாத்திலிருந்து வெளியாகும் “ஸியாஸத் நியூஸ்” (20-08-2007) இல் வெளியான ஒரு செய்தியை மேலே உள்ளபடி பிட் நோட்டிஸ் வடிவில் இணைப்பாக அனுப்பி இருந்தார்கள்.

அதன் மொழியாக்கம்:

“எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே; அவனே தான் நாடியவர்களுக்கு நேர்வழியைக் காட்டுபவன். தர்க்க ரீதியிலான உண்மைகளை நம்பி ஆய்வுக்குட்படுத்தும் நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியைக் கொடுப்பவனும் அவனே! அவன் வழங்கிய வழிகாட்டலை விடச் சிறந்ததை உலகில் எவரும் காட்ட முடியாது; விண்ணிலும்கூட!
இஸ்லாத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாலும் அறிவியல் பூர்வமான நிரூபனங்களின் மூலமே சிலர் திடமான நம்பிக்கையாளர்களாக ஆகின்றனர்.

சுனிதா வில்லியம்ஸ் சமீபத்தில் நாஸா விண்வெளி மையத்திலிருந்து பூமிக்குத் திரும்பியதும் தன்னுடன் பயணித்த சகவிஞ்ஞானிகள் சிலருடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்! விண் நிலையத்திற்குச் சென்றபோது தன்னுடன் பைபிள், திருக்குர்ஆன் மற்றும் கீதையை எடுத்துச் சென்றார். சில காரணங்களுக்காக அவர் இஸ்லாத்தை ஏற்றதை ரகசியமாக வைத்துள்ளார். இந்தியாவிலுள்ள அவரின் உறவினர் ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்!

வெகுசீக்கிரம் இந்தியாவிற்குத் திரும்பி அனைத்து உண்மைகளையும்
பகிரங்கப்படுத்த உள்ளார்; சங்பரிவார RSS சுனிதா வில்லியம்ஸின் இந்திய வருகைக்காக காத்திருக்கிறார்கள். நிலவுக்குச் சென்று திரும்பிய முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்கும் பிற்காலத்தில் இஸ்லாத்தில் இணைந்தார்;ஆனால் இதுபற்றிய தகவல்கள் பரம
ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன”

(சுவாரஸ்யம் வேண்டி தலையை ஆட்டி ஆட்டி படிக்கவும் :-)

இராமர் பாலம் பற்றி நாஸா விஞ்ஞானிகளே ஒப்புக் கொண்டு விட்டார்கள் என்று கற்பனைக் கதைக்கு நாஸாவையும் துணைக்கழைத்தார்கள். பிறகு, நாஸாவும் அதை மறுத்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டது!

இஸ்லாத்தைப் பற்றியத் தகவல்களை பரவசப்பட்டு தங்கள் கற்பனையுடன் சொல்வதால் இஸ்லாத்திற்கு நன்மை ஒன்றுமில்லை!நாம் தேடிப்பார்த்த வகையில் சுனிதாவோ அல்லது அவருடன் சென்ற விஞ்ஞானிகளோ மடலில் கண்டுள்ளபடி இஸ்லாத்தை ஏற்றதாக எங்கும் காணப்படவில்லை! அவ்வளவு ஏன்? நோட்டிஸில் குறிப்பிட்டுள்ள ஸியாஸத் நியூஸ் தளத்தில் கூட இச்செய்தி பதிவாக வில்லை. உலகின் ஒருபகுதியில் நடக்கும் செய்திகள் நொடியில் இணையத்தில் கிடைக்கும் இக்காலத்திலும் இதுபோன்ற வதந்திச் செய்திகளைப் பரப்புவதன் மூலம் எந்தப் பயனும் இல்லை என்பதை மெனக்கெட்டு உட்கார்ந்து உருவாக்கும் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்!

புனித நகரங்களான மக்காவும் மதினாவும் நட்சத்திரங்களைப் போல் விண்ணில் ஜொலிப்பதாகச் சில புகைப்படங்கள் இணையத்தில் உலவின. அதேபோல், ஓமான் நாட்டில் வாக்மேனில் தான் பா
டல் கேட்கத் தன் தாய் தடையாக இருந்ததால் அவர் ஓதிக்கொண்டிருந்த திருக்குர்ஆனைத் தூக்கி எறிந்த ஒரு மகள் சற்று நேரத்தில் விநோதமான ஜந்தாக மாறியதாகவும் புகைப்படத்துடன் செய்திகள் பரிமாறப்பட்டன. இன்னொரு மடலில் வானில் நபி(ஸல்) அவர்கள் பெயர் மின்னல் ரூபத்தில் தோன்றியதாம். கூடவே “பார்த்தீர்களா அல்லாஹ்வின் அற்புதத்தை!!” என்று வர்ணனைகள் வேறு. குறைந்தபட்ச கணினி அறிவும் கற்பனையும் இருந்தாலே போதும் எத்தகைய அற்புதங்களையும் சிலமணி நேரங்களில் புகைப்படங்களாக வெளியிட முடியும். (இது தொடர்பாக முன்பு ஒருவர் பதிவை கூட போட்டிருந்தார்)


இறைவன் வழங்கிய மிகச்சிறந்த அற்புதம் குர்ஆன் மட்டுமே; அதையே தனது வாழ்க்கையாகக் கொண்டு நடந்துகாட்டி, உலகின் மூன்றிலொரு பகுதி மக்களை தன் கொள்கையின்பால் ஈர்த்த முஹம்மது நபி அவர்கள் இன்னொரு அற்புத மனிதர். தனது வல்லமையையும், அற்புதங்களையும் விளங்கிக்கொள்ள குர் ஆனில் பல அத்தாட்சிகளை இறைவன் கூறியிருக்கிறான். அதை சிந்தித்துப் பார்த்தாலே இறைவனின் வல்லமை விளங்கிவிடும். அதை விடுத்து இது போன்று திட்டமிட்டு தயாரிக்கப்படும் மாயைகளினால் எப்பயனும் இல்லை.

இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றவர்களை வரலாற்றில் தேடிப்பார்த்தால், மன்னாதி மன்னர்கள் முதல் கொத்தடிமைகள் வரை பட்டியல் நீள்கிறது. இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டதனால் அவர்கள்தான் பெருமையடைந்தார்கள், சீர் பெற்றார்கள். அதே போலத்தான் பிரபலங்கள் இஸ்லாத்தை ஏற்பதால் அவர்கள் மென்மேலும் பிரபலம் அடைகிறார்கள். அதே பிரபலங்கள், ஏதாவது காரணத்தினால் வேறு கொள்கைக்கு திசை மாறினால் (அப்படி யாரும் மாறியதாகத் தெரியவில்லை) அவர்களைக் காட்சிப் பொருளாக்கி இஸ்லாத்தை விளம்பரப் படுத்தியவர்கள் அப்போது என்ன செய்வார்கள்?

4 comments

  1. மல்லிகை மணம்

    MAKE SURE for Nth TIME BEFORE SPREADING SUCH NEWS AS ANTI-ISLAMIC ELEMENTS ARE ENJOYING IN SPREADING OF FALSE NEWS’ AS HAPPENED IN THE PAST

    இது தொடர்பாக எனக்கு வந்த எல்லா மடல்களுக்கும் நான் எழுதிய பதில்.

  2. பிறைநதிபுரத்தான்

    இது போன்ற வதந்திகளை பரப்புவதின் மூலம் – இஸ்லாத்தை வளர்ப்பதாக நிணைக்கிறார்கள் சில இஸ்லாமிய பெயர்தாங்கிய அடிமுட்டாள்கள்..

  3. அபூ ஸாலிஹா

    நல்ல விழிப்புணர்வூட்டும் பதிவு!

    நைஜீரியன் ஸ்பாம் உலகறிந்தது போல், இத்தகையவற்றையெல்லாம் பெரும்பாலான முஸ்லிம்கள் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. பார்த்தவுடன் சற்றுநேரம் விலா நோகச் சிரித்து முடித்துவிட்டு குப்பைத் தொட்டிக்குத் தான் அனுப்பப்படுகிறது இத்தகையவை.

    இஸ்லாத்தின் அடிப்படையை விளங்கியிராத – சில முஸ்லிம்களும், இது போலவும் இஸ்லாத்தில் நடக்குமா என்ன? என்று அதிசயக்கும் மாற்றுமத சகோதரர்களும் தான் இதற்கு இரையாகின்றனர்.

    மல்லிகை மணம் இங்கே சுட்டியிருப்பது போன்று, வந்து சேர்ந்த மடலை அழிக்கும் முன் அனுப்பியவருக்கு ஒரு பதில் மடலை எச்சரிக்கைக்கு அனுப்பிவிடுவது முஸ்லிம்களின் கடமை!

    மற்றபடி பிறைநதிப்புரத்தார் மேலே குறிப்பிட்டிருப்பது போன்று இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை உருவாக்கி பரப்பிக் கொண்டிருப்பது முஸ்லிம்கள் அல்ல என்பது ஒரு கூடுதல் தகவல்.

    நன்றி!

  4. ஹைதர் அலி

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    அருமையான பதிவு
    உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய பதிவு

    இஸ்லாத்தில் உண்மைகள் கொட்டிக் கிடக்கும் போது
    இஸ்லாத்தை பரப்ப பொய்மையைக் கொண்டு முட்டுக் கொடுக்க தேவையில்லை. அது இஸ்லாமிய வழிமுறையும் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *