Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-19)

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-19)

– M.T.M.ஹிஷாம் மதனீ
1. அல்லாஹ் குறித்து குர்ஆன் ஹதீஸ் மூலாதாரங்களில் இடம்பெற்றுள்ளவற்றிற்கு வெளிப்படையான கருத்தை மாத்திரமே கொடுக்க வேண்டும். அவற்றில் எல்லை மீறிவிடக்கூடாது. உதாரணமாக, அல்லாஹ் தனக்கு கண் இருப்பதாக தன்னை வர்ணித்துள்ளான். அவ்வர்ணனையைக் கருத்திற் கொண்டு அதற்கு வியாக்கியானம் செய்யும் போது, கண் என்ற வாசகமானது எதார்த்தமாக கண்ணைக் குறிக்காது மாற்றமாக, அதன் மூலம் அவனது பார்வைதான் நாடப்படுகிறது என்று கூறலாகாது.

அதே போன்று அவனுக்கு இரு கைகள் இருப்பதாக அல்மாயிதா அத்தியாயத்தின் 64ம் வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அவ்வசனத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய இரு கைகள் என்ற வார்த்தையானது, அவனது எதார்த்தமான கைகளைக் குறிக்காது மாற்றமாக, தனது அடியார்களுக்கு அருள் புரியத்தக்க அருட்கொடைகளைத் தன்வசம் வைத்திருப்பதாகக் கூறுவதைக் குறிப்பிடுகிறது என்று விளக்கம் கூறக்கூடாது. எனவே, சிந்தித்துப்பாருங்கள்! அல்லாஹ்வை இவ்வாறெல்லாம் வர்ணிப்பது அவன் தன்னைப்பற்றி வர்ணித்த வர்ணனையைப்போலாகுமா ?!!!

2. பொதுவாக இமாமவர்கள் குறிப்பிட்ட, ‘அல்லாஹ்வின் பண்புகள்’ என்ற வாசகமானது அல்லாஹ் தன்னைப்பற்றி வர்ணித்த அனைத்து வகையான பண்புகளையும் உள்ளடக்கியிருக்கின்றது. ஏனெனில், அல்லாஹ்வின் பண்புகளைப் பிரதானமாக இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. அவனது தன்மை சார்ந்த பண்புகள்
இவ்வகைப் பண்புகளைப் பொருத்தளவில், அவை எப்போதும் அவனுக்கு நிலைத்திருக்கக்கூடிய பண்புகளாக இருக்கும். இதனுள் பிரதானமாக இரு பிரிவுகள் உள்ளடங்குகின்றன.

1. கருத்து சார்ந்த பண்புகள்
இவ்வகைப்பண்புகளுக்கு உதாரணங்களாக வெட்கம், அறிவு, ஆற்றல், ஞானம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

2. விடயம் சார்ந்த பண்புகள்
இவ்வகையான பண்புகளுக்கு உதாரணங்களாக இரு கரங்கள், முகம், இரு கண்கள் போன்றவற்றைக் குறி;ப்பிடலாம்.

எனவே, நாம் மேலே குறிப்பிட்ட பண்புகளானது என்றென்றும் அல்லாஹ்வுக்கு நிலைத்திருக்கக்கூடிய பண்புகளாகும். அவை எச்சந்தர்ப்பத்திலும் அவனை விட்டும் நீங்கிவிடாது. இதனைக் கருத்திற்கொண்டுதான் அறிஞர்கள் இத்தகைய பண்புகளை அல்லாஹ்வின் தன்மை சார்ந்த பண்புகள் என்ற பட்டியலில் உள்ளடக்கியுள்ளனர்.

2. அவனது செயல் சார்ந்த பண்புகள்
இவ்வகைப்பண்புகள் முழுமையாக அல்லாஹ்வின் நாட்டத்துடன் தொடர்புள்ள பண்புகளாகும். இதனுள் இரு பிரிவுகள் உள்ளடங்குகின்றன.

1. காரணம் அறியப்பட்ட பண்புகள்
இத்தகைய பண்புகளுக்கு உதாரணமாக அவனது திருப்பொருத்தத்தைக் குறிப்பிடலாம். ஏனெனில், அவனது திருப்பொருத்தத்திற்குத் தக்க காரணம் பெறப்படும்போது அப்பொருத்தமானது உரியவருக்குக் கிடைக்கின்றது. இவ்வடிப்படையைப் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தில் காணலாம்.

‘(அவனை) நீங்கள் நிராகரித்துவிட்டால், நிச்சயமாக அல்லாஹ், உங்களைவிட்டும் தேவையற்றவன், இன்னும், தன் அடியார்களிடத்தில் நிராகரிப்பை அவன் பொருந்திக்கொள்வதில்லை, மேலும், நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்தினால், உங்களுக்காக அதனை அவன் திருப்தியடைவான்.’ (அல் ஜூமர்:39)

2. காரணம் அறியப்படாத பண்புகள்
இத்தகைய பண்புகளுக்கு உதாரணமாக இரவின் கடைசி மூன்றில் ஒரு பகுதியில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்ற செய்தியைக் குறிப்பிடலாம்.

அல்லாஹ்வின் தன்மை மற்றும் செயல் சார்ந்த அம்சங்களை ஒரே பண்பில் ஒன்றித்ததாகவும் சில பண்புகள் உள்ளன. அவற்றை அதற்குரிய கோணத்தில் அணுகுவதின் மூலம் இத்தன்மையைக் கண்டு கொள்ளலாம். உதாரணமாக அவனது பேசுதல் என்ற பண்பை எடுத்துக் கொள்வோம். இப்பண்பானது அவனது பேசும் ஆற்றல் என்ற தன்மையுடனும், அவனது பேசுதல் என்ற செயலுடனும் தொடர்புடையதாக இருக்கின்றது. இருப்பினும் இத்தகைய பண்புகள் அவனது செயலுடன் கூடிய தொடர்பினைக் கொண்டிருப்பதனால் அறிஞர்கள் அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகளில் உள்ளடக்குகின்றனர்.

3 comments

  1. முஜிப் ரஹ்மான்

    பிஸ்மில்லாஹ்
    அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்மதுல்லாஹி …..)

    அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை தொடர் 11 முதல் 19 காண கிடைத்தது பயனுள்ள தொடர்.அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் நேர்வழியில் மரணிகின்ற பாக்கியத்தை தருவானாக.
    ஆரம்பம் முதல் படித்தால் புரிந்துகொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கும்.

    உங்களின் உதவியை அல்லாஹ்விற்காக நாடும்
    மார்க்க சகோதரன்
    முஜிப் ரஹ்மான்
    பொதக்குடி

  2. Will this article be continued? Will there any posts after post no:19..?? If so, please publish soon..

    May Allah guide and bless us all…

  3. நிர்வாகி

    தாமதத்திற்கு மன்னிக்கவும். தொடர் 20 இன்று பதிவு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *