Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-14)

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-14)

– M.T.M.ஹிஷாம் மதனீ

وَالبَعْثِ بَعْدَ المَوْتِ

விளக்கம்:

மேலும், இறைத்தூதர்களில் இறுதியானவராக நபியவர்கள் உள்ளார்கள். இதனைப் பல ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. எடுத்துக்காட்டாக பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தைக் கவனிக்க.
‘எனினும், அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (க் கடைசி) முத்திரையாகவும், (இறுதி நபியாகவும்) இருக்கிறார்’. (அல் அஹ்ஜாப்: 40)

இவ்வசனத்தில் தூதர்களில் இறுதியானவர் என்று கூறாமல் நபிமார்களில் இறுதியானவர் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில், நபியவர்களுடன் நுபுவ்வத் நிறைவு பெற்றது என்று கூறுவதின் மூலம் தூதுத்துவமும் அவருடன் நிறைவு பெற்றது என்ற வாதம் உறுதியாகின்றது.

நபிமார்களை ஈமான் கொள்வதில் உள்ளடங்கக்கூடிய அம்சங்கள்

  • நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்டவர்கள் என நம்பிக்கை கொள்ளல்.
  • அவர்கள் அனைவரும் தமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றினார்கள் என நம்புதல்.
  • அவர்களுக்கு மத்தியில் எவ்வித ஏற்றத்தாழ்வும் பார்க்காதிருத்தல்.
  • மொத்தமாக அல்லாஹுத்தஆலா பெயர் குறிப்பிட்ட நபிமார்களையும் பெயர் குறிப்பிடாமல் விட்ட நபிமார்களையும் ஈமான் கொள்ளல்.
  • அல்லாஹ் சிறப்பித்துக் கூறியவர்களை சிறப்பித்தல். அதன் வரிசையில் ‘உலுல் அஸ்ம்’ எனும் நபிமார்கள் குழு முதலிடத்தை வகிக்கின்றனர். அவர்கள் முறையே, நூஹ் (அலை), இப்றாஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை), முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆகியோர்களாவர். அவர்களைத் தொடர்ந்து ஏனைய தூதர்களும் பிறகு நபிமார்களும் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றனர். ஆயினும், அவர்கள் அனைவரையும் விட சிறப்புக்குரிய நபராக நபியவர்கள் இருக்கின்றார்கள் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

‘நபி’, ‘ரஸூல்’ ஆகிய வார்த்தைகளுக்கிடையிலான வேறுபாடுகள் குறித்து பலரும் பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவற்றுள் மிக ஏற்றமான கருத்தாகவும், பலரால் வரவேற்கத்தக்க கருத்தாகவும் பின்வரும் கருத்து அமையப்பெற்றுள்ளது.
‘நபியானவர், மார்க்க சட்டதிட்டங்களைக் கொண்டு வஹீ மூலம் தெரியப்படுத்தப்பட்டவராகவும், அதனை எத்திவைக்கும் பொறுப்பு வழங்கப்படாதவருமாக இருப்பார். ரஸூலானவர், மார்க்க சட்டதிட்டங்களைக் கொண்டு வஹீ மூலம் தெரியப்படுத்தப்பட்டவராகவும், அதனை மக்கள் மன்றத்தில் எத்திவைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டவராகவும் இருப்பார்’.

(والبعث بعد الموت)

இவ்வாசகமானது, மரணித்தவர்கள் தங்களது மண்ணறைகளைவிட்டும் உயிர் பெற்று எழுப்பப்படும் மறுமை நாள் குறித்த நம்பிக்கையைத் தெளிவுபடுத்துகின்றது. அவ்வாறு எழுப்பப்படுவதாகிறது, அவர்கள் உலகில் புரிந்த அமல்கள் குறித்து விசாரணை செய்யப்பட்டு கூலி கொடுக்கப்படுவதற்காகும். இது குறித்த வர்ணனைகள் அல் குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றை உள்ளபடி ஈமான் கொள்வது எமது கடமையாகும்.
இவ்விடயம் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத்தினரின் கொள்கை கோட்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. யுத கிரிஸ்தவர்கள் கூட இதுவிடயத்தில் தெளிவான கொள்கையை உடையவர்களாக இருக்கின்றனர்.

அல்குர்ஆனில் இவ்விடயம் குறித்து அல்லாஹுத்தஆலா குறிப்பிடும் போது….

‘(மரணித்த பின்னர் நிச்சயமாக உயிர் கொடுத்து) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராகரிப்போர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர், (நபியே!) நீர் கூறுவீராக: ‘அவ்வாறல்ல! என் இரட்சகன் மீது சத்தியமாக! நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்’. (அத்தகாபுன்: 7)

‘(மனிதர்களே!) பின்னர், நிச்சயமாக நீங்கள் இறப்பெய்தக் கூடியவர்கள். பின்னர், மறுமை நாளின் போது நிச்சயமாக நீங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்’. (அல் முஃமினூன்: 15,16)

மேலும், இது குறித்த பல செய்திகள் ஹதீஸ்களிலும் இடம்பெற்றுள்ளன. அவற்றையும் கருத்திற் கொண்டு மறுமை விடயத்தில் பூரண நம்பிக்கையுள்ள மக்களாக நானும் நீங்களும் ஆகுவோமாக!

One comment

  1. இப்னு ஷைக்

    மதிப்பிற்குறிய மௌலவி ஹிஷாம் மதனீ அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். மிக அருமையான ஒரு புத்தகத்தை மொழியாக்கம் செய்து தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கியுள்ளீர்கள் அல்லாஹ் உங்கள் பணியை அங்கீகரிப்பானாக அதற்கான கூலியை ஈரூலகிலும் வழங்குவானக என்று பிரார்த்தித்தவனாக…

    //அல்லாஹ் சிறப்பித்துக் கூறியவர்களை சிறப்பித்தல். அதன் வரிசையில் ‘உலுல் அஸ்ம்’ எனும் நபிமார்கள் குழு முதலிடத்தை வகிக்கின்றனர். அவர்கள் முறையே, நூஹ் (அலை), இப்றாஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை), முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆகியோர்களாவர். //

    மேற்கண்ட செய்திக்கு ஆதாரம் தந்தால் நன்றாக இருக்கும்.

    மேலும், நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம் 2:136; 2:185; 33:7; 26:113 என்ற கருத்தில் அமைந்த வசனங்களுக்கு மாற்றமாக கீழ்கண்ட செய்தி உள்ளதே அதை எவ்வாறு விளங்கிக்கொள்வது. தயவு செய்து விளக்கம் தரவும்

    //ஆயினும், அவர்கள் அனைவரையும் விட சிறப்புக்குரிய நபராக நபியவர்கள் இருக்கின்றார்கள் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும். //

    இப்னு ஷைக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *