Featured Posts
Home » இஸ்லாம் » அழைப்புப்பணி » அழைப்பு பணியின் அவசியம்

அழைப்பு பணியின் அவசியம்

மனிதன் இயல்பிலேயே தவறு செய்யக்கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும்பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே! எனவே, தவறு செய்யும் இயல்புடைய மனிதனுக்கு நன்மையை ஏவுவதும் தீமையை குறித்து எச்சரிக்கை செய்வதும் அவசியமாகும்.

மக்கள் நன்மைகளை விட்டும் வெகு வேகமாக வெருண்டோடிக் கொண்டிருக்கின்றனர். தீமைகளில் கிடைக்கும் அற்ப சுகம், உலகாதாயம் என்பவற்றில் கவரப்பட்டு விளக்கை நோக்கிச் செல்லும் விட்டில்களாக தீமைகளை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

உதாரணமாக, வட்டி, ஹராம் என்பது இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையாகும். இந்த வட்டியின் பக்கம் வாருங்கள் என தொலைக்காட்சி, வானொலி போன்ற தொலைத்தொடர்பு சாதனங்கள் அழைப்பு விடுக்கின்றன. பத்திரிக்கையில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள், இனிப்பான திட்டங்கள் என அன்றாடம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு தீமைகள் புயலாக விசும்போது உண்மை இறைவிசுவாசி தானுண்டு தன் பாடுண்டு என்று இருக்கமுடியுமா? அவர்களது உடன்பிறப்புகள், உற்றார் உறவினர்கள், ஊரார் அனைவரும் அழிவின்பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கும் போது, இவர் கண்டு கொள்ளாமல் இருப்பது அறிவுக்கு பொருந்துமா?

இதனை பின்வரும் சம்பவங்கள் எமக்கு உணர்த்துகின்றன. ‘ சுலைமான் (அலை) அவர்கள் தன் பட்டாளத்துடன் போகும் போது, ஒரு எறும்பு தனது மற்ற எறும்பு கூட்டங்களைப் பார்த்து, ”எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய படையினரும் தாம் அறியாமலேயே உங்களை திண்ணமாக மிதித்து விட வேண்டாம். 27:18 எனக்கூறியது.

இந்த சம்பவம் மூலம் ஓர் எறும்பு தனது மற்றைய எறும்புகள் அழிந்துவிடக்கூடாது என்பதில் காட்டியிருக்கும் அக்கரையை உணரமுடிகிறது. ஓர் எறும்பே சமூக உணர்வுடன் நடந்திருக்கும்போது, எமது சகோதர சகோதரிகள் ஷிர்கிலும் பித்அத்துக்களிலும், ஹராத்திலும் மூழ்கியிருக்கும் போது இந்த செயல்கள் மூலம் தம்மைதாமே அழித்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடும்போது நாம் தடுக்காது இருக்கலாமா? அப்படியிருந்தால் இந்த எறும்பைவிட கீழான நிலைக்கல்லவா சென்றிடுவோம்.!

இதே அத்தியாயம் மற்றுமொரு நிகழ்ச்சியைக் கூறுகின்றது. சுலைமான் (அலை) அவர்கள் தனது படையை பார்வையிட்டுக் கொண்டு வருகிறார்கள். அங்கே ஹுத் ஹுத் என்ற பறவையைக் காணவில்லை. அது தாமதித்து வந்தது. இந்தப் பறவை தாமதித்து வந்ததற்கான காரணத்தை கூறாவிட்டால், அதை அறுத்து விடுவேன் அல்லது கடுமையாக தண்டிப்பேன் என்று கோபத்தோடு கூறுகிறார்கள். அப்போது அந்தப்பறவை சுலைமான் நபியிடம் பின்வருமாறு கூறியது. அதை அல்லாஹ், திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

‘அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து; ”நான் (இங்கே) ஹுது ஹுது(ப் பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார். ”நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்” என்றும் கூறினார். (இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுது ஹுது வந்து) கூறிற்று, ”தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். ‘ஸபா’விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.” ”நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது; மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது. ”அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான். ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை. ”வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா? ”அல்லாஹ் – அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்” (என்று ஹுது ஹுது கூறிற்று). 27:20-26

இந்தச் செய்தியை கேட்டபின், அந்தப் பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் தஃவா செய்து, அவர் இஸ்லாத்தில் இணைந்ததாக அல்குர்ஆன் கூறுகின்றது.

”இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்” எனக் கூறினாள். 27:44

ஒரு நாட்டு மக்கள் சூரியனை வணங்குவதை கண்டு ஒரு பறவை கவலை கொண்டுள்ளது. நமது சகோர சகோதரிகள் பலர் அறியாமல் கப்ரு வழிபாட்டிலும் ஷிர்க்கான சடங்குகளிலும் மூழ்கியுள்ளனர். இவற்றால் அவர்கள் செய்கின்ற நல்லமல்களை அழித்துக் கொள்வதுடன் தம்மைத்தாமே நரகிற்கு தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதனை கண்டு எமக்கு சிறிதளவாவது கவலை வரவில்லையென்றால் நாம் இந்தப்பறவையை விட கீழானவர்களாக அல்லவா இருப்போம்.!

ஒருவன் தனது அரசியல் தலைவன் அவமதிக்கப்படுவதை தாங்கிக் கொள்வதில்லை. இவன் சீறுகிறான், தாக்குகிறான் சாதாரண தலைவனையே இப்படி வெறிகொண்டு மதிக்கும் போது ஷிர்க் செய்வதன் மூலம் அல்லாஹ்விற்கு அநீதி இழைக்கப்படுகிறது அல்லாஹ்வின் கட்டளைகள் பகிரகங்மாக மீறப்படுகின்றன, அப்போது அவன் சீறாமல் சிணுங்காமல் சின்னதொரு எதிர்ப்பையும் காட்டாது குறைந்த பட்சம், முகச்சுழிப்பையாவது காட்டாது கல்லுப்போல் நிற்கிறதெனில் இவனது இறைவிசுவாசத்திற்கு அது ஒரு களங்கமாகிறது.

அல்லாஹ்வை முஸ்லிம்களாகிய நாம் ஈமான் கொண்டுள்ளோம். நாம் சத்திய போதனையில் ஈடுபடும்போதுதான் எமது ஈமான் ஏனைய சமூகங்களைவிட சிறப்புப் பெற்றிருக்கின்றோம். இதனை அல்குர்ஆன் தெளிவாக கூறுகின்றது.

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராகவும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். 3:110

இந்தவகையில் இஸ்லாத்தை இதயத்தில் ஏற்று அதை பிறருக்கும் எடுத்து கூறும்போதுதான் ஒருவன் இஸ்லாம் என்ற கொள்கையில் பற்றுடையவனாக இருக்கமுடியும். அல்லாஹ்வின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் தராதரத்தை மதிப்பிடும் சாதனமாக இந்த அழைப்பு பணி அமைந்துள்ளது.

அழைப்பு பணி எப்படி செய்வது

தான் அறிந்த மார்க்கச் செய்தியை, பிறருக்கு எடுத்து கூறுவதே, அழைப்பு பணியாகும். இதற்காக முழுமையாக இஸ்லாத்தை அறிந்திருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. நாம் கூறும் விஷயத்தில் நமக்கு தெளிவிருந்தால் அதை பிறருக்கு கூறுவதும் அழைப்பு பணிதான். இதை உணராத பலர், அழைப்ப பணி ஆலிம்களின் கடமை என நினைக்கின்றனர். இது தவறாகும். நாம் நமது நண்பர் நண்பிகளை சந்திக்கும் போதும் அவர்களை எமது வீட்டிற்கு விருந்துக்கு அழைக்கும் போதும் உரையாடல் மூலமாக தஃவாவை முன்னெடுத்து செல்லலாம். பேச்சோடு பேச்சாக சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நல்ல கருத்துக்களை முன் வைக்கலாம். இப்படி அவர்களிடம் காணப்படும் தவறுகளை களைய முற்பட வேண்டும்.

இதற்கு யூசுப் (அலை) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உதாரணமாக கூறலாம். நபி யூசுப் (அலை) அவர்கள் சிறையில் நீண்ட காலமாக இருந்தார்கள். அவர்களுடன் இன்னும் இருவர் அச்சிறையில் இருந்தனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட கனவின் விளக்கத்தை கூறுவதற்கு முன்னர் பல தெய்வங்களை வழிபடுவது சிறந்ததா? அல்லது அனைத்தையும் அடக்கியாழ்பவன் சிறந்தவனா? என்று கேட்டார்கள். இதன் மூலம் அவர்களது சிந்தனையில் ஏகத்துவத்தின் சிறப்பை பதியச் செய்தார்கள். இதனை தொடர்ந்து அல்லாஹ்வை விட்டுவிட்டு நீங்கள் வணங்குபவைகள் அனைத்தும் போலியானவை, அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அதுதான் சரியான மார்க்கம் என்ற கருத்தை முன் வைத்தார்கள்.

இங்கே சிறைச்சாலையில் தன்னுடன் இருந்தவர்களிடமே யூசுப் (அலை) அவர்கள் பேச்சோடு பேச்சாக தஃவாவை முன்வைத்திருப்பதை காணலாம். இத்தகைய வாய்ப்புகள் அன்றாடம் அனைவருக்கும் ஏற்படலாம். தருணம் பார்த்திருந்து தக்க நேரத்தில் கருத்துக்களை முன்வைப்பதில் நாம் முனைப்போடு செயல்பட வேண்டும்.

அழைப்புப்பணி ஹிக்மத்தோடு (அறிவோடு) ஆற்ற வேண்டிய பணியாகும். அன்பான, கனிவான பேச்சு, எதிர் கருத்துள்ளவர்களையும் மதிக்கும் மனோபான்மை, இரக்க குணம், ஈகை, கருணை, பொறுமை, பணிவு போன்ற உயரிய பண்புகள் மூலம் நபி(ஸல்) அவர்களின் அழைப்பு பணி பொலிவு பெற்றது..

அழைப்பு பணியில் ஈடுபடுவோர் தமது பிரச்சார இலக்காக எதை கொள்ளலாம் என்பதை உறுதியாக தீர்மானிக்க வேண்டும். அப்படி தீர்மானிக்கும் போது, முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளித்து பேசவேண்டியவைகளுக்கு அதற்குரிய இடம்பார்த்து பேச வேண்டும். ஒரு இடத்தில் இணைவைக்கப்படுகின்றது என்று வைத்து கொள்ளுங்கள், அங்கே தொழுகை பற்றியோ இன்னபிற வணக்கங்கள் பற்றியோ பேசுவது பொருத்தமல்ல,

விழி இழந்தவனுக்கு விளக்கு பிடிக்கலாமா?

செவி இழந்தவனுக்கு கவி பாடலாமா? என்பது போல்தான். ஷிர்க் செய்பவர்களுக்கு மத்தியில் ஷிர்க்கை பற்றி பேசாமல், தொழுகை பற்றி பேசுவது. எந்த இடத்தில் எதற்கு முதன்மையும் முக்கியத்துவமும் அளிக்க வேண்டும் என்பதை சரியாக தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் நபிமொழி பிரச்சார படிமுறையை எமக்கு தெளிவாக விளக்குகின்றது.

நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) அவர்களை எமனுக்கு அனுப்பும் போது அவர்களை நோக்கி பின்வருமாறு கூறினார்கள்.

முஆதே! நீர் வேதம் அருளப்பட்ட ஒரு சமூகத்தின் பக்கம் செல்கின்றீர், முதலில் அல்லாஹுயன்றி வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹுவின் தூதர் என்பதின் பக்கம் அவர்களை அழைக்க வேண்டும். அதை அவர்கள் எற்றுக் கொண்டால் அவர்களுக்கு அல்லாஹ் ஒரு தினத்தில் ஐவேளைத் தொழுகையைக் கடமையாக்கியுள்ளான் என்று கூறுவீராக, அதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்கள் மீது ஜக்காத் விதித்திருப்பதையும், அது அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து பெறப்பட்டு அவர்களிலுள்ள ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அவர்களுக்கு கூறுவீராக. (புகாரி, முஸ்லிம்)

முதலில் ஏகத்துவத்தையும் அதன் பின் தொழுகையையும் அதன் பின் ஜகாத்தையும் வேதங்கொடுக்கப்பட்ட அந்த கிறிஸ்தவர்களுக்கு எடுத்துக் கூறுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதலிருந்து, அதிமுக்கியமாக ஏவ வேண்டியதை முதலில் ஏவ வேண்டும் என்பது தெளிவாகின்றது.

அழைப்பாளருக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகள்

1. தெரிந்ததை மாத்திரம் சொல்ல வேண்டும். நமக்குத் தெரியாத செய்திகளை சொல்லக்கூடாது. நாம் சொல்லும் செய்தி தெளிவான ஆதாரத்தின் அடிப்படையில் சொல்லப்பட வேண்டும்.

(நபியே!) நீர் கூறுவீராக, இதுவே எனது (நேரான) வழியாகும். நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றிவோரும் இருக்கிறோம். அல்லாஹ் மிகப்பரிசுத்தமானவன். நான் (அவனுக்கு)இணைவைப்-போரில் உள்ளவனுமல்ல (12:108)

சுஃப்யானுத் தவ்ரி(ரஹ்) அவர்கள் கூறினார்கள், நன்மையைக் கொண்டு ஏவி தீமையைத் தடுப்பவர்களுக்கு மூன்று பண்புகள் அவசியமாகும்.

a) ஏவுவதை தெரிந்திருக்க வேண்டும்.
b) தடுப்பவைகளை தவறு என்று தெரிந்திருக்க வேண்டும்
c) ஏவும் போதும் தடுக்கும்போதும் நீதமாகவும் மிருதுவாகவும் சொல்ல வேண்டும்.

2. தவறைக்காணும் போது மூன்று முறைகளில் ஒன்றை கையாள வேண்டும்.

a) கையால் தடுப்பது. இது குறிப்பிட்டவர்களுக்கே பொருந்தும். தந்தை தன் பிள்ளையை கட்டுப்படுத்துவது, அரசர் தன் பிரஜைகளை, கணவன் மனைவியை இவ்வாறு இது நீண்டு கொண்டே போதும்….)

b) நாவால் தடுப்பது

c) மனதால் வெறுப்பது

உங்களில் யார் தவறைக் காணுகின்றார்களோ அதை கையால் தடுக்கட்டும், அதற்கு முடியவில்லையென்றால் நாவால் தடுக்கட்டும், அதற்கும் முடியவில்லையென்றால் மனதால் வெறுக்கட்டும் அதுதான் ஈமானின் குறைந்த அளவு என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்)

3. அழைப்பாளர் நல்லொழுக்கமுள்ளவராக இருக்க வேண்டும். உண்மை உரைத்தல், நம்பிக்கை, மற்றவர்களுக்கு உபகாரம் செய்தல், இறையச்சம், பொறுமை, அன்பாகப் பழகுதல், மென்மை, வாக்குறுதியை நிறைவேற்றல் போன்ற நற்குணமுள்ளவராக இருக்க வேண்டும்.

(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (இரக்கமுள்ளவராக) நடந்து கொள்கிறீர். மேலும் சொல்லில் கடுகடுப்பானவராக இரக்கமற்ற இதயமுள்ளவராக நீர் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் பிரிந்து சென்றிருப்பார்கள். ஆகவே அவர்(களின் பிழை)களை நீர் மன்னித்து (அல்லாஹ்விடம்) அவர்களுக்காக மன்னிப்புக் கோருவீராக (3:159)

(நபியே!) நிச்சயமாக மகத்தான நற்குணத்தின் மீதும் நீர் இருக்கின்றீர்; (68:4)

4. கெட்ட பழக்கங்களிலிருந்து முற்றாக தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

5. அழைப்புப் பணியின் போது மற்றவர்களோடு ஹிக்மத்தாக (சாதுரியமாக) நடந்து கொள்ள வேண்டும்.

நாம் அழைப்பவர்களின் நிலைகளைத் தெரிந்து அதற்கேற்ப அவர்களை அழைக்க வேண்டும். அவர்களின் அறிவின் தரத்தைத் தெரிந்து அவர்களுடன் பேசவேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்

(நபியே!) நீர் (மனிதர்களை) விவேகத்தைக் கொண்டும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமதிரட்சகனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றியும் எது மிக அழகானதோ அதைக் கொண்டு அவர்களிடம் நீர் விவாதம் செய்வீராக! நிச்சயமாக உமதிரட்சகன் அவனுடைய வழியிலிருந்து தவறியவரை மிக்க அறிந்தவன், இன்னும் நேர்வழி பெற்றவர்களையும் அவன் மிக்க அறிந்தவன். (16:125)

மனிதர்களின் அறிவுக்கு ஏற்றவாறு பேசுங்கள் அல்லாஹ்வும் அவனின் தூதரும் பொய்ப்படுத்தப்படுவதை நீங்கள் விரும்புகின்றீர்களா? என அலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறினார்கள். (புகாரி)

6. மக்கள் சடைவடையும் அளவுக்கு பேசக்கூடாது

நாங்கள் சடைவடைந்து விடுவோமோ என்பதைப் பயந்து சில நாட்கள் விட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்வார்கள். (நஸாயி)

அபூவாயில் என்னும் நபித்தோழர் கூறுகின்றார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் எங்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். நாங்கள் கூறினோம், அல்லது அவர்களுக்கு கூறப்பட்டது. அபூஅப்துர்ரஹ்மான் அவர்களே! உங்களின் சொற்பொழிவைக் கேட்க எங்களுக்கு மிகவும் விருப்பமாக இருக்கின்றது. ஆகவே ஒவ்வொரு நாளும் எங்களுக்கு நீங்கள் சொற்பொழிவு செய்ய நாங்கள் விரும்புகின்றோம் எனக் கூறினோம். அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறினார்கள், நீங்கள் சடைவடைந்து விடுவீர்கள் என்றுதான் நான் அவ்வாறு செய்யவில்லை, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு விட்டு விட்டு உபதேசம் செய்தது போல் நானும் உங்களுக்கு விட்டு விட்டு உபதேசம் செய்கின்றேன் எனக் கூறினார்கள். (அஹ்மத்)

7. சொல்வதை செய்ய வேண்டும்.

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லிம்களில் உள்ளேன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகானவர் யார்? (41:33)

நீங்கள் செய்யாததை(ப்பிறருக்கு)க் கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிகப்பெரியதாகி விட்டது. 61:3

தான் சொல்வதை முதலில் செய்வது இது ஒரு அழைப்பாளரின் பண்பு என்பதை இவ்விரண்டு வசனங்களும் வலியுறுத்துகின்றது.

8. தஃவாப் பணியை மேற்கொள்ளும்போது வரும் சிரமங்களை பொறுமையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். விசுவாசங் கொண்டு, நற்கருமங்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், (பாவங்களை விடுவதிலும், நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களை சகித்து) பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கின்றார்களே அத்தகை யோரைத்தவிர. 103:1,3

அழைக்கப்பட வேண்டியவர்கள்

மனிதர்கள் அனைவரும் சமமே! வெள்ளையர்கள், கறுப்பர்கள், பணக்காரர்கள், எளியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் மார்க்கத்தை எடுத்துரைக்க வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்.

(நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களே! நிச்சயமாகவே நான் உங்கள் யாவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன் (7:158)

இதனால்தான் நபியவர்களைப் பின்பற்றுபவர்களில் மக்காவைச் சேர்ந்த அரபு மொழி பேசும் அபூபக்ர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும், அபீஸீனியாவைச் சேர்ந்த பிலால் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும், பாரசீகத்தைச் சேர்ந்த ஸல்மான் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும், ரோமாபுரியைச் சேர்ந்த சுஹைப் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும் இருந்தார்கள், இன்னும் நபியவர்களை பின்பற்றுபவர்களில் மிகப்பணக்காரர் உஸ்மான் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும் பரம ஏழை அபூஹுரைரா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும் இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரபி மொழி பேசுபவர்கள் அரபி அல்லாத மொழி பேசுபவர்கள், வெள்ளையர்கள் கறுப்பர்கள் ஆண்கள் பெண்கள் எல்லோரையும் எவ்வித வித்தியாசமின்றி அழைத்தார்கள். அழைப்பாளர்களிலேயே மிகச்சிறந்த அழைப்பாளர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். குறைஷிகள் அமரும் இடம் இன்னும் அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பார்கள். அதேபோல் ஹஜ்ஜுடைய தினங்கள் வரும்போது வெளியில் இருந்து வரும் மக்களைச் சந்தித்து அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைப்பார்கள். இதன் நோக்கமாகவே தாயிப் நகருத்துக்கு சென்றார்கள். மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள், ”இஸ்லாத்திற்காக” போர் புரிந்தார்கள். இப்படி இஸ்லாத்திற்காக பெரும்பாடு பட்டார்கள்.

மூஸா, ஹாரூன் அலைஹிமுஸ்ஸலாம் இருவரையும் ஃபிர்அவ்னிடம் சென்று பிரச்சாரம் செய்யும்படி அல்லாஹ் அவ்விருவருக்கும் ஏவுகின்றான்.

நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மிக்க வரம்பு கடந்து விட்டான். ஆகவே நீங்கள் இருவரும் கணிவான சொல்லை அவனுக்குச் சொல்லுங்கள். அதனால் அவன் நல்லுபதேசம் பெறலாம். அல்லது அச்சமடையலாம் 20:43,44

ஆகவே அழைப்பாளர்களாகிய நாமும் மக்களை தேடிச்சென்று சென்று அவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்க வேண்டும்.

ஒவ்வொருவரின் தகுதிக்கேற்ப பேச வேண்டும்

அழைக்கப்படுபவர் ஒரு நோயாளியைப் போன்றவர், நோயாளி தன் நோயைத் தெரிந்து அதைக் குணப்படுத்துவதற்காக மருத்துவரிடம் செல்வார். மருத்துவர் முதலில் நோயாளியின் நோயைக் கண்டுபிடிக்க வேண்டும். அதன்பிறகுதான் அவருக்குத் தேவையான மருந்தைக் கொடுக்க வேண்டும். மருத்துவர் எல்லா நோயாளிக்கும் ஒரே மருந்தைக் கொடுக்கமாட்டார். ஒவ்வொரு நோயாளிக்கும் தேவைப்படக்கூடிய மருந்தைத்தான் கொடுப்பார். இவ்வாறே நாம் யாரை அழைக்கின்றோமோ அவர்களின் சுற்றுச் சூழல்கள் அறிவாற்றல் அவர்கள் மார்க்கத்தில் எவ்வளவு தொடர்புள்ளவர்கள் முஸ்லிம்களா, முஸ்லிம் அல்லாதவர்களா என்கிற செய்திகளைப் பொதுவாக தெரிந்திருக்க வேண்டும். அதற்கேற்ப அவர்களுடன் பேச வேண்டும். அதே போல் அவர்களுக்கு பொருத்தமான நேரம் அளவு இவைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தஃவாவை மேற்கொள்வதற்கு பயன்படுத்துபவைகள்

பல முறைகளில் தஃவாப்பணியை மேற்கொள்ளலாம்.

1. பள்ளிகளில், மத்ரஸாக்களில், விடுமுறை தினங்களில் பொதுவான இடங்களில் வகுப்புகளை நடத்துதல், சொற்பொழிவு நிகழ்த்துதல் இன்னும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி தஃவாச் செய்வது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது மக்கள் பயன் பெறும் வகையில் திறம்பட செய்ய வேண்டும்.

2. தனிப்பட்ட முறையில் மக்களைச் சந்திப்பது. அழைப்பாளர் தனது நேரத்தை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதற்கே ஒதுக்குவார், இதுவே ஒரு இறையழைப்-பாளரின் முக்கிய குறிக்கோளாகும். பாதையில் செல்லும் போது, பள்ளியில், மத்ரஸாக்களில், பொது இடங்களில் வாகனத்தில், ரயிலில், விமானத்தில், தங்குமிடத்தில், நகரத்தில், கிராமத்தில், பெரியவர், சிறியவர், ஆண், பெண் இப்படி கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன் படுத்த வேண்டும்.

3. பிரச்சாரத்திற்கு நாவன்மை மற்றும் எழுத்தாற்றலுடன் மற்றவர்களின் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற வேண்டும். அதன் மூலம் மக்களிடம் மிக இலகுவான முறையிலும் மிக சீக்கிரத்திலும் இஸ்லாத்தைக் கொண்டு சேர்க்கலாம். இன்னும் தன்னுடைய நேரத்தையும் பணத்தையும் இதற்காக செலவிட வேண்டும். ஒவ்வொருவரிடமிருந்தும் அவரவருக்கு முடியுமான திறமைகளைப் பெற்று பிரச்சாரப் பணியை அதிகப்படுத்த வேண்டும். உதாரணமாக வசதிபடைத்தவர்களிடமிருந்து பணத்தைச் சேகரித்து பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய மர்கஸ்கள் கட்டுவது, புத்தகங்கள், பிரசுரங்கள் வெளியிடுவது, பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்வது இன்னும் இது போன்றவைகள்……

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணக்காரர்களின் பணத்தைக் கொண்டும், வீரமுள்ளவர்களின் வீரத்தைக் கொண்டும், நாவன்மை உள்ளவர்களின் பேச்சைக் கொண்டும், எழுத்தாளர்களின் எழுத்தைக் கொண்டும் தோழர்களின் நல்ல ஆலோசனைகளை ஏற்றும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்கள். ஆகவே நாமும் இப்படிப்பட்டவர் களிடமிருந்து பயன் பெற வேண்டும்.

4. செய்தி ஊடகங்கள் மூலமாகவும் தஃவாச் செய்ய வேண்டும்

T.V., வானொலி, வீடீயோ கேஸட், ஆடியோ கேஸட், பத்திரிக்கை, புத்தகம், பிரசுரம் போன்றவைகளைக் கொண்டு மக்களுக்கு பிரச்சாரம் செய்வது, இவைகளால் நாம் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் தஃவாப் பிரச்சாரத்தை சேர வைத்துவிடலாம். ஆண்கள், பெண்கள், பணக்காரர்கள், எளியவர்கள், சமீபத்தில் வசிப்பவர்கள் தூரத்தில் வாழ்பவர்கள் என்று உலகெங்கும் செய்தியை சேர வைத்துவிடலாம்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் இந்த மேலான பணியை உரிய முறையில் மேற்கொள்ள இறுதிமூச்சு வரை வாய்ப்பளிப்பானாக!

– உம்மு யாஸிர்

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்

2 comments

  1. ple make sure the word ”un justice to allah ” by shirk

  2. Super subject

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *